Thursday, December 10, 2009

திருடரைப் பிடித்தோம்!

அனுபவம் இல்லாவிட்டாலும் கூட திருடர் பயம் எல்லோருக்கும் இருக்கிறது. ‘எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்கும்போது, சத்தமே இல்லாம கதவை உடைச்சிட்டு உள்ள வந்துட்டாங்க நாலு திருடர்கள்.’ ’பூட்டின வீட்டை உடைச்சிட்டுப் போய், எல்லாத்தையும் அள்ளிட்டுப் போயிட்டாங்க’ என்று நிறையப் பேர் திருடுப் போன செய்திகளைச் சொல்லிச் சொல்லி, திருடர் பயம் எங்களுக்கு அதிகமாகவே இருந்தது. காரணம் எங்கள் அப்பா வேலை நிமித்தமாக மாதத்தில் பத்து நாள்கள் வெளியூர் சென்றுவிடுவார்.

அப்பா ஊரில் இல்லாத நாள்களில் கதவைப் பூட்டி, டீபாய், ஸ்டூல் எல்லாம் வரிசையாக அடுக்கி வைப்பார் அம்மா. (தூக்கத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்காவிட்டாலும் ஸ்டூல் உருளும் சத்தம் கேட்டு கண் திறக்கலாமே என்று!)

நாங்கள் தஞ்சாவூர் வந்தபோது இந்த பயம் இன்னும் அதிகமானது. தனித்தனி வீடுகள். வீட்டைச் சுற்றி தோட்டம். ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் பெரிய இடைவெளி. அப்போது எங்கள் காலனியில் அடிக்கடி திருடு நடந்துகொண்டிருந்த நேரம். இரவு நேரத்தில் காவலர்களுடன் வீட்டுக்கு ஒருவர் காவலுக்குச் செல்கிற அளவுக்கு திருடர்கள் பயத்தைக் கொடுத்திருந்தார்கள்.

அன்று அப்பா வெளியே சென்றிருந்தார். இரவு எட்டரை மணி. திடீரென்று நாய் குரைக்கும் ஓசை. அறை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய செம்பருத்திச் செடி வேகமாக அசைந்தது. தெருவில் நாயின் குரைப்பு நின்றதும், ஓர் உருவம் மெதுவாக, பலா மரம் அருகில் வந்து நின்றது. நான் மெதுவாக அம்மாவுக்குத் தகவல் சொன்னேன். நான், அம்மா, தங்கைகள் சத்தம் வராமல் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த உருவம் அப்படியே நின்றுகொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் ஆள் இல்லை. அப்போது எங்கள் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது. அதனால் நான்கு வீடு தள்ளியிருந்த சரஸ்வதி மாமி வீட்டுக்குக்கூட தகவல் சொல்ல முடியவில்லை.

எல்லோருக்கும் திக் திக் என்றிருந்தது. ஒருத்தர்தான் கண்ணில் பட்டார். இன்னும் எத்தனை பேர், எங்கிருக்கிறார்களோ! என்ன செய்வது? ஒன்றும் புரியாமல் அந்த ஆளைக் கவனித்துக்கொண்டேயிருந்தோம். அப்போது வாசலில் வண்டி நின்ற சத்தம் கேட்டது. என் தங்கையை மட்டும் அந்த மனிதரைக் கவனிக்கச் சொல்லிவிட்டு, வாசலுக்குச் சென்றோம். சரஸ்வதி மாமியும் எஸ்.ஆர்.கே மாமாவும் வந்தார்கள். சற்றுத் தைரியம் வந்தது.

திண்ணையில் ஏறியவர்களிடம் மெதுவாக விஷயத்தைச் சொன்னோம். மாமா எல்லா விளக்குகளையும் போடச் சொன்னார். விளக்கு போட்டும், எங்களைப் பார்த்தும் அந்த மனிதர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். ஒல்லியான உடல். திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தார்.

அவர் உருவத்தைப் பார்த்ததும் எல்லோருக்கும் கொஞ்சம் தைரியம் வந்தது.

‘யாருப்பா நீ? அங்கே என்ன செய்யறே?’ என்று கேட்டார் மாமா. அருகில் செல்ல பயம். கத்தி, பிளேடு ஏதாவது வைத்திருந்தால்...?

அமைதியாக நின்றார் அந்த ஆள்.

‘என்ன பதில் சொல்ல மாட்டேங்கிறே? இன்னும் தூங்கக்கூட ஆரம்பிக்கலை. எவ்வளவு தைரியம் உனக்கு? இந்த நேரத்துல திருட வந்திருக்கே? போலீசைக் கூப்பிடவா?’ என்றார் மாமா சற்று உரத்த குரலில்.

பதில் எதுவும் சொல்லாமல், இடத்தை விட்டும் அசையாமல் பக்கவாட்டில் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த ஆள்.

கோபத்துடன் மாமா அடுத்த விசாரணையை ஆரம்பிக்கும் முன், அப்பா வந்துவிட்டார். ஒரு திருடனை சாமர்த்தியமாக மடக்கிய பெருமிதத்தில் நானும் என் தங்கைகளும் அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னோம்.

‘இங்க வாப்பா. பயப்படாதே’ என்று அப்பா அழைத்ததும் அந்த மனிதர் வந்தார்.

‘என்ன வேணும் உனக்கு? உன்னைப் பார்த்தால் திருடன் மாதிரி தெரியலை. பயப்படாமல் சொல்’ என்று அப்பா பரிவாகப் பேசினார்.

உடனே மாமியும் அம்மாவும், திருட வந்த ஆளிடம் என்ன பரிவு என்று கேட்டார்கள்.

‘திருடன் இந்த நேரத்துலயா வருவான்? விளக்கு போட்டதும் ஓட மாட்டானா? இல்லை உங்களைப் பார்த்ததும் தப்பிக்க நினைக்க மாட்டானா?’ என்றார் அப்பா. அப்போதுதான் கவனித்தோம். அந்த ஆள் சாப்பிட்டு இரண்டு நாள்கள் ஆகியிருக்கும் போல் தெரிந்தது. மிகவும் பரிதாபமாக இருந்தார்.

‘சார், கோபத்தில ஊரை விட்டு வந்துட்டேன். கையில் பணமில்லை. ரெண்டு நாளா சாப்பிடலை. ஊருக்கும் போக முடியலை. யார்கிட்டேயும் கையேந்தி பழக்கமில்லை. பசி தாங்காமல் இப்படியே நடந்து வந்தப்ப உங்க வீட்டுல கட்டில் கம்பிகளைப் பார்த்தேன். அதை வித்து, சாப்பிடலாம்னுதான் சுவர் ஏறிக் குதிச்சேன். நான் செஞ்சது தப்புதான்...’ என்று கண்கலங்கினார்.

‘நீ கதவைத் தட்டிக் கேட்டிருந்தாலே பணம் கொடுத்திருப்பாங்க. இந்தா, நூறு ரூபாயை வச்சுக்க. நல்லா சாப்பிட்டுட்டு, ஊருக்குப் போ. வேற எங்கேயாவது இப்படி நின்னுக்கிட்டிருக்காதே. திருட்டு பயம் அதிகம்ங்கிறதால உன்னை உதைச்சிடப் போறாங்க’ என்றார் அப்பா.

நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார் அவர்.

‘அடடா! எவ்வளவு தைரியம்! திருடனைப் பிடிச்ச வீராங்கனைகள் எல்லாம் உள்ளே வாங்க!’ என்று அப்பா சொன்னதும், எங்களுக்கு வெட்கமாகிவிட்டது்!

1 comment:

Anonymous said...

Your dad - great man. You guys should be proud of him.