Thursday, November 19, 2009

போலீஸ் ஸ்டேஷனில் ஒரு மணி நேரம்!

போலீஸ் ஸ்டேஷன் வழியாகக் கடந்து சென்றிருக்கிறேன். மற்றபடி திரைப்படங்களில் மட்டுமே நான் போலீஸ் ஸ்டேஷனை முழுதாகப் பார்த்திருக்கிறேன். ஒரு நிஜ போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லும் வாய்ப்பு இப்பொழுதுதான் வாய்த்தது. அதுவும் பாஸ்போர்ட் அப்ளிகேஷன் வெரிஃபிகேஷனுக்காக.

நல்லவேளை அன்று காந்தி ஜெயந்தி என்பதால் விடுமுறை. 11 மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். எங்கள் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் இருந்தது அந்த காவல்நிலையம். 20 நிமிடங்களில் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்ட ஒரு வீட்டின் முன் எங்கள் வண்டி நின்றது. காம்பவுண்டுக்குள் 8 ஹோண்டாக்களும் சுசுகிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. ஓரத்தில் ஒரு சைக்கிள் இருந்தது. வெள்ளை அடிக்கப்பட்ட அந்த வீட்டின் முகப்பில் காவல் நிலையம் என்ற போர்டைத் தவிர, காவல் நிலையம் என்பதற்கான எந்தவித முகாந்திரமும் அங்கு இல்லை. ஜீப், சிவப்பு - வெள்ளைக் கட்டம்போட்ட சுவர், யூனிஃபார்மில் நடமாடும் போலீஸ் என்று நான் நினைத்துக்கொண்டிருந்ததுக்கு மாறாக இருந்தது அந்தக் காவல் நிலையம். கேட்டைத் தாண்டி உள்ளே சென்றோம். வராண்டாவில் சுடிதார் போட்ட ஓர் இளம் பெண் இறையன்பு எழுதிய ஒரு புத்தகத்தை நிமிர்ந்து பார்க்காமல் படித்துக்கொண்டிருந்தார். மேஜையில் லெட்ஜர் புத்தகங்களோ, தொலைபேசியோ எதுவும் இல்லை.

எங்களுக்கு அவரைத் தொந்தரவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. விஷயத்தைச் சொன்னோம். அருகிலிருந்த பெஞ்சில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் புத்தகத்துக்குள் சிறை சென்றுவிட்டார். (பொதுமக்களிடம் காவல்துறையினருக்கு நம்பிக்கையும் மதிப்பும் வரும் விதமாக ரிஷப்ஷனிஸ்ட் போட்டு, பொறுப்பாகப் பதில் சொல்லவும், இனிமையாகப் பொதுமக்களிடம் நடந்துகொள்ளவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்!)

ஒரு அறிவிப்பு பலகை இருந்தது. அதில் ‘ நமது காவல் நிலையத்தில் கணபதி பூஜை ... அன்று நடைபெற இருப்பதால், அறிஞர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று எழுதியிருந்தது. புதிதாக இந்த இடத்தில் குடியேறியிருக்கிறார்கள். அதனால்தான் இன்னும் ஒழுங்குபடுத்தவில்லை போலிருக்கிறது!

கண்காணிப்பாளர் அறை என்று எழுதப்பட்ட அறையின் மேஜையில் தமிழக முதல்வர் சிரித்துக்கொண்டிருந்தார். எதிரில் ஒரு டீவி உட்கார்ந்திருந்தது.

சற்று நேரத்தில் இன்னொருவர் வந்தார். அவரும் பாஸ்போர்ட் விஷயத்துக்காக வந்திருப்பதாகச் சொன்னார். அரைமணி நேரத்தில் பாஸ்போர்ட் அப்ளிகேஷனுக்குப் பொறுப்பான அந்த அதிகாரி வந்து சேர்ந்தார். எங்களை உள்ளே அழைத்துச் சென்று இன்னொரு பெஞ்சில் உட்காரவைத்தார். அந்த அறைக்குச் சற்றும் பொருந்தாத பெரிய அறிவிப்புப் பலகை தொங்கிக்கொண்டிருந்தது.

சின்ன திருட்டு
சாதாரண திருட்டு
பகல் கன்ன திருட்டு (சுவரில் ஓட்டை போட்டு செய்யும் திருட்டு)
இரவு கன்ன திருட்டு
கால்நடை திருட்டு
வாகனத் திருட்டு
கொள்ளை
திட்டமின்றி கொலை
கொலை
விபச்சாரம்
கற்பழிப்பு

இப்படிப் பட்டியல் போடப்பட்டு எத்தனை கேஸ், எவ்வளவு மதிப்புள்ள பொருள்கள் தொலைந்துபோனது, எவ்வளவு கண்டுபிடிக்கப்பட்டது போன்ற விவரங்கள் அதில் இருந்தன. சின்னத் திருட்டு, சாதாரண திருட்டுகள் மிகவும் குறைவாக இருந்தன. கால்நடை, வாகனம், கொள்ளை போன்றவை அதிகம் இருந்தன. பொதுவாகக் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களில் பாதியளவோ அல்லது அதற்குக் குறைவாகவோதான் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்தப் பலகை சொல்கிறது.

எல்லாம் வேடிக்கை பார்த்து முடித்த பின்தான் எனக்கு எதிரில் சுவர் ஓரம் ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். அக்யூஸ்ட். கருகருவென்ற தாடிக்குள், எந்த வித உணர்ச்சியும் இன்றி வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். சின்னத் திருட்டா, சாதாரண திருட்டா அல்லது பட்டியலில் இல்லாத குற்றத்துக்கு உட்கார்ந்திருக்கிறாரா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, எங்களுக்கு முன்னால் இருந்தவரை அழைத்தார் அந்த அதிகாரி. அவரின் விண்ணப்பத்தைச் சரி பார்த்து, தகவல்களை நிரப்பினார். இடையில் வீட்டுக்கு போன் செய்து, ‘லஞ்ச்க்கு வந்துடுவேன். ரெடி பண்ணி வை’ என்று சொல்லிவிட்டு, ‘ஓகே. அனுப்பிடறேன்’ என்றார்.

‘சார், வேற ஏதாவது...’ என்று இழுத்தார் அவர்.

‘சார், நானா இவ்வளவு வேணும்னு கேட்க மாட்டேன். நீங்க கொடுத்தால் வேணாம்னு சொல்ல மாட்டேன்...’

பணத்தை எடுத்துத் தயங்கி நின்றார் அவர்.

‘இங்கேயே கொடுக்கலாம் சார். ஒண்ணும் பிரச்னை இல்லை’ என்று வாங்கி டிராவில் போட்டுக்கொண்டார்.

மேலே காந்தியும் கீழே அக்யூஸ்ட்டும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்!

7 comments:

முத்துகணேசன் said...

சிறுகதை போல இருந்தது. அருமையான எளிமையான நடையில் இருந்தது. கடைசி வரி டச்சிங்.

துளசி கோபால் said...

//கண்காணிப்பாளர் அறை என்று எழுதப்பட்ட அறையின் மேஜையில் தமிழக முதல்வர் சிரித்துக்கொண்டிருந்தார். எதிரில் ஒரு டீவி உட்கார்ந்திருந்தது.//

இ(த்)து........

ரசித்தேன்:-))))))))

பாலாஜி சங்கர் said...

மேலே காந்தியும் கீழே அக்யூஸ்ட்டும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்!


நல்ல வரிகள்

Anonymous said...

கட்டுரையும், குறிப்பாகக் கடைசி வரியும் மிக அழகு!

நானும் இதே வேலைக்காகக் காவல் நிலையத்தில் உட்கார்ந்திருந்தேன், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்றுதான் நினைவு. ஆனால் என்னிடம் காசு கேட்டவர் அதிரடியாக ஓர் அமவுன்டைச் சொன்னார், அப்புறம் பேரம் பேசி அதில் பாதி வாங்கிக்கொண்டார், ‘இதில எங்க பெரிய ஆபீசருக்கும் பங்கு தரணும்ல?’ என்று அந்தக் கத்தரிக்காய் வியாபாரத்தை நியாயப்படுத்தினார்!

- என். சொக்கன்,
பெங்களூரு.

பிச்சைப்பாத்திரம் said...

end of the post is very good. :-)

Azhagan said...

Bravo!!

Sathish K said...

kathaiyai paathiyila vittuteenga..

Interestingly when I had been to the police station for the verification, the police incharge was a Head constable. I waited for him to come. I was little tensed. For me also it was the first time visiting a police station. When the person came for home inquiry, I was not at home. I had been told to get the 10th mark sheet.

So when I went to the station, he just asked for the copy of the certificate. I took in a nearby shop and gave him. He collected it. Nothing else he asked. Me also didn't give in this case. :) It was quite surprising for me.

Aamam. entha naatukku poga poreenga. :)