Friday, August 21, 2009

இரண்டு நாள் வனவாசம்!

பரம்பிக்குளம் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தோம். அங்கு செல்வதற்கான வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. ஏழு பேர் கொண்ட சின்ன குழுவாகக் கிளம்பினோம். கோவை வரை ரயில் பயணம். அங்கிருந்து பொள்ளாச்சிக்கு ஒரு மணி நேரம் பேருந்தில் பயணம். பொள்ளாச்சியில் காலை 6.15 மணிக்குத் தயாராக நின்றுகொண்டிருந்தது பரம்பிக்குளம் பேருந்து.

பொள்ளாச்சியில் இருந்து கிளம்பிய பத்து நிமிடங்களுக்குள் நகரத்தை விட்டு, கிராமங்களுக்குள் செல்ல ஆரம்பித்தது பேருந்து. சாலையின் இரண்டு பக்கங்களிலும் மிகப் பெரிய தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள். தோப்புகளுக்கு நடுவே சின்ன பங்களாக்கள். சினிமாவில் பார்த்த பண்ணையார் வீடுகள் ... வருவதும் மறைவதுமாக இருந்தன. ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை என்று கடந்த பேருந்து மலைமேல் ஏற ஆரம்பித்தது. அரை மணி நேரப் பயணத்தில் டாப்ஸ்லிப் வந்து நின்றது. இத்துடன் தமிழ்நாட்டு எல்லை முடிவடைகிறது. இனி கேரளா.



குறுகலான மலைப்பாதை. உயர்ந்த தேக்கு மரங்கள். தூணக்கடவு தாண்டி, பரம்பிக்குளம் நெருங்கிக்கொண்டிருந்தோம். நீண்ட தோகை கொண்ட ஓர் ஆண் மயிலும், இரண்டு பெண் மயில்களும் சீரியஸாக உணவு தேடிக்கொண்டிருந்தன. அடுத்த வளைவில் ஓர் யானை ஓரமாக நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் மற்றும் எகோ செண்டர் முன்பு பேருந்து நின்றது. ஹெரான், மைனா, ஹிப்போய் என்ற பறவைகளின் பெயர்களில் 7 டெண்ட்கள் இருந்தன. தரை மட்டும் சிமெண்ட் போடப்பட்டு, அதன் மேலே டெண்ட். சுவர் கிடையாது. பாதுகாப்பான டெண்ட். உள்ளே ஹோட்டலுக்குரிய அத்தனை வசதிகளும் இருந்தன. டெண்டை ஒட்டி, குளியலறை.

நாங்கள் தயாரானதும் சின்ன வன உலாவுக்கு அழைத்துச் சென்றார்கள். சத்தம் போடக்கூடாது; சிவப்பு, மெஜந்தா வண்ண ஆடைகளை அணியக்கூடாது என்று எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டி ஸ்ரீநிதாசன் கூறினார். நடக்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் சரசரவென்று சத்தம் கேட்டது. சில மான்கள் வேகமாக ஓடுவது தெரிந்தது. மரங்கள், செடிகளைப் பார்த்துக்கொண்டு தங்கிய இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.




மதிய உணவு பிரமாதமாக இருந்தது. சைவம், அசைவம் எல்லாம் இருந்தது. நான்கு மணிக்கு வேனில் வன உலாவுக்குக் கிளம்பினோம். சற்று நேரத்தில் நாற்பது, ஐம்பது மான்கள் ஒரே இடத்தில் மேய்ந்துகொண்டிருந்தன. பச்சைப் புல்வெளியில் பழுப்பு வண்ணப் புள்ளி மான்கள் அட்டகாசமாக இருந்தன. மீண்டும் பயணம்... சாம்பார் மான், மயில், சிங்கவால் குரங்குகள் கண்ணில் பட்டன.

கன்னிமரா தேக்கு மரம் மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் முழு உருவத்தையும் எவ்வளவு முயற்சி செய்து கேமராவுக்குள் சிக்க வைக்க முடியவில்லை. அதன் வயது அதிகமில்லை... சுமார் 450 வருடங்கள்!

அங்கிருந்து பரந்து விரிந்துள்ள ஏரிக்குச் சென்றோம். சுற்றிலும் மூங்கில் காடுகள். நடுவில் தண்ணீர். மூங்கிலால் செய்யப்பட்ட சிறிய படகில் சவாரி. தூரத்தில் ஒரு கறுப்பு முதலை தரையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் மான்கள் கூட்டமாகத் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. ஏரியின் நடுவில் 4 கிலோ மீட்டருக்கு ஒரு நிலப்பரப்பு. அதிலும் மரங்கள். அந்தத் தீவிலும் தங்கும் வசதி உண்டு. இரவு நேரத்தில் தீவுக்கு அருகில் யானைகள், புலிகள் தண்ணீர் அருந்த வருவதைப் பார்க்கலாம் என்றார்கள்.

’புலி இதுவரை ஏழு தடவை என் பக்கத்துல வந்துட்டுப் போயிருக்கு. நமக்குப் பயமாகத்தான் இருக்கும். ஆனா அது இதுவரை ஒண்ணும் செய்ததில்லை. பார்த்தாலும் பார்க்காத மாதிரி போயிடும். இந்தக் கரடி இருக்கே, அதுதான் பொல்லாதது’ என்றார் படகோட்டி.

அடுத்து நாங்கள் சென்ற இடம் அணை. காடு கேரளாவுடையது என்றாலும் இங்கிருக்கும் அணைகள் எல்லாம் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில். அணை மீது நடக்கும்போது சுற்றிலும் பல வண்ணப் பச்சை மரங்கள். சில இடங்களில் தேக்கு மரம் பூத்து வித்தியாசமான கலவையாகக் காட்சி தந்தது.

இருட்ட ஆரம்பித்தது. எங்கும் பூச்சிகளின் இன்னிசை. அடுத்து ஊருக்குள் வந்து சேர்ந்தோம். அங்கு மலை வாழ் மக்களின் பாரம்பரிய நடனத்தைப் பார்த்தோம்.
தங்கும் இடத்தை நோக்கி வேன் கிளம்பியது. ஓர் இடத்தில் வேன் நின்றது. சுமார் பத்து காட்டெருமைகள் ஓரமாக நின்றுகொண்டிருந்தன. பளபள தோல். புஷ்டியான உடல். கூர்மையான வளைந்த கொம்புகள். மிகவும் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தன.

சற்றுத்தூரம் சென்ற உடன் எதிரே ஒரு ஜீப் வந்தது. அதில் இருந்தவர்கள் யானை பாதையில் நிற்பதாகச் சொன்னார்கள். வேன் மெதுவாகச் சென்றது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் யானைகள் குடும்பம் குடும்பமாக நின்றுகொண்டிருந்தன. சில யானைகள் வேகமாக மரங்களுக்குள் சென்று மறைந்துகொண்டன.

நாங்கள் இரவு உணவை முடித்துவிட்டு, தூங்கினோம். அதிகாலை பறவைகள், விலங்குகளுடைய விநோதமான ஒலிகள் கேட்டன. எழுந்து பறவைகளைப் பார்ப்பதற்காக மீண்டும் வன உலா. வழியில் கஸ்தூரி மஞ்சள் செடிகள் பூத்திருந்தன. பெயர் தெரியாத பறவைகள் எங்கோ இருந்து சத்தம் கொடுத்துக்கொண்டிருந்தன. ஒன்றிரண்டு பறவைகளை மட்டும் பார்க்க முடிந்தது.

காலை உணவுக்குப் பிறகு மீண்டும் ஒரு நடைப்பயணம். நடுவில் வேறொரு குழுவும் எங்களுடன் இணைந்தது. உயரமான மரத்தில் மலை அணிலைப் பார்த்தோம். பெரிய முயல் அளவுக்கு அதன் உருவம் இருந்தது. திடீரென்று பெரிய மரம் ஒடியும் சத்தம். இரண்டு வழிகாட்டிகளும் ரகசியமாகப் பேசிக்கொண்டனர். காரணம் கேட்டேன். ஒன்றும் இல்லை என்றனர். பிறகு ஒரு பெரிய செடியைப் பறித்து, இடப்பக்கமும் வலப்பக்கமும் வீசிக்கொண்டு நடந்தனர். எங்களுக்கெல்லாம் திக்திக் என்றிருந்தது. அமைதியாக தங்கும் இடத்துக்கு வந்தோம். ‘வேற ஒண்ணும் இல்லை. யானை வாசம் வந்தது. சத்தமும் கேட்டது. அதான்’ என்றார் வழிகாட்டி.




யானை பள்ளத்தாக்கு என்ற இடத்தில் தங்கினோம். தங்கும் விடுதிக்கு அருகில் பெரிய வாணலி பாத்திரம் அளவுக்கு தடங்கள் காணப்பட்டன. விசாரித்தபோது முதல் நாள் இரவு யானைக்கும் காட்டெருமைக்கும் சண்டை என்றார்கள். அதன்பிறகுதான் காட்டெருமையின் கால்தடம் அருகில் இருந்ததைக் கவனித்தோம்.

சுற்றுலா பொறுப்பாளர் ஸ்ரீநிவாசன் வீடு அருகில் இருந்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக இங்கு வசிப்பதாகச் சொன்னார். அவர் வீட்டுக்கு அருகில் உள்ள மரங்களில் சிங்கவால் குரங்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. மழை பெய்யும்போது சிறுத்தை இவர்கள் வீட்டு வாசலில் ஒதுங்கி விட்டுச் செல்லும் என்றார்கள்! கோழி வளர்த்தால் மலைப்பாம்பு பிடித்துச் சென்று விடுமாம்!

எனக்கு ஒரு கேள்வி இருந்துகொண்டிருந்தது. ‘இயற்கை காடு மாதிரி தெரியலை. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தேக்கு மரங்கள் வளர்ந்திருக்கே?’ என்று ஸ்ரீநிவாசனிடம் கேட்டேன்.

‘ பிரிட்டிஷ் காலத்தில் காட்டில் உள்ள மரங்களை அழித்து தேக்கு மரங்களை நட்டிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். அதுதான் இப்ப இப்படி வளர்ந்திருக்கு. சின்னச் சின்ன இலைகள் உள்ள மரங்கள் இல்லாததால பறவைகள், விலங்குகளுக்கு உணவும் இல்லை. வாழறதுக்கான வசதியும் குறைந்து விட்டது. ஹார்ன்பில் போன்ற பறவைகளும் நிறைய விலங்குகளும் இன்னும் தூரத்தில் இருக்கும் இயற்கை காட்டுப்பகுதிகளுக்குச் சென்றுவிட்டன. இங்கே தனியாருக்கு நிலம் கிடையாது. மலைவாழ் மக்கள் 150 குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்கும், காடுகளின் அருமையை எல்லோரும் புரிந்துகொள்ளவும் இந்த வன உலாக்களை நடத்திக்கொண்டிருக்கிறோம் ’ என்றார்.

புகை பிடிக்கத் தடை. மதுபானங்களுக்குத் தடை. பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை. தப்பித் தவறி பிளாஸ்டிக் பைகள் கண்ணில் பட்டால் அதிகாரி முதல் பொதுமக்கள் வரை ஓடி வந்து அப்புறப்படுத்துகிறார்கள். விலங்குகளின் வாய்க்குள் தெரியாமல் போய்விட்டால் கஷ்டம்!

திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள். பூச்சிகளின் ஒலிகள். விலங்குகளின் திடீர் தரிசனங்கள். இதமான குளிர். தொல்லை தராத தொலைபேசிகள் (பிஎஸ் என் எல் தவிர எதுவும் வேலை செய்யாது). டிவி, செய்தித்தாள் போன்ற தகவல் தொடர்புகள் இன்றி, இரண்டு நாள்கள் இயற்கையோடு இயற்கையாக, சுத்தமான, காற்று, தண்ணீருடன் அடடா!

3 comments:

வடுவூர் குமார் said...

டூர் பேக்கேஜா? இல்லை தனியாகவே போகலாமா?

TAMILSUJATHA said...

டெண்ட் அறை, டார்மெட்ரி, தீவு அறை, மர வீடு என்று நிறைய இடங்கள் தங்குவதற்கு இருக்கின்றன. டெண்ட் அறையில் குறைந்தது இரண்டு பேர் தங்கலாம். டார்மெட்ரி, தீவு அறையில் 6 பேர் வரை தங்கலாம். நீங்கள் தனியாகச் சென்றாலும் முழுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். நீங்கள் http://www.parambikulam.org தளத்துக்குச் சென்று உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்துகொ்ள்ளலாம். முன்பதிவு செய்த பிறகே அங்கு செல்ல முடியும். சின்னக் குழுவாகச் சென்றால் நல்லது.

manjoorraja said...

அருமையாக விளக்கியுள்ளீர்கள். விவரங்களுக்குநன்றி. விரைவில் செல்லவேண்டும்.