Thursday, July 2, 2009

சிதைந்துபோன நம்பிக்கை

எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பாதியில் ஒரு பெண் வந்து சேர்ந்தாள். நெடுநெடு உயரம். சிவப்பாக, ஒல்லியாக இருந்தாள். தோற்றத்தைப் பார்த்தால் பத்தாவது என்று சொல்லலாம். தோற்றம், ஸ்டைல் எல்லாம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று காட்டியது. எல்லோருக்கும் புதிதாகச் சேர்ந்த அந்த மாணவியைப் பார்ப்பதிலும், பேசுவதிலும் ஆர்வம். பேச ஆரம்பித்ததும்தான் தெரிந்தது அவள் இலங்கையைச் சேர்ந்தவள் என்று. மிக விரைவிலேயே பாடங்களைக் கற்று, க்ரூப் லீடர்களில் ஒருவராகி விட்டாள். அத்துடன் எங்களின் நட்பு வட்டத்திலும் இணைந்துவிட்டாள். எங்களுடன் படித்தாலும் அவளை எல்லோரும் அக்கா என்றே அழைத்தோம்.

ஒரு நாள் அவளிடம், ‘நீயும் நாங்களும் ஒன்றாகத்தானே படிக்கிறோம். உன் பேரைச் சொல்லிக் கூப்பிடச் சொல்லேன்’ என்றேன் நான்.

’சொந்தங்களை விட்டு வந்துட்டோம். இங்க எல்லோரும் அக்கான்னு கூப்பிடறப்ப எனக்கு நெருக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. அப்படியே கூப்பிடட்டும்’ என்று சொல்லிவிட்டாள்.

‘எங்க ஊர்ல அப்படி இருக்கும், இப்படி இருக்கும்’ என்று நல்ல விஷயங்களாகத்தான் சொல்லிக்கொண்டிருப்பாள். அவள் சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்படுவோம்.

எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் அவள், அன்று தன் இயல்பைத் தொலைத்திருந்தாள். காரணம் கேட்கக் காத்திருந்தேன். நல்லவேளை கணித ஆசிரியர் அன்று வரவில்லை.

‘என்ன அக்கா?’ என்று நான் கேட்டவுடன் விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

‘நாங்க எல்லோரும் இங்க வரலை. எங்க அண்ணன்கள் ரெண்டு பேர் இலங்கையில இருக்காங்க. ரெண்டு நாளைக்கு முன்னால எங்க ஏரியால குண்டு வீச்சு நடந்திருக்கு. அவங்ககிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லை. எங்கம்மா அழுதுகிட்டே இருக்காங்க’ என்றாள்.

’அழாதே. ஒண்ணும் நடந்திருக்காது’ என்றோம்.

’உங்களுக்கு எல்லாம் தெரியாது. நாங்க இலங்கையில் ரொம்ப வசதியாக வாழ்ந்தோம். எங்க அண்ணன்கள் பிஸினஸ் செய்துக்கிட்டிருந்தாங்க. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தோம். எனக்குப் படிப்புல ஆர்வம் அதிகம். நல்லா படிக்க வைக்கணும்னு எல்லோரும் சொல்வாங்க. அடிக்கடி எங்க நாட்டுல பிரச்னை நடந்துக்கிட்டே இருக்கும். ஒரு நாள் நான், அப்பா, அம்மா, அக்கா மட்டும் வீட்ல இருந்தோம். சிங்கள ராணுவம் தமிழர்கள் வீட்டைத் தேடி வந்துக்கிட்டிருக்காங்கன்னு தகவல் வந்தது. வீட்டில் இருந்த நகைகள், கொஞ்சம் பணம், துணிகளை எடுத்துக்கிட்டு வெளியே வந்தோம். எங்க தெருக்குள்ள ராணுவம் நுழைஞ்சிருச்சு. என்ன பண்ணறதுன்னே தெரியலை...

’பக்கத்து வீட்ல ரொம்ப வருஷமா பழகின சிங்களர் குடும்பம். நாங்க தயங்கினப்ப, தயங்காமல் எங்களை அவங்க வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனாங்க. அக்கம் பக்கத்தில் எங்களைப் பற்றி விசாரித்த ராணுவம், எங்கள் வீட்டைக் கொளுத்தியது. கண் முன்னால நாங்க வாழ்ந்த வீட்டை நெருப்பு தின்பதைப் பார்த்தும் எங்களால் அணைக்கவோ, கதறி அழவோ முடியலை. இரவு முழுவதும் அவங்க வீட்ல அழுதுகொண்டே இருந்தோம்.

’காலையில எங்க அண்ணன்கள் வந்து சேர்ந்தாங்க. எங்களுடன் இரண்டு அண்ணன்களையும் சேர்த்து அனுப்பி வைச்சாங்க. மீதி ரெண்டு பேர் சொந்த மண்ணை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. இங்க வந்தால் இன்னும் கொடுமை. எங்க அண்ணன்களுக்கு ஏற்ற வேலை கிடைக்கல. ஒருத்தர் தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கறார். இன்னொருத்தர் ஒரு கடையில வேலை செய்யறார். ரெண்டு அண்ணன்கள் என்ன ஆனாங்கன்னே தெரியலை’ என்று அழுதாள்.

‘அக்கா கவலைப்படாதே. நாங்க எல்லாம் இருக்கோம்ல. எங்க நாடும், தமிழ்நாட்டு மக்களும் உங்களுக்கு ஆதரவா இருக்காங்க. சீக்கிரம் நல்லது நடக்கும். நீங்க அங்க போயிடலாம்’ என்றேன்.

‘நாங்க மறுபடியும் போவோமா?’

மறுவாரம் அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள் அம்மா அழுதுகொண்டிருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்.

‘காசு, பணம் இல்லாமல் வாழலாம். நாடு இல்லாமல் மட்டும் வாழக்கூடாதும்மா. நாங்க தப்பு பண்ணிட்டோம். எங்க மக்களோட, எங்க மண்ணிலேயே நாங்க செத்துப் போயிருக்கணும். எங்க மக்கள் கஷ்டப்படறப்ப நாங்க மட்டும் இங்கே எப்படி இருக்க முடியும்?‘

அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அன்றும் என்னிடம் இல்லை. இன்றும் என்னிடம் இல்லை.

மூன்று மாதங்களாக இலங்கை தமிழர்களின் நிலை பற்றிய செய்திகளும், வீடியோக்களும் நிம்மதியிழக்கச் செய்துவிட்டன. பல இரவுகளில் தூக்கம் தொலைந்து போனது. துக்கத்தைத் தாங்க முடியாமல் அழுதும், பேசியும் மன உளைச்சலுக்கு ஆளானோம். ஒன்றும் செய்ய முடியாத இயலாமை... இயலாமை... என்ற குற்ற உணர்வு வாட்டி வதைக்கிறது.

ஆதரவு அற்ற இந்தத் தேசத்தில் வசிக்கும் அவலத்தை எண்ணி நீயும் உன் குடும்பமும் எவ்வளவு வலி உணர்வீர்கள் என்பதை நினைக்கும்போது தொண்டை அடைக்கிறது.

அதனால்தான் நேற்று வந்த கனவில் கூட உன் முகத்தை நிமிந்து பார்க்கும் சக்தி என்னிடம் இல்லை அக்கா.

1 comment:

முத்தன் said...

அருமையான பதிவு. நடை. மனம்விட்டு பேசாத சிலரின் வலிகள் உங்கள் வரிகள் காட்டிவிட்டன.

காசு, பணம் இல்லாமல் வாழலாம். நாடு இல்லாமல் மட்டும் வாழக்கூடாதும்மா

பதில் அன்றும் என்னிடம் இல்லை. இன்றும் என்னிடம் இல்லை.

பல இரவுகளில் தூக்கம் தொலைந்து போனது. துக்கத்தைத் தாங்க முடியாமல் அழுதும், பேசியும் மன உளைச்சலுக்கு ஆளானோம். ஒன்றும் செய்ய முடியாத இயலாமை... இயலாமை... என்ற குற்ற உணர்வு வாட்டி வதைக்கிறது.

பாராட்டுகள்