Friday, January 23, 2009

காமெடி டிராஜெடிகள்!

சென்ற வாரம் டிவியில் காமெடி தொடர்பான நிகழ்ச்சிகளில் இரண்டு விஷயங்கள் கண்ணில் பட்டன. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்த வசனங்களும், காது புண்ணாகும் கடி நகைச்சுவைகளும் இடம் பெறுவதால் நான் அவற்றைப் பார்ப்பதில்லை. வீட்டுக்கு வந்த விருந்தினர் குடும்பத்துடன் அதைப் பார்க்க ஆரம்பித்ததால் எனக்கும் வேறு வழியில்லை.

திடீரென்று 15 வயது சிறுவன் ஒருவன் மேடை ஏறினான். ‘என்ன, குழந்தைகளும் கலந்துக்கறாங்களா?’ என்றேன். ‘இது என்ன, பல் முளைக்காத குழந்தைகள் கூட கலந்துக்கறாங்க’ என்று ஜோக் அடித்தார் விருந்தினர்.

‘இப்படித்தாங்க ராத்திரி ஆனதும்...’ என்று ஆரம்பித்த அந்தச் சிறுவன் சொன்ன அத்தனை விஷயங்களும் ஏ சர்டிபிகேட் வாங்கக்கூடியவை. எல்லோரும் எதற்காக விழுந்து விழுந்து சிரித்தார்கள் என்பது புரியவில்லை. அவன் பள்ளியில் (!) ஆதரவும் ஊக்கமும் தருவதாகச் சொன்னான்.

அதற்கு அடுத்து வந்த வாண்டு என்ன செய்யுமோ என்று திகிலுடன் இருந்தேன். நல்லவேளை ஏதோ நடிகர்கள் மாதிரி பேசிவிட்டு, சென்றுவிட்டது. அப்பாடா!

பெரியவர்கள், சிறுவர்களுக்கு என்று தனித்தனியாக நிகழ்ச்சி நடத்தாமல், எல்லோரையும் அனுமதிக்கும்போது சிறுவர்களும் பெரியவர்களுடன் போட்டிப் போடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். அந்தச் சிறுவர்களைத் தயார் செய்வது பெரியவர்கள்தான். கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல் குழந்தைகளை இப்படியெல்லாம் ஆட்டுவிக்க எப்படித்தான் பெற்றோரால் முடிகிறதோ!

இதைக் கருத்தில் கொண்டுதான் இரவு பத்து மணிக்கு மேல் நிகழ்ச்சியை வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது! ஆனாலும் எத்தனையோ குழந்தைகள் கண் கொட்டாமல் நிகழ்ச்சியைப் பார்க்கத்தான் செய்கிறார்கள்.

குழந்தைகளின் பெற்றோருக்கு தங்கள் குழந்தை டிவியில் வரவேண்டும், பிரபலமாக வேண்டும், பரிசு வாங்க வேண்டும் என்ற பேராசைதான் இதுபோன்ற விஷயங்களைக் குழந்தை என்றும் பாராமல் அனுமதிக்கவும், சொல்லிக் கொடுக்கவும் வைக்கிறது. எந்தக் குழந்தையாவது அர்த்தம் கேட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்?

இதே போன்ற நிகழ்ச்சி இன்னொரு சேனலில் மறுநாள். அதில் சிறப்பு விருந்தினராக வந்தவரின் பெயர் தெரியவில்லை. எதிர்கால பெண் எப்படி இருப்பாள் என்ற நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அவர், ‘பெண் பெண்ணாகத்தான் இருக்கணும். அடக்கமா இருந்தாத்தான் அவள் பெண். பெண் தான் வீணை. அந்த வீணையை ஆண் தான் மீட்கணும். அதை விட்டு, வீணையே...’

ஐயையோ... ஐயையோ...

2 comments:

Sathish K said...

சரியாகச் சொன்னீர்கள்.
நாம் குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க அனுமதிப்பதில்லை. கல்வியையும் ஒரு சுமையாக மாற்றி விட்டோம். பாவம் குழந்தைகள். போட்டி உலகத்தில் எல்லாவற்றையும் சந்திக்க வேண்டி இருக்கிறது.

Krishnan said...

தொலைக்காட்சி சாதனம் சமுதாய கடமை உணர்வுடன் இயங்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டதை போல சில நிகழ்ச்சிகள் மட்டமாகத்தான் இருக்கிறது.