Friday, September 25, 2009

மாயமாக மறைந்த ஸ்ட்ராபெர்ரி!

சென்ற ஞாயிற்றுக்கிழமை பால்கனியில் நின்றிருந்தேன். எதிர் பிளாக்காரர்கள் வெளியில் இருந்து திரும்பியிருந்தார்கள். அவர்களின் குழந்தை கையில் ஒரு சிப்ஸ் பாக்கெட் இருந்தது. குழந்தையின் அம்மாவும் அப்பாவும் வேகமாக மாடியேற, குழந்தை மெதுவாகப் படியேறியது. முதல் தளத்துக்கு வந்தவுடன் எதிர் பிளாக் குழந்தையிடம் ’நான் உங்க வீட்டுக்கு விளையாட வரட்டா?’ என்று கேட்டது. அந்தக் குழந்தையும் வா என்று அழைத்தது. ’ அம்மா, நான் ப்ரியா வீட்டுக்குப் போகட்டுமா?’ என்று குரல் கொடுத்தது அந்தக் குழந்தை. ‘சரி, பத்திரமா போ’ என்றார் அவள் அம்மா.

திடீரென்று என்ன நினைத்ததோ அந்தக் குழந்தை, ‘அம்மா விடமாட்டாங்க. நான் அப்புறம் வரேன்’ என்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் இரண்டாவது தளத்துக்கு வந்தும் அதையே திருப்பிச் சொன்னது, குழந்தையின் அம்மா என்னைப் பார்த்தார். ‘நீங்க போகச் சொன்னீங்க. அவ அம்மா விடமாட்டாங்கன்னு சொல்றாளே!’ என்றேன்.

‘கையில சிப்ஸ் பாக்கெட் இருக்குல்ல. அதான் போக மாட்டேங்கிறா. இப்பப் பாருங்க கொடுத்துட்டுப் போவா’ என்றார். சொன்னது போலவே ‘அம்மா, இதை வச்சிருங்க. ப்ரியா வீட்டுக்குப் போயிட்டு வரேன்’ என்று சிப்ஸ் பாக்கெட்டைக் கொடுத்துவிட்டு இறங்கினாள்.

‘ஷேர் பண்ணற பழக்கமே வர மாட்டேங்குது பாருங்க’ என்றபடி வீட்டுக்குள் சென்றார் குழந்தையின் அம்மா.

..

சில வருடங்களுக்கு முன்பு என்னுடன் பணிபுரிந்த ஒருவர் சொன்னது எனக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. அவருக்கும் ஒரே மகன். அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.

‘இங்க பாருங்க. ஆகாஷ் நேத்து ஸ்ட்ராபெர்ரி பழம் வாங்கிட்டு வரச் சொன்னான். அறுபது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போய்க் கொடுத்தேன். டிரெஸ் மாத்திட்டு ஹாலுக்கு வரேன். பாக்கெட்ல ஸ்ட்ராபெர்ரி இலைகள் மட்டும்தான் இருந்தது. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாயிருச்சு. என்னடா, இப்படிப் பண்ணிட்டே? எனக்கோ, உங்க அப்பாவுக்கோ ஒரு பழம் கூட வைக்க மாட்டியா? இதெல்லாம் அடிக்கடி வாங்கிச் சாப்பிடற பழம் இல்லையேன்னு கேட்டேன். போம்மா, எனக்குத் தோணலைன்னு சொல்லிட்டு, அவன் பாட்டுக்கு டிவி பார்த்துட்டு இருக்கான். பகிர்ந்துக்கற மனப்பான்மையே இல்லை. அதை நான் சொன்ன பிறகும் அவனுக்கு அது தப்பாகவே படலை’ என்று மிகவும் வருத்தப்பட்டார்.

..

நண்பனுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. வீட்டுக்கு வந்திருந்தபோது, ‘அசோகா அல்வா. மீனாவும் நீயும் வீட்ல சாப்பிடுங்க’ என்று பாத்திரத்தில் போட்டுக் கொடுத்தேன். ’வீட்டுக்குப் போனால் மீனாதான் சாப்பிடுவா. எனக்குத் தரமாட்டா’ என்றான் சிரித்தபடி.

‘அடப்பாவி, ஏன் இப்படிச் சொல்றே?’ என்றேன்.

‘போன வாரம் அம்மா மீன் குழம்பு, மீன் வறுவல் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனாங்க. நான் சாப்பிட உட்கார்ந்தால் வெறும் குழம்பு மட்டும் ஊத்தினா. சரி அம்மா கொஞ்சமாகக் கொடுத்திருப்பாங்கன்னு விட்டுட்டேன். நேத்து நைட் சப்பாத்தி பண்ணிருக்கேன். சிக்கன் கிரேவி வாங்கிட்டு வாங்கன்னு சொன்னா. வாங்கிட்டுப் போய், அவகிட்ட கொடுத்தேன். குளிச்சிட்டு வர்றதுக்குள்ள அவ சாப்பிட்டு முடிச்சிட்டா. நான் சாப்பிடும்போது சப்பாத்தியும் ஒரு ஸ்பூன் கிரேவி மட்டும்தான் இருந்தது. இதுன்னு மட்டும் இல்லை, கேக், பப்ஸ் எது வாங்கிக் கொடுத்தாலும் அவளுக்கு நான் இருக்கறதே மறந்துடுது.’

‘ஒரே பொண்ணோ?’

‘ஆமாம். ஷேரிங் என்ற பழக்கமே இல்லை’ என்றான்.

..

எங்கள் வீட்டில் நான்கு பேர் சகோதரிகள். ஒரு கேக், ஒரு பிஸ்கெட்டாக இருந்தாலும் எங்கள் அம்மா நான்காகப் பகிர்ந்துதான் தருவார். நாங்கள் அந்தப் பங்கிலும் எங்கள் அம்மாவுக்குக் கொஞ்சம் கொடுத்து, சாப்பிடச் சொல்வோம். அதே போல எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட ஏதாவது எங்களிடம் கொடுத்து, கொடுக்கச் சொல்வார் அம்மா. இனிப்பு, காரம் எது செய்தாலும் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்துவிட்டுத்தான், நாங்கள் சாப்பிடுவோம். யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொடுப்போம். கொடுப்பதில் உள்ள சந்தோஷமே தனிதான்.

ஒரே குழந்தையாக இருக்கும் வீடுகளில் பெரிய சாக்லெட் பாக்கெட்டாக இருந்தாலும் சரி, பெரிய சிப்ஸ் பாக்கெட்டாக இருந்தாலும் சரி, அப்படியே பாக்கெட்டோடு குழந்தையிடம் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை முடிந்தவரை தான் மட்டுமே சாப்பிட்டுவிட்டு, முடியாதபோது மட்டும் தூக்கிப் போடுகிறது. இப்படிக் குழந்தையை வளர்த்துவிட்டு, பிறகு பகிர்ந்து சாப்பிடும் பழக்கமே இல்லை என்று வருத்தப்படுவதிலும் கவலைப்படுவதிலும் என்ன நியாயம்?

நாங்கள் சாப்பிடாமல் எல்லாமே குழந்தைக்குத்தான் தருவோம் என்பதில் பெருமையோ, அக்கறையோ இல்லை. அம்மா, அப்பா உள்பட எல்லோருக்கும் பகிர்ந்துகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை, குழந்தையிலேயே கொடுப்பதில்தான் உண்மையான அக்கறை இருக்கிறது!

Monday, September 14, 2009

இருள் பொருள், இருள் ஆற்றல்

Dark Matter, Dark Energy (கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்) என்ற கருத்துகள் இன்று அறிவியலாளர்களை ஆட்டி வைக்கிறது. இந்தப் புதிய கருத்தாக்கத்தின்படி, உலகின் 96% பொருளும் ஆற்றலும் இந்த கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் வடிவைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது.

சாதாரணப் பொருள் மட்டும் இருந்தால், அண்டங்கள் (கேலக்ஸிகள்) உருவாகி இருக்கவே முடியாது. எனவே ‘கண்ணுக்குத் தெரியாத பொருள்’ என்று ஒன்று இருக்கவேண்டும்; இந்தக் கண்ணுக்குத் தெரியாத பொருள், சாதாரணப் பொருள்களை இழுத்து ஒட்டவைக்கும் பசைபோலச் செயல்படுகிறது என்று ஒரு கருத்தாக்கம் உள்ளது.

இன்று பிரபஞ்சம் பயங்கர வேகத்தில் விரிவாகிக்கொண்டே இருக்கிறது. பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன. பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையையும் தாண்டி இவ்வாறு பொருள்கள் விலகிச் செல்லக் காரணம் ஒருவேளை ‘கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்’ என்ற ஆற்றல் ஈர்ப்புக்கு எதிராகச் செயல்படுவதாலோ என்ற ஒரு கருத்தாக்கமும் உள்ளது.

கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் ஆகியற்றின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க உள்ளார் டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.

இடம் : கிழக்கு மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை
நாள் : 26 செப்டெம்பர் 2009, சனிக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி


பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ள அழைக்கிறோம். வாருங்கள்.

Monday, September 7, 2009

கிரண் பேடிக்கு ஏன் இந்த ஆசை?

மாடலிங் துறையில் ஏற்கெனவே சினிமாகாரர்கள், விளையாட்டு வீரர்கள் என்று கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் புகழை வைத்து நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் லாபம், அதில் மாடலாக இருப்பவருக்கும் கோடிக்கணக்கில் வருமானம்! இதில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கிறார் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி! அதுவும் சமூக விழிப்புணர்வு விளம்பரமோ, அரசாங்க விளம்பரமோ அல்ல. ‘இந்த சோப்பைத் தேய்த்தால் தளும்பு மறையும்’ என்று ஒரு சோப்புக்கு மாடலாகப் பணி புரிந்திருக்கிறார். எத்தனையோ இந்தியப் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் ரோல்மாடலாகவும் இருந்த கிரண் பேடிக்கு ஏன் இந்த ஆசை? நுகர்வு கலாசாரமும் வியாபார உத்தியும் எந்த அளவுக்குச் சென்றுவிட்டது என்பது இதிலிருந்தே தெரிகிறது. நாளை மன்மோகன் சிங்கும் சோனியாவும் மாடலாக வந்தாலும் ஆச்சரியமில்லை!

Tuesday, September 1, 2009

இந்திய நாடாளுமன்றத்தில் ரஷ்யா!

அலுவலக நண்பர் தன் அண்ணன் குழந்தைக்குப் பெயர் வைப்பதற்காக ஒரு வாரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார். தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும். இந்த எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். மாடர்னாகவும் இருக்க வேண்டும், இப்படி...

பெயர் என்பது ஓர் அடையாளம். அதைத் தவிர வேறு ஒன்றும் காரணம் இல்லை. ஆனால் பிறந்ததிலிருந்து, இறுதி வரை நம்மை அந்தப் பெயரில்தான் அழைக்கப் போகிறார்கள் என்பதால் எல்லோருக்கும் கூடுதல் அக்கறை பெயர் வைப்பதில் வந்து விடுகிறது.

என் அப்பா சுத்தானந்தம், பெரியப்பா நச்சினார்க்கினியன், சித்தப்பா தெய்வசிகாமணி, அத்தைகள் சொரூப ராணி, கஸ்தூரி, கங்கா, ஜெயலஷ்மி என்று தாத்தா ரசனையோடு பெயர் வைத்திருக்கிறார். ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.

சின்ன வயதில் அப்பாவுக்கு சுத்தானந்தம் என்ற பெயர் பிடிக்கவில்லை. தான் வளர்ந்த பிறகு கண்டிப்பாகத் தன் பெயரை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். வளர்ந்ததும் எதுக்காகப் பெயர் மாற்ற வேண்டும்? இந்தப் பெயரே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

அப்பா-அம்மா (விஜயா) பெயரிலிருந்து எழுத்துகளை எடுத்து சுஜாதா, பாட்டி பெயரிலிருந்து பூமா ப்ரியா, அப்பாவின் தோழி பெயரிலிருந்து ஹேமா பானு, இசைக்காக சங்கீதா என்று பெயர் வைத்தார் அப்பா. இதில் எங்கள் தாத்தாவுக்கு வருத்தம் இருந்தது. ராஜ ராஜேஸ்வரி என்று பெயர் வைத்து ராஜி என்றும் பரமேஸ்வரியை பரமேஸ் என்றும் மாடர்னாகவும் செல்லமாகவும் அழைக்கலாமே என்று சொல்வார்!

தோழர் மைதிலி சிவராமன் பெயரை பாண்டி சித்தப்பா தன் பெண்ணுக்கு வைத்தார். அவளை மைதிலி என்று அழைக்காமல் பாப்பா என்றுதான் கூப்பிடுவார். பாப்பா (உமாநாத்) என்றும் தோழர் இருந்ததால் ’பாப்பாங்க, வாங்க, போங்க’ என்றுதான் கூப்பிடுவார்!

என்னுடன் கல்லூரியில் படித்த தோழிக்கு சின்னப் பொண்ணு என்று பெயர். உருவம் என்னவோ மிகப் பெரிதாக இருப்பாள். அவள் பெயரை உச்சரிக்கும்போதே பேராசிரியர்கள் சிரித்து விடுவார்கள்! ‘நானாவது பரவாயில்லை. எங்க ஊர்ல போதும் பொண்ணுன்னு எல்லாம் பேர் இருக்கு’ என்பாள் சின்னப் பொண்ணு.

ஒருமுறை பெரியாரிடம் யாரோ பெயர் வைக்கச் சொன்னபோது, மாஸ்கோ என்று வைத்துவிட்டாராம்! எல்லோரும் ஏன் இப்படி வைத்தீர்கள் என்று கேட்டபோது, ‘ஸ்டாலின், லெனின் என்று தலைவர்கள் பெயர் வைத்து, பிற்காலத்தில் பிள்ளைகள் சரியில்லாவிட்டால் திட்டுவீர்கள். அதுக்கு பழனி, திருப்பதி மாதிரி ஊர்ப் பெயர்களை வைத்துவிடுவது நல்லது. மாஸ்கோ யாரும் வைக்காத பெயர் வேறு’ என்றாராம்!

அதே போல தஞ்சாவூரில் ஒரு தோழர். அவருடைய குழந்தைக்கு ரஷ்யா, அவர் உறவினர் குழந்தைகளுக்கு திரிபுரா, வியட்நாம் என்று பெயர் வைத்திருக்கிறார். இன்று ரஷ்யா இந்திய நாடாளுமன்றத்தில் வேலை செய்கிறார்!

சிலருக்கு அவர்களின் தாத்தா, பாட்டி பெயர்களை வைத்து விடுவார்கள். குழந்தையின் அம்மாவுக்குத் தன் மாமனார், மாமியார் பெயரை அவர்களுக்கு முன் உச்சரிக்கவோ, கோபத்தில் திட்டவோ முடியாமல் தவிப்பார்கள்.

சிலர் அவர்கள் படித்த நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் பிடித்துப் போவதால் குழந்தைகளுக்கு அந்தப் பெயர்களை வைத்துவிடுவார்கள். இப்படித்தான் பூங்குழலி, அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, அரவிந்த், பூரணி என்றெல்லாம் பெயர்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன. அதேபோல சிலர் பிரசவம் பார்த்த டாக்டர் பெயரை குழந்தைக்கு சூட்டியிருக்கிறார்கள்.

சில பெயர்களை வைத்து அவர்கள் எந்த ஊர் என்பதைக் கூடச் சொல்லிவிடலாம். பாண்டி, ராஜதுரை, மருது, வைகை போன்ற பெயர்கள் மதுரை, ராஜராஜன், சோழன், இளந்திரையன், ராஜேந்திரன் போன்றவை தஞ்சாவூர், கோமதி நாயகம், காந்திமதி போன்றவை திருநெல்வேலி என்று கண்டுபிடித்து விடலாம். சில சமூகங்களில் சில பெயர்களைத்தான் வைப்பார்கள். யாராவது பெயரை மாற்றி வைத்துவிட்டால், அவர்களுக்குக் கல்யாணம் எல்லாம் கஷ்டம்தான்!

சுடலை, கருப்ப சாமி, மாடசாமி, முனியாண்டி, ஐயனார் என்று கிராமத்துத் தெய்வங்களைப் பெயர்களாகச் சூட்டியிருப்பார்கள். இப்போது சாமி, முன்னோர்கள் பெயர்களைச் சம்பிரதாயத்துக்கு சூட்டிவிட்டு, நவீனப் பெயர்களை வைத்து விடுகிறார்கள்.

சிலருக்கு அழகான பெயர்கள் இருக்க பட்டப்பெயர்களில் அவர்களை அழைத்து, உண்மையான பெயரை மறக்கச் செய்துவிடுவார்கள். மண்டை வாய்க்கால் என்று ஒருவரை அழைப்பார்கள். இப்படி ஒரு பெயரா என்று எனக்கு ஆச்சரியம். அம்மாவிடம் கேட்டபோது, ‘ சின்ன வயதுல சுப்பிரமணிக்கு கீழே விழுந்து மண்டை உடைந்து போனது. மண்டையிலிருந்து வாய்க்கால் மாதிரி ரத்தம் கொட்டியதால மண்டை வாய்க்கால்ன்னு அவரை கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க’ என்றார்.

எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் இருந்தது. அதில் ஒரு வால் பையனை அவன் அம்மா, ‘ அக்கபோரு... அக்கபோரு...’ என்றுதான் அழைப்பார். ‘எப்பப் பார்த்தாலும் திட்டறீங்களே, அவனுடைய பேர் என்ன?’ என்று கேட்டார் அம்மா. ‘ஐயையோ நான் அவனைத் திட்டலைங்க... அவன் பேரு அக்பரு (அக்பர்)’ என்றார்!

சச்சின், சிம்ரன், குஷ்பூ போன்ற பெயர்கள் எல்லாம் நம் வழக்கத்தில் வந்துவிட்டன.

அது சரி. மாமனார், மாமியார், கணவர், ஜோதிடர் போன்றவர்களால் ஒரு குழந்தைக்குப் பெயர் சூட்டப்படுகிறது. பெயர் வைக்கும் விஷயத்தில் பெற்றெடுக்கும் தாய்க்குப் பங்கிருக்கிறதா?