Friday, July 9, 2010

ஹாஸ்டல் கதைகள் - 2 : வசந்தி அக்கா!

திருட்டு. இந்த வார்த்தைக்கு அர்த்தம் ஹாஸ்டலில்தான் தெரிந்தது. நான் ஹாஸ்டலில் சேர்ந்த மூன்றாம் நாளே சிவப்பு நிறப் புது பிளாஸ்டிக் வாளி காணாமல் போனது. வாளி இல்லாமல் என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. யாரிடம் கேட்பது, எப்படிக் கண்டுபிடிப்பது? கனிமொழி அக்காவிடம் சென்றேன். அவர்தான் சேர்ந்த அன்றிலிருந்து என்னிடம் நட்பு வைத்திருப்பவர்.

’பள்ளிக்கூடம் திறந்ததுமே ஆரம்பிச்சிட்டாளுகளா? வா, நான் கண்டுபிடிக்கிறேன்’ என்று அழைத்துப் போனார்.

அங்கு என்னுடைய வாளியைப் போல நான்கு வாளிகள் இருந்தன. நான்கு புது வாளிகள். அதில் மூன்று வாளிகளின் அடியில் பெயிண்ட் மூலம் பெயர் எழுதப்பட்டிருந்தது. கடைசியில் இருந்தது ஒரு வாளி. அடையாளம் எதுவும் இருந்தால் சொல்லச் சொன்னார் கனிமொழி. இப்படி எல்லாம் நடக்கும் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்காததால் வாளியை அவ்வளவு துல்லியமாக கவனித்திருக்கவில்லை. எடுத்தவள் சாதாரணமாக நிற்க, தொலைத்தவள் திருதிருவென்று நின்றேன். கனிமொழிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

’என்ன கூட்டம்?’ என்று கேட்டபடி இன்பா அக்கா வந்தார்.

விஷயத்தை அறிந்தவர், “மாதவி உன் கிட்ட பக்கெட் இல்லைன்னுதானே நேத்து மேரி கிட்ட வாங்கிட்டுப் போனே? அதுக்குள்ள எப்படி பக்கெட் வாங்கினே?’

’டேஸ்காலர் பிள்ளை கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன். அவளோட பக்கெட்டுன்னு அடையாளம் சொல்லச் சொல்லு பார்க்கலாம்!’ என்றாள் மாதவி.

கண் முன்னே வாளி இருந்தும் என்னிடம் நிரூபிக்க முடியவில்லை.

பேனா, பென்சில், ரப்பர், உள்ளாடைகள், பணம் என்று திருட்டுப் போகாத பொருள்களே இல்லை என்பது அன்றுதான் தெரிந்தது. பொருள்களில் பெயர் எழுதி வைப்பது, பணத்தை வார்டனிடம் கொடுத்து வைப்பது, உள்ளாடைகளை உள்ளுக்குள் போட்டு, அதன் மீது பாவாடை, தாவணியைக் காய வைக்கும் உத்தி எல்லாம் பிறகு கற்றுக்கொண்டேன்.

இப்படி அவ்வப்போது யாருக்காவது பொருள்கள் காணாமல் போவது தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் விஷயம் பெரிதாகவில்லை.

**

வசந்தி கிறிஸ்டிபாய். பெயரைப் போலவே அவரும் வசீகரிப்பார். நானும் அவரும் ஒரே ஊர் என்பது நான் ஹாஸ்டலுக்கு வந்து ஒருமாதம் கழிந்தபிறகுதான் தெரிந்தது. அதற்குள் நான் கனிமொழியின் அன்புப் பிடியில் சிக்கி விட்டேன். அதனால் நான் அவருடன் நெருக்கமாக முடியவில்லை. ஆனால் அவரே வந்து என்னை அடிக்கடி விசாரிப்பார். ஊருக்குப் போகும்போது பத்திரமாக அழைத்துச் செல்வார். சீனியர் மாணவியாக இருந்தாலும் ஜூனியர் மாணவிகளிடம் அன்புடன் பழகுவதால் வசந்தியை எல்லோருக்கும் பிடிக்கும்.

நன்றாகப் படிப்பார். அழகாக உடுத்துவார். தெரிந்தவர், தெரியாதவர் பார்க்காமல் உதவி செய்வார். பேஸ்கட் பால் கேப்டனாக இருந்தார். ஹாஸ்டல் தலைவிகளில் ஒருவர். வார்டன், ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவி. அவருடன் படித்தவர்களுக்கு அன்புத் தோழி. விடுதியில் இருந்த என்னைப் போன்ற ஏராளமான ஜூனியர் மாணவிகளுக்கு வசந்தி கிறிஸ்டி பாய் ஒரு ரோல் மாடல்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். பார்க்க வந்தவர்கள் உணவு கொண்டு வந்திருந்தால் அன்று விடுதியில் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வசந்தி அக்காவின் குழுதான் அந்த வாரம் பரிமாற வேண்டும்.சந்தோஷமாக வந்தார் வசந்தி. வார்டனிடம், ’எங்க அண்ணன் சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க. பரிமாறிட்டு மட்டும் போயிடறேன்’என்றார். வார்டன் சிரித்துக்கொண்டே தலையசைத்தார்.

தன் பொறுப்பை மற்றவர்கள் போலத் தட்டிக் கழிக்காத அவருடைய நடத்தை, அவர் மீது இன்னும் கொஞ்சம் மதிப்பை உயர்த்தியது. வசந்தி அக்காவிடம் படிக்கப் போகும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டேன்!(ஆசிரியராவதுதான் அவர் விருப்பம்.)

மாலை நான்கு மணிக்கு ஹாஸ்டலில் ஏதோ சலசலப்பு. விஷயம் ஒன்றும் புரியவில்லை. சிலுவைச் செல்வி, அமுதாவுடன் நான் மைதானத்துக்குச் சென்று விட்டேன். மீண்டும் ஐந்து மணிக்குத் திரும்பினோம். கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அமுதா விசாரித்துவிட்டு வந்தாள்.

’இன்னிக்கு வாங்கிட்டு வந்த ஃப்ரான்ஸ்சிஸ்காவோட புதுச் செருப்பைக் காணோமாம்’ என்றாள் எங்களிடம்.

’சரி, ஒரு செருப்புக் காணோம்னா இப்படியா ஹாஸ்டலே பரபரப்பாகும்?’

’செருப்புக் காணோம்ங்கிறதுக்காக பரபரப்பாகலை சுஜா. செருப்பை எடுத்தவங்கன்னு அவ சொல்றவங்களாலதான் பரபரப்பு...’

’யாருப்பா?’

’யார் கிட்டேயும் சொல்ல வேணாம், செருப்பு உனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யறேன்னு வார்டன் சொன்னதால பேரைச் சொல்லல. ஆனால் பிளஸ் டூ படிக்கறவங்கதான் எடுத்திருக்காங்கன்னு மத்தவங்க சொல்றாங்க... ’

’ஃப்ரான்சிஸ்கா அடிச்சுப் பேசறதைப் பார்த்தா அவ பொய் சொல்லற மாதிரி இல்லை...’

’வார்டன் ஃப்ரான்சிஸ்காவையும் அவ குற்றம் சொல்றவங்களையும் தனியா வச்சு விசாரிச்சிருக்காங்க. இவ பெட்டியைத் திறந்து காட்டச் சொன்னாளாம். ஆனா அவங்க மாட்டேன்னு சாதிச்சிட்டாங்களாம்...’

உணவுக்காக மணி அடித்தது. அமைதியாகச் சாப்பிட்டோம். சிறப்புப் பிரார்த்தனைக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. மீண்டும் செருப்பு விஷயம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

’குரூப் லீடரா இருக்கறவங்கள்ள ஒருத்தர் தானாம் சுஜா!’

’குரூப் லீடரா...? வசந்தி அக்காவா இருக்கக் கூடாது!’

’நானும் அதைத்தான் ஜீசஸ் கிட்ட ஜெபிக்கிறேன்...’ என்றாள் சிலுவைச் செல்வி.

பிரார்த்தனைக்காக மணி அடிக்கப்பட்டது. வாய் மட்டும் கூட்டத்தோடு சேர்ந்து பாடியது. அவர்கள் பேசிய எந்த விஷயமும் காதில் விழுந்ததே தவிர, மனத்தில் பதியவில்லை. திருட்டு என்ற சொல்லைக் கூட மனம் ஏற்கவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று யோசனையில் இருந்தேன். எப்படியோ கூட்டம் முடிந்தது. படுப்பதற்குப் போர்வை, தலையணை எடுப்பதற்காக அறைக்குத் திரும்பினோம். ஃபிரான்சிஸ்கா சந்தோஷத்துடன் செருப்பைக் காட்டி, தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

’நல்லவேளை, யாருன்னு வெளியில் தெரியாமலே செருப்பு கிடைச்சது’ என்று பெருமூச்சு விட்டபடி படுக்கை அறை நோக்கி நடந்தேன். வழியில் கனிமொழி அக்காவைப் பார்த்தேன்.

’சுஜா, விஷயம் தெரியுமா?’

’என்னக்கா?’

’செருப்பை எடுத்தது...’ என்று கிசுகிசுப்பாகச் சொல்ல வந்தார்.

’வேண்டாம்... அதான் கிடைச்சிருச்சே...விட்டுடுங்க...!’

Friday, July 2, 2010

சந்தோஷ்

ஆ... ஐயோ...

என்ன ஆச்சு?

மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தார் பிருந்தா.

“இந்தப் பொண்ணு கண் முழிச்சிருச்சு’ என்று அருகில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்த பெண், மீண்டும் பிருந்தாவைப் பார்த்தார்.

“எமன் மாதிரி வந்த அந்த லாரி இடிச்சுப்புட்டு நிக்காம போயிட்டான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது’ என்று என்றார்.

சற்றுத் தூரத்தில் ராஜாவின் முனகல் கேட்டது. மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தார் பிருந்தா. கண்களை மூடிக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தார். கையை ஊன்றி வேகமாக உட்கார முயற்சி செய்யும்போதுதான் தெரிந்தது, அவருடைய இடது கை முட்டி உடைந்திருந்தது.ராஜாவுக்குக் கால் முட்டி உடைந்திருந்தது.

’கடவுளே, இந்தச் சந்தர்ப்பத்திலாவது என்னைக் காப்பாற்று’ என்று தனக்குள் நினைத்தபடி பிருந்தாவின் கண்கள் அங்கும் இங்கும் தேடின.

’என்னம்மா உன் குழந்தையையா தேடற? கடவுள் புண்ணியத்துல அவனுக்கு ஒண்ணும் ஆகல. சின்னச் சிராய்ப்புத்தான்... நீ கவ... ’

’ஐயோ... கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கற? நான் வேண்டாத நேரம் இல்லையே...’

வெடித்து அழுதார் பிருந்தா.

சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

**

’சந்தோஷ், அப்பா ஆபிஸ் போயிட்டு வரேன். பை!’
...

’சந்தோஷ் குட்டி, உனக்கு கார்ட்டூன் சானல் வைக்கட்டுமா?’
...

’தம்பி சமர்த்தா டிவி பார்ப்பானாம். அம்மா சமைச்சிட்டு வந்துடுவேனாம்...’
...

’சந்தோஷ் அம்மாவைக் கூப்பிடு... ரெண்டு பேருக்கும் கதை சொல்றேன்!’
...

இப்படி பிருந்தா, ராஜாவின் குரல்கள் மட்டுமே அந்த வீட்டில் கேட்கும். யார் சந்தோஷ்? அவன் எப்படி இருப்பான்? கேட்கவும் தயக்கமாக இருந்தது.

ஒரு வாரத்துக்குப் பிறகு பிருந்தா தயங்கித் தயங்கி வந்தார்.

“வீட்ல யாரும் இல்லையே?’

“இல்ல... என்ன சொல்லுங்க?’

“எனக்கு ஒரு உதவி... கொஞ்சம் வர்றீங்களா?’

போனேன்.

ஹாலில் வெள்ளைவெளேரென்று ஒல்லியான, உயரமான உருவம் ஒன்று படுத்திருந்தது.

“சந்தோஷ் ஆன்ட்டிக்கு வணக்கம் சொல்லு...’
...

’இவன் எங்க பையன். பதிமூணு வயசாச்சு. பிறக்கும்போதே இப்படித்தான் இருந்தான். என்னென்னவோ காரணம் சொன்னாங்க. பார்க்காத வைத்தியம் இல்லை. பேச முடியாது. எதையும் புரிஞ்சுக்க முடியாது. நடக்க முடியாது. அசைய முடியாது. கண்ணை மட்டும் சுத்திச் சுத்திப் பார்ப்பான். தினமும் குளிக்க ஊத்தணும். இல்லைன்னா புண் வந்துரும். இவங்க அப்பா ஊருக்குப் போயிருக்கார். தனியா ஊத்த முடியாது. நீங்க தண்ணி ஊத்தினா போதும். மத்ததை நான் பார்த்துக்குவேன்...’

“என்னங்க இதுக்கு இவ்வளவு தயக்கமா?’

இருவரும் சந்தோஷைக் குளிப்பாட்டினோம்.

உடல் முழுவதும் பவுடர் போட்டு, அழகாக டிரஸ் செய்து, மீண்டும் படுக்கையில் கிடத்தப்பட்டான் சந்தோஷ்.

’ஆன்ட்டிக்கு தேங்க்ஸ் சொல்லு சந்தோஷ்!’

...

’ரொம்பக் கஷ்டமா இருக்கு...’

“குழந்தை ஊனமாவோ, மூளை வளர்ச்சி இல்லாமலோ இருந்தால் கூடப் பரவாயில்லை. உயிர் மட்டும் இருக்கற ஒரு பொம்மையா இருக்கறது ரொம்பக் கொடுமை. கிட்டத்தட்ட நானும் அவரும் இவனை மாதிரிதான் வாழ்ந்துட்டிருக்கோம். பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு நாங்க சந்தோஷமா வெளியில போய். நல்லது, கெட்டது எதுக்கும் போறதில்லை. சம்பாதித்ததை எல்லாம் செலவு பண்ணிப் பார்த்துட்டோம். கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை.’

“சந்தோஷ், ஆன்ட்டிக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்...’

“சந்தோஷ் என்ன சாப்பிடுவான்?’

“எதையும் மிக்ஸியில் அரைச்சு கூழ் மாதிரி ஊட்டணும். நம்மளா பார்த்து தண்ணி கொடுக்கணும். பிறந்த குழந்தைக்கு மாதிரி ஆச்சா, மூச்சா எல்லாம் சுத்தம் பண்ணனும்...’

எனக்குப் பேச்சு வரவில்லை.

“இவ்வளவு பிரச்னை இருக்கறதாலவோ என்னவோ காய்ச்சல், சளி மாதிரியான தொந்தரவு எல்லாம் சந்தோஷுக்கு வர்றதில்லை. மருத்துவத்துலதான் சரியாகலை. எங்க பிரார்த்தனையிலாவது சரியாகுமான்னு யார் என்ன சொன்னாலும் செஞ்சிட்டிருந்தோம். இப்ப ரெண்டு வருஷாமா அதையும் விட்டுட்டோம்...’

“உங்க மாமியார், அம்மா யாரையாவது உதவிக்கு வச்சுக்கலாமே?

“அவங்க வந்தாங்கன்னா இன்னொரு குழந்தை பெத்துக்கச் சொல்லி ஒரே தொந்தரவு. நீங்களே சொல்லுங்க, அந்தக் குழந்தையும் இவனை மாதிரி பொறந்தான்னா நான் என்ன பண்ணறது? இவங்களுக்கு அது புரிய மாட்டேங்குது...’

“உங்க கையில் என்ன தழும்பு?’

“அதை ஏன் கேட்கறீங்க? ரெண்டு வருஷத்துக்கு முன்னால பழனியில் வேண்டுதலை முடிச்சிட்டு, காரில் திரும்பி வந்தோம். அப்ப ஒரு ஆக்சிடெண்ட். எனக்குக் கை முட்டி உடைஞ்சிருச்சு. அவருக்குக் கால் முட்டி. அந்த விபத்துல குழந்தைக்கு ஏதாவது ஆயிருக்கணும்னு வேண்டிக்கிட்டே திரும்பிப் பார்த்தேன். சின்னச் சிராய்ப்போட குழந்தை அப்படியே இருந்தான்...!’