Tuesday, January 27, 2009

எமர்ஜென்சி சர்வீஸ்!

நேற்று புது சிலிண்டர் மாற்றினேன். உடனே 'சர்ர்ர்ர்ர்ர்' என பெருஞ்சத்தத்துடன் கேஸ் வெளியேறியது. அதன் வேகம் கொஞ்சம் அச்சத்தைத் தந்தது. உடனே எமர்ஜென்சி சர்வீஸுக்கு போன் செய்தேன். புகாரை வாங்கிக்கொண்டு, 'இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒருவர் வந்து பார்ப்பார்' என்றனர்.

வரவில்லை. காலை உணவை வெளியில் வாங்கி சாப்பிட்டோம்.

நேரம் கடந்துபோனது. மூன்றரை மணிநேரம் தாண்டியும் ஒருவரும் வரவில்லை. மீண்டும் எமர்ஜென்சி சர்வீஸ்க்கு தொடர்பு கொண்டேன். பழுது பார்ப்பவரின் பெயரையும், மொபைல் எண்ணையும் கொடுத்தனர். அவரைத் தொடர்புகொண்டேன்.

‘ஆமாங்க. ஒன்பது மணிக்கு சொன்னாங்க. ரொம்ப தூரம். வர்றது கஷ்டம்ங்க. நீங்களே ரோட்டில நின்னு பாருங்க... யாராவது வருவாங்க. இண்டேன் ஆளுங்க வரலைன்னா, பாரத் கேஸா இருந்தாக்கூட சரி பண்ணிடுவாங்க’ என்று பொறுப்போடு பதிலளித்தார் அவர்.

‘என்ன இப்படிச் சொல்லறீங்க?’

‘சரி, ஈவ்னிங் 4 மணி வாக்கில வரேன்’ என்றபடி போனை வைத்துவிட்டார்.

மதிய உணவையும் வெளியில் வாங்கி சாப்பிட்டோம்.

மாலை ஐந்தரை மணி ஆகியும் அவர் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டேன்.

‘என்னோட வண்டி ரிப்பேர். இப்பதான் சரி பண்ணினேன். நீங்களே சிலிண்டர் கொண்டு வர்றவங்ககிட்ட காட்டி சரி பண்ணிக்குங்க...’ என்று மிகப்பொறுப்புடன் பதில் வந்தது.

‘அதெல்லாம் முடியாது. நீங்க எப்ப வர்றீங்க?’

‘சரி, ஆறு மணிக்கு வரேன்...’

ஏழு மணி ஆகியும் வரவில்லை.

மீண்டும் போன் செய்தேன்.

‘நான் இப்ப அசோக் பில்லர்ல இருக்கேன். நீங்க சிலிண்டரை இங்க கொண்டு வந்தா நிமிஷத்துல சரி பண்ணித் தரேன்...’ என்ற அற்புதமான தீர்வை அவர் வழங்கினார். வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அசோக் பில்லருக்கு சிலிண்டரை முதுகிலோ பைக்கிலோ கட்டி எடுத்து வர வேண்டுமாம். எவ்வளவு ஈஸி!

‘அதெல்லாம் முடியாது. கம்ப்ளைண்ட் செஞ்சு எவ்வளவு நேரம் ஆச்சு? இதான் எமர்ஜென்சி சர்வீஸா?’

‘அவ்வளவு தூரத்துக்கு எவ்வளவு பெட்ரோல் செலவாகும்? யோசிக்காதீங்க நீங்க. சரி அரை மணி நேரத்துல வரேன்.’

எட்டு மணி ஆகியும் வரவில்லை. மீண்டும் சர்வீஸ் செண்டருக்குத் தொடர்பு கொண்டேன்.

‘காலையில பத்து மணிக்கே அங்க வந்திருக்கணுமே! சரி, நான் மறுபடியும் சொல்றேன். கண்டிப்பா வருவார்.’

’சார், காலையிலிருந்து ஒரு காபி கூட போட முடியாமல் இருக்கோம். எமர்ஜென்சியைக் கூட இப்படித்தான் ட்ரீட் பண்ணுவீங்களா?’

‘இல்ல... இல்ல... வருவார்.’

சில நிமிடங்களில் அவரிடமிருந்தே போன்.

‘ஹலோ... நீங்களே டெஸ்ட் பண்ணி வாங்கியிருந்தா இந்த பிரச்னையே இல்லை. ரொம்ப இம்சையா இருக்கு. சரி, எப்படி வரணும்?’

சொன்னேன்.

இரவு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தார். அவசரப் புகார் கொடுத்து 12 மணி நேரம் நிறைவடைந்திருந்தது.

‘என்னங்க இப்படியா இருக்கறது? உங்களுக்கு அவசரம்தானே? 'உடனே வாங்க சார், கவனிச்சுக்கறேன்'னு நீங்க சொல்லியிருந்தால் உடனே ஓடி வந்திருக்க மாட்டேனா? புரியாதவங்களா இருக்கீங்க!’

’என்ன கவனிக்கணும்?'

‘பெட்ரோல் காசு, டிப்ஸ்... இப்படி’ என்றபடி சிலிண்டருக்குள் வாசர் போட்டார். அடுத்த நொடி சரியானது. ஒரு நிமிட வேலைதான். டியூப் மாற்ற வேண்டும் என்றார். மாற்றினோம். பணத்தை வாங்கிக்கொண்டு, புலம்பியபடியே சென்றார்.

சிலிண்டர் பிரச்னை ஒரு புறம்... பழுது பார்ப்பவரின் பொறுப்பான நடவடிக்கை இன்னொரு புறம்... ஒரு நாள் விடுமுறை பிரமாதம்!

படிப்பினைகள்:

* நம் ஊரில் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டால் அது ‘பிசி'யாகவே இருக்கும். தொடர்ந்து - தொடர்ந்து என்றால் இருபது முப்பது முறை - முயற்சி செய்தால் மட்டுமே எடுப்பார்கள்.
* அழைப்பு மையத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக அல்லது அப்படியிருப்பது போல காட்டிக்கொண்டாலும், உங்களுக்கு சர்வீஸ் செய்ய வேண்டியவர் அவர் அல்ல - அவர் ஓர் தனிப்பிறவியாகவோ அதிசயப்பிறவியாகவோ இருப்பார்.
* ஒருவேளை அவரது எண்ணையும் அறிந்து நீங்கள் தொடர்புகொண்டால் - தான் வராமலேயே அந்த விஷயத்தை எப்படி முடிப்பது என்று அருமையாக ஆலோசனை சொல்வார். அப்போது நீங்கள் தயங்காமல். ‘உடனே வந்தால் கவனிக்கிறோம்' என்று உத்தரவாதம் வழங்கிவிட வேண்டும். இல்லையென்றால் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகும். சில வேளைகளில் சிலிண்டர் கசிவு அதிகமாகி வெடித்துத் தொலைத்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. நீங்கள் கவனக்குறைவாகக் கையாண்டதாகக் கூறப்படும்!
* பழைய டியூப் ஒழுங்காகவே இருந்தாலும், 'புது டியூப் மாற்றாவிட்டால் விபத்துதான்' என்ற ரீதியில் பயமுறுத்தி விற்று, கமிஷன் பார்ப்பார்கள்.
* தீப்பெட்டி உள்பட பரிசோதனைக்குரிய எந்தப் பொருளையும் அவர்கள் எடுத்து வரமாட்டார்கள். எல்லாவற்றையும் நம்மையே கேட்பார்கள்.
* 12 மணி நேரம் தாமதமாக வந்தாலும் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல், டிப்ஸ் குறைவாக இருக்கிறது என்று முனகுவார்கள். சண்டையும் போடக்கூடும்!
* சிலிண்டர் போன்ற அபாயமும் அவசரமும் நிறைந்த விஷயங்களில் கூட கேஸ் லீக் ஆகாமல் இருப்பதற்கான ரப்பர் வாசர் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யாமலேயே இண்டேன் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பொறுப்பில்லாமல் சப்ளை செய்வார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
* இதை ஓரளவு தவிர்க்க ஒரே வழி... மாற்று சிலிண்டர் வாங்கும்போதே அதை டெஸ்ட் செய்து, லீக்கேஜ் இல்லை என்று உறுதி செய்தபின் வாங்குவது. இதை டெலிவரி ஆசாமியையே செய்யச் சொல்லுங்கள். எப்படியும் அவருக்கு டிப்ஸ் தருவது கட்டாயம். சிலிண்டர் மூடியைத் திறந்த பின், சில துளிகள் நீர் விட்டு, நீர்க்குமிழிகள் வருகிறதா என்றும் பார்த்தும் அறியலாம். ஒரு சிலிண்டர் மாற்ற இவ்ளோ பிரச்னையா... ஐயோ!

6 comments:

Rajaraman said...

இவனுங்கள போல ஆளுங்கள நிக்க வைச்சு கேள்வியே கேக்காம சுடனும். அப்பத்தான் அடுத்தவனுக்கு புத்தி வரும்.

puduvaisiva said...

Good Experience Sujatha
:-)))

I have the same story
what can we do

Just say Jai Hind
Bharath Mathaji ki Jayy..

Puduvai siva

Anonymous said...

In bahrain also I'm facing these kind of problems. here it will be very difficult to find out electrician,carpenter,plumber for minor problems at home. If you are working no chance. finally I know the basic and miscellenious repairs of gas,plumbing,electric and carpenting and become self dependent.now a days I'm facing another problem, my neiboughers approaching me and used to say I think its minor problem you can solve it.

rama
bahrain

Sathish K said...

எத்தனை ‘அந்நியன்'கள் வந்தாலும் நமக்கு விடிவுகாலம் வருமா என்பது கேள்விக்குறியே...

Anonymous said...

இந்தியாவில் ‘வாடிக்கையாளர் சேவை’ என்கிற விஷயம் எங்கே தேடினாலும் தட்டுப்படுவது இல்லை :(

கடந்த ஒரு வாரமாக ஒரு சின்ன ரிப்பேருக்காக எங்களுடைய Solar Water Heaterகாரர்களைத் துரத்திக்கொண்டிருக்கிறேன். விற்பதற்குமுன் அவர்களே நூறு முறை தொலைபேசித் தொல்லை செய்தவர்கள், இப்போது மதிப்பதே இல்லை, ‘இதோ வர்றோம்’, ‘அதோ வர்றோம்’ என்கிறார்களேதவிர, யாரும் வரக்காணேன்.

அதேபோல் வாஷிங் மெஷின் வாங்கிய இன்னொரு கடையில் ஏதோ தள்ளுபடி தருவதாகச் சொல்லியிருந்தார்கள், வரவில்லை, இதுவரை இருபது, முப்பதுமுறை ஃபோன் பேசியிருப்பேன், எப்போது கேட்டாலும் அந்த மேனேஜர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள், அல்லது ‘வெளிய போயிருக்கார் சார், எப்ப வருவார்ன்னு தெரியாது’, பாவம் மணிக்கணக்காகச் சாப்பிட்ட தொப்பையைக் கரைக்க வெளியே ஓடிக்கொண்டிருக்கிறார்போலும்!

பிரச்னை என்னவென்றால், இதுபோன்ற Product & Service Providers இல்லாமல் நாம் வாழமுடியாது, புலம்பியபடி நாளைக் கடத்தவேண்டியதுதான், வேறு வழியே கிடையாது :(

butterfly Surya said...

இதுக்கு பேரு எமர்ஜென்சி சர்வீஸ்..??

அடப்பாவிகளா..??