Tuesday, December 29, 2009

சினிமா கற்பனைக்கே எட்டாத வில்லன்!

சானியா மிர்சாவுக்கு முன்பாகவே ருச்சிகா கிர்ஹோத்ரா டென்னிஸில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கலாம்! ஆனால்...

மீண்டும் ஒரு முறை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு. பிருந்தா காரத் சொல்வதைப் போல வெட்கப்பட வைத்திருக்கிறது.

பத்து வயதிலேயே தாயை இழந்தவர் ருச்சிகா. பாட்டி, அப்பா, தம்பியுடன் சண்டிகரில் வசித்து வந்தார். மகளை வெளிநாட்டில் படிக்க வைத்து, பெரிய ஆளாக மாற்றவேண்டும் என்பது தந்தை கிர்ஹோத்ராவின் ஆசை. ருச்சிகாவின் தோழி ஆராதனா. இவர்கள் இருவரும் வளர்ந்துவரும் டென்னிஸ் வீரர்கள். தினமும் பயிற்சிக்காக ஹரியானா லான் டென்னிஸ் அசோசியேஷனுக்குச் செல்வார்கள். அந்த அசோசியேஷனின் தலைவராக இருந்தார் ஐபிஎஸ் அதிகாரி ரத்தோர். தினமும் பயிற்சி செய்யும் இடத்துக்கு வந்து பார்வையிடுவார்.

தன் மகள் வகுப்பில் படிக்கும் ருச்சிகாவைப் பற்றிக் கேள்விப்பட்ட ரத்தோர், ருச்சிகாவின் தந்தையை அவருடைய வீட்டில் சந்தித்தார். ருச்சிகா மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக வருவார் என்றும் வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மறுநாள் நடக்க இருக்கும் கொடூரம் தெரியாமல், மகள் மீது அக்கறை செலுத்தும் அதிகாரியை நினைத்து மகிழ்ந்தார் கிர்ஹோத்ரா.

அடுத்த நாள் ருச்சிகாவையும் ஆராதனாவையும் தன் அலுவலகத்துக்கு அழைத்தார் ரத்தோர். பயிற்சியாளரை அழைத்துவரச் சொல்லி, ஆராதனாவை விரட்டி விட்டார். தனியாக இருந்த 14 வயது ருச்சிகாவை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார். ருச்சிகா போராடிக்கொண்டிருந்தபோது திரும்பி வந்த ஆராதனா அதிர்ந்து போய்விட்டார். மீண்டும் ஏதோ சாக்கு சொல்லி, ஆராதனாவை அனுப்ப நினைத்த ரத்தோரிடமிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

மறுநாள் பயிற்சிக்குச் செல்லவில்லை. அடுத்த நாள் போனபோது மீண்டும் தன் அறைக்கு வரச் சொல்லி ருச்சிகாவுக்குத் தொல்லை கொடுத்தார் ரத்தோர். சிக்கல் பெரிதாவதை உணர்ந்த ருச்சிகாவும் ஆராதனாவும் தங்கள் வீட்டில் விஷயத்தைச் சொன்னார்கள். உடனே உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பிறகு ரத்தோர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டது. உடனே ஓர் அரசியல்வாதியின் தலைமையில் ருச்சிகாவின் வீட்டு வாசலில் கேவலமாக கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தார் ரத்தோர்.

விசாரணை ஆரம்பம் ஆன உடன் பல விதங்களில் ருச்சிகாவையும் அவள் குடும்பத்தையும் மிரட்ட ஆரம்பித்தார் ரத்தோர். பெண்கள் மீது வழக்கமாகச் சமூகம் சொல்லி வரும் ‘நடத்தை சரியில்லாதவள்’ என்ற குற்றத்தோடு, பள்ளியிலிருந்து நீக்க வைத்தார். விஷயம் அறிந்து எந்தப் பள்ளியிலும் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும், மனம் தளராமல் போராட ஆரம்பித்தனர்.

தெலுங்கு, தமிழ் சினிமா இயக்குனர்களின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வில்லத்தனம் காட்ட ஆரம்பித்தார் ரத்தோர். திருட்டு, கொள்ளை, கொலை போன்ற வழக்குகள் ருச்சிகாவின் அப்பா மீதும் அஷு என்ற பத்து வயது தம்பியின் மீதும் போடப்பட்டன. அதே போல வழக்கை உறுதியுடன் நடத்திக்கொண்டிருக்கும் ஆராதனா குடும்பத்தின் மீதும் பொய் வழக்குகள் பதிவாயின.

ஆண்டுகள் சென்றன. வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. ஒருநாள் அஷுவை போலீஸ்காரர்கள் அழைத்துச் சென்று அடித்து, துன்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர். ருச்சிகாவின் கண் எதிரில் தம்பியைக் கொடுமை செய்தனர். சிறிது நாள்களில் மீண்டும் வழக்கை வாபஸ் பெறச் செய்வதற்காக அஷு அழைத்துச் செல்லப்பட்டு, தண்ணீர், உணவு இன்றி சித்திரவதைச் செய்யப்பட்டார். ருச்சிகாவின் அப்பாமீது லஞ்சப் புகார் சுமத்தப்பட்டு, வங்கி மேனேஜர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். எஞ்ஜினியரான ஆராதனாவின் அப்பாவும் பதவி இறக்கம் போன்ற தொல்லைகளுக்கு ஆளானார்.

அப்பா, தம்பி, தோழி, அவள் குடும்பம் படும் வேதனைகளைப் பொறுக்க முடியாமல் டிசம்பர் 28, 1993 அன்று விஷம் சாப்பிட்டு, இறந்து போனார் ருச்சிகா. வெள்ளைத் தாளில் கிர்ஹோத்ராவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ருச்சிகாவின் உடலை ஒப்படைத்தனர். அஷுவை அதன்பிறகே வெளியில் விட்டனர். ருச்சிகாவை செல்லமாக அழைக்கும் ரூபி என்ற பெயரில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ரிப்போர்டை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.

பெண்மையைக் கேவலப்படுத்தி, எதிர்காலத்தைச் சிதைத்து, உயிரையும் குடித்த ரத்தோர் ருச்சிகா இறந்த அன்று இரவு பார்டி வைத்துக்கொண்டாடியிருக்கிறார். ஒரே வாரத்தில் ரத்தோருக்கு எதிரான வழக்கு மூடப்பட்டது. ருச்சிகாவின் குடும்பம் சண்டிகரை விட்டு வெளியேறியது. மன உளைச்சலுக்கு ஆளான கிர்ஹோத்ரா வழக்கை விட்டும் ஒதுங்கியிருந்தார். சில மாதங்களில் பஜன்லால் அரசாங்கம் ரத்தோருக்கு கூடுதல் டிஜிபி பதவி கொடுத்து, அழகு பார்த்தது!

காலம் காயத்தை ஆற்றும் என்பார்கள். ஆனால் ருச்சிகா இறந்து மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும் நீதி கேட்டுப் போராடும் திடம் ஆராதனாவின் அப்பாவுக்குக் குறையவில்லை. பல முயற்சிகளுக்குப் பிறகு ஆராதனாவின் அப்பாவுக்கு விசாரணை அறிக்கை கிடைத்தது. உடனே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்தது. வழக்கு மீண்டும் நடக்க, ஓம் பிரகாஷ் சௌதாலா அரசாங்கம் டிஜிபி பதவியும் ஜனாதிபதியின் பதக்கமும் கொடுத்து ரத்தோரை கௌரவித்தது! அவரும் எல்லாவற்றையும் ஆண்டு, அனுபவித்து, ஓய்வும் பெற்றுவிட்டார். பாதிக்கப்பட்டது தன் மகளைப் போன்று ஒரு பெண் என்று கூட நினைக்காமல் ரத்தோருக்காக வாதாடி, அவரைக் காப்பாற்றி வந்தது அவருடைய வக்கீல் மனைவி. இன்று அவருடைய மகனும் மகளும் வக்கீல்களாக இருக்கிறார்கள்!

19 ஆண்டுகள் சளைக்காத போராட்டத்துக்குப் பிறகு ஆயிரம் ரூபாய் அபராதமும் 6 மாதம் சிறையுமாக ரத்தோருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது! தீர்ப்பு வழங்கிய 10 நிமிடங்களுக்குள் சிரித்தபடி பெயிலில் வந்துவிட்டார் ரத்தோர்.

ஆளும் கட்சி தலைவர், எதிர்க்கட்சி தலைவர், மக்களவை தலைவர், ஜனாதிபதி என்று உயர் பொறுப்பில் பெண்கள் இருக்கும் இந்த நாட்டில்தான் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு (அ)நீதி கிடைக்க 19 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது.

‘நீதி ஒரு நாள் வெல்லும்’ என்று எந்த நம்பிக்கையில் காத்துக்கொண்டிருப்பது? பெற்ற மகளை இழந்து, குடும்ப நிம்மதியைத் தொலைத்து, வேலை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, பணம் செலவழித்து நீதிக்காகப் போராடியவர்களுக்கு கிடைத்த நீதி இதுதானா?

வாழ வழியில்லாதவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கும், சந்தேகத்தின் பேரில் கொண்டு செல்லும் நிரபராதிகளுக்கும் இந்தச் சட்டத்தால் கடுமையான தண்டனை கிடைக்கும்போது, அந்தச் சட்டத்தைக் கட்டிக் காக்கும் போலீஸ்காரர்கள் தவறு செய்தால் தண்டனை இரட்டிப்பாக வேண்டாமா?

இதுபோன்ற தீர்ப்புகளால் ருச்சிகா, ஜெசிகா, பத்மினி, ரீட்டா மேரி போன்ற பெண்கள் இரையாவதைத் தடுக்க... இல்லை குறைக்கவாவது முடியுமா? ’வசதியும் செல்வாக்கும் இருந்தால் குற்றம் செய்யலாம், தண்டனை கிடைக்காது’ என்ற நிலை இருப்பதால்தான் மேலிடத்தில் இருப்பவர்கள் துணிந்து தவறு செய்கிறார்கள். எப்போதாவது மாட்டுகிறார்கள். அரிதாகவே தண்டனை பெறுகிறார்கள். அப்படியும் மேல்முறையீடு செய்து, பெயிலிலேயே காலத்தைக் கழித்து, தப்பி விடுகிறார்கள்!

குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் சட்டம் இருப்பதால்தான் நிறைய வரதட்சணை வழக்குகள் முடங்கிப் போய்விடுகின்றன. மகளின் உயிரை இழந்து, பொருளையும் இழந்து வாழ்பவர்கள் ஒரு கட்டத்தில், ’போனவள் திரும்பவா போகிறாள்’ என்ற விரக்தியில் வழக்கை விட்டு விடுகிறார்கள். குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். பல ஆண்டுக்கணக்கில் போராட யாருக்கு சக்தி இருக்கிறது? விரைவாகக் கிடைக்காத நீதியால் என்ன பயன்?

கண் முன் அநியாயம் நடந்தால் கூட கண்டுகொள்ளாத காலகத்தில், சொந்த வழக்குகளுக்கே போராடத் துணிவு இல்லாத காலத்தில், தன் தோழிக்காக நீதி கேட்டு, நீண்ட காலம் போராடி வருகிற ஆராதனாவும் அவருடைய பெற்றோரும் உதாரண மனிதர்கள்! அநீதிக்கு சாட்சியாக இருந்த ஆராதனாவுக்கும் குடும்பத்துக்கும் நேர்ந்த கஷ்டங்கள் சொல்லில் அடங்காதவை. இவர்களைப் பார்க்கும்போது போராட்டத்தில் நம்பிக்கை வருகிறது!

போராட்டம் தொடர்கிறது. இந்த வழக்கை மீண்டும் முறையாக விசாரித்து உரிய தண்டனை வழங்கக்கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்கிறார் ஆராதனா. அவரது மின் அஞ்சல்: ‘joinaradhna4ruchika@gmail.com’

Friday, December 11, 2009

அற்புதமான உலக இலக்கியப் புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி

வாழ்க்கை, அறிவியல், நாடுகள், மதங்கள், வானியல், நாகரிகங்கள், வரலாறு என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் Prodigy புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் உலக இலக்கியப் புத்தகங்களை அறிமுகம் செய்கிறோம்.

Prodigy

வழங்கும்
அற்புதமான உலக இலக்கியப் புத்தகங்கள்!

சார்லஸ் டிக்கன்ஸ்
ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்
ஜுல்ஸ் வெர்ன்
அன்னா சிவெல்
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்
க்ரிம் பிரதர்ஸ்
H.G.வெல்ஸ்
அலெக்சாண்டர் டூமாஸ்
ஓ ஹென்றி
ருட்யார்ட் கிப்ளிங்
ஜோஹன்னா ஸ்பைரி
ஜொநாதன் ஸ்விஃப்ட்
L.ஃப்ராங்க் பாம்
மார்க் ட்வைன்
லியோ டால்ஸ்டாய்
லூயி கரோல்
ஆஸ்கர் வைல்ட்

உலகம் கொண்டாடும் எழுத்தாளர்களின் அற்புதமான படைப்புகள் சுருக்கப்பட்ட வடிவத்தில் தமிழில் வருகின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் கதைகளுக்கு ஏற்ப பிரமாதமான ஓவியங்கள், கதை நடக்கும் இடத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும்விதத்தில் அமைந்துள்ளன.


கிறிஸ்துமஸ் கீதம்
தவளை இளவரசன்!
கடத்தப்பட்டவன்
நைட்டிங்கேலும் ரோஜாவும்
ஜங்கிள் புக்
கால இயந்திரம்
இரு நகரங்களின் கதை
தும்பிக்கை வந்தது எப்படி?
டேவிட் காப்பர்ஃபீல்ட்
கலிவரின் பயணங்கள்!
80 நாள்களில் உலகப் பயணம்!
பனி மனிதன்!
ஹெய்டி
ஆலிவர் ட்விஸ்ட்
கோழை சிங்கமும் பசித்த புலியும்
செவ்விந்தியர் தலைவன் கடத்தல்!
பிளாக் பியூட்டி
ஹக்கிள்பெர்ரி ஃபின்
புதையல் தீவு!
மூன்று துப்பாக்கி வீரர்கள்
பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்!
மூன்று கேள்விகள்
ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?
இளவரசனும் ஏழையும்
டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட்
ஆழ்கடலில் சாகசப் பயணம்!
ஆலிஸின் அதிசய உலகம்!


80 பக்கங்கள் விலை : ரூ.25/-


Thursday, December 10, 2009

திருடரைப் பிடித்தோம்!

அனுபவம் இல்லாவிட்டாலும் கூட திருடர் பயம் எல்லோருக்கும் இருக்கிறது. ‘எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்கும்போது, சத்தமே இல்லாம கதவை உடைச்சிட்டு உள்ள வந்துட்டாங்க நாலு திருடர்கள்.’ ’பூட்டின வீட்டை உடைச்சிட்டுப் போய், எல்லாத்தையும் அள்ளிட்டுப் போயிட்டாங்க’ என்று நிறையப் பேர் திருடுப் போன செய்திகளைச் சொல்லிச் சொல்லி, திருடர் பயம் எங்களுக்கு அதிகமாகவே இருந்தது. காரணம் எங்கள் அப்பா வேலை நிமித்தமாக மாதத்தில் பத்து நாள்கள் வெளியூர் சென்றுவிடுவார்.

அப்பா ஊரில் இல்லாத நாள்களில் கதவைப் பூட்டி, டீபாய், ஸ்டூல் எல்லாம் வரிசையாக அடுக்கி வைப்பார் அம்மா. (தூக்கத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்காவிட்டாலும் ஸ்டூல் உருளும் சத்தம் கேட்டு கண் திறக்கலாமே என்று!)

நாங்கள் தஞ்சாவூர் வந்தபோது இந்த பயம் இன்னும் அதிகமானது. தனித்தனி வீடுகள். வீட்டைச் சுற்றி தோட்டம். ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் பெரிய இடைவெளி. அப்போது எங்கள் காலனியில் அடிக்கடி திருடு நடந்துகொண்டிருந்த நேரம். இரவு நேரத்தில் காவலர்களுடன் வீட்டுக்கு ஒருவர் காவலுக்குச் செல்கிற அளவுக்கு திருடர்கள் பயத்தைக் கொடுத்திருந்தார்கள்.

அன்று அப்பா வெளியே சென்றிருந்தார். இரவு எட்டரை மணி. திடீரென்று நாய் குரைக்கும் ஓசை. அறை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய செம்பருத்திச் செடி வேகமாக அசைந்தது. தெருவில் நாயின் குரைப்பு நின்றதும், ஓர் உருவம் மெதுவாக, பலா மரம் அருகில் வந்து நின்றது. நான் மெதுவாக அம்மாவுக்குத் தகவல் சொன்னேன். நான், அம்மா, தங்கைகள் சத்தம் வராமல் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த உருவம் அப்படியே நின்றுகொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் ஆள் இல்லை. அப்போது எங்கள் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது. அதனால் நான்கு வீடு தள்ளியிருந்த சரஸ்வதி மாமி வீட்டுக்குக்கூட தகவல் சொல்ல முடியவில்லை.

எல்லோருக்கும் திக் திக் என்றிருந்தது. ஒருத்தர்தான் கண்ணில் பட்டார். இன்னும் எத்தனை பேர், எங்கிருக்கிறார்களோ! என்ன செய்வது? ஒன்றும் புரியாமல் அந்த ஆளைக் கவனித்துக்கொண்டேயிருந்தோம். அப்போது வாசலில் வண்டி நின்ற சத்தம் கேட்டது. என் தங்கையை மட்டும் அந்த மனிதரைக் கவனிக்கச் சொல்லிவிட்டு, வாசலுக்குச் சென்றோம். சரஸ்வதி மாமியும் எஸ்.ஆர்.கே மாமாவும் வந்தார்கள். சற்றுத் தைரியம் வந்தது.

திண்ணையில் ஏறியவர்களிடம் மெதுவாக விஷயத்தைச் சொன்னோம். மாமா எல்லா விளக்குகளையும் போடச் சொன்னார். விளக்கு போட்டும், எங்களைப் பார்த்தும் அந்த மனிதர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். ஒல்லியான உடல். திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தார்.

அவர் உருவத்தைப் பார்த்ததும் எல்லோருக்கும் கொஞ்சம் தைரியம் வந்தது.

‘யாருப்பா நீ? அங்கே என்ன செய்யறே?’ என்று கேட்டார் மாமா. அருகில் செல்ல பயம். கத்தி, பிளேடு ஏதாவது வைத்திருந்தால்...?

அமைதியாக நின்றார் அந்த ஆள்.

‘என்ன பதில் சொல்ல மாட்டேங்கிறே? இன்னும் தூங்கக்கூட ஆரம்பிக்கலை. எவ்வளவு தைரியம் உனக்கு? இந்த நேரத்துல திருட வந்திருக்கே? போலீசைக் கூப்பிடவா?’ என்றார் மாமா சற்று உரத்த குரலில்.

பதில் எதுவும் சொல்லாமல், இடத்தை விட்டும் அசையாமல் பக்கவாட்டில் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த ஆள்.

கோபத்துடன் மாமா அடுத்த விசாரணையை ஆரம்பிக்கும் முன், அப்பா வந்துவிட்டார். ஒரு திருடனை சாமர்த்தியமாக மடக்கிய பெருமிதத்தில் நானும் என் தங்கைகளும் அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னோம்.

‘இங்க வாப்பா. பயப்படாதே’ என்று அப்பா அழைத்ததும் அந்த மனிதர் வந்தார்.

‘என்ன வேணும் உனக்கு? உன்னைப் பார்த்தால் திருடன் மாதிரி தெரியலை. பயப்படாமல் சொல்’ என்று அப்பா பரிவாகப் பேசினார்.

உடனே மாமியும் அம்மாவும், திருட வந்த ஆளிடம் என்ன பரிவு என்று கேட்டார்கள்.

‘திருடன் இந்த நேரத்துலயா வருவான்? விளக்கு போட்டதும் ஓட மாட்டானா? இல்லை உங்களைப் பார்த்ததும் தப்பிக்க நினைக்க மாட்டானா?’ என்றார் அப்பா. அப்போதுதான் கவனித்தோம். அந்த ஆள் சாப்பிட்டு இரண்டு நாள்கள் ஆகியிருக்கும் போல் தெரிந்தது. மிகவும் பரிதாபமாக இருந்தார்.

‘சார், கோபத்தில ஊரை விட்டு வந்துட்டேன். கையில் பணமில்லை. ரெண்டு நாளா சாப்பிடலை. ஊருக்கும் போக முடியலை. யார்கிட்டேயும் கையேந்தி பழக்கமில்லை. பசி தாங்காமல் இப்படியே நடந்து வந்தப்ப உங்க வீட்டுல கட்டில் கம்பிகளைப் பார்த்தேன். அதை வித்து, சாப்பிடலாம்னுதான் சுவர் ஏறிக் குதிச்சேன். நான் செஞ்சது தப்புதான்...’ என்று கண்கலங்கினார்.

‘நீ கதவைத் தட்டிக் கேட்டிருந்தாலே பணம் கொடுத்திருப்பாங்க. இந்தா, நூறு ரூபாயை வச்சுக்க. நல்லா சாப்பிட்டுட்டு, ஊருக்குப் போ. வேற எங்கேயாவது இப்படி நின்னுக்கிட்டிருக்காதே. திருட்டு பயம் அதிகம்ங்கிறதால உன்னை உதைச்சிடப் போறாங்க’ என்றார் அப்பா.

நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார் அவர்.

‘அடடா! எவ்வளவு தைரியம்! திருடனைப் பிடிச்ச வீராங்கனைகள் எல்லாம் உள்ளே வாங்க!’ என்று அப்பா சொன்னதும், எங்களுக்கு வெட்கமாகிவிட்டது்!

Thursday, November 19, 2009

போலீஸ் ஸ்டேஷனில் ஒரு மணி நேரம்!

போலீஸ் ஸ்டேஷன் வழியாகக் கடந்து சென்றிருக்கிறேன். மற்றபடி திரைப்படங்களில் மட்டுமே நான் போலீஸ் ஸ்டேஷனை முழுதாகப் பார்த்திருக்கிறேன். ஒரு நிஜ போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லும் வாய்ப்பு இப்பொழுதுதான் வாய்த்தது. அதுவும் பாஸ்போர்ட் அப்ளிகேஷன் வெரிஃபிகேஷனுக்காக.

நல்லவேளை அன்று காந்தி ஜெயந்தி என்பதால் விடுமுறை. 11 மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். எங்கள் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் இருந்தது அந்த காவல்நிலையம். 20 நிமிடங்களில் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்ட ஒரு வீட்டின் முன் எங்கள் வண்டி நின்றது. காம்பவுண்டுக்குள் 8 ஹோண்டாக்களும் சுசுகிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. ஓரத்தில் ஒரு சைக்கிள் இருந்தது. வெள்ளை அடிக்கப்பட்ட அந்த வீட்டின் முகப்பில் காவல் நிலையம் என்ற போர்டைத் தவிர, காவல் நிலையம் என்பதற்கான எந்தவித முகாந்திரமும் அங்கு இல்லை. ஜீப், சிவப்பு - வெள்ளைக் கட்டம்போட்ட சுவர், யூனிஃபார்மில் நடமாடும் போலீஸ் என்று நான் நினைத்துக்கொண்டிருந்ததுக்கு மாறாக இருந்தது அந்தக் காவல் நிலையம். கேட்டைத் தாண்டி உள்ளே சென்றோம். வராண்டாவில் சுடிதார் போட்ட ஓர் இளம் பெண் இறையன்பு எழுதிய ஒரு புத்தகத்தை நிமிர்ந்து பார்க்காமல் படித்துக்கொண்டிருந்தார். மேஜையில் லெட்ஜர் புத்தகங்களோ, தொலைபேசியோ எதுவும் இல்லை.

எங்களுக்கு அவரைத் தொந்தரவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. விஷயத்தைச் சொன்னோம். அருகிலிருந்த பெஞ்சில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் புத்தகத்துக்குள் சிறை சென்றுவிட்டார். (பொதுமக்களிடம் காவல்துறையினருக்கு நம்பிக்கையும் மதிப்பும் வரும் விதமாக ரிஷப்ஷனிஸ்ட் போட்டு, பொறுப்பாகப் பதில் சொல்லவும், இனிமையாகப் பொதுமக்களிடம் நடந்துகொள்ளவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்!)

ஒரு அறிவிப்பு பலகை இருந்தது. அதில் ‘ நமது காவல் நிலையத்தில் கணபதி பூஜை ... அன்று நடைபெற இருப்பதால், அறிஞர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று எழுதியிருந்தது. புதிதாக இந்த இடத்தில் குடியேறியிருக்கிறார்கள். அதனால்தான் இன்னும் ஒழுங்குபடுத்தவில்லை போலிருக்கிறது!

கண்காணிப்பாளர் அறை என்று எழுதப்பட்ட அறையின் மேஜையில் தமிழக முதல்வர் சிரித்துக்கொண்டிருந்தார். எதிரில் ஒரு டீவி உட்கார்ந்திருந்தது.

சற்று நேரத்தில் இன்னொருவர் வந்தார். அவரும் பாஸ்போர்ட் விஷயத்துக்காக வந்திருப்பதாகச் சொன்னார். அரைமணி நேரத்தில் பாஸ்போர்ட் அப்ளிகேஷனுக்குப் பொறுப்பான அந்த அதிகாரி வந்து சேர்ந்தார். எங்களை உள்ளே அழைத்துச் சென்று இன்னொரு பெஞ்சில் உட்காரவைத்தார். அந்த அறைக்குச் சற்றும் பொருந்தாத பெரிய அறிவிப்புப் பலகை தொங்கிக்கொண்டிருந்தது.

சின்ன திருட்டு
சாதாரண திருட்டு
பகல் கன்ன திருட்டு (சுவரில் ஓட்டை போட்டு செய்யும் திருட்டு)
இரவு கன்ன திருட்டு
கால்நடை திருட்டு
வாகனத் திருட்டு
கொள்ளை
திட்டமின்றி கொலை
கொலை
விபச்சாரம்
கற்பழிப்பு

இப்படிப் பட்டியல் போடப்பட்டு எத்தனை கேஸ், எவ்வளவு மதிப்புள்ள பொருள்கள் தொலைந்துபோனது, எவ்வளவு கண்டுபிடிக்கப்பட்டது போன்ற விவரங்கள் அதில் இருந்தன. சின்னத் திருட்டு, சாதாரண திருட்டுகள் மிகவும் குறைவாக இருந்தன. கால்நடை, வாகனம், கொள்ளை போன்றவை அதிகம் இருந்தன. பொதுவாகக் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களில் பாதியளவோ அல்லது அதற்குக் குறைவாகவோதான் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்தப் பலகை சொல்கிறது.

எல்லாம் வேடிக்கை பார்த்து முடித்த பின்தான் எனக்கு எதிரில் சுவர் ஓரம் ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். அக்யூஸ்ட். கருகருவென்ற தாடிக்குள், எந்த வித உணர்ச்சியும் இன்றி வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். சின்னத் திருட்டா, சாதாரண திருட்டா அல்லது பட்டியலில் இல்லாத குற்றத்துக்கு உட்கார்ந்திருக்கிறாரா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, எங்களுக்கு முன்னால் இருந்தவரை அழைத்தார் அந்த அதிகாரி. அவரின் விண்ணப்பத்தைச் சரி பார்த்து, தகவல்களை நிரப்பினார். இடையில் வீட்டுக்கு போன் செய்து, ‘லஞ்ச்க்கு வந்துடுவேன். ரெடி பண்ணி வை’ என்று சொல்லிவிட்டு, ‘ஓகே. அனுப்பிடறேன்’ என்றார்.

‘சார், வேற ஏதாவது...’ என்று இழுத்தார் அவர்.

‘சார், நானா இவ்வளவு வேணும்னு கேட்க மாட்டேன். நீங்க கொடுத்தால் வேணாம்னு சொல்ல மாட்டேன்...’

பணத்தை எடுத்துத் தயங்கி நின்றார் அவர்.

‘இங்கேயே கொடுக்கலாம் சார். ஒண்ணும் பிரச்னை இல்லை’ என்று வாங்கி டிராவில் போட்டுக்கொண்டார்.

மேலே காந்தியும் கீழே அக்யூஸ்ட்டும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்!

Monday, October 26, 2009

ஆடு.. கிடை.. அவலம்!

இரண்டு, மூன்று ஆண்களும் பெண்களும் சேர்ந்து நூற்றுக் கணக்கான ஆடுகளை மேய்த்துக்கொண்டு வருவதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். இப்படி யாராவது வந்தால் உடனே எங்கள் பாட்டி, அவர்களை அழைத்து விசாரிப்பார். ‘எப்படிப் பாட்டி அவங்க நம்ம ஊர்க்காரங்கன்னு கண்டுபிடிச்சீங்க?’ என்று ஆச்சரியமாகக் கேட்பேன். ‘இதுல என்ன ஆச்சரியம்? ராமநாதபுரம் வறட்சியான பூமி. அங்கேயிருந்துதான் ஆட்டுக்காரர்கள் எல்லாம் மத்த இடங்களுக்கு வருவாங்க. அதனாலதான் எந்த ஊருன்னு விசாரிச்சேன்’ என்பார்.

ஆடுகளை வைத்துக்கொண்டு எப்படிப் பிழைப்பார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அம்மாவிடம் விசாரித்தேன். ‘ஆடுகள்தான் இவங்க சொத்து. அறுவடை முடிந்த நிலங்களில் ஆடுகளை, கிடை போடுவார்கள். ஆடுகள் அங்கிருக்கும் புல்லைச் சாப்பிட்டுவிட்டு, புழுக்கைகளைப் போடும். அது நிலத்துக்கு நல்ல உரமாகும். இதுக்காக கிடை போடுகிறவர்களுக்கு பணம் அல்லது தானியம் கொடுப்பார்கள். கொஞ்ச காலம் சென்றதும் அடுத்த ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள்’ என்றார் அம்மா.

நூற்றுக்கணக்கான ஆடுகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் இவர்களுக்கு நிலையான இருப்பிடம் கிடையாது. சூரியன் உதித்தது முதல் இரவு வரை ஆணும் பெண்ணும் வேலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். கடுமையான உழைப்பு. இரவிலாவது நிம்மதியாகத் தூங்க முடியுமா என்றால் முடியாது. பட்டியில் அடைபட்டிருக்கும் ஆடுகளை நாய், நரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். இரவில் சுடு சோறும் காலையில் பழைய சோறும்தான் அன்றாட உணவு.

இவர்களின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நீண்ட காலமாகவே இருந்தது. ஏதாவது விசாரிக்கலாம் என்றால் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்காது. சில நிமிடங்களில் கடந்து சென்று விடுவார்கள். அவர்கள் இருப்பிடம் ஊரை விட்டுத் தள்ளி இருக்கும். சென்ற ஆண்டு கீதாரி என்ற புத்தகம் கிடைத்தது.

ராமு கீதாரிக்கும் இருளாயிக்கும் ஒரு மகள். ஆதரவு அற்ற வெள்ளைச்சாமியை வளர்க்கிறார்கள். மகளுக்குத் திருமணமாகிவிட்டது. வெள்ளைச்சாமியும் வளர்ந்து, அவனுக்கு என்று ஆடுகள் சேரும் அளவுக்கு வந்துவிட்டான். அந்த நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி, ராமு கீதாரியின் குடிசைக்கு அருகில் வந்து பிரசவ வலியில் துடிக்கிறாள். ஒரே நேரத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. ஊர்க்காரர்கள் யாரும் குழந்தைகளைப் பராமரிக்க முன்வராததால், ராமு கீதாரியும் வெள்ளைச்சாமியும் குழந்தைகளை வளர்க்க விரும்புகிறார்கள்.

சிவப்பி, கரிச்சா என்ற இரண்டு குழந்தைகளுக்கும் ஆறு வயதாகும்போது சிவப்பியை சாம்பசிவம் வளர்ப்பதாக அழைத்துச் செல்கிறார். கரிச்சாவுக்கு ஒன்பது வயதாகும்போது மகளோடு இருக்க வேண்டிய கட்டாயம் ராமு கீதாரிக்கு இருளாயிக்கும். ஒன்பது வயது கரிச்சா, வெள்ளைச்சாமி சித்தப்பாவோடு தங்கி விடுகிறாள். இருளாயி செய்த அத்தனை வேலைகளையும் பார்க்கிறாள். சிவப்பியும் சாம்பசிவம் வீட்டில் எந்நேரமும் வேலை வேலை என்று இருக்கிறாள். கரிச்சாவுக்கு மாப்பிளை பார்க்கிறார் ராமு கீதாரி. வெள்ளைச்சாமியிடம் இருக்கும் கரிச்சாவை சந்தேகப்படுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். உடனே வெள்ளைச்சாமிக்கும் கரிச்சாவுக்கும் திருமணம் செய்கிறார்கள் அவர்களுடைய விருப்பத்தின் பேரில். சந்தோஷமாக வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. வளர்த்த தகப்பனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிவப்பி இறந்து போகிறாள். கரிச்சா உடைந்து போகிறாள். மனம் மாற்றத்துக்காக வேறு ஊருக்குச் செல்கிறார்கள். அங்கு வெள்ளைச் சாமியின் உறவினகள் வருகிறார்கள். கரிச்சாவுக்கு குழந்தை இல்லை என்று தூற்றுகிறார்கள். மனம் ஒடிந்த கரிச்சா ராமு கீதாரியிடம் வந்து சேர்கிறாள். வந்த பிறகுதான் அவள் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. வெள்ளைசாமி வந்தானா? கரிச்சா என்ன ஆனாள்? என்பதுடன் நாவல் நிறைவடைகிறது.

கதையாக இருந்தாலும் நாடோடிகளாக வாழும் இடையர்களின் வாழ்க்கையை முகத்தில் அறைந்தார்போல சொல்கிறது இந்த நாவல். அடுத்தவர்களை நம்பியே இவர்களின் வாழ்க்கை இருக்கிறது. கிடை போடாமல் இவர்களால் வேறு எங்கும் தங்க முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாது. நிலச் சொந்தக்காரர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும். யாராவது அடித்தாலும் ’நாம் எப்போதோ செய்த தவறுக்கு இப்போது தண்டனை அனுபவிக்கிறோம்’ என்று எதையும் பொறுத்துக்கொள்வார்கள். குழந்தைகளைப் படிக்க வைப்பது கஷ்டம். ஆட்டுக்கு நோய் வந்தால் கூட்டம் கூட்டமாக மடிந்து போகும். ராமு கீதாரி, வெள்ளைச்சாமி, கரிச்சா, சிவப்பி, இருளாயி என்ற அத்தனை பாத்திரங்களும் நம் இயல்பு வாழ்க்கையைப் புரட்டி போட்டுவிடுகின்றன. இடையர்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்
சு. தமிழ்ச்செல்வி.

கீதாரி வெளியீடு : மருதா பதிப்பகம்

Monday, October 19, 2009

ஆண் இனம் அழிவை நோக்கியா?

உயிர்களின் அடிப்படை அலகு செல். ஒவ்வொரு செல்களின் உள்பிரிவிலும் குரோமோசோம்கள் உள்ளன. குரோமோசோம்களில் மரபணுக்கள் (genes) இருக்கின்றன. இந்த மரபணுக்கள்தான் பரம்பரை குணங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் சாதனங்கள். உங்கள் மூக்கு அப்பா போலவா, கண்கள் அம்மா போலவா, குரல் அத்தை போலவா என்று நிர்ணயிப்பது மரபணுக்களே! மனித செல்லில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில் 22 ஜோடி உடலின் குணநலன்களைக் கட்டுப்படுத்துகின்றன. மீதி உள்ள ஒரு ஜோடி நீங்கள் பெண்ணா, ஆணா என்பதை நிர்ணயிக்கிறது. பெண்களுக்கு XX குரோமோசோம்கள், ஆண்களுக்கு XY குரோமோசோம்கள். பிறக்கும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயம் செய்வது ஆண் மட்டுமே!

இன்று X குரோமோசோமில் 1000 மரபணுக்களும் Y குரோமோசோமில் 78 மரபணுக்களும் இருக்கின்றன. ஆனால் மனித இனம் உருவானபோது X மற்றும் Y குரோமோசோம்களில் தலா 1000 மரபணுக்கள் இருந்தன. ஆனால் இப்போது Y குரோமோசோமில் உள்ள மரபணுக்களின் எண்ணிக்கை குறைந்து அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது ஏன்? எதிர்காலத்தில் ஆண் இனம் என்ன ஆகும்?

இந்த சுவாரசியமான விஷயத்தைப் பற்றி பேச வருகிறார் பேராசிரியர் மோகனா. இவர் 22 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் அறிவியலை மக்களிடம் எடுத்துச் சென்று வருகிறார். அறிவியல் நூல்களை எழுதியிருக்கிறார்.

நாள்: 23.10.2009, வெள்ளிக்கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை

Friday, September 25, 2009

மாயமாக மறைந்த ஸ்ட்ராபெர்ரி!

சென்ற ஞாயிற்றுக்கிழமை பால்கனியில் நின்றிருந்தேன். எதிர் பிளாக்காரர்கள் வெளியில் இருந்து திரும்பியிருந்தார்கள். அவர்களின் குழந்தை கையில் ஒரு சிப்ஸ் பாக்கெட் இருந்தது. குழந்தையின் அம்மாவும் அப்பாவும் வேகமாக மாடியேற, குழந்தை மெதுவாகப் படியேறியது. முதல் தளத்துக்கு வந்தவுடன் எதிர் பிளாக் குழந்தையிடம் ’நான் உங்க வீட்டுக்கு விளையாட வரட்டா?’ என்று கேட்டது. அந்தக் குழந்தையும் வா என்று அழைத்தது. ’ அம்மா, நான் ப்ரியா வீட்டுக்குப் போகட்டுமா?’ என்று குரல் கொடுத்தது அந்தக் குழந்தை. ‘சரி, பத்திரமா போ’ என்றார் அவள் அம்மா.

திடீரென்று என்ன நினைத்ததோ அந்தக் குழந்தை, ‘அம்மா விடமாட்டாங்க. நான் அப்புறம் வரேன்’ என்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் இரண்டாவது தளத்துக்கு வந்தும் அதையே திருப்பிச் சொன்னது, குழந்தையின் அம்மா என்னைப் பார்த்தார். ‘நீங்க போகச் சொன்னீங்க. அவ அம்மா விடமாட்டாங்கன்னு சொல்றாளே!’ என்றேன்.

‘கையில சிப்ஸ் பாக்கெட் இருக்குல்ல. அதான் போக மாட்டேங்கிறா. இப்பப் பாருங்க கொடுத்துட்டுப் போவா’ என்றார். சொன்னது போலவே ‘அம்மா, இதை வச்சிருங்க. ப்ரியா வீட்டுக்குப் போயிட்டு வரேன்’ என்று சிப்ஸ் பாக்கெட்டைக் கொடுத்துவிட்டு இறங்கினாள்.

‘ஷேர் பண்ணற பழக்கமே வர மாட்டேங்குது பாருங்க’ என்றபடி வீட்டுக்குள் சென்றார் குழந்தையின் அம்மா.

..

சில வருடங்களுக்கு முன்பு என்னுடன் பணிபுரிந்த ஒருவர் சொன்னது எனக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. அவருக்கும் ஒரே மகன். அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.

‘இங்க பாருங்க. ஆகாஷ் நேத்து ஸ்ட்ராபெர்ரி பழம் வாங்கிட்டு வரச் சொன்னான். அறுபது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போய்க் கொடுத்தேன். டிரெஸ் மாத்திட்டு ஹாலுக்கு வரேன். பாக்கெட்ல ஸ்ட்ராபெர்ரி இலைகள் மட்டும்தான் இருந்தது. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாயிருச்சு. என்னடா, இப்படிப் பண்ணிட்டே? எனக்கோ, உங்க அப்பாவுக்கோ ஒரு பழம் கூட வைக்க மாட்டியா? இதெல்லாம் அடிக்கடி வாங்கிச் சாப்பிடற பழம் இல்லையேன்னு கேட்டேன். போம்மா, எனக்குத் தோணலைன்னு சொல்லிட்டு, அவன் பாட்டுக்கு டிவி பார்த்துட்டு இருக்கான். பகிர்ந்துக்கற மனப்பான்மையே இல்லை. அதை நான் சொன்ன பிறகும் அவனுக்கு அது தப்பாகவே படலை’ என்று மிகவும் வருத்தப்பட்டார்.

..

நண்பனுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. வீட்டுக்கு வந்திருந்தபோது, ‘அசோகா அல்வா. மீனாவும் நீயும் வீட்ல சாப்பிடுங்க’ என்று பாத்திரத்தில் போட்டுக் கொடுத்தேன். ’வீட்டுக்குப் போனால் மீனாதான் சாப்பிடுவா. எனக்குத் தரமாட்டா’ என்றான் சிரித்தபடி.

‘அடப்பாவி, ஏன் இப்படிச் சொல்றே?’ என்றேன்.

‘போன வாரம் அம்மா மீன் குழம்பு, மீன் வறுவல் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனாங்க. நான் சாப்பிட உட்கார்ந்தால் வெறும் குழம்பு மட்டும் ஊத்தினா. சரி அம்மா கொஞ்சமாகக் கொடுத்திருப்பாங்கன்னு விட்டுட்டேன். நேத்து நைட் சப்பாத்தி பண்ணிருக்கேன். சிக்கன் கிரேவி வாங்கிட்டு வாங்கன்னு சொன்னா. வாங்கிட்டுப் போய், அவகிட்ட கொடுத்தேன். குளிச்சிட்டு வர்றதுக்குள்ள அவ சாப்பிட்டு முடிச்சிட்டா. நான் சாப்பிடும்போது சப்பாத்தியும் ஒரு ஸ்பூன் கிரேவி மட்டும்தான் இருந்தது. இதுன்னு மட்டும் இல்லை, கேக், பப்ஸ் எது வாங்கிக் கொடுத்தாலும் அவளுக்கு நான் இருக்கறதே மறந்துடுது.’

‘ஒரே பொண்ணோ?’

‘ஆமாம். ஷேரிங் என்ற பழக்கமே இல்லை’ என்றான்.

..

எங்கள் வீட்டில் நான்கு பேர் சகோதரிகள். ஒரு கேக், ஒரு பிஸ்கெட்டாக இருந்தாலும் எங்கள் அம்மா நான்காகப் பகிர்ந்துதான் தருவார். நாங்கள் அந்தப் பங்கிலும் எங்கள் அம்மாவுக்குக் கொஞ்சம் கொடுத்து, சாப்பிடச் சொல்வோம். அதே போல எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட ஏதாவது எங்களிடம் கொடுத்து, கொடுக்கச் சொல்வார் அம்மா. இனிப்பு, காரம் எது செய்தாலும் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்துவிட்டுத்தான், நாங்கள் சாப்பிடுவோம். யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொடுப்போம். கொடுப்பதில் உள்ள சந்தோஷமே தனிதான்.

ஒரே குழந்தையாக இருக்கும் வீடுகளில் பெரிய சாக்லெட் பாக்கெட்டாக இருந்தாலும் சரி, பெரிய சிப்ஸ் பாக்கெட்டாக இருந்தாலும் சரி, அப்படியே பாக்கெட்டோடு குழந்தையிடம் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை முடிந்தவரை தான் மட்டுமே சாப்பிட்டுவிட்டு, முடியாதபோது மட்டும் தூக்கிப் போடுகிறது. இப்படிக் குழந்தையை வளர்த்துவிட்டு, பிறகு பகிர்ந்து சாப்பிடும் பழக்கமே இல்லை என்று வருத்தப்படுவதிலும் கவலைப்படுவதிலும் என்ன நியாயம்?

நாங்கள் சாப்பிடாமல் எல்லாமே குழந்தைக்குத்தான் தருவோம் என்பதில் பெருமையோ, அக்கறையோ இல்லை. அம்மா, அப்பா உள்பட எல்லோருக்கும் பகிர்ந்துகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை, குழந்தையிலேயே கொடுப்பதில்தான் உண்மையான அக்கறை இருக்கிறது!

Monday, September 14, 2009

இருள் பொருள், இருள் ஆற்றல்

Dark Matter, Dark Energy (கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்) என்ற கருத்துகள் இன்று அறிவியலாளர்களை ஆட்டி வைக்கிறது. இந்தப் புதிய கருத்தாக்கத்தின்படி, உலகின் 96% பொருளும் ஆற்றலும் இந்த கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் வடிவைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது.

சாதாரணப் பொருள் மட்டும் இருந்தால், அண்டங்கள் (கேலக்ஸிகள்) உருவாகி இருக்கவே முடியாது. எனவே ‘கண்ணுக்குத் தெரியாத பொருள்’ என்று ஒன்று இருக்கவேண்டும்; இந்தக் கண்ணுக்குத் தெரியாத பொருள், சாதாரணப் பொருள்களை இழுத்து ஒட்டவைக்கும் பசைபோலச் செயல்படுகிறது என்று ஒரு கருத்தாக்கம் உள்ளது.

இன்று பிரபஞ்சம் பயங்கர வேகத்தில் விரிவாகிக்கொண்டே இருக்கிறது. பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன. பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையையும் தாண்டி இவ்வாறு பொருள்கள் விலகிச் செல்லக் காரணம் ஒருவேளை ‘கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்’ என்ற ஆற்றல் ஈர்ப்புக்கு எதிராகச் செயல்படுவதாலோ என்ற ஒரு கருத்தாக்கமும் உள்ளது.

கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் ஆகியற்றின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க உள்ளார் டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.

இடம் : கிழக்கு மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை
நாள் : 26 செப்டெம்பர் 2009, சனிக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி


பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ள அழைக்கிறோம். வாருங்கள்.

Monday, September 7, 2009

கிரண் பேடிக்கு ஏன் இந்த ஆசை?

மாடலிங் துறையில் ஏற்கெனவே சினிமாகாரர்கள், விளையாட்டு வீரர்கள் என்று கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் புகழை வைத்து நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் லாபம், அதில் மாடலாக இருப்பவருக்கும் கோடிக்கணக்கில் வருமானம்! இதில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கிறார் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி! அதுவும் சமூக விழிப்புணர்வு விளம்பரமோ, அரசாங்க விளம்பரமோ அல்ல. ‘இந்த சோப்பைத் தேய்த்தால் தளும்பு மறையும்’ என்று ஒரு சோப்புக்கு மாடலாகப் பணி புரிந்திருக்கிறார். எத்தனையோ இந்தியப் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் ரோல்மாடலாகவும் இருந்த கிரண் பேடிக்கு ஏன் இந்த ஆசை? நுகர்வு கலாசாரமும் வியாபார உத்தியும் எந்த அளவுக்குச் சென்றுவிட்டது என்பது இதிலிருந்தே தெரிகிறது. நாளை மன்மோகன் சிங்கும் சோனியாவும் மாடலாக வந்தாலும் ஆச்சரியமில்லை!

Tuesday, September 1, 2009

இந்திய நாடாளுமன்றத்தில் ரஷ்யா!

அலுவலக நண்பர் தன் அண்ணன் குழந்தைக்குப் பெயர் வைப்பதற்காக ஒரு வாரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார். தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும். இந்த எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். மாடர்னாகவும் இருக்க வேண்டும், இப்படி...

பெயர் என்பது ஓர் அடையாளம். அதைத் தவிர வேறு ஒன்றும் காரணம் இல்லை. ஆனால் பிறந்ததிலிருந்து, இறுதி வரை நம்மை அந்தப் பெயரில்தான் அழைக்கப் போகிறார்கள் என்பதால் எல்லோருக்கும் கூடுதல் அக்கறை பெயர் வைப்பதில் வந்து விடுகிறது.

என் அப்பா சுத்தானந்தம், பெரியப்பா நச்சினார்க்கினியன், சித்தப்பா தெய்வசிகாமணி, அத்தைகள் சொரூப ராணி, கஸ்தூரி, கங்கா, ஜெயலஷ்மி என்று தாத்தா ரசனையோடு பெயர் வைத்திருக்கிறார். ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.

சின்ன வயதில் அப்பாவுக்கு சுத்தானந்தம் என்ற பெயர் பிடிக்கவில்லை. தான் வளர்ந்த பிறகு கண்டிப்பாகத் தன் பெயரை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். வளர்ந்ததும் எதுக்காகப் பெயர் மாற்ற வேண்டும்? இந்தப் பெயரே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

அப்பா-அம்மா (விஜயா) பெயரிலிருந்து எழுத்துகளை எடுத்து சுஜாதா, பாட்டி பெயரிலிருந்து பூமா ப்ரியா, அப்பாவின் தோழி பெயரிலிருந்து ஹேமா பானு, இசைக்காக சங்கீதா என்று பெயர் வைத்தார் அப்பா. இதில் எங்கள் தாத்தாவுக்கு வருத்தம் இருந்தது. ராஜ ராஜேஸ்வரி என்று பெயர் வைத்து ராஜி என்றும் பரமேஸ்வரியை பரமேஸ் என்றும் மாடர்னாகவும் செல்லமாகவும் அழைக்கலாமே என்று சொல்வார்!

தோழர் மைதிலி சிவராமன் பெயரை பாண்டி சித்தப்பா தன் பெண்ணுக்கு வைத்தார். அவளை மைதிலி என்று அழைக்காமல் பாப்பா என்றுதான் கூப்பிடுவார். பாப்பா (உமாநாத்) என்றும் தோழர் இருந்ததால் ’பாப்பாங்க, வாங்க, போங்க’ என்றுதான் கூப்பிடுவார்!

என்னுடன் கல்லூரியில் படித்த தோழிக்கு சின்னப் பொண்ணு என்று பெயர். உருவம் என்னவோ மிகப் பெரிதாக இருப்பாள். அவள் பெயரை உச்சரிக்கும்போதே பேராசிரியர்கள் சிரித்து விடுவார்கள்! ‘நானாவது பரவாயில்லை. எங்க ஊர்ல போதும் பொண்ணுன்னு எல்லாம் பேர் இருக்கு’ என்பாள் சின்னப் பொண்ணு.

ஒருமுறை பெரியாரிடம் யாரோ பெயர் வைக்கச் சொன்னபோது, மாஸ்கோ என்று வைத்துவிட்டாராம்! எல்லோரும் ஏன் இப்படி வைத்தீர்கள் என்று கேட்டபோது, ‘ஸ்டாலின், லெனின் என்று தலைவர்கள் பெயர் வைத்து, பிற்காலத்தில் பிள்ளைகள் சரியில்லாவிட்டால் திட்டுவீர்கள். அதுக்கு பழனி, திருப்பதி மாதிரி ஊர்ப் பெயர்களை வைத்துவிடுவது நல்லது. மாஸ்கோ யாரும் வைக்காத பெயர் வேறு’ என்றாராம்!

அதே போல தஞ்சாவூரில் ஒரு தோழர். அவருடைய குழந்தைக்கு ரஷ்யா, அவர் உறவினர் குழந்தைகளுக்கு திரிபுரா, வியட்நாம் என்று பெயர் வைத்திருக்கிறார். இன்று ரஷ்யா இந்திய நாடாளுமன்றத்தில் வேலை செய்கிறார்!

சிலருக்கு அவர்களின் தாத்தா, பாட்டி பெயர்களை வைத்து விடுவார்கள். குழந்தையின் அம்மாவுக்குத் தன் மாமனார், மாமியார் பெயரை அவர்களுக்கு முன் உச்சரிக்கவோ, கோபத்தில் திட்டவோ முடியாமல் தவிப்பார்கள்.

சிலர் அவர்கள் படித்த நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் பிடித்துப் போவதால் குழந்தைகளுக்கு அந்தப் பெயர்களை வைத்துவிடுவார்கள். இப்படித்தான் பூங்குழலி, அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, அரவிந்த், பூரணி என்றெல்லாம் பெயர்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன. அதேபோல சிலர் பிரசவம் பார்த்த டாக்டர் பெயரை குழந்தைக்கு சூட்டியிருக்கிறார்கள்.

சில பெயர்களை வைத்து அவர்கள் எந்த ஊர் என்பதைக் கூடச் சொல்லிவிடலாம். பாண்டி, ராஜதுரை, மருது, வைகை போன்ற பெயர்கள் மதுரை, ராஜராஜன், சோழன், இளந்திரையன், ராஜேந்திரன் போன்றவை தஞ்சாவூர், கோமதி நாயகம், காந்திமதி போன்றவை திருநெல்வேலி என்று கண்டுபிடித்து விடலாம். சில சமூகங்களில் சில பெயர்களைத்தான் வைப்பார்கள். யாராவது பெயரை மாற்றி வைத்துவிட்டால், அவர்களுக்குக் கல்யாணம் எல்லாம் கஷ்டம்தான்!

சுடலை, கருப்ப சாமி, மாடசாமி, முனியாண்டி, ஐயனார் என்று கிராமத்துத் தெய்வங்களைப் பெயர்களாகச் சூட்டியிருப்பார்கள். இப்போது சாமி, முன்னோர்கள் பெயர்களைச் சம்பிரதாயத்துக்கு சூட்டிவிட்டு, நவீனப் பெயர்களை வைத்து விடுகிறார்கள்.

சிலருக்கு அழகான பெயர்கள் இருக்க பட்டப்பெயர்களில் அவர்களை அழைத்து, உண்மையான பெயரை மறக்கச் செய்துவிடுவார்கள். மண்டை வாய்க்கால் என்று ஒருவரை அழைப்பார்கள். இப்படி ஒரு பெயரா என்று எனக்கு ஆச்சரியம். அம்மாவிடம் கேட்டபோது, ‘ சின்ன வயதுல சுப்பிரமணிக்கு கீழே விழுந்து மண்டை உடைந்து போனது. மண்டையிலிருந்து வாய்க்கால் மாதிரி ரத்தம் கொட்டியதால மண்டை வாய்க்கால்ன்னு அவரை கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க’ என்றார்.

எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் இருந்தது. அதில் ஒரு வால் பையனை அவன் அம்மா, ‘ அக்கபோரு... அக்கபோரு...’ என்றுதான் அழைப்பார். ‘எப்பப் பார்த்தாலும் திட்டறீங்களே, அவனுடைய பேர் என்ன?’ என்று கேட்டார் அம்மா. ‘ஐயையோ நான் அவனைத் திட்டலைங்க... அவன் பேரு அக்பரு (அக்பர்)’ என்றார்!

சச்சின், சிம்ரன், குஷ்பூ போன்ற பெயர்கள் எல்லாம் நம் வழக்கத்தில் வந்துவிட்டன.

அது சரி. மாமனார், மாமியார், கணவர், ஜோதிடர் போன்றவர்களால் ஒரு குழந்தைக்குப் பெயர் சூட்டப்படுகிறது. பெயர் வைக்கும் விஷயத்தில் பெற்றெடுக்கும் தாய்க்குப் பங்கிருக்கிறதா?

Monday, August 24, 2009

கயிற்றில் நடந்த சிறுமி!

கூட்டம் நிரம்பி வழியும் ஆழ்வார்பேட்டை பேருந்து நிறுத்தம். மாலை 6 மணி. சாலை ஓரத்தில் இரண்டு பெரிய ஆணிகள் அடிக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு கயிறு மேலே சென்றது. இரண்டு பக்கமும் தலா இரண்டு இரும்புக் கம்பிகள். சுமார் இருபதடி தூரத்தில் இருந்த கம்பிகளை கயிறு இணைத்திருந்தது. முப்பது வயது நிரம்பிய ஓர் பெண் கையில் மேளத்துடன் நின்றிருந்தார். அருகில் 13 வயது சிறுவனும் 7 வயது சிறுமியும் நின்றிருந்தார்கள்.

திடீரென்று சிறுமி கம்பி மூலம் கயிற்றுக்கு வந்தாள். கயிற்றின் மீது ஒரு தட்டு வைக்கப்பட்டது. அதில் இரண்டு முழங்கால்களையும் வைத்து அமர்ந்தாள். கையில் ஒரு நீண்ட குச்சி. ஹிந்தியில் குழந்தையிடம் ஏதோ சொன்னார் அவள் அம்மா. உடனே குழந்தை நகர ஆரம்பித்தது. அதற்கேற்றவாறு அவள் அம்மா மேளத்தைத் தட்டினார். மூன்று நிமிடங்களில் கயிற்றின் மறுபுறத்துக்கு வந்துவிட்டாள் அந்தச் சிறுமி. ஒரே இடத்தில் இருந்தபடி கயிற்றை இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள். ஆறு அடி உயரத்தில் இருந்து அவள் ஆடுவது பயமாக இருந்தது. ஆனால் அவளின் அற்புதமான திறமை எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்திவிட்டது. அம்மா போதும் என்றதும், தட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, கம்பியைப் பிடித்துக் கீழே வந்துவிட்டாள்.

அவள் அண்ணன் கயிற்றை அவிழ்க்க ஆரம்பித்தான். தட்டை எடுத்து சிறுமியின் கையில் கொடுத்தார் அவள் அம்மா. குழந்தை ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டு வந்தது. நிறையப் பேர் அவள் திறமையைப் பாராட்டி, கூப்பிட்டு நிதியுதவி அளித்தனர். அடுத்த ஐந்தாவது நிமிடம் மூவரும் அந்த இடத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்கள். அடுத்த இடத்தை நோக்கி...

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற காட்சிகளை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அவர்களின் சாகசங்கள் எல்லாம் குழந்தைகளை வைத்துத்தான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் இந்தக் காட்சியைக் கண்டதில் ஆச்சரியத்தைவிட, அதிர்ச்சியே மிஞ்சி நின்றது. படிக்க வேண்டிய வயதில் தன் குடும்ப பாரத்தை, தான் சுமக்கிறோம் என்பது தெரியாமலே அந்தப் பெண் குழந்தை நடந்து சென்ற காட்சி என்னவோ செய்தது. கயிற்றில் நடக்கும் வித்தை, நிதானம், கவனம், திறமை என்று அந்தக் குழந்தையிடம் அத்தனை விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதுபோன்ற திறமை வாய்ந்த குழந்தைகளை அரசாங்கம் அடையாளம் கண்டு, படிக்கவும் வித்தையில் சிறக்கவும் செய்தால் விளையாட்டுத் துறையில் இந்தியா நல்ல நிலைக்குச் செல்லாதோ!

Friday, August 21, 2009

இரண்டு நாள் வனவாசம்!

பரம்பிக்குளம் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தோம். அங்கு செல்வதற்கான வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. ஏழு பேர் கொண்ட சின்ன குழுவாகக் கிளம்பினோம். கோவை வரை ரயில் பயணம். அங்கிருந்து பொள்ளாச்சிக்கு ஒரு மணி நேரம் பேருந்தில் பயணம். பொள்ளாச்சியில் காலை 6.15 மணிக்குத் தயாராக நின்றுகொண்டிருந்தது பரம்பிக்குளம் பேருந்து.

பொள்ளாச்சியில் இருந்து கிளம்பிய பத்து நிமிடங்களுக்குள் நகரத்தை விட்டு, கிராமங்களுக்குள் செல்ல ஆரம்பித்தது பேருந்து. சாலையின் இரண்டு பக்கங்களிலும் மிகப் பெரிய தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள். தோப்புகளுக்கு நடுவே சின்ன பங்களாக்கள். சினிமாவில் பார்த்த பண்ணையார் வீடுகள் ... வருவதும் மறைவதுமாக இருந்தன. ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை என்று கடந்த பேருந்து மலைமேல் ஏற ஆரம்பித்தது. அரை மணி நேரப் பயணத்தில் டாப்ஸ்லிப் வந்து நின்றது. இத்துடன் தமிழ்நாட்டு எல்லை முடிவடைகிறது. இனி கேரளா.குறுகலான மலைப்பாதை. உயர்ந்த தேக்கு மரங்கள். தூணக்கடவு தாண்டி, பரம்பிக்குளம் நெருங்கிக்கொண்டிருந்தோம். நீண்ட தோகை கொண்ட ஓர் ஆண் மயிலும், இரண்டு பெண் மயில்களும் சீரியஸாக உணவு தேடிக்கொண்டிருந்தன. அடுத்த வளைவில் ஓர் யானை ஓரமாக நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் மற்றும் எகோ செண்டர் முன்பு பேருந்து நின்றது. ஹெரான், மைனா, ஹிப்போய் என்ற பறவைகளின் பெயர்களில் 7 டெண்ட்கள் இருந்தன. தரை மட்டும் சிமெண்ட் போடப்பட்டு, அதன் மேலே டெண்ட். சுவர் கிடையாது. பாதுகாப்பான டெண்ட். உள்ளே ஹோட்டலுக்குரிய அத்தனை வசதிகளும் இருந்தன. டெண்டை ஒட்டி, குளியலறை.

நாங்கள் தயாரானதும் சின்ன வன உலாவுக்கு அழைத்துச் சென்றார்கள். சத்தம் போடக்கூடாது; சிவப்பு, மெஜந்தா வண்ண ஆடைகளை அணியக்கூடாது என்று எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டி ஸ்ரீநிதாசன் கூறினார். நடக்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் சரசரவென்று சத்தம் கேட்டது. சில மான்கள் வேகமாக ஓடுவது தெரிந்தது. மரங்கள், செடிகளைப் பார்த்துக்கொண்டு தங்கிய இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.
மதிய உணவு பிரமாதமாக இருந்தது. சைவம், அசைவம் எல்லாம் இருந்தது. நான்கு மணிக்கு வேனில் வன உலாவுக்குக் கிளம்பினோம். சற்று நேரத்தில் நாற்பது, ஐம்பது மான்கள் ஒரே இடத்தில் மேய்ந்துகொண்டிருந்தன. பச்சைப் புல்வெளியில் பழுப்பு வண்ணப் புள்ளி மான்கள் அட்டகாசமாக இருந்தன. மீண்டும் பயணம்... சாம்பார் மான், மயில், சிங்கவால் குரங்குகள் கண்ணில் பட்டன.

கன்னிமரா தேக்கு மரம் மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் முழு உருவத்தையும் எவ்வளவு முயற்சி செய்து கேமராவுக்குள் சிக்க வைக்க முடியவில்லை. அதன் வயது அதிகமில்லை... சுமார் 450 வருடங்கள்!

அங்கிருந்து பரந்து விரிந்துள்ள ஏரிக்குச் சென்றோம். சுற்றிலும் மூங்கில் காடுகள். நடுவில் தண்ணீர். மூங்கிலால் செய்யப்பட்ட சிறிய படகில் சவாரி. தூரத்தில் ஒரு கறுப்பு முதலை தரையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் மான்கள் கூட்டமாகத் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. ஏரியின் நடுவில் 4 கிலோ மீட்டருக்கு ஒரு நிலப்பரப்பு. அதிலும் மரங்கள். அந்தத் தீவிலும் தங்கும் வசதி உண்டு. இரவு நேரத்தில் தீவுக்கு அருகில் யானைகள், புலிகள் தண்ணீர் அருந்த வருவதைப் பார்க்கலாம் என்றார்கள்.

’புலி இதுவரை ஏழு தடவை என் பக்கத்துல வந்துட்டுப் போயிருக்கு. நமக்குப் பயமாகத்தான் இருக்கும். ஆனா அது இதுவரை ஒண்ணும் செய்ததில்லை. பார்த்தாலும் பார்க்காத மாதிரி போயிடும். இந்தக் கரடி இருக்கே, அதுதான் பொல்லாதது’ என்றார் படகோட்டி.

அடுத்து நாங்கள் சென்ற இடம் அணை. காடு கேரளாவுடையது என்றாலும் இங்கிருக்கும் அணைகள் எல்லாம் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில். அணை மீது நடக்கும்போது சுற்றிலும் பல வண்ணப் பச்சை மரங்கள். சில இடங்களில் தேக்கு மரம் பூத்து வித்தியாசமான கலவையாகக் காட்சி தந்தது.

இருட்ட ஆரம்பித்தது. எங்கும் பூச்சிகளின் இன்னிசை. அடுத்து ஊருக்குள் வந்து சேர்ந்தோம். அங்கு மலை வாழ் மக்களின் பாரம்பரிய நடனத்தைப் பார்த்தோம்.
தங்கும் இடத்தை நோக்கி வேன் கிளம்பியது. ஓர் இடத்தில் வேன் நின்றது. சுமார் பத்து காட்டெருமைகள் ஓரமாக நின்றுகொண்டிருந்தன. பளபள தோல். புஷ்டியான உடல். கூர்மையான வளைந்த கொம்புகள். மிகவும் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தன.

சற்றுத்தூரம் சென்ற உடன் எதிரே ஒரு ஜீப் வந்தது. அதில் இருந்தவர்கள் யானை பாதையில் நிற்பதாகச் சொன்னார்கள். வேன் மெதுவாகச் சென்றது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் யானைகள் குடும்பம் குடும்பமாக நின்றுகொண்டிருந்தன. சில யானைகள் வேகமாக மரங்களுக்குள் சென்று மறைந்துகொண்டன.

நாங்கள் இரவு உணவை முடித்துவிட்டு, தூங்கினோம். அதிகாலை பறவைகள், விலங்குகளுடைய விநோதமான ஒலிகள் கேட்டன. எழுந்து பறவைகளைப் பார்ப்பதற்காக மீண்டும் வன உலா. வழியில் கஸ்தூரி மஞ்சள் செடிகள் பூத்திருந்தன. பெயர் தெரியாத பறவைகள் எங்கோ இருந்து சத்தம் கொடுத்துக்கொண்டிருந்தன. ஒன்றிரண்டு பறவைகளை மட்டும் பார்க்க முடிந்தது.

காலை உணவுக்குப் பிறகு மீண்டும் ஒரு நடைப்பயணம். நடுவில் வேறொரு குழுவும் எங்களுடன் இணைந்தது. உயரமான மரத்தில் மலை அணிலைப் பார்த்தோம். பெரிய முயல் அளவுக்கு அதன் உருவம் இருந்தது. திடீரென்று பெரிய மரம் ஒடியும் சத்தம். இரண்டு வழிகாட்டிகளும் ரகசியமாகப் பேசிக்கொண்டனர். காரணம் கேட்டேன். ஒன்றும் இல்லை என்றனர். பிறகு ஒரு பெரிய செடியைப் பறித்து, இடப்பக்கமும் வலப்பக்கமும் வீசிக்கொண்டு நடந்தனர். எங்களுக்கெல்லாம் திக்திக் என்றிருந்தது. அமைதியாக தங்கும் இடத்துக்கு வந்தோம். ‘வேற ஒண்ணும் இல்லை. யானை வாசம் வந்தது. சத்தமும் கேட்டது. அதான்’ என்றார் வழிகாட்டி.
யானை பள்ளத்தாக்கு என்ற இடத்தில் தங்கினோம். தங்கும் விடுதிக்கு அருகில் பெரிய வாணலி பாத்திரம் அளவுக்கு தடங்கள் காணப்பட்டன. விசாரித்தபோது முதல் நாள் இரவு யானைக்கும் காட்டெருமைக்கும் சண்டை என்றார்கள். அதன்பிறகுதான் காட்டெருமையின் கால்தடம் அருகில் இருந்ததைக் கவனித்தோம்.

சுற்றுலா பொறுப்பாளர் ஸ்ரீநிவாசன் வீடு அருகில் இருந்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக இங்கு வசிப்பதாகச் சொன்னார். அவர் வீட்டுக்கு அருகில் உள்ள மரங்களில் சிங்கவால் குரங்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. மழை பெய்யும்போது சிறுத்தை இவர்கள் வீட்டு வாசலில் ஒதுங்கி விட்டுச் செல்லும் என்றார்கள்! கோழி வளர்த்தால் மலைப்பாம்பு பிடித்துச் சென்று விடுமாம்!

எனக்கு ஒரு கேள்வி இருந்துகொண்டிருந்தது. ‘இயற்கை காடு மாதிரி தெரியலை. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தேக்கு மரங்கள் வளர்ந்திருக்கே?’ என்று ஸ்ரீநிவாசனிடம் கேட்டேன்.

‘ பிரிட்டிஷ் காலத்தில் காட்டில் உள்ள மரங்களை அழித்து தேக்கு மரங்களை நட்டிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். அதுதான் இப்ப இப்படி வளர்ந்திருக்கு. சின்னச் சின்ன இலைகள் உள்ள மரங்கள் இல்லாததால பறவைகள், விலங்குகளுக்கு உணவும் இல்லை. வாழறதுக்கான வசதியும் குறைந்து விட்டது. ஹார்ன்பில் போன்ற பறவைகளும் நிறைய விலங்குகளும் இன்னும் தூரத்தில் இருக்கும் இயற்கை காட்டுப்பகுதிகளுக்குச் சென்றுவிட்டன. இங்கே தனியாருக்கு நிலம் கிடையாது. மலைவாழ் மக்கள் 150 குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்கும், காடுகளின் அருமையை எல்லோரும் புரிந்துகொள்ளவும் இந்த வன உலாக்களை நடத்திக்கொண்டிருக்கிறோம் ’ என்றார்.

புகை பிடிக்கத் தடை. மதுபானங்களுக்குத் தடை. பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை. தப்பித் தவறி பிளாஸ்டிக் பைகள் கண்ணில் பட்டால் அதிகாரி முதல் பொதுமக்கள் வரை ஓடி வந்து அப்புறப்படுத்துகிறார்கள். விலங்குகளின் வாய்க்குள் தெரியாமல் போய்விட்டால் கஷ்டம்!

திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள். பூச்சிகளின் ஒலிகள். விலங்குகளின் திடீர் தரிசனங்கள். இதமான குளிர். தொல்லை தராத தொலைபேசிகள் (பிஎஸ் என் எல் தவிர எதுவும் வேலை செய்யாது). டிவி, செய்தித்தாள் போன்ற தகவல் தொடர்புகள் இன்றி, இரண்டு நாள்கள் இயற்கையோடு இயற்கையாக, சுத்தமான, காற்று, தண்ணீருடன் அடடா!

Friday, July 31, 2009

ஐயோ, இது என்ன வலி?

சில மாதங்களுக்கு முன்பு அல்சர் பிரச்னைக்காக மருத்துவரைச் சந்தித்தேன். டெஸ்ட் செய்து விட்டு, வலி, எரிச்சல் இருக்கிறதா என்று கேட்டார். இரைப்பையில் எரிச்சல் இருக்கிறது என்று சொன்னேன். உடனே அவர் சிரித்து விட்டார். ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டோமோ என்று டாக்டரைப் பார்த்தேன். ’எல்லோரும் நெஞ்சு எரிச்சல்னுதான் சொல்வாங்க. நீங்க வித்தியாசமா இரைப்பை எரிச்சல்ங்கறீங்க!’ என்றார்.

நண்பர் ஒருவர் உயிரியல் பேராசிரியர். அவர் அடிக்கடி ஏதாவது பிரச்னைக்காக மருத்துவரிடம் செல்வார். டாக்டர் என்ன பிரச்னை என்றால் நெஞ்சு வலி, வயிற்று வலி என்றெல்லாம் சொல்ல மாட்டார். ‘இதயத்தில் இடது வென்ட்ரிக்கிளிளுக்கும் வலது வென்ட்ரிகிளுக்கும் நடுவில் வலிக்கிறது’ என்றார். திகைத்துப்போன டாக்டர், ‘நீங்களும் மருத்துவரா?’ என்று கேட்டார். ‘இல்லை... எனக்குக் கொஞ்சம் விஷயம் தெரியும்’ என்றார் நண்பர். ’இதயத்தில் ஒண்ணும் பிரச்னை இல்லை. விஷயம் தெரியறதால நீங்களே சாதாரண வலியைக் கூட அதுவோ, இதுவோன்னு கற்பனை செஞ்சுக்கறீங்க. வலியை மட்டும் சொல்லுங்க. என்ன பிரச்னை, எங்கே பிரச்னைன்னு கண்டுபிடிக்கறது எங்களோட வேலை’ என்றார் டாக்டர்.

இப்படி... கொஞ்சம் விஷயம் தெரிந்தாலே ஏதாவது வலி என்றால் ஏதேதோ கற்பனை செய்துவிடுகிறோம். மருத்துவம் படித்த ஒரு டாக்டருக்கு இந்த உணர்வு எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள ரொம்ப ஆசையாக இருந்தது.

சமீபத்தில் அதுக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. என் தோழியும் அவரது கணவரும் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். தோழியின் கணவர் ஒரு மருத்துவர். ஒரு நாள் முழுவதும் எங்களுடன் தங்கியிருந்தனர். குழந்தைகள் விளையாடும்போது, ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது, என்று எந்த நேரத்திலும் அவர் ஓர் அப்பாவாகத் தெரிந்தாரே தவிர, மருத்துவராகத் தெரியவில்லை. அவர்கள் கிளம்பும்போதுதான், அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

‘இவர் வீட்டில் டாக்டரா இருப்பாரா? சாதாரண அப்பாவா இருப்பாரா?’

உடனே டாக்டர் சிரித்தார்.

‘இவரும் நம்மளை மாதிரிதான் இருப்பார். எல்லோரும் கடைபிடிக்கும் சில அடிப்படை சுகாதாரத்தை நாங்களும் கடைபிடிப்போம். மற்றபடி அதைச் சாப்பிடாதே காய்ச்சல் வரும், இதைப் பண்ணாதே சளி பிடிக்கும்ன்னு எல்லாம் சொல்ல மாட்டார்’ என்றார் தோழி.

‘எல்லா மக்களுக்கும் உள்ளதுதானே நம்மளுக்கும். மருத்துவம் தெரிந்ததால சும்மா எல்லா விஷயத்தையும் யோசிச்சிட்டே இருக்கக்கூடாது’ என்றார் டாக்டர்!

Tuesday, July 28, 2009

பள்ளி என்றொரு சர்க்கஸ் கூடாரம்!

காலையில் செய்தித்தாளைப் பார்த்தபோது அதிர்ச்சி. விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்ப்பெரும்பாக்கம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமீபத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா நடத்தியிருக்கிறார்கள். அதில் முக்கிய அம்சமாக கராத்தே மாஸ்டரின் சாகசங்கள்! பத்து வயது மாணவர்கள் சீருடைகளுடன் வரிசையாகக் கைகளை நீட்டி, குப்புறப் படுத்திருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளை குழந்தைகளின் கைகள் மேல் ஓட்டி வருகிறார் மாஸ்டர். குழந்தைகள் பயத்தில் தலையை நிமிர்த்தவில்லை. சுற்றி நிற்கும் கூட்டம் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. அடுத்த சாகசம் தரையில் படுத்திருக்கும் மாணவியின் வயிற்றில் ஒரு பலகை வைத்து, அதன் மீது மோட்டார் சைக்கிளை ஓட்டி வருகிறார் மாஸ்டர்.

குழந்தைகளைத் துன்புறுத்தும் இந்த நிகழ்ச்சி அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊர்ப்பெரியவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது! அதுவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சம்மதத்துடன் எனும்போது என்ன சொல்வது?

2008ம் ஆண்டு எடுத்த புள்ளிவிபரம் அரசாங்கப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதாகக் கூறியிருக்கிறது. அதே போல மாணவர்களின் சேர்க்கையும் குறைந்து வருவதாகச் சொல்கிறது. இந்த நேரத்தில் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் காட்ட வேண்டிய அக்கறையை குழந்தைகளைப் பகடையாக வைத்து, இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளில் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

Wednesday, July 22, 2009

மனிதர்கள் சிறை வைக்கப்பட்டார்கள்!

இந்த முறை அதிகாலையில் சூரிய கிரகணம் நிகழ்வதால் சென்ற முறை கிடைத்த த்ரில் இருக்காது என்பது தெரிந்துவிட்டது. அதிகாலையில் மேக மூட்டம் இருப்பதால் தெரியாது என்று சிலர் சொன்னார்கள். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் கிரகணத்தை எதிர் நோக்கி இருந்தேன். காலை 5.45 க்கு எழுந்து பார்த்தால் பறவைகள் எல்லாம் வழக்கத்தை விட அதிகமாகக் கத்திக்கொண்டிருந்தன. சூரியன் இன்னும் வெளிவரவில்லை. காபி குடித்துவிட்டு, சூரியக் கண்ணாடிகளுடன் மாடிக்குச் சென்றோம்.

96 வீடுகள் நிறைந்த இந்தக் குடியிருப்பில் ஒரு வீட்டுக் கதவும் திறக்கவில்லை. அருகில் குடியிருக்கும் கட்டடத் தொழிலாளர்கள் வீடுகளில் ஒரு பக்கம் சமையல், குளியல் என்று வழக்கமான பணிகள் நடந்துகொண்டிருந்தன. பால்காரர், கீரை விற்பவர், அதிகாலையில் வேலைக்குச் செல்பவர்கள் என்று சொற்பமான மனிதர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். வழக்கம் போல பேருந்துகள் சென்றாலும் கூட்டம் இல்லை.

6.20க்கு ஒரு வழியாக மேகத்தின் பிடியிலிருந்து விடுபட்டு சூரியன் சிறிய கீற்றாக வெளிப்பட்டது. வசதியான இடத்தில் நின்றுகொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் வெளிவந்துகொண்டிருந்தது. யாராவது கண்ணில் பட்டால், கண்ணாடியைக் கொடுத்து கிரகணத்தைப் பார்க்கச் சொல்லலாம் என்று பார்த்தேன். ம்ஹூம். ஒருவரும் வெளியில் வருவதாக இல்லை.

தஞ்சாவூரிலிருந்து அப்பாவும், தாம்பரத்திலிருந்து தங்கையும் கிரகணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தார்கள். ஒன்றிரண்டு வீடுகளில் இருந்து டிவி சத்தம் பூட்டிய கதவைத் தாண்டி வெளியில் வந்துகொண்டிருந்தது. பண்டிகைகளை டிவியுடன் கொண்டாடுவதைப் போல கிரகணத்தையும் டிவியிலாவது பார்க்கிறார்களே!

7.20க்கு சந்திரனின் மறைப்பிலிருந்து முழுவதுமாக தன்னை விடுவித்துக்கொண்டு, சூரியன் வழக்கம்போல தகதகத்தது. 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூரிய கிரகணத்தில் எல்லோரும் வீட்டுக்குள் சிறையிருக்க, எங்கள் குடும்பம் மட்டும் மாடியில் கிரகணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. இன்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை!

Friday, July 10, 2009

சூரிய கிரகணம்

சூரியக் கண்ணாடிகள்

ஜூலை 22, 2009 அன்று காலை 6.23 மணிக்கு நிகழ இருக்கும் சூரியக் கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்கை நிகழ்வு. சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் கண்ணாடிகள் விற்பனை செய்கிறார்கள்.

சூரியக் கண்ணாடி விலை ரூ. 10/-

கிடைக்கும் இடம் :

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை - 86
தொலைபேசி : 28113630

கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக் கூட்டத்தில் சூரிய கிரகணம் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வானியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான என். ராமதுரை சிறப்புரை நிகழ்த்துகிறார்.

நாள் : 18.07.2009 , நேரம் : மாலை 6.30 மணி

இடம் : கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 18

Monday, July 6, 2009

வானில் ஒரு தீபாவளி!

அன்று காலை சூரிய கிரகணம் என்பதால் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி விட்டனர். சாப்பிடக்கூடாது, குளிக்கக்கூடாது, வெளியில் வரக்கூடாது என்று காலம் காலமாகச் சொல்லி வந்த விஷயங்களை மக்கள் சரியாகப் பின்பற்றினார்கள். தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. வழக்கம் போல எங்கள் வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் அன்றும் இருந்தது. அம்மா காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

நேரம் நெருங்கியது. அம்மா, அப்பா, தங்கைகள் அனைவரும் ஆளுக்கு ஒரு சூரியக் கண்ணாடியைத் தூக்கிக்கொண்டு, மாடிக்கு விரைந்தோம். மெதுவாக இருட்டத் தொடங்கியது. பறவைகள் மாலை வேளைகளில் கூட்டுக்குள் அடைவதைப் போல ’காச்மூச்’ என்று கத்திக்கொண்டே தங்கள் கூடுகளுக்குத் திரும்பின. (விடிந்து நாலு புழு, பூச்சிகளைப் பிடிக்கலை. அதுக்குள்ளே இருட்டி விட்டதே என்று நினைத்திருக்குமோ!)

கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது சூரியன். பட்டப்பகலில் இதுபோன்ற அனுபவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு நிமிடத்துக்குள் தொலைந்துபோன சூரியனை யாரோ கண்டுபிடித்தது போல மீண்டும் கண்களுக்குப் புலனாகியது. ஒளிக்கீற்று கொஞ்சம் கொஞ்மாகத் தடித்துக்கொண்டே வந்தது. இறுதியில் முழு சூரியன் வானில் பிரகாசித்தது. அற்புதமான அனுபவம்! வார்த்தைகளில் கொண்டு வருவது கடினம்.

சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சந்திரன் சூரியனை சில நிமிடங்களுக்கு மறைத்து விடுகிறது. இதைத்தான் சூரியகிரகணம் என்கிறோம்.

இந்த அனுபவத்தை இன்னும் ஒரு முறை பெறுவதற்கு இயற்கை நமக்கு வாய்ப்பளித்திருக்கிறது. ஜூலை 22, 2009 அன்று முழு சூரியகிரகணம் நிகழ இருக்கிறது. நேரம் காலை 6.23. இதுவரை 3 நிமிடங்களுக்கு மட்டுமே நிகழ்ந்த இந்த அதிசயம் ஜூலை 22 அன்று 6 1/2 நிமிடங்களுக்கு நீடிக்க இருக்கிறது. சென்னை, மும்பை போன்ற இடங்களில் 80%, கொல்கத்தாவில் 90% கிரகணத்தைப் பார்க்க முடியும்.

சூரியகிரகணத்தின் போது மட்டுமே வைரமோதிரம் எனப்படும் சூரியனின் கரோனாவைக் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரியகிரகணத்தைக் கண்டுகளியுங்கள். இந்த சூரிய கிரகணத்தை விட்டுவிட்டால், அடுத்த சூரியகிரகணத்தை 2087-ம் ஆண்டில்தான் பார்க்க முடியும்!

சூரியகிரகணத்தால் கண்களுக்குப் பாதிப்பா, இல்லையா என்பதை இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே பாதுகாப்பாக சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரிய கிரகணத்தைக் கொண்டாடுவோம்.

Thursday, July 2, 2009

சிதைந்துபோன நம்பிக்கை

எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பாதியில் ஒரு பெண் வந்து சேர்ந்தாள். நெடுநெடு உயரம். சிவப்பாக, ஒல்லியாக இருந்தாள். தோற்றத்தைப் பார்த்தால் பத்தாவது என்று சொல்லலாம். தோற்றம், ஸ்டைல் எல்லாம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று காட்டியது. எல்லோருக்கும் புதிதாகச் சேர்ந்த அந்த மாணவியைப் பார்ப்பதிலும், பேசுவதிலும் ஆர்வம். பேச ஆரம்பித்ததும்தான் தெரிந்தது அவள் இலங்கையைச் சேர்ந்தவள் என்று. மிக விரைவிலேயே பாடங்களைக் கற்று, க்ரூப் லீடர்களில் ஒருவராகி விட்டாள். அத்துடன் எங்களின் நட்பு வட்டத்திலும் இணைந்துவிட்டாள். எங்களுடன் படித்தாலும் அவளை எல்லோரும் அக்கா என்றே அழைத்தோம்.

ஒரு நாள் அவளிடம், ‘நீயும் நாங்களும் ஒன்றாகத்தானே படிக்கிறோம். உன் பேரைச் சொல்லிக் கூப்பிடச் சொல்லேன்’ என்றேன் நான்.

’சொந்தங்களை விட்டு வந்துட்டோம். இங்க எல்லோரும் அக்கான்னு கூப்பிடறப்ப எனக்கு நெருக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. அப்படியே கூப்பிடட்டும்’ என்று சொல்லிவிட்டாள்.

‘எங்க ஊர்ல அப்படி இருக்கும், இப்படி இருக்கும்’ என்று நல்ல விஷயங்களாகத்தான் சொல்லிக்கொண்டிருப்பாள். அவள் சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்படுவோம்.

எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் அவள், அன்று தன் இயல்பைத் தொலைத்திருந்தாள். காரணம் கேட்கக் காத்திருந்தேன். நல்லவேளை கணித ஆசிரியர் அன்று வரவில்லை.

‘என்ன அக்கா?’ என்று நான் கேட்டவுடன் விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

‘நாங்க எல்லோரும் இங்க வரலை. எங்க அண்ணன்கள் ரெண்டு பேர் இலங்கையில இருக்காங்க. ரெண்டு நாளைக்கு முன்னால எங்க ஏரியால குண்டு வீச்சு நடந்திருக்கு. அவங்ககிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லை. எங்கம்மா அழுதுகிட்டே இருக்காங்க’ என்றாள்.

’அழாதே. ஒண்ணும் நடந்திருக்காது’ என்றோம்.

’உங்களுக்கு எல்லாம் தெரியாது. நாங்க இலங்கையில் ரொம்ப வசதியாக வாழ்ந்தோம். எங்க அண்ணன்கள் பிஸினஸ் செய்துக்கிட்டிருந்தாங்க. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தோம். எனக்குப் படிப்புல ஆர்வம் அதிகம். நல்லா படிக்க வைக்கணும்னு எல்லோரும் சொல்வாங்க. அடிக்கடி எங்க நாட்டுல பிரச்னை நடந்துக்கிட்டே இருக்கும். ஒரு நாள் நான், அப்பா, அம்மா, அக்கா மட்டும் வீட்ல இருந்தோம். சிங்கள ராணுவம் தமிழர்கள் வீட்டைத் தேடி வந்துக்கிட்டிருக்காங்கன்னு தகவல் வந்தது. வீட்டில் இருந்த நகைகள், கொஞ்சம் பணம், துணிகளை எடுத்துக்கிட்டு வெளியே வந்தோம். எங்க தெருக்குள்ள ராணுவம் நுழைஞ்சிருச்சு. என்ன பண்ணறதுன்னே தெரியலை...

’பக்கத்து வீட்ல ரொம்ப வருஷமா பழகின சிங்களர் குடும்பம். நாங்க தயங்கினப்ப, தயங்காமல் எங்களை அவங்க வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனாங்க. அக்கம் பக்கத்தில் எங்களைப் பற்றி விசாரித்த ராணுவம், எங்கள் வீட்டைக் கொளுத்தியது. கண் முன்னால நாங்க வாழ்ந்த வீட்டை நெருப்பு தின்பதைப் பார்த்தும் எங்களால் அணைக்கவோ, கதறி அழவோ முடியலை. இரவு முழுவதும் அவங்க வீட்ல அழுதுகொண்டே இருந்தோம்.

’காலையில எங்க அண்ணன்கள் வந்து சேர்ந்தாங்க. எங்களுடன் இரண்டு அண்ணன்களையும் சேர்த்து அனுப்பி வைச்சாங்க. மீதி ரெண்டு பேர் சொந்த மண்ணை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. இங்க வந்தால் இன்னும் கொடுமை. எங்க அண்ணன்களுக்கு ஏற்ற வேலை கிடைக்கல. ஒருத்தர் தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கறார். இன்னொருத்தர் ஒரு கடையில வேலை செய்யறார். ரெண்டு அண்ணன்கள் என்ன ஆனாங்கன்னே தெரியலை’ என்று அழுதாள்.

‘அக்கா கவலைப்படாதே. நாங்க எல்லாம் இருக்கோம்ல. எங்க நாடும், தமிழ்நாட்டு மக்களும் உங்களுக்கு ஆதரவா இருக்காங்க. சீக்கிரம் நல்லது நடக்கும். நீங்க அங்க போயிடலாம்’ என்றேன்.

‘நாங்க மறுபடியும் போவோமா?’

மறுவாரம் அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள் அம்மா அழுதுகொண்டிருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்.

‘காசு, பணம் இல்லாமல் வாழலாம். நாடு இல்லாமல் மட்டும் வாழக்கூடாதும்மா. நாங்க தப்பு பண்ணிட்டோம். எங்க மக்களோட, எங்க மண்ணிலேயே நாங்க செத்துப் போயிருக்கணும். எங்க மக்கள் கஷ்டப்படறப்ப நாங்க மட்டும் இங்கே எப்படி இருக்க முடியும்?‘

அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அன்றும் என்னிடம் இல்லை. இன்றும் என்னிடம் இல்லை.

மூன்று மாதங்களாக இலங்கை தமிழர்களின் நிலை பற்றிய செய்திகளும், வீடியோக்களும் நிம்மதியிழக்கச் செய்துவிட்டன. பல இரவுகளில் தூக்கம் தொலைந்து போனது. துக்கத்தைத் தாங்க முடியாமல் அழுதும், பேசியும் மன உளைச்சலுக்கு ஆளானோம். ஒன்றும் செய்ய முடியாத இயலாமை... இயலாமை... என்ற குற்ற உணர்வு வாட்டி வதைக்கிறது.

ஆதரவு அற்ற இந்தத் தேசத்தில் வசிக்கும் அவலத்தை எண்ணி நீயும் உன் குடும்பமும் எவ்வளவு வலி உணர்வீர்கள் என்பதை நினைக்கும்போது தொண்டை அடைக்கிறது.

அதனால்தான் நேற்று வந்த கனவில் கூட உன் முகத்தை நிமிந்து பார்க்கும் சக்தி என்னிடம் இல்லை அக்கா.

Thursday, May 7, 2009

அண்ணனுக்குத் தெரியாமல் திருமணம்!

முழுப் பரிட்சை முடிவதற்கும் சித்திரைத் திருவிழா ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும். விடுமுறை, திருவிழாவுக்கு என்று உறவினர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். வைகை ஆறு ஓடும்(!) மதுரை, மானாமதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சுவாமிகளை அலங்காரம் செய்வார்கள். இந்த அலங்காரத்துக்கான செலவுகளை ஊரில் இருக்கும் பணக்காரர்கள் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளுக்கும் மண்டகப்படி அமைப்பார்கள்.

ஊரே களை கட்டும். பத்து நாள்களும் மாலை பொழுதுகளை மக்கள் ஆற்றில்தான் கழிப்பார்கள். குடை ராட்டினம், பலூன் கடை, வளையல் கடை, தின்பண்டக் கடை, ஆழ்ந்த சிவப்பு, ஆரஞ்சு, மெஜந்தா வண்ணங்களில் குளிர் பானங்கள் விற்கும் கடைகள், ஆற்றிலேயே ஊற்றுத் தோண்டி தண்ணீர் விற்கும் கடைகள் என்று களைகட்டியிருக்கும்.

‘பீம புஷ்டி அல்வா’ என்று எழுதியிருக்கும் கடையில் ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருப்பார்! அல்வாவுக்கும் புஷ்டிக்கும் என்ன சம்பந்தம்? அல்வா சாப்பிட்டு, புஷ்டியாகலாம் என்றால் அந்தக் கடைக்காரர் ஏன் இப்படி இருக்கிறார்? இன்றுவரை புரியாத புதிர்.

இக்கரையிலும் அக்கரையிலும் இருக்கும் இரண்டு தியேட்டர்களைத் தவிர, பொழுதுபோக்குவதற்கான எந்த அம்சமும் இல்லாத ஊர். அதனால் தீபாவளி, பொங்கலுக்கு எடுக்கும் துணிகளைக்கூட போட்டுச் செல்ல வழியிருக்காது. ஒவ்வொரு நாளும் நல்ல துணிகளை உடுத்தக்கூடிய வாய்ப்பாக எண்ணி, அலங்காரத்தில் இறங்கிவிடுவார்கள்.

சுவாமி அலங்காரத்தைப் பார்த்துவிட்டு, தின்பண்டம் சாப்பிட்டு, ராட்டினம் சுற்றி முடித்த பிறகு வீடு திரும்புவார்கள். நிறையப் பேர் வீட்டில், சாப்பிட்ட பிறகு மீண்டும் ஆற்றுக்குக் கிளம்புவார்கள். விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம், சொற்பொழிவு, குலேபகாவலி, பாண்டுரங்கன் என்று லேட்டஸ்ட் (!) படங்கள் திரையிடப்படும். ஆற்றுக்குள்ளேயே தூங்கிவிட்டு, காலையில் திரும்புபவர்களும் இருப்பார்கள்.

மதுரையில் மீனாட்சி-சொக்கர் திருமணம் நடக்கும். மீனாட்சியின் அண்ணன் அழகர். மானாமதுரையில் ஆனந்த வள்ளி- சோமநாதர் என்ற பெயரில் திருமணம் நடைபெறும். அதே அழகர்தான் ஆனந்தவள்ளிக்கும் அண்ணன். திருவிழாவின் எட்டாவது நாள் அண்ணன் அழகருக்குத் தெரியாமல் திருமணம் நடைபெறும்.

பத்தாவது நாள் அழகர் திருமணத்தைக் கேள்விப்பட்டு, தங்கைக்கு சீர் கொடுக்க வருவார். அன்று காலையிலேயே விழா ஆரம்பமாகிவிடும். அழகர் வேகமாக சீர்வரிசைகளைக் கொடுத்துவிட்டு, கோபித்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி, சென்றுவிடுவார். இதைத்தான் ஆற்றில் அழகர் இறங்குகிறார் என்பார்கள். அழகர் இறங்கும் அன்று சம்பிரதாயத்துக்காக வைகை ஆற்றில் தண்ணீர் விட்டிருப்பார்கள். வெயிலுக்கு பானகம், நீர்மோர் எல்லாம் இலவசமாக வழங்குவார்கள்.

பதினோராவது நாள் அன்று அழகர் தசாவதாரம் எடுப்பார். பத்துவிதமாக அலங்காரம் செய்வார்கள். அன்று இரவுதான் திருவிழாவின் ஹைலைட்! சைவம், அசைவம், இனிப்பு, காரம் என்று அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற உணவுகளை ஏராளமாகச் செய்வார்கள். இரவு எட்டு மணிக்கு அத்தனை பதார்த்தங்களுடன் ஆற்றுக்குச் சென்றுவிடுவார்கள். உறவினர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள் யார் வந்தாலும் இலை போட்டு, பரிமாறுவார்கள்.

ஆற்றுக்கு நிறைய பெண்கள் வந்திருப்பார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக இளைஞர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். நிறைய சாப்பிட்டு, பேசிச் சிரித்து, நள்ளிரவில் வீடு திரும்புவார்கள். அடுத்த திருவிழா வரை அந்த சந்தோஷம் போதுமானது!

Saturday, April 18, 2009

Prodigy எழுத்தாளர் பட்டறை

* குழந்தைகளுக்கான புத்தகங்களை Prodigy மூன்று ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. எழுத்துகள், எண்கள், உருவங்கள் என்று மிகச் சிறிய குழந்தைகளுக்கும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கதை வடிவில் அறிவியல் புத்தகங்களை வண்ணத்தில் வெளியிட்டிருக்கிறோம். ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 80 பக்கங்களில் அறிவியல், வாழ்க்கை வரலாறு, சரித்திரம், நாடுகள், கண்டங்கள், உயிரினங்கள், பொதுஅறிவு போன்ற பிரிவுகளில் இதுவரை 180 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

* இன்று மாணவர்கள் மத்தியில் Prodigy புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் எளிமையான இந்தப் புத்தகங்களை விரும்பி வாசிக்கின்றனர்.

* இந்த வேளையில் எங்கள் புத்தகங்களை ஆய்வு செய்வது அவசியம் என்று நினைக்கிறோம். மேலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிய விரும்புகிறோம். எனவே கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளுடன் வேலை செய்பவர்கள் என்று பலரையும் அழைத்து ஓர் எழுத்தாளர் பட்டறை நடத்த முடிவு செய்தோம்.

* எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், குழந்தை எழுத்தாளர் ரேவதி, நியூ ஹொரைசான் மீடியாவின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, முதன்மை ஆசிரியர் பா. ராகவன் ஆகியோர் குழந்தைகளுக்கான எழுத்து, புத்தகங்கள், மொழி, எடிட்டிங் போன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

* அறிவியல் இயக்கத்தின் தலைவர் ராமானுஜம், இரா. நடராஜன்,
அ. வெண்ணிலா, யூமா வாசுகி, ஹேமாவதி, மாதவன், அ. வள்ளிநாயகம் ஆகியோர் கலந்துரையாடல்களுக்குத் தலைமை ஏற்கின்றனர்.

* பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் இந்தப் பட்டறையில் பங்கேற்கிறார்கள்.

* நாளை (ஏப்ரல் 19, 2009) சென்னையில் நடைபெறும் இந்தப் பட்டறை குறித்து திங்கள் கிழமை விரிவான பதிவு வெளியாகும்.

Friday, April 3, 2009

டைம் வேஸ்ட் பண்ணிய அம்மா!

கோடை விடுமுறை என்றாலே கொண்டாட்டமாக இருக்கும். ஒரு மாதத்துக்குப் படிக்க வேண்டிய தொல்லை இருக்காது. யூனிஃபார்ம் போட வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் எங்கள் பெரியப்பா, அத்தைகளின் வீடுகளில் இருந்து விடுமுறைக்காக எங்கள் வீட்டுக்கு ஒவ்வொரு குடும்பமாக வர வர எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. (அம்மாவுக்குத்தான் சமையல் வேலை அதிகம் இருக்கும்.) 8 பேருக்குக் குறையாமல் குழந்தைகள் எப்பொழுதும் எங்கள் வீடுகளில் இருப்பார்கள்.

காலையில் ஆறு மணிக்கு பதநீர் விற்று வரும் சத்தம் கேட்டு, எல்லோரும் விழிப்போம். வேக வேகமாகப் பல் தேய்த்து விட்டு வருவோம். ஆளுக்கு ஒரு மட்டையில் பதநீர் வாங்கிக் குடிப்போம். சில நாள்களில் பதநீர் குடித்ததும், அம்மா வடகம் மாவு கிளறி வைத்திருப்பார். ஆளுக்கு ஒரு கிண்ணமும் ஸ்பூனும் கொடுத்து விடுவார். சிலர் தடி தடியாக மாவை அள்ளி ஊற்றுவார்கள். (அந்த வெயிலிலும் காய்வதற்கு மூன்று நாள்கள் ஆகும்!) சிலர் மிகவும் மெல்லியதாக ஊற்றிக் கொண்டிருப்பார்கள். துணியில் இருந்து எடுப்பதற்குள் பெரும்பாடாகி விடும். எல்லோரும் வேலை செய்து களைத்துப் போய் வீட்டுக்குள் செல்வோம்.

கடைக்கார அப்பத்தா விடம் பனியாரம் அல்லது பருத்திப்பால் வாங்கி வைத்திருப்பார் அம்மா. அதைச் சாப்பிட்டு விட்டு, ஒவ்வொருவராகக் குளிக்கச் செல்வோம். அதிலும் நீயா, நானா போட்டி! இடியாப்பம், ஆப்பம், அப்பம், புட்டு, பூரி, வெந்தயக் களி, பால் பனியாரம், குழிப்பணி்யாரம், கேழ்வரகு ரொட்டி, கொழுக்கட்டை என்று தினம் ஒரு பலகாரமாக அம்மா செய்து வைத்திருப்பார்.

சாப்பிட்டதும் ஆளுக்கு ஓர் அறையாகப் பிரித்துக் கொண்டு வீட்டைப் பெருக்குவோம். கடைகளுக்குப் போகச் சொன்னால் போய் வருவோம். மற்றப்படி எங்களுக்கு வேலை ஒன்றும் கொடுக்க மாட்டார் அம்மா.

பன்னீர் மரத்தடியில் அமர்ந்து கொஞ்ச நேரம் கதை பேசுவோம். திடீர் என்று பாட்டுக்குப் பாட்டு நடத்துவோம். சினிமா பேர் சொல்லி விளையாடுவோம். அம்மா அழைப்பார். நுங்கு விற்பவர் வந்திருப்பார். ஆளுக்கு ஒரு நுங்கை வெட்டிக் கொடுக்க, சாப்பிடுவோம். இந்த மெனுவும் கம்பெனி கொய்யா, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம் என்று மாறிக்கொண்டே இருக்கும். மீண்டும் பாண்டி, திருடன் - போலீஸ் என்று விளையாட்டுத் தொடரும்.

மீண்டும் அம்மா அழைப்பார். யாராவது ஒருவர் கடைக்குப் போய் ஐஸ்கட்டி வாங்கி வருவோம். நன்னாரி சர்பத் போட்டுக் கொடுப்பார் அம்மா, அத்தை, சித்தி யாராவது. வெயிலுக்கு ஜில்லென்று குடித்து விட்டு, அரட்டையடிப்போம்.

மதியம் சாப்பிட்டு முடித்ததும் வெயிலில் அலைய விடமாட்டார்கள். பல்லாங்குழி, ஐந்து கல், குச்சி விளையாட்டு என்று உள் அரங்க விளையாட்டுகளில் பிஸியாக இருப்போம். மாலை ஐந்து மணிக்கு ’கடலை... கடலை...’ என்று கோபாலுவின் குரல் கேட்கும். எல்லோரும் வெளியில் வருவோம்.

கறுத்த உடலுக்கு அடிக்கிற சிவப்பு, ரோஸ், பச்சை என்று சேலைகளும், அதே வண்ணங்களில் வளையல், பொட்டு, ரிப்பன் வைத்துக் கொண்டு, ரோஸ் நிற பவுடர் பூசிக்கொண்டு வரும் கோபாலுவை அழைப்போம்.

‘என்ன பேரு சொல்றீங்க? இப்ப நான் சுந்தரியாக்கும்’ என்றபடி வரும் கோபாலுவிடம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, உப்புக் கடலை, பட்டாணி என்று அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வாங்கிக்கொள்வோம்.

காலையில் கோபாலுவாக இருக்கும் ஒருவர் மாலையில் சுந்தரியாகும் அதிசயம் அப்போது எனக்குப் புரியவில்லை. அம்மாவிடம் கேட்டாலும் பதில் இல்லை.

வாசல் தெளித்து, கோலம் போடுவோம். அம்மா காபி தருவார். ஆறு மணிக்கு சூடாகக் கிடைக்கும் அச்சு முறுக்கு, தண்ணீருடன் ஆற்றுக்குக் கிளம்பி விடுவோம். எங்களுடன் அத்தை, பெரியம்மா யாராவது வருவார்கள்.

ஆற்றுக்குச் சென்றதும் முதல் விளையாட்டு ஊற்று தோண்டுவதுதான். யார் விரைவாகவும், பெரிதாகவும் தோண்டுகிறார்கள் என்பது போட்டி! பெரியம்மாவிடம் கதை கேட்போம். நாங்களும் கதை சொல்வோம்.

‘வணக்கம் வணக்கம் மகராஜா. எனக்கிட்ட கட்டளை என்ன ராஜா?’

‘என் பெயர் சொல்லாத எந்தன் மகனை மலைதனில் உருட்டிக் கொன்றுவிடுங்கள்!’

‘வேண்டாம்... வேண்டாம்... மகராஜா... என் மகனை விட்டுவிடுங்கள்...‘

என்று பல்வேறு பாத்திரத்தையும் நடித்துக் காட்டுவாள் சௌந்தரம்.

ரமா, செந்தில் டான்ஸ் ஆடுவார்கள்.

இருட்டத் தொடங்கியதும் அந்த விளையாட்டை ஆரம்பிப்போம். ஒரு பெரிய குச்சியை இந்தப் பக்கம் ஒருவர், அந்தப் பக்கம் ஒருவர் பிடித்துக்கொண்டு வர, பின்னாடி வரிசையாக மற்றவர்கள். முன்னே செல்லும் நான் ‘ போராடுவோம்... போராடுவோம்... இறுதி வரை போராடுவோம். தமிழக அரசே... தமிழக அரசே... அரிசி விலையைக் குறைத்துவிடு...’ இப்படி கோஷம் போட, மற்றவர்களும் திருப்பிச் சொல்வார்கள். அநேகமாக இந்த விளையாட்டு தினமும் நடைபெறும். ஊர்வலம் முடிந்ததும் ஏதோ சாதித்த திருப்தி கிடைக்கும்!

அப்போது எங்கள் பாண்டி சித்தப்பா உள்ளிட்ட பலர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பள்ளி விட்டு வரும்போது, சித்தப்பா கோஷம் போட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். என்ன கட்சி, என்ன போராட்டம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் சித்தப்பா நல்ல விஷயத்துக்காக எல்லோருக்காகவும் போராடுகிறார் என்பது மட்டும் புரிந்தது. படித்து, பெரியவள் ஆனதும் சித்தப்பா போல போராட வேண்டும் என்று நினைப்பேன். சித்தி உள்பட எங்கள் உறவினர்கள் பலருக்கும் சித்தப்பா பிஸினஸைக் கவனிக்காமல், கட்சி வேலை பார்ப்பது பிடிக்காது. அதனால் இந்த விளையாட்டை இருட்டில், ஆற்றுக்குள் மட்டுமே விளையாடுவோம்.

சாமி உண்டு என்று பல நாள்கள் நாங்கள் சித்தப்பாவிடம் வாதாடுவோம். எங்களை அலட்சியம் செய்யாமல், எங்களுக்குப் புரியும் விதத்தில் விஷயங்களைச் சொல்வார் சித்தப்பா. அதில் எங்களுக்கு உடன்பாடு வராவிட்டாலும் சித்தப்பாவை மிகவும் பிடிக்கும். அதே போல அவர் சார்ந்திருந்த கட்சியையும்!

எட்டு மணிக்கு வீடு திரும்புவோம். உள்ளூரில் நிறைய உறவினர்கள் இருப்பதால் யாராவது வீட்டுக்கு வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களிடம் ஒரு மணி நேரம் அரட்டை! ஒண்பது மணிக்கு அம்மா சாப்பிட அழைப்பார்.

மதியம் வடித்த சோற்றில் தண்ணீர் ஊற்றிய பழைய சாதம் தான் எல்லோர் வீட்டிலும் இரவு உணவு. குழம்பு, காய் எல்லாம் சேர்த்து சுண்ட வைத்த குழம்பு, வடகம், மோர் மிளகாய், கொத்தவரைவற்றல், துவையல், ஊறுகாய் என்று விதவிதமான சைட் டிஷ்கள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஜில்லென்ற பழைய சாதம் சாப்பிட்டு சிறிது நேரத்தில் நாள் முழுவதும் உழைத்த(!) களைப்பில் எல்லோரும் பேசிக் கொண்டே தூங்கி விடுவோம்.

இன்று என் மகனிடம் இந்த விஷயங்களை மிகவும் ரசித்துச் சொன்னேன்.

‘ம்ம்... அந்தக் காலத்துல டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் இல்லாததால ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணிருக்கீங்கம்மா!’

0

Friday, March 6, 2009

ஏலம் போனவை பொருள்கள் மட்டுமா?

தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகாலம் இனவெறிக்கு எதிராகவும், இந்தியர்களின் உரிமைக்காகவும் போராடி வெற்றி கண்டார் காந்தி. அவர் வக்கீல் தொழில் பார்த்த நேரத்தை விட பொதுச்சேவைக்கு செலவிட்ட நேரம்தான் அதிகம். இதனால் அவர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போதும் தான் செய்யும் சேவைக்கு எதையும் எதிர் பார்த்ததில்லை.

தென்னாப்பிரிக்கப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு, இந்தியாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளில் இருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் காந்திக்கு பரிசுப் பொருள்களுடன் அவரது வீட்டுக்கு வந்தனர்.

‘காந்திஜி, உங்களைப் பற்றி நன்கு தெரியும். நீங்கள் எந்தப் பொருளையும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் இது எங்களின் அன்பு. இதை உங்களால் நிராகரிக்க முடியாது’ என்று சொல்லிவிட்டு, பரிசுப் பெட்டியை வைத்துவிட்டுச் சென்று விட்டனர்.

பெட்டியைப் பிரித்துப் பார்த்தால் விலையுயர்ந்த வைரம், ரத்தினம், மரகதக் கற்கள் மின்னிக்கொண்டிருந்தன. இவை தவிர, ஐம்பத்திரண்டு பவுனுக்கு ஒரு தங்கச் சங்கிலியும் அதில் இருந்தது.

’பொதுச்சேவைக்குப் பணமாகப் பெறாமல், பரிசாகப் பெற்றாலும் அதுவும் ஊதியம் தானே! அப்படி இந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டால் இது எப்படிப் பொதுச்சேவையாகும்? மக்களின் அன்பை மட்டுமே என்னால் பரிசாகப் பெற்றுக்கொள்ள முடியும்’ என்று உறுதியுடன் இருந்தார் காந்தி.

தன் குழந்தைகள், மனைவியின் சம்மதத்துடன் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஓர் அறக்கட்டளை தொடங்கி, அதற்கு இந்த விலைமதிப்பு மிக்கப் பரிசுப் பொருள்களை உயிலாக எழுதி வைத்துவிட்டார்.

உண்மை, எளிமை, நேர்மை, உயிர்களிடத்தில் அன்பு, பொறுமை ... இப்படி காந்தி தன் வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எத்தனையோ கருத்துகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது கொள்கைகளைத்தான் நம்மால் காப்பாற்றவோ, பின்பற்றவோ முடியவில்லை. அவரது செருப்பு, கண்ணாடி, கடிகாரம், குவளை போன்ற பொருள்களையாவது காப்பாற்றலாம் என்று அரசியல்வாதிகளும், மக்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள் போலிருக்கிறது!

காந்தி பயன்படுத்திய பொருள்கள்தான் முக்கியம் என்று நினைத்தால், அதையாவது ஒழுங்காகப் பாதுகாத்திருக்கக்கூடாதா? இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியாளர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? எப்படி இந்தப் பொருள்கள் நாடு கடந்து சென்றன? காந்தி இறந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சர்ச்சை! லஹோ ரஹோ முன்னாபாய் படத்தில் நடித்ததற்காக சஞ்சய் தத்தில் இருந்து மாறுவேடப் போட்டியில் காந்தி வேஷம் போட்ட குழந்தை வரை கருத்துக் கேட்டு ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன மீடியாக்கள்!

மும்பை தாக்குதல் போல ஏலம் விஷயத்தில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த மீடியாக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஜய் மல்லையா!

Monday, February 23, 2009

நாட்டுடைமை... சரியான விஷயம்தான்!

ஒரு முறை அழ. வள்ளியப்பா இலக்கியக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து
ரயில் நிலையத்துக்கு அவரை வழியனுப்ப வந்தார் நிகழ்ச்சி அமைப்பாளர்.

‘சார், நான் ஒரு பாட்டு எழுதியிருக்கேன். கேட்கறீங்களா?’ என்றார் அமைப்பாளர்.

‘தாராளமா சொல்லுங்க’ என்றார் வள்ளியப்பா.

அமைப்பாளர் முழுப் பாடலையும் படித்துக் காட்டினார்.

வள்ளியப்பா அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.

‘சார், எப்படி இருந்தது என் பாடல்?’

‘ரயில்ல ஏறிட்டுச் சொல்லட்டுமா?’

வள்ளியப்பா ரயிலில் அமர்ந்ததும், அமைப்பாளர் , ‘சார் என் பாட்டு?’

’உங்க பாட்டுன்னா உடனே கருத்து சொல்லிருப்பேன். என் பாட்டை என்கிட்டேயே கருத்துக் கேட்டால் எப்படி?’ என்றார் வள்ளியப்பா.

*

வள்ளியப்பாவின் பாடல்களை அவருடைய பெயரைக் குறிப்பிடாமலே பயன்படுத்திக் கொண்டவர்கள் அநேகம். இனி எல்லோரும் அவர் பெயரைப் போட்டே பயன்படுத்திக்கொள்ளலாம். அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட இருக்கின்றன.

Saturday, January 31, 2009

வித்தை காட்டிய விருந்தாளிகள்!ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வேடந்தாங்கலுக்கு வந்த பறவைகள் பற்றிய தகவல்கள் பத்திரிகையில் இடம்பெறும். கட்டாயம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் செயல்படுத்தியதில்லை. சென்ற வாரம் எந்தவித திட்டமிடலும் இன்றி திடீரென்று கிளம்பினோம். தாம்பரத்தில் காலை பதினோரு மணிக்கு பஸ் ஏறினோம். 12 மணிக்கு செங்கல்பட்டு போய்ச் சேர்ந்தோம். மதிய உணவு வாங்கிக்கொண்டு, வேடந்தாங்கல் பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏற வேண்டியிருந்தது.

வழியில் பல கிராமங்கள். பொட்டல் வெளிகள். காடுகள். ஏரிகள். கோயில்கள். கடைகள். ஒரு மணி நேரப் பயணத்தின் முடிவில் வேடந்தாங்கல் வந்து இறங்கினோம். நுழைவுச் சீட்டு வாங்கும் இடத்தில் பறவைகளைப் பற்றிய பொதுவான விஷயங்கள் விளக்கிச் சொல்லப்பட்டிருந்தன. வாடகைக்கு பைனாகுலர்கள் கிடைக்கின்றன. டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம்.

ஏரிக் கரையிலிருந்து ஐம்பது அடி தூரத்தில் நாரைகள் (Stork) கம்பீரமாக அமர்ந்திருந்தன. இயற்கை சூழலில் மிக அருகில் அவ்வளவு பெரிய பறவைகளைப் பார்த்தது இதுதான் முதல் முறை. 70 சதவிகிதம் வெள்ளையும் வாலில் இளஞ்சிவப்பும் கழுத்து, கால்களுக்கு அருகில் கறுப்பும் கலந்த அற்புதமான இயற்கை கலவை. நீளமான, மெல்லிய உறுதியான கால்கள். இரையைச் சுலபமாகப் பிடிக்கும் விதமாக நீண்ட, கூர்மையான அலகு.

திடீரென்று ஒரு நாரை இறக்கைகளை விரித்தபடி நின்றது. எல்லோரும் வேகமாக கேமராவில் பிடித்தனர். சட்டென்று அப்படியே மேலே எழுந்து வேகமாக ஒரு ரவுண்ட் அடித்தது. பறக்கும் போது இறக்கையைச் சுருக்கிக்கொண்டு, கால்களைப் பின்னோக்கி நீட்டியபடி சென்றது. ஓர் அம்பு பறந்து சென்றது போன்ற பிரமை உண்டானது.

நாங்கள் புறச் சூழல் மறந்து பார்த்துக் கொண்டிருந்தோம். இன்னொரு பறவை சர்ரென்று பறந்து, தண்ணீரில் ஏதோ ஓர் இரையை நொடியில் எடுத்துக் கொண்டு, மீண்டும் கூட்டுக்குச் சென்றது.

பறவைகள் யாரையும் கண்டுகொள்ளாமல், தங்கள் கடமைகளைச் செய்துகொண்டிருந்தன. ஆனால் நம் பார்வைக்கு, பறவைகள் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டுவதாகவும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதாகவும் தோன்றியது. கேமராவுக்கு நாரையைப் போல் மனிதர்கள் கூட ஒத்துழைப்பு தந்திருக்க மாட்டார்கள்.

நுழைந்த இடத்திலேயே வெகு நேரம் நின்று விட்டோம் என்பதை உணர்ந்ததும், நகர ஆரம்பித்தோம். தண்ணீருக்கு நடுவில் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் படர்ந்த பச்சை மரங்கள்.( மாங்குரோவ் காடுகள்). ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன. பெண் பறவைகள் அடை காத்துக்கொண்டிருக்கின்றன. ஆண் பறவைகள் உணவு தேடி வந்து கொடுக்கின்றன.

ஏரியின் கரையோரம் நிறைய இருக்கைகள். நடுநடுவே ஐம்பது பேர் உட்காரும் அளவுக்கு சிமெண்டால் கட்டப்பட்ட இடங்கள். ஏராளமான குப்பைத் தொட்டிகள். போதுமான கழிவறைகள், சுத்தமாகவும் இருந்தன! சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. பறவைகளை ஏரியல் வியூவில் பார்க்க வசதியாக இரண்டு பெரிய டவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

நாரை இனத்தைச் சேர்ந்த கார்மரண்ட், இக்ரெட் போன்ற பறவைகள் மரங்களில் தென்பட்டன. வித்தியாசமான வாத்துகள் தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தன. பறவைகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்டோம்.

வேடந்தாங்கலுக்கு வந்திருக்கும் பறவைகள் எல்லாம் வெளிநாட்டு விருந்தாளிகள். பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் இந்த விருந்தாளிகள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. எல்லாப் பறவைகளும் ஒரே நாட்டைச் சேர்ந்தவை அல்ல. சைபீரியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என்று பல நாட்டிலிருந்தும் பறவைகள் வந்து ஒற்றுமையாகத் தங்கி, குடும்பம் நடத்தி, இனப்பெருக்கம் செய்து, புதிய உறுப்பினர்களுடன் தங்கள் சொந்த மண்ணை அடைகின்றன.

பறவைகள் ஏன் இவ்வளவு தூரம் இடம் பெயர்கின்றன?

பருவ நிலை மாற்றம், இனப் பெருக்கம், உணவு போன்றவை தான் பறவைகளின் இடப் பெயர்ச்சிக்கு முக்கியமான காரணங்கள். சைபீரியா போன்ற இடங்களில் இது கடும் குளிர் காலம். உணவும் சரியாகக் கிடைக்காது. இனப் பெருக்கம் செய்ய முடியாது. அதனால்தான் பறவைகள் தங்களுக்கு ஏற்றச் சூழல் தேடி பல்லாயிரம் மைல் தூரம் கடந்து வருகின்றன.

பறவைகள் பயணிக்கும் பாதையை எப்படி நினைவு வைத்துக்கொள்கின்றன என்பது இன்னும் அறிவியலுக்கு சவாலான கேள்வியாக இருக்கிறது.

நிறைய மக்கள் வருகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் நீண்ட நேரம் தங்குகிறார்கள். பலர் சட்டென்று பார்த்துவிட்டு, சென்று விடுகிறார்கள். மாலை 5.45 - 6.30 வரை உள்ள காட்சிதான் வேடந்தாங்கலின் ஹைலைட்.

நாங்கள் டவர் மீது ஏறி நின்றோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பஞ்சு வெடித்த பருத்திக் காடு போல பறவைகள் மரங்களில் பூத்திருந்தன. இப்போது பறவைகளின் காச் மூச் சத்தம் அதிகமாகக் கேட்டது. சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்தது. ஐம்பது, நூறு என்ற கணக்கில் பல விதமான பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கூடுகளை நோக்கித் திரும்பிய காட்சியைப் பார்த்தால் மட்டுமே உணர முடியும்.

இருள் சூழ, பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. பனி பெய்ய ஆரம்பித்தது. பறவை தோழர்களைப் பிரிய மனமின்றி, கிளம்பினோம். பறவைகளின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. வாசலுக்கு வந்து புறச் சூழலில் ஐக்கியமாக நேரம் பிடித்தது.

படங்கள் : முகில்

Tuesday, January 27, 2009

எமர்ஜென்சி சர்வீஸ்!

நேற்று புது சிலிண்டர் மாற்றினேன். உடனே 'சர்ர்ர்ர்ர்ர்' என பெருஞ்சத்தத்துடன் கேஸ் வெளியேறியது. அதன் வேகம் கொஞ்சம் அச்சத்தைத் தந்தது. உடனே எமர்ஜென்சி சர்வீஸுக்கு போன் செய்தேன். புகாரை வாங்கிக்கொண்டு, 'இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒருவர் வந்து பார்ப்பார்' என்றனர்.

வரவில்லை. காலை உணவை வெளியில் வாங்கி சாப்பிட்டோம்.

நேரம் கடந்துபோனது. மூன்றரை மணிநேரம் தாண்டியும் ஒருவரும் வரவில்லை. மீண்டும் எமர்ஜென்சி சர்வீஸ்க்கு தொடர்பு கொண்டேன். பழுது பார்ப்பவரின் பெயரையும், மொபைல் எண்ணையும் கொடுத்தனர். அவரைத் தொடர்புகொண்டேன்.

‘ஆமாங்க. ஒன்பது மணிக்கு சொன்னாங்க. ரொம்ப தூரம். வர்றது கஷ்டம்ங்க. நீங்களே ரோட்டில நின்னு பாருங்க... யாராவது வருவாங்க. இண்டேன் ஆளுங்க வரலைன்னா, பாரத் கேஸா இருந்தாக்கூட சரி பண்ணிடுவாங்க’ என்று பொறுப்போடு பதிலளித்தார் அவர்.

‘என்ன இப்படிச் சொல்லறீங்க?’

‘சரி, ஈவ்னிங் 4 மணி வாக்கில வரேன்’ என்றபடி போனை வைத்துவிட்டார்.

மதிய உணவையும் வெளியில் வாங்கி சாப்பிட்டோம்.

மாலை ஐந்தரை மணி ஆகியும் அவர் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டேன்.

‘என்னோட வண்டி ரிப்பேர். இப்பதான் சரி பண்ணினேன். நீங்களே சிலிண்டர் கொண்டு வர்றவங்ககிட்ட காட்டி சரி பண்ணிக்குங்க...’ என்று மிகப்பொறுப்புடன் பதில் வந்தது.

‘அதெல்லாம் முடியாது. நீங்க எப்ப வர்றீங்க?’

‘சரி, ஆறு மணிக்கு வரேன்...’

ஏழு மணி ஆகியும் வரவில்லை.

மீண்டும் போன் செய்தேன்.

‘நான் இப்ப அசோக் பில்லர்ல இருக்கேன். நீங்க சிலிண்டரை இங்க கொண்டு வந்தா நிமிஷத்துல சரி பண்ணித் தரேன்...’ என்ற அற்புதமான தீர்வை அவர் வழங்கினார். வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அசோக் பில்லருக்கு சிலிண்டரை முதுகிலோ பைக்கிலோ கட்டி எடுத்து வர வேண்டுமாம். எவ்வளவு ஈஸி!

‘அதெல்லாம் முடியாது. கம்ப்ளைண்ட் செஞ்சு எவ்வளவு நேரம் ஆச்சு? இதான் எமர்ஜென்சி சர்வீஸா?’

‘அவ்வளவு தூரத்துக்கு எவ்வளவு பெட்ரோல் செலவாகும்? யோசிக்காதீங்க நீங்க. சரி அரை மணி நேரத்துல வரேன்.’

எட்டு மணி ஆகியும் வரவில்லை. மீண்டும் சர்வீஸ் செண்டருக்குத் தொடர்பு கொண்டேன்.

‘காலையில பத்து மணிக்கே அங்க வந்திருக்கணுமே! சரி, நான் மறுபடியும் சொல்றேன். கண்டிப்பா வருவார்.’

’சார், காலையிலிருந்து ஒரு காபி கூட போட முடியாமல் இருக்கோம். எமர்ஜென்சியைக் கூட இப்படித்தான் ட்ரீட் பண்ணுவீங்களா?’

‘இல்ல... இல்ல... வருவார்.’

சில நிமிடங்களில் அவரிடமிருந்தே போன்.

‘ஹலோ... நீங்களே டெஸ்ட் பண்ணி வாங்கியிருந்தா இந்த பிரச்னையே இல்லை. ரொம்ப இம்சையா இருக்கு. சரி, எப்படி வரணும்?’

சொன்னேன்.

இரவு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தார். அவசரப் புகார் கொடுத்து 12 மணி நேரம் நிறைவடைந்திருந்தது.

‘என்னங்க இப்படியா இருக்கறது? உங்களுக்கு அவசரம்தானே? 'உடனே வாங்க சார், கவனிச்சுக்கறேன்'னு நீங்க சொல்லியிருந்தால் உடனே ஓடி வந்திருக்க மாட்டேனா? புரியாதவங்களா இருக்கீங்க!’

’என்ன கவனிக்கணும்?'

‘பெட்ரோல் காசு, டிப்ஸ்... இப்படி’ என்றபடி சிலிண்டருக்குள் வாசர் போட்டார். அடுத்த நொடி சரியானது. ஒரு நிமிட வேலைதான். டியூப் மாற்ற வேண்டும் என்றார். மாற்றினோம். பணத்தை வாங்கிக்கொண்டு, புலம்பியபடியே சென்றார்.

சிலிண்டர் பிரச்னை ஒரு புறம்... பழுது பார்ப்பவரின் பொறுப்பான நடவடிக்கை இன்னொரு புறம்... ஒரு நாள் விடுமுறை பிரமாதம்!

படிப்பினைகள்:

* நம் ஊரில் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டால் அது ‘பிசி'யாகவே இருக்கும். தொடர்ந்து - தொடர்ந்து என்றால் இருபது முப்பது முறை - முயற்சி செய்தால் மட்டுமே எடுப்பார்கள்.
* அழைப்பு மையத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக அல்லது அப்படியிருப்பது போல காட்டிக்கொண்டாலும், உங்களுக்கு சர்வீஸ் செய்ய வேண்டியவர் அவர் அல்ல - அவர் ஓர் தனிப்பிறவியாகவோ அதிசயப்பிறவியாகவோ இருப்பார்.
* ஒருவேளை அவரது எண்ணையும் அறிந்து நீங்கள் தொடர்புகொண்டால் - தான் வராமலேயே அந்த விஷயத்தை எப்படி முடிப்பது என்று அருமையாக ஆலோசனை சொல்வார். அப்போது நீங்கள் தயங்காமல். ‘உடனே வந்தால் கவனிக்கிறோம்' என்று உத்தரவாதம் வழங்கிவிட வேண்டும். இல்லையென்றால் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகும். சில வேளைகளில் சிலிண்டர் கசிவு அதிகமாகி வெடித்துத் தொலைத்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. நீங்கள் கவனக்குறைவாகக் கையாண்டதாகக் கூறப்படும்!
* பழைய டியூப் ஒழுங்காகவே இருந்தாலும், 'புது டியூப் மாற்றாவிட்டால் விபத்துதான்' என்ற ரீதியில் பயமுறுத்தி விற்று, கமிஷன் பார்ப்பார்கள்.
* தீப்பெட்டி உள்பட பரிசோதனைக்குரிய எந்தப் பொருளையும் அவர்கள் எடுத்து வரமாட்டார்கள். எல்லாவற்றையும் நம்மையே கேட்பார்கள்.
* 12 மணி நேரம் தாமதமாக வந்தாலும் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல், டிப்ஸ் குறைவாக இருக்கிறது என்று முனகுவார்கள். சண்டையும் போடக்கூடும்!
* சிலிண்டர் போன்ற அபாயமும் அவசரமும் நிறைந்த விஷயங்களில் கூட கேஸ் லீக் ஆகாமல் இருப்பதற்கான ரப்பர் வாசர் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யாமலேயே இண்டேன் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பொறுப்பில்லாமல் சப்ளை செய்வார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
* இதை ஓரளவு தவிர்க்க ஒரே வழி... மாற்று சிலிண்டர் வாங்கும்போதே அதை டெஸ்ட் செய்து, லீக்கேஜ் இல்லை என்று உறுதி செய்தபின் வாங்குவது. இதை டெலிவரி ஆசாமியையே செய்யச் சொல்லுங்கள். எப்படியும் அவருக்கு டிப்ஸ் தருவது கட்டாயம். சிலிண்டர் மூடியைத் திறந்த பின், சில துளிகள் நீர் விட்டு, நீர்க்குமிழிகள் வருகிறதா என்றும் பார்த்தும் அறியலாம். ஒரு சிலிண்டர் மாற்ற இவ்ளோ பிரச்னையா... ஐயோ!

Friday, January 23, 2009

காமெடி டிராஜெடிகள்!

சென்ற வாரம் டிவியில் காமெடி தொடர்பான நிகழ்ச்சிகளில் இரண்டு விஷயங்கள் கண்ணில் பட்டன. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்த வசனங்களும், காது புண்ணாகும் கடி நகைச்சுவைகளும் இடம் பெறுவதால் நான் அவற்றைப் பார்ப்பதில்லை. வீட்டுக்கு வந்த விருந்தினர் குடும்பத்துடன் அதைப் பார்க்க ஆரம்பித்ததால் எனக்கும் வேறு வழியில்லை.

திடீரென்று 15 வயது சிறுவன் ஒருவன் மேடை ஏறினான். ‘என்ன, குழந்தைகளும் கலந்துக்கறாங்களா?’ என்றேன். ‘இது என்ன, பல் முளைக்காத குழந்தைகள் கூட கலந்துக்கறாங்க’ என்று ஜோக் அடித்தார் விருந்தினர்.

‘இப்படித்தாங்க ராத்திரி ஆனதும்...’ என்று ஆரம்பித்த அந்தச் சிறுவன் சொன்ன அத்தனை விஷயங்களும் ஏ சர்டிபிகேட் வாங்கக்கூடியவை. எல்லோரும் எதற்காக விழுந்து விழுந்து சிரித்தார்கள் என்பது புரியவில்லை. அவன் பள்ளியில் (!) ஆதரவும் ஊக்கமும் தருவதாகச் சொன்னான்.

அதற்கு அடுத்து வந்த வாண்டு என்ன செய்யுமோ என்று திகிலுடன் இருந்தேன். நல்லவேளை ஏதோ நடிகர்கள் மாதிரி பேசிவிட்டு, சென்றுவிட்டது. அப்பாடா!

பெரியவர்கள், சிறுவர்களுக்கு என்று தனித்தனியாக நிகழ்ச்சி நடத்தாமல், எல்லோரையும் அனுமதிக்கும்போது சிறுவர்களும் பெரியவர்களுடன் போட்டிப் போடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். அந்தச் சிறுவர்களைத் தயார் செய்வது பெரியவர்கள்தான். கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல் குழந்தைகளை இப்படியெல்லாம் ஆட்டுவிக்க எப்படித்தான் பெற்றோரால் முடிகிறதோ!

இதைக் கருத்தில் கொண்டுதான் இரவு பத்து மணிக்கு மேல் நிகழ்ச்சியை வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது! ஆனாலும் எத்தனையோ குழந்தைகள் கண் கொட்டாமல் நிகழ்ச்சியைப் பார்க்கத்தான் செய்கிறார்கள்.

குழந்தைகளின் பெற்றோருக்கு தங்கள் குழந்தை டிவியில் வரவேண்டும், பிரபலமாக வேண்டும், பரிசு வாங்க வேண்டும் என்ற பேராசைதான் இதுபோன்ற விஷயங்களைக் குழந்தை என்றும் பாராமல் அனுமதிக்கவும், சொல்லிக் கொடுக்கவும் வைக்கிறது. எந்தக் குழந்தையாவது அர்த்தம் கேட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்?

இதே போன்ற நிகழ்ச்சி இன்னொரு சேனலில் மறுநாள். அதில் சிறப்பு விருந்தினராக வந்தவரின் பெயர் தெரியவில்லை. எதிர்கால பெண் எப்படி இருப்பாள் என்ற நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அவர், ‘பெண் பெண்ணாகத்தான் இருக்கணும். அடக்கமா இருந்தாத்தான் அவள் பெண். பெண் தான் வீணை. அந்த வீணையை ஆண் தான் மீட்கணும். அதை விட்டு, வீணையே...’

ஐயையோ... ஐயையோ...

Monday, January 12, 2009

பிள்ளையோ பிள்ளை!

Prodigy, ஆப்பிள் போன்ற புத்தகக் கடைகளில் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் கூட்டம் அதிகம் இருக்கும். பெரும்பாலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் புத்தகம் வாங்குவதில் பெரிய வார்த்தை யுத்தமே நடக்கும். குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை ஏதாவது காரணம் சொல்லி பெற்றோர் நிராகரிப்பர். குழந்தைக்குத் திருப்தி இல்லாவிட்டாலும் பெற்றோருக்காக அவர்கள் வாங்கித் தரும் புத்தகங்களை ஏற்றுக்கொள்கின்றனர். சில குழந்தைகள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை அடம்பிடித்து வாங்கிவிடுவதும் உண்டு. இன்னும் சில பெற்றோர், ‘நான் சொல்றதை வாங்கலைன்னா பாப்கார்ன், ஃப்ரெஞ்ச் ஃபிரை கிடையாது’ என்று அஸ்திரத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருகின்றனர்.

புத்தகக் கண்காட்சியைச் சுற்றி வந்தபோது ஓர் அரிய காட்சியைக் கண்டேன். அப்பாவும், ஆறு வயது மகனும் ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு வந்தனர். சிறுவன் கையில் ஒரு வெள்ளைத் தாளும், பென்சிலும் இருந்தன. கடை வாசலில் அப்பா நின்று விடுகிறார். சிறுவன் கடைக்குள் சென்று புத்தகங்களை நோட்டம் விடுகிறான். பிறகு, புத்தகத்தையும், கடையின் எண்ணையும் தாளில் குறித்துக்கொள்கிறான். மீண்டும் அடுத்த கடைக்குச் செல்கின்றனர்...

மகன் மீது தன் கருத்தைத் திணிக்காமல், சுதந்தரமாக விட்ட அந்த அப்பா ஓவியர் பிள்ளை. கொஞ்சம் கூட அலுக்காமல், சளைக்காமல் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்த பிள்ளையின் பிள்ளை அஸ்வின்.

அஸ்வினிடம் இருந்து தாளை வாங்கிப் பார்த்தேன். அந்தப் பக்கம் முழுவதும் கடை எண்களைக் குறித்து வைத்திருந்தான். விவரம் கேட்டேன். ‘இன்னிக்கு என்னென்ன வாங்கணும்னு நோட் பண்ணிக்கிட்டேன். நாளைக்கு வந்து எல்லாத்தையும் வாங்கிடுவேன்’ என்றான்!

Friday, January 9, 2009

ஆசை முத்தம்... தோசை முத்தம்!

சென்னை புத்தகக் கண்காட்சியின் இரண்டாம் நாள். கூட்டம் அதிகமில்லை. மாலை ஆறு மணிக்குஅரங்கில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ’குழந்தைகளின் புத்தகக் குதூகலம்’ என்ற தலைப்பில் பேச இருந்தார். ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. வரவேற்புரை, வாழ்த்துரை, இன்னும் சில உரைகள் என்று ஆர்வமாக வந்திருந்தவர்களைச் சோதித்து விட்டனர்.

விழாவுக்குக் கூடியிருந்த கூட்டம் சம்பிரதாயப் பேச்சுகளில் பொறுமையிழந்து அரங்கத்துக்குள்ளும், கேண்டீனுக்குள்ளும் அடைக்கலம் புகுந்துகொள்ள ஆரம்பித்தது. தமிழ்ச்செல்வனின் பேச்சைக் கேட்பதற்காக நான் சகித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

இதுபோன்ற விழாக்களில் மிகச் சுருக்கமாக மற்ற விஷயங்களை முடித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு வந்துவிடுவது அனைவருக்கும் நல்லது.

வியாசர்பாடியைச் சேர்ந்த துளிர் இல்லக் குழந்தைகள் 15 பேர் புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறையாக வந்திருந்தனர். அவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அவர்கள் வாங்கிய புத்தகங்கள் அல்லது பார்த்த புத்தகங்கள் பற்றிச் சொன்னார்கள். இன்றும் அப்துல் கலாம் முதல் இடத்தில் இருப்பது தெரியவந்தது!

தமிழ்ச்செல்வன் பேச வந்தார். குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று நாம் நினைத்துக்கொண்டு ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகள் உலகம் வேறு மாதிரி இருக்கிறது. குழந்தைகள் என்ன நினைப்பார்கள் என்று நாமே கற்பனை செய்து கொண்டு அவர்கள் மீது நம் கருத்தைத் திணிக்கிறோம். ஏன் என்றால் நாம் நம் குழந்தைப் பருவத்தை மறந்துவிடுகிறோம்.

எந்தக் குழந்தையும் தன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி செருப்புகளைப் போடத்தான் விரும்புகின்றன. அது எவ்வளவு சிரமத்தைக் கொடுத்தாலும் கூட. குழந்தைகள் பெரியவர்களின் உலகத்தைத்தான் விரும்புகிறார்கள். புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளைச் சுதந்தரமாக விட்டு, புத்தகங்களை வாங்கச் சொன்னால் அவர்கள் பெரியவர்களின் புத்தகங்களை வாங்குவார்கள். இங்கே கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட குழந்தைகளும் அதைத்தான் மெய்ப்பிக்கிறார்கள்.

எங்கள் கிராமத்தில் பொன்னுத்தாய் என்ற லைப்ரரி டீச்சர் வந்தார். எனக்குப் படிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். நான் எந்த நேரத்தில் சென்றாலும் சந்தோஷமாகப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பார். சிறிய வயதில் நாம் எதைப் படிக்கிறோமோ அதுதான் நம் பாதையைத் தீர்மானிக்கிறது. ரஷ்யப் புரட்சி பற்றியெல்லாம் நான் அந்த வயதிலேயே படிக்க ஆரம்பித்துவிட்டேன். சின்ன வயது, யார் எழுதியது எல்லாம் தெரியாது. விஷயம் மட்டும் அப்படியே பதிந்து விட்டது.

என் கதையில் உருவான பூ திரைப்படத்தை எங்கள் தெருவில் உள்ள குழந்தைகள் பார்த்ததாகச் சொன்னார்கள். அவர்களுக்கு என்ன காட்சி பிடித்திருந்தது என்று கேட்டேன். நான் நினைத்தது குழந்தைகள் வரும் காட்சியைச் சொல்வார்கள் என்று.

‘ஆசை முத்தம் கொடுக்க முடியலை, தோசை முத்தமாவது தரேன்’ என்ற டயலாக்கைச் சொன்னார்கள். ஒரு குழந்தைகூட குழந்தைகள் காட்சியைக் குறிப்பிடவில்லை.

குழந்தைகளின் உலகத்தில் நாம் பழகாமல் அவர்களுக்கு எழுத முடியாது. ’இருட்டு எனக்குப் பிடிக்கும்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை, குழந்தைகளிடம் கொடுத்து, விவாதம் செய்து, கேள்வி கேட்டு பிரசுரித்தோம். 8 கட்டுரைகளில் 4 கட்டுரைகள்தான் குழந்தைகளுக்குப் பிடித்திருந்தன.

Tuesday, January 6, 2009

வாசிக்க... சுவாசிக்க... 1

சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 68 Prodigy புத்தகங்களுடன் வாசகர்களைச் சந்தித்தோம். இந்த ஆண்டு புதிதாக 112 புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். மொத்தம் 180 புத்தகங்களுடன் களத்தில் இறங்குகிறோம். சின்னக் குழந்தை முதல் கல்லூரி மாணவர் வரை அனைவரின் விருப்பத்தையும் Prodigy ஸ்டால் பூர்த்தி செய்யும்.

இந்த ஆண்டு Prodigy புத்தகங்களில் ஒரு சில உங்களுக்காக...

அம்பேத்கர்

தனக்குக் கிடைக்காத அத்தனை உரிமைகளும் தன்னுடைய இனத்துக்கு கிடைக்க வேண்டும் என்று போராடிய ஒப்பற்ற தலைவரின் வாழ்க்கை.

கணித மேதை ராமானுஜன்

வியக்கவைக்கும் கணிதத் திறமையால் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் ராமானுஜன். கணித உலகில் இந்தியா, தலை நிமிர்ந்து நிற்கக் காரணமானவரின் நெகிழ்ச்சியூட்டும் வரலாறு.

மொஸார்ட்

இசையே வாழ்க்கையாக வாழ்க்கையே இசையாக உருகிக் கரைந்தவர் மொஸார்ட். இசையால் உலகை வசப்படுத்திய உன்னதக் கலைஞனின் நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை.

லியானார்டோ டா வின்ச்சி

இவர்தான் லியனார்டோ என்று திட்டவடமாக வரையறுத்துச் சொல்வது பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்குவதற்குச் சமமானது. லியனார்டோவின் ஆற்றலில் ஒரு துளி நம்மிடம் இருந்தாலும் போதும், உலகை வசப்படுத்திவிடலாம்.

மெகல்லன்


கடல் வழியாக உலகைச் சுற்றிவர முதன்முதலில் பயணம் மேற்கொண்ட பயணி மெகல்லனின் அசாத்தியமான வாழ்க்கை.

செஸ்வநாதன் ஆனந்த்

64 கட்டங்களின் அகில உலக ராஜாவாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை, இன்றைய இளைஞர்களுக்கு ஓர் உற்சாக டானிக்.

செவ்வாய் கிரகம்

மனிதனை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஒரே கிரகம் செவ்வாய். அங்கே காற்று உண்டா? தண்ணீர் உண்டா? வேற்றுகிரகவாசிகள் உண்டா? நம்மால் செவ்வாய்க்குச் செல்லமுடியுமா? குடியேற முடியுமா? செவ்வாய் கிரகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.

மெசபடோமியா நாகரிகம்

சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனித குலத்தின் முன்னோர்களின் சரித்திரம் இது. நாகரிகத்தின் தொட்டில் என்று கொண்டாடப்படும் மெசபடோமியாவை அறிமுகம் செய்துவைக்கிறது இந்தப் புத்தகம்.

பெஞ்சமின் ஃபிராங்ளின்

அமெரிக்க விடுதலைப் போரில் வெற்றிக்கு வித்திட்டவர்களுள் ஒருவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் கூட. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அமெரிக்காவின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவராக மிளிர்ந்தவரின் வாழ்க்கை.

வீரபாண்டிய கட்டபொம்மன்

தம் வாழ்வின் எந்தக் கணத்திலும் வெள்ளையனுக்கு அடிபணியக்கூடாது என்று வாழ்ந்து காட்டிய மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள்முனை வாழ்க்கை.