Friday, October 21, 2011

காணாமல் போகும் கதைகள்...


ஸ்நேகா நான்கு வயதாக இருந்தபோது கதை கேட்பது, சொல்வது, படிப்பது என்றால் மிகவும் விருப்பம். ஒரு கதை சொன்னால், அதைத் திருப்பிச் சொல்லும்போது நாம் சொன்ன கதையிலிருந்து கொஞ்சம் மாற்றி, புதுக் கதையாக வேறொன்றைச் சொல்வாள்.
“ஏன் ஸ்நேகா, நான் இப்படிச் சொல்லலையே?’ என்று கேட்டால், ‘உங்களுக்குத் தெரிந்த கதையையே நான் சொன்னால் போரடிக்குமே. அதான் மாத்திச் சொன்னேன்’ என்று சிரிப்பாள்.

ஆனால் அந்தக் கதை சரியாக இருக்கும்... அந்தக் கதையை வேறு யாராவது சொல்லச் சொன்னால், அது இன்னொரு புதிய கதையாக மலரும்... இப்படி ஸ்நேகாவின் கற்பனை விரிய விரிய கதைகளுக்குப் பஞ்சமே இருக்காது.

கதை கேட்பதிலும் சொல்வதிலும் பட்டுவுக்கும் பிரமாதமான திறமை இருக்கிறது. நான்கு வயதிலேயே ஸ்படிகம் போல அத்தனை தெளிவான உச்சரிப்போடு கதை சொல்வதைக் கேட்டால், தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஹனுமன் கதையாக இருக்கட்டும் கிருஷ்ணன் கதையாக இருக்கட்டும் நல்ல பாவத்துடன் சொல்வாள். கதை மட்டும் அல்லாமல், காந்தி என்ற ஒரு மனிதரின் வாழ்க்கையைக் கூட அத்தனை அழகாகக் கதை போலச் சொன்னதில் அசந்து போயிருக்கிறோம்.  சென்ற ஆண்டு அவள் “நோவா’ கதை சொல்லப் போகிறேன் என்றாள். அந்தக் கதைக்கு அதிக நேரம் எடுக்கும் என்று அவள் அப்பா எச்சரித்தார். “சீக்கிரம் முடிச்சுடறேன்’ என்று பத்து நிமிடங்களில் சொல்லி முடித்தாள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் 20 நிமிடங்கள் சொல்ல வேண்டிய கதையை அழகாக எடிட் செய்து, பத்து நிமிடங்களில் பட்டு சொல்லியிருந்தாள். எடிட் செய்த போர்ஷனைக் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு குழந்தையால் சொல்ல முடியும் என்பது இன்று வரை வியப்பாகவே இருக்கிறது. (பாராவின் மகள் என்பதால் எடிட்டிங்கும் தானாகவே வருகிறதோ! பாரா கதை சொல்லும்போது அவரே ஒரு குழந்தையாக மாறி, குரலை மாற்றி, சத்தம் எழுப்பி அழகாகச் சொல்வார். பூமி உருண்டையை வைத்துக்கொண்டு, பட்டுவுக்கு கதையோடு நாடுகளை அவர் அறிமுகம் செய்யும்போது, பட்டு அத்தனை ஆர்வமாகக் கேட்பாள்! பல கதைகளில் பட்டுவும் ஒரு கேரக்டராக இருப்பாள்!)

சில சிறுவர்களிடம் கதை சொல்லச் சொன்னால், “டமால்... டுமீல்... பட் படார்... பவர்ரேஞ்சர்... ஊ... ஆ.... ஸ்பீடா போனான்... பத்துப் பேரைச் சுட்டான்.. ஜம்முனு மேலயிருந்து குதிச்சான்...’ என்று ஆக்ஷனுடன் மிரட்டி விடுகிறார்கள்.
...
கோகுலத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு குழந்தைகளிடமிருந்து ஏராளமான கதைகள் வரும். ஏற்கெனவே படித்த கதைகள், பெரியவர்கள் சொல்ல எழுதிய கதைகள் எல்லாம் போக, கதையாக எழுதத் தெரியாவிட்டாலும் நல்ல கதைக் கரு கிடைக்கும். ரீ ரைட் செய்து பயன்படுத்திவிடலாம். கதை, படக்கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இன்று உள்ள குழந்தைகள் கதை கேட்பதை, படிப்பதை விட, பார்ப்பதையே விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது.

கோகுலம் சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் மிகச் சுமாரான கதைகள் வெகு சிலவே. இதில் பெரும்பாலான கதைகள் அறிவுரை சொல்வதாகவே இருந்தன. பொதுவாக யாருக்குமே அறிவுரை சொல்வது பிடிப்பதில்லை. ஆனால் குழந்தைகளுக்கான கதைகள் என்றால் பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி அறிவுரை சொல்வதாகவே எழுதுகிறார்களே... காரணம் என்ன? அறிவுரை சொல்லும் கதைகளைத்தான் தேர்வு செய்வார்கள் என்று நினைக்கிறார்களா? “திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, தீய நட்பு கூடாது, பெரியவர்களை எதிர்த்துப் பேசக்கூடாது...’ இப்படிப் பட்டியல் நீள்கிறது. இதில் சுற்றுச் சூழல், திருநங்கை போன்ற புதிய களத்தை ஓரிரு கதைகள் தொட்டுச் சென்றிருப்பது நல்ல விஷயம்.

‘வானத்தில் தாரிகா காணாமல் போனதைப் பற்றி நட்சத்திரங்களிடையே சர்ச்சை கிளம்பியது’ என்று அழகாக ஆரம்பித்த அஹமது பைசல், கதையை எழுதத் தவறிவிட்டார்.

“புறா பீட்சாவுக்கு ஆர்டர் செய்தது. ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்து புறாவிடம் பீட்சாவை டெலிவரி செய்தாள்’ என்று சுவாரசியமாக ஆரம்பித்த சங்கர குமாரும் கதை எழுதவில்லை.   

இருவரும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதைகள் கிடைத்திருக்கும்.

நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் கதைப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்துதான் படைப்புகள் வந்திருந்தன.

பொதுவாகவே கதை வாசிக்கும், எழுதும் வழக்கம் குறைந்து வருகிறது என்றே தோன்றுகிறது. தமிழுக்குத்தான் இந்தப் பிரச்னையோ என்று யோசித்தேன். ஆங்கில கோகுலத்துக்கு இந்தியா முழுவதும் வாசகர்கள் இருக்கிறார்கள். சில காலத்துக்கு முன்பு வரை குழந்தைகளின் படைப்புகளைப் போட்டு மாளாது. ஆனால் இன்று படைப்புகள் மிகவும் குறைந்துவிட்டதாகவே சொல்கிறார் யாமினி.

கதை கேட்கும்போதும் படிக்கும்போதும் தோன்றும் கற்பனை, இன்று கதையாகத் தொலைக்காட்சியில் காணும்போது தொலைந்து போய்விடுகிறது. கற்பனை வற்ற வற்ற கதைக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிடுகிறது.

Thursday, October 6, 2011

உள்ளாட்சித் தேர்தலும் சில துண்டுகளும்


சட்டசபை தேர்தலின்போது தேர்தல் குறித்து நேரடியான அனுபவம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் எங்கள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை சீமந்த விழா, காது குத்து விழா, பெயர் சூட்டுவிழா, திருமண விழா, நிச்சயதார்த்த விழா, சுதந்தர தினம், வருடப் பிறப்பு என்று ஒட்டு மொத்த விழாக்களையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, விதவிதமான கெட்டப்களில் பேனர்களில் கலங்கடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

எங்கள் குடியிருப்புகளுக்கு இரவு 9 மணிக்கு மேல்தான் ஓட்டு கேட்டு வருகிறார்கள். குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள் சூழ மூன்று மாடிகளையும் மூச்சிரைக்க ஏறி வருகிறார் வேட்பாளர். கூட்டத்தில் ஒருவர் கையில் வேட்பாளரின் நோட்டீஸ். இன்னொருவர் கையில் துண்டுகள். அழைப்பு மணி அடித்ததும் எட்டிப் பார்த்தால், ‘சாரைக் கூப்பிடுங்கள்’ என்கிறார்கள். (பெரும்பாலும் பெண்களின் ஓட்டைத் தீர்மானிப்பது ஆண்கள்தான் என்பதால் இப்படிக் கேட்கிறார்கள் போலிருக்கிறது!)

சார் இல்லை என்றால், என்ன பேசுவது என்று ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். பிறகு ஒரு நோட்டீஸையும் துண்டையும் வைத்து, ’சார் கிட்ட சொல்லிடுங்க. என் சின்னம் பூட்டு, இவர் வார்டுக்கு நிக்கறார், இவர் சின்னம் சீப்பு. எங்களுக்கு மறக்காமல் ஓட்டுப் போடுங்க’ என்கிறார்கள்.

’துண்டு வேண்டாம்’ என்றதும் திடுக்கிடுகிறர்கள். பிறகு சமாளித்து, சிரித்துவிட்டுச் செல்கிறார்கள். 

எதிர் வீட்டில் அவர்கள் கேட்ட ’சார்’ இருந்தார். உடனே அவருக்குத் துண்டைப் போர்த்தினார் வேட்பாளர். கூட வந்தவர்கள் கை தட்டினார்கள். ஓட்டு கேட்டுவிட்டுச் சென்றார்கள்.

துண்டுகளிலும் பல தினுசு. இரண்டு வோட்டுகள் என்றால் காட்டன் துண்டு. நான்கு ஓட்டுகள் என்றால் டர்கி டவல்.

அடுத்த அரை மணி நேரத்தில் வேறொரு வேட்பாளர். அவரிடமும் துண்டு. ‘நான் இளைஞர். நல்லது நடக்கணும்னா உங்க வோட்டு இளைஞருக்குப் போடணும்.’

பத்தரை மணிக்கு மீண்டும் அழைப்பு மணி.

துண்டு இல்லை. கூட்டம் இல்லை. இருவரும் மஞ்சள் ஆடை அணிந்து, மாலை போட்டிருந்தனர்.

‘இவங்க என் மனைவி. பொது வேட்பாளரா நிக்கறாங்க. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஆதரிப்பீங்கன்னு நம்பறேன்’ என்று வண்ண நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

எங்கள் பகுதி வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய, நூறு கார்களில் ஆள்களை அழைத்துச் சென்றாராம். பெண்களுக்கு இருநூறு ரூபாயும் ஆண்களுக்கு ஐந்நூறு ரூபாயும் தந்தார்களாம். சில இடங்களில் ஓட்டுக்கே பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள்.

’எங்களுக்கு ஓட்டே இங்க இல்லை. நாங்களே இந்த வருஷத்துக்குத் தேவையான துண்டுகளை வாங்கிக்கிட்டோம். நீங்க என்ன விவரம் பத்தாதவங்களா இருக்கீங்க? நம்ம கிட்ட எடுத்த காசைத்தானே அவங்க துண்டா தர்றாங்க?’ என்று கேட்டார் எதிர் வீட்டுப் பெண்.


ஊரில் இருப்பவர்களில் பாதிக்கு மேல் வேட்பாளர்களாகக் கலத்தில் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகள்.