Friday, January 8, 2010

வரிசையில் நின்ற முதல்வர்!

1996-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்காக தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டங்களில் பங்கேற்க வந்தார் ஜோதி பாசு. விமானத்தில் திருச்சி வந்தவரை என் அப்பா, என். சீனிவாசன் மாமா உள்ளிட்ட இன்னும் சில தோழர்கள் அழைக்கச் சென்றிருந்தார்கள். அப்போது இசட் பிரிவு பாதுகாப்பில் இருந்தார் தோழர். திருச்சி போலீசார் பாதுகாப்புக்காக வந்தார்கள். அவர்களிடம், ‘நான் ஒரு முதல்வராக இங்கு வரவில்லை. என் கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருக்கிறேன். எனக்கு நீங்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டாம். எங்கள் தோழர்கள் மத்தியில் எனக்குப் பாதுகாப்பும் தேவையில்லை’ என்றார்.

‘கவர்னர், கலெக்டரிடமிருந்து எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை’ என்றார் ஒரு போலீஸ்காரர்.

‘உங்கள் நேரமும் உழைப்பும் வீண். பிறகு உங்கள் விருப்பம். ஆனால், நான் எங்கள் தோழர்களுடன்தான் பயணம் செய்வேன்’ என்றார் ஜோதி பாசு.

**

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்து முடிந்ததும் தேநீருக்காக எல்லோரும் வரிசையில் நின்றார்கள். நீண்ட வரிசையில் ஜோதி பாசுவும் வந்து நின்றார். உடனே, அவருக்கு முன் வரிசையில் நின்றிருந்த பத்திரிகையாளர்கள் விலகி, அவரை முன்னே செல்லச் சொன்னார்கள். ‘எனக்கு முன்பே நீங்கள் காத்திருக்கிறீர்கள். நீங்கள் முதலில் சாப்பிடுவதுதான் முறை’ என்று நின்றுகொண்டிருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் இப்படி இருப்பதில் வியப்பில்லை. ஆனால், தமிழகப் பத்திரிகையாளர்களுக்கு அந்த விஷயம் உலக அதிசயமாகத் தெரிந்தது. மறுநாள் பத்திரிகைகளில் ’வரிசையில் நின்ற முதல்வர்’ என்று செய்தி வெளியானது.

**

எளிமையான உணவுப் பழக்கம் கொண்டவர் ஜோதி பாசு. ‘இயக்க வேலைகளைச் செய்யும் தோழர்கள் தங்கள் உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சாப்பிடாமல் வேலை செய்வதோ, காலம் கடந்து சாப்பிடுவதோ நல்லதல்ல. ஆரோக்கியமாக இருந்தால்தான் போராடத் தெம்பிருக்கும்’ என்பார். இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டு இட்லி, சாம்பார் பிடிக்கும் என்பார்கள். தோழர் ஜோதி பாசுவுக்குப் பிடித்ததோ ரசம்!

**

1914-ம் ஆண்டு பிறந்தவர். படித்த, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு. உயர்கல்விக்காக லண்டன் சென்ற போது இந்தியாவில் சுதந்தரப் போராட்டம் தீவிரமாக இருந்தது. லண்டனில் இருக்கும் இந்திய மாணவர் சங்கம் நடத்தும் சுதந்தரப் போராட்டம் பற்றிய கூட்டங்களில் பாசுவும் கலந்துகொள்வார். பல தலைவர்களை இடதுசாரி சிந்தனைக்கு அழைத்துச் சென்ற லண்டன்தான் ஜோதி பாசுவுக்கும் கம்யூனிச பாதைக்கு வழிகாட்டியது.

இந்தியா வந்ததும் அரசியலுக்குத் திரும்பினார். 1977-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் முதல்வராகப் பதவியேற்றார். தொடர்ந்து 23 ஆண்டுகள் முதல்வராக வேலை செய்த ஒரே மனிதர் ஜோதி பாசு.

உடல்நிலை காரணமாக 2000-ம் ஆண்டில் பதவி விலகினார். 2008-ம் ஆண்டு வரை சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்து பணியாற்றினார்.

96 வருட ஜோதி பாசுவின் வாழ்க்கையில் நாம் அறிந்துகொள்ள வேண்டியதும் கற்றுக்கொள்ள வேண்டியதும் ஏராளம். அவருடைய வாழ்க்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு மட்டுமல்ல, இந்தியாவின் வரலாறும் கூட! தன் உடையைப் போல அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக இருந்த தோழர் ஜோதி பாசு இந்த நூற்றாண்டின் இணையற்ற மனிதர்!