Wednesday, December 29, 2010

தமிழன் என்று சொல்லடா!


மலேஷியாவுக்குச் சென்றதும் அங்குள்ள நண்பர்கள் பத்து மலையை முதலில் பார்க்கும்படி வற்புறுத்தினார்கள். உலகிலேயே மிக உயரமான முருகனை  உருவாக்கிய பெருமிதம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. பிரதான சாலையை ஒட்டி அமைந்திருந்தது கோயில். சற்றுத் தூரத்திலேயே தங்க நிறத்தில் ஜொலித்த முருகன் கண்களில் பட்டார்.  அகலமான நீண்ட தார்ச்சாலைகளை தவிர்த்து,  பத்து மலையைப் பொருத்தவரை வெளிநாட்டில் இருக்கக்கூடிய உணர்வு இல்லை. கோயில் அருகே சென்றதும் தமிழ் நாட்டுக் கோயிலுக்குள் நுழைந்து விட்டோமோ என்று சந்தேகம் வந்தது.

நுழைவாயிலுக்கு முன்பு ஏகப்பட்ட கார்கள் குறுக்கும் நெடுக்குமாக, ஓர் ஒழுங்கின்றி நின்றுகொண்டிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்களுக்கு இடையில் தள்ளு வண்டி கடைகள் இருந்தன. பத்து நாள்களுக்கு முன்புதான் தைப்பூசம் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்தக் கொண்டாட்டங்களின் மிச்ச சொச்சம் இன்னும் இருப்பதால் இப்படி இருக்கிறது என்று விளக்கம் அளித்தார்கள். கார்களில் இருந்து இறங்குபவர்கள் அப்படியே இருக்கும் இடத்தில் காரை வைத்து விட்டு உள்ளே செல்கிறார்கள். மணிக்கணக்கில் பிரார்த்தனை முடித்துவிட்டு வருகிறார்கள். சிலர் அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு, காருக்கு அருகில் வந்து, நடு ரோட்டில் உடை மாற்றுகிறார்கள். 

நுழை வாயிலில் இருந்து வரிசையாகக் கடைகள். பிளாஸ்டிக் பொம்மைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள், இளநீர் கடைகள், ரோஸ், மெஜந்தா, பச்சை வண்ணங்களில் மைசூர் பா, முறுக்கு, ராட்சஷ சைஸில் லட்டு, மிக்சர் என்று ஏகப்பட்ட தின்பண்டங்கள். ஒரு பக்கம் ’வேலய்யா வேலய்யா’ என்று பில்லா படப் பாடல் கந்த சஷ்டி ரேஞ்சுக்குப் பக்தியை ஊட்டிக் கொண்டிருந்தது! இரண்டு, மூன்று ஹோட்டல்கள் இருந்தன. இட்லி, இடியாப்பம், பூரி, தோசை, காபி, டீ என்று இங்கு கிடைக்கும் அத்தனை உணவுகளும் அந்த ஹோட்டல்களில் கிடைக்கின்றன. கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.

முருகனை நெருங்க நெருங்க பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. 140 அடி உயரத்தில் முருகன் சாந்தமாக நின்றுகொண்டிருக்கிறார். இந்திய மதிப்புப்படி  2.4  கோடி ரூபாய் இந்தச் சிலைக்குச் செலவாகியிருக்கிறது. முருகனுக்குப் பின்புறம் பத்து மலை குகை இருக்கிறது.  272  படிகளில் ஏறி அந்தக் குகைக்குச் செல்ல வேண்டும். வழியில் குரங்குகளைக் கொஞ்சம் சமாளிக்க வேண்டும். அவ்வளவு களைப்புற்று மேலே வந்து சேர்ந்தால்,  ஆச்சரியம் காத்திருக்கிறது. மிக மிக பிரம்மாண்டமான குகை. பல்லாயிரக்கணக்கான மக்களைத் தாங்கும் விதத்தில் விசாலமாக இருக்கிறது. குகையை நிமிர்ந்து பார்த்தால், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது, குழம்பாக வடிந்து, உறைந்துபோன பகுதிகள் காட்சியளிக்கின்றன.   ஒரு பக்கம் வானம் தெரிகிறது. காற்றுப் போவதற்கு இயற்கை அளித்த வசதி.

குகைக்குள் ஒரு பக்கம் மீண்டும் முருகன், பிள்ளையார், சிவன், பார்வதி என்று வரிசையாகக் கோயில்கள்.  இன்னும் ஒரு 50 படிக்கட்டுகள் ஏறினால் அங்கு இன்னொரு குகை. அங்கும் சில தெய்வங்கள். வெளியில் வெயிலாக இருந்தாலும் குகைக்குள் நல்ல குளிர்ச்சி. குகை வாயிலில் நின்று பார்த்தால் மலேஷியா தெரிகிறது.  வாயிலுக்கு அருகில் பத்து மலை முருகன் சிலைகள், மலேஷியாவின் அடையாளமான ட்வின் டவர் பொம்மைகள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். படியில் இறங்கும் போது, நன்றாக உடை அணிந்திருந்த ஓர் அம்மா, திடீரென்று கை நீட்டி, பிச்சை கேட்டார். அதிர்ச்சியாக இருந்தது.

கோயில் வளாகத்திலேயே குளியலறை, கழிப்பறை, ஓய்வறைகள் எல்லாம் இருக்கின்றன. சிலர் மொட்டை போடுகிறார்கள். சிலர் காது குத்துகிறார்கள். பாவாடை, தாவணி, சுடிதார், சேலை, வேஷ்டிகளில் மக்களைப் பார்க்க முடிந்தது. உடை, பழக்க வழக்கங்கள், கோயில் என்று பலவற்றை தமிழ் நாட்டுப் பாணியில் பின்பற்றினாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் நாட்டைப் பார்த்ததில்லை. தாத்தா காலத்திலேயே ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வதற்கு மலேஷியாவுக்கு வந்தவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, உறவுகளை மறந்து, அங்கேயே செட்டில் ஆனவர்கள். அரசாங்கப் பதவிகள், உயர் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். சிலர் கடைகள், பிசினஸ் என்று சம்பாதிக்கிறார்கள். சொந்த வீடு, இரண்டு கார்கள் என்று  வசதியாக இருக்கிறார்கள். தங்களை மலேஷியன் தமிழர் என்றுதான் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். நீங்கள் தமிழ் நாட்டுத் தமிழரா அல்லது ஈழத் தமிழரா என்று கேட்கிறார்கள்.  

தைப்பூசம் என்பது மலேஷியாவின் தேசிய விடுமுறை தினம். சிங்கப்பூர், மலேஷியாவிலிருந்து பலரும் அந்த நாளில் பத்து மலையை முற்றுகையிடுவார்களாம். காவடி, கரகம், அலகு குத்துதல் என்று ஊரே களை கட்டுமாம். மலேஷியாவில் தமிழர்கள் பகுதியில் மட்டும்தான் இதுபோன்ற போக்குவரத்து அத்துமீறல்கள் நடப்பதாக அங்குள்ள நண்பர்கள் சொன்னர்கள்.

வாசலுக்கு வந்தோம். ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ் செல்வதற்கான பேருந்து நிறுத்தம் சற்றுத் தூரத்தில் இருந்தது. அருகில் ஒரு டாக்சி வந்து நின்றது.           'என்ன, தமிழா? எங்கே போகணும்?’ என்று கேட்டார் டிரைவர். நாங்கள் இடத்தைச் சொன்னதும், ‘பத்து ரிங்கட் கொடுத்துடுங்க, தமிழர்ங்கிறதால குறைவா சொல்றேன்’ என்று ஏற்றிக்கொண்டார். இடத்தை விசாரித்து, இறக்கி விட்டார், 'எல்லாத்துலயும் நாணயம் வேணும். நாளைக்கு மலேஷிய தமிழன் ஏமாத்திட்டான்னு உங்க ஊர்ல சொல்லக்கூடாது இல்லையா?’ என்றபடி கிளம்பினார்.

திரும்பி வரும்போது இரவு நேரம். அந்த இடத்திலிருந்து நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு ஒரு காரில் ஏறினோம். 5 ரிங்கட் பெற்றுகொண்டு கிளம்பினார் பேரம் பேசாத மலாய்க்காரர்! இங்கிருந்து போகும்போதே ஒரு நண்பர் சொன்னார், ’ தமிழன்னு எந்த வண்டியிலேயும் ஏறாதீங்க, ஏமாத்திருவாங்க’ என்று.  அது அப்போதுதான் நினைவுக்கு வந்தது! 

Wednesday, December 15, 2010

மார்கழிஇலைகளில் ஈரம் கவிந்திருக்கும். பக்கத்து வீட்டைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்குப் புகை மூட்டம். சிலிர்க்கும் குளிர். மார்கழியில்தான் இவற்றை எல்லாம் ரசிக்கவும் உணரவும் முடியும். அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து விடுவோம். இருட்டை விரட்ட வீட்டைச் சுற்றிலும் விளக்குகள் எரியும்.  ஜில் என்ற தண்ணீரில் வாசல் தெளித்து, பெருக்கி முடித்ததும் கோலம் போடும் வேலை. முதல் நாளே திட்டமிட்டு வைத்திருப்பதால் வேலை தங்குதடையின்றி ஆரம்பமாகி விடும்.

கற்பனை, நினைவுத்திறன், ரசனை எல்லாம் அடக்கியதுதான் கோலங்கள். சில கோலங்களைப் புள்ளி வைத்து, பொம்மை, பழங்கள், பூக்கள் எல்லாம் போட்டு, அடிக்கும் நிறங்களைத் தூவினால் அன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சில கோலங்கள் வண்ணங்கள் தூவ அவசியமின்றி, கோடுகளாலேயே போடப்படும். கோடுகளால் ஆன கோலத்தைச் சிறிய அளவிலிருந்து ஒரு தெருவையே அடைத்துக்கொண்டு போடும் அளவுக்குப் பெரிதாகப் போட்டுக்கொண்டே செல்லலாம். பொறுமையும் ஆர்வமும்தான் முக்கியம்.

எங்கள் அம்மா கோல மாவால் கோடு இழுத்தாலே அத்தனை அழகாக இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு கோடுகளைப் பிசிறில்லாமல் போடுவார். அம்மா போடும் நாள்களைத் தவிர, மீதி நாள்களில்  நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் எங்கள் விருப்பப்படி கோலம் போடுவோம். பெரும்பாலும் எங்களுடைய கோலங்கள் எந்தப் புள்ளிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் சிக்காதவையாகவே இருக்கும். பூக்கள் நிறைந்த தொட்டி, கார்ட்டூன்கள், இயற்கைக் காட்சிகள் என்று எங்கள் கற்பனை விரிவடையும். (எங்கள் கோலங்களுக்கு  நிறைய விசிறிகள் உண்டு!) இந்தக் கோலங்களுக்குக் கண்டிப்பாக வண்ணங்கள் வேண்டும். ஒருவர் வரைய வரைய மற்றவர்கள் வண்ணம் தீட்டிக்கொண்டே வருவார்கள். விரைவில் வேலை முடிந்துவிடும். 

தலையில் ஸ்கார்ஃப், அருகில் கொசுவத்திச் சுருள், குளிருக்கு இதமாக அம்மாக்கள் காபியை ஆற்றிக்கொண்டு நிற்கும் காட்சியைப் பெரும்பாலும் எல்லோருடைய வீடுகளிலும்  பார்க்க முடியும்.

வெளிச்சம் வரும்போது எல்லோரும் கோலத்தை முடித்திருப்போம். பிறகு அந்தத் தெரு முழுவதும் ஒரு நடை செல்வோம். ஒவ்வொருவரும் என்ன கோலம் போட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து ரசிப்போம். என்னதான் ஓவியம் தீட்டி, வண்ணம் கொடுத்து அழகு சேர்த்தாலும், கோடுகளில் வித்தைகாட்டும் எதிர் வீட்டு மாமிதான் அதிகம் ஸ்கோர் செய்துவிடுவார்.

கோலத்தை அழிக்காமல் வண்டியை எடுப்பது அப்பாவுக்குச் சவால் நிறைந்த காரியமாக இருக்கும். சைக்கிள், வண்டிகளைக் கண்மண் தெரியாமல் அதுவரை ஓட்டிக்கொண்டிருந்த இளைஞர்கள் மார்கழி மாதங்களில் கோலத்தை அழித்து விடாமல் இருக்க, பார்த்துப் பார்த்துச் செல்வார்கள்.  

கிறிஸ்துமஸ், நியு இயர், பொங்கல் போன்ற விசேஷ நாள்களில்  வழகத்தைவிடச் சிறப்பாகக் கோலம் போடப்படும். மாட்டுப் பொங்கலுடன் ஸ்பெஷல் கோலங்களுக்கு குட்பை. 

ஈரம் காயாத தரையில்  போட்ட கோலங்களையும் அதில் நடுவில் இருக்கும் பறங்கிப் பூக்களையும் பார்த்து பல ஆண்டுகளாகி விட்டன. தெருக்கள் அப்படியேதான் இருக்கின்றன... மனநிலைதான் மாறிவிட்டது.