Saturday, February 25, 2012

இதுதான் காதல் என்பதா!


காதல். இந்த வார்த்தை எப்போது எனக்குத் தெரியவந்தது என்று நினைவில்லை. அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லை. சினிமாவுக்கு எல்லாம் அடிக்கடி அழைத்துப் போக மாட்டார்கள். ஒன்றிரண்டு திரைப்படங்களில் காதல் என்ற வார்த்தை கேள்விப்பட்டிருந்தாலும் அது கவனத்தைக் கவரவில்லை. திடீரென்று ஒருநாள் அம்மா, ஆச்சி, பக்கத்துவீட்டுக்காரர்கள் எல்லோரும் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“மேல் சாதிக்காரி அந்தக் கீழ் சாதிக்காரனை இழுத்துட்டு ஓடிட்டாளாம். எங்கே போனாங்கன்னு தெரியலை. இவங்க ரெண்டு சாதிக்காரங்களும் இங்கே அடிச்சிக்கிறாங்க. காலம் கெட்டுப் போச்சு... “

நான் அவர்களுக்கு நடுவில் சென்று, “யாரையும் கடத்திட்டுப் போயிட்டாங்களா?’ என்று கேட்டேன். என்னை எல்லோரும் முறைத்துப் பார்த்தார்கள்.

“கடத்திட்டுப் போகலை. காதலிச்சவங்க தனியா போய் கல்யாணம் பண்ணிட்டாங்க’ என்றார் அம்மா.

“எல்லாரும்தான் கல்யாணம் பண்ணறாங்க. இதுல என்ன தப்பு?’

“ம்.. முதல் தப்பு சாதி விட்டு சாதி மாறி காதலிச்சது. ரெண்டாவது தப்பு யாருக்கும் தெரியாமல் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டது...’ என்றார் பக்கத்து வீட்டு அத்தை.

“ஆமாம், அவ பெரிய மனுஷி, கேள்வி கேட்கறா. நீ விளக்கிச் சொல்லு’ என்றார் ஆச்சி.

காதல் என்றால் தப்பான விஷயம் என்றும் சாதி விட்டு சாதி மாறி காதலிப்பது
மகா தவறு என்றும் நினைத்துக்கொண்டேன்.

**சில காலம் கழித்து எங்கள் தெருவில் ஒருவர் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண் வீட்டில் பயங்கர எதிர்ப்பு. இவர் கையில் “ஜெனிபர்’ என்று சூடு வைத்துக்கொண்டார். சில நாள்களில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

காதல் என்றால் உயிர் போகும் அளவுக்கு மிகுந்த துன்பமான செயல் என்றும் சாதி மட்டுமின்றி மதமும் தடை என்றும் நினைத்துக்கொண்டேன்.

**

ஏக் துஜே கேலியே, அலைகள் ஓய்வதில்லை போன்ற காதல் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

“கார்த்திக்கும் ராதாவும் சேருவாங்களா, மாட்டாங்களான்னு எனக்கு ரொம்பக் கவலையாக இருந்துச்சு’ என்று பக்கத்து வீட்டு அத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.

“காதல்ன்னா தப்புன்னு சொன்னீங்க. இப்ப சேரணும்னு சொல்றீங்களே?’ என்று கேட்டேன்.

“படத்துல காதலிச்சவங்க சேரணும். அப்பத்தானே நல்லா இருக்கும்.’

“படத்துல சரின்னா நிஜத்துலயும் காதலிக்கறவங்க சேரலாமே?’

“கதையில் காக்கா பாடுது, நரி தந்திரம் பண்ணுது. ஆனா அதெல்லாம் உண்மையா? அந்த மாதிரி கதையில் என்ன வந்தாலும் ரசிச்சிட்டு விட்டுடணும். வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடாது.’

நான் அம்மாவைப் பார்த்தேன்.

“காதலிப்பது தவறு இல்லை. சரியான வயதில், சரியான ஆளைக் காதலிக்கலாம். இல்லைன்னா வாழ்க்கையே தொலைஞ்சு போயிரும்’ என்றார் அம்மா.

‘ஏங்க, குழந்தைகளுக்கு எதிரில் காதலை சப்போர்ட் பண்ணாதீங்க. அப்பறம் அதுங்க காதலிக்கிறேன்னு வந்து நின்னா நமக்குத்தான் கஷ்டம்’ என்றார் பக்கத்து வீட்டு அத்தை.

கதையில் காதலிக்கலாம். நிஜத்தில் காதலிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

**

நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். அது ஆண்களும் பெண்களும் படிக்கும் பள்ளி. ஒரு பக்கம் ஆண்கள், இன்னொரு பக்கம் பெண்கள். கொஞ்ச நாள்களில் எங்கள் வகுப்பில் இருந்த ரேவதியும் சசிகுமாரும் காதலிப்பதாக, வகுப்புத் தோழிகள் பேசிக்கொண்டார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இருவரும் பேசி நான் பார்த்ததில்லை. எப்படிச் சொல்கிறார்கள்? சசிகுமார் லீடராக இருந்தான். வகுப்பில் பேசியவர்களின் பட்டியலை போர்டில் எழுதும்போது ரேவதியின் பெயரை மட்டும் எழுத மாட்டானாம். இருவரும் அடிக்கடி பார்த்து, சிரித்துக்கொள்வார்களாம்!

கரிசனமும் சிரிப்பும்தான் காதலா!

**

எங்கள் வீட்டில் பெரிய நீல வண்ண ஆல்பம் இருந்தது. அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் ஒல்லியான உருவத்தில், அட்டகாசமாகச் சிரித்துகொண்டிருப்பார் ஒரு பெண். அந்தப் பெண் எங்கள் பெரியம்மா என்று அம்மா சொல்லியிருந்தார். வீட்டுக்கு யார் வந்து ஆல்பம் பார்த்தாலும் இவர் எங்கள் பெரியம்மா என்று சொல்வோம்.

அப்படி ஒருமுறை பார்த்தபோது, “அம்மா, பெரியம்மாவை எந்த விசேஷத்திலும் பார்த்ததில்லையே, எங்கே இருக்காங்க? நமக்கு எப்படி உறவு?’ என்று கேட்டேன்.

சிரித்த அம்மா, “இந்தப் பெரியம்மா உங்க அப்பாவோட கேர்ள் ஃபிரெண்ட்’ என்றார்.

வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அப்பா திருமணம் செய்யத் தயாராக இருந்திருக்கிறார். ஆனால் பெரியம்மா வீட்டில் பொருளாதாரப் பிரச்னை. அவர் சம்பாதித்து பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழல். சாதி, பொருளாதாரம், அவர் அப்பாவின் தற்கொலை மிரட்டல் போன்ற காரணங்களால் காதல் கைகூடவில்லை என்று அம்மா சொன்னார். எனக்கு வருத்தமாகிவிட்டது. அதே நேரத்தில் இந்த விஷயத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொண்ட என் அம்மாவின் இயல்பு என்னை ஆச்சரியப்படுத்தியது.

எங்கள் பெரியப்பா அந்தக் காலத்திலேயே 'பேசாமலே' காதலித்தவர். அவர் காதலும் கைகூடவில்லை. (ஆனால் அந்தப் பெரியப்பாவைக் கல்யாணம் செய்த பெரியம்மாவின் காதல் கைகூடிவிட்டது! அம்மியில் மிளகாய் அரைக்கும்போது பெரியப்பா பெயரை எழுதிக்கொண்டே இருப்பாராம் பெரியம்மா!) என் சித்தப்பாவும் அத்தையும் சொந்தத்திலேயே காதலித்தனர். அவர்கள் காதலும் கைகூடவில்லை.

காதலுக்கு சாதி, மதம், பொருளாதாரம் மட்டுமின்றி, இன்னும் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்களும் தடையாக இருப்பதை உணர்ந்துகொண்டேன்.

**

அப்பாவின் நண்பர் கண்ணப்பன் மாமா. அவர் மனைவி லிஜியா அத்தை. ஒன்பதாம் வகுப்பில் இருந்து இருவரும் காதலித்து, படித்து, வேலைக்குப் போய், வீட்டிலுள்ளவர்களின் எதிர்ப்புகளை மீறி, சாதி, மதம் கடந்து திருமணம் செய்திருந்தனர். என்னை மிகவும் கவர்ந்த காதல் தம்பதி கண்ணப்பன் மாமாவும் லிஜியா அத்தையும்தான். மற்ற தம்பதியரை விட இவர்கள் வித்தியாசமாகத் தெரிந்தார்கள். அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், ஒருவரை ஒருவர் மதித்தல் போன்ற பல விஷயங்களை அவர்களிடம் நான் பார்த்தேன்.

இருவர் மனங்களும் உறுதியாக இருந்தால் நான் இதுவரை நினைத்திருந்த எந்த விஷயமும் காதலுக்குத் தடையாக இருக்க முடியாது என்று புரிந்துகொண்டேன்.

**

ஒன்பதாம் வகுப்பில் ஹாஸ்டல் தோழி ஒருத்தி, ஊரிலிருந்து வந்ததில் இருந்து மிகவும் உற்சாகமாக இருந்தாள். பலமுறை வற்புறுத்திக் கேட்டபோது, அவள் ஊரில் ஒருவன் காதலிப்பதாகச் சொன்னானாம். இதைக் கேட்ட இன்னொரு தோழி, “அடப்பாவி! காலை பஸ்ஸுக்கு காத்திருந்தபோது உன்னைக் காதலிக்கிறதா சொன்னவன், மூணு மணி பஸ்ஸுக்கு நான் காத்திருந்தபோது, என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னான். செருப்பு பிஞ்சுரும்னு திட்டினேன்’ என்றாள். அவள் உடைந்துபோனாள்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் பிரின்ஸி. மிக மிக அமைதியானவர். அன்பானவர். நன்றாகப் படிக்கக்கூடியவர். அவருடைய தங்கை மூலம் பிரின்ஸியின் காதல் தெரிந்தது. அவர்கள் ஊரைச் சேர்ந்த இந்து பையனைக் காதலிப்பதால் வீட்டில் பிரச்னை. அதனால் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார்கள். பிரின்ஸிக்கு வரும் கடிதங்கள் கூட வார்டன் படித்த பிறகே கொடுக்கச் சொல்லியிருந்தனர். பிரின்ஸி மிகவும் பொறுமை காத்தார். இஞ்சினியரிங் படிக்கும் அந்தப் பையனுக்குக் கடிதம் எழுதுவதில்லை. போன் செய்வதில்லை. ஒரே ஊராக இருந்தாலும் பார்க்க முயற்சி செய்வதில்லை. யாரிடமும் அவரைப் பற்றிப் பேசுவதும் இல்லை. அவர் நோக்கமெல்லாம் டீச்சர் டிரெயினிங் முடிக்க வேண்டும். அதற்குள் அந்தப் பையன் படித்து, வேலைக்குச் சென்று விடுவார். பிறகு யார் எதிர்த்தாலும் திருமணம் செய்துகொள்ளலாம்! இவ்வளவு பொறுமையாக, அழுத்தமாக, தெளிவான சிந்தனையுடன் இருந்த பிரின்ஸியும் பார்க்காத அந்தப் பையனும் ஆச்சரியமான காதலர்கள்!

**

கல்லூரியில் படிக்கும்போது மெகருன்னிசா என்ற பேராசிரியர் இருந்தார். கல்லூரியில் அன்றைய ஐஸ்வர்யா ராய் அவர்தான். அவர் வகுப்பு எடுக்கும் மாணவியரிடம் அவரைப் பற்றி விசாரித்தபோது, “பார்க்கத்தான் அழகு. சரியா படிக்கலைன்னா அவங்க திட்டுறதை வார்த்தையால சொல்ல முடியாது. எவன் ஞாபகத்துல இருக்க, எவனையாவது இழுத்துட்டு ஓட வேண்டியதுதானே, இங்க வந்து என் உயிரை எடுக்கறே’ என்ற ரீதியில் திட்டுவாராம். ஐஸ்வர்யாவாகத் தெரிந்தவர் டெரராகிப் போனார்! பிறகு ஒருநாள் அவர் எங்கள் கல்லூரியில் வேலை செய்யும் இன்னொரு பேராசிரியரைக் காதல் திருமணம் செய்தவர் என்று தெரியவந்தபோது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது!


**

ஆண்கள் அப்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளை காதலிப்பது போல சில பெண்களும் நடிகர்களைக் காதலித்தனர். கமல், மோகன், முரளி, பிரசாந்த், அரவிந்தசாமி போன்றவர்கள் இந்த லிஸ்டில் இருந்தனர். சில பெண்கள் நடிகர்களுக்கு, ‘உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். கண் விழிக்காதீர்கள். நன்றாகச் சாப்பிடுங்கள்’ என்றெல்லாம் கடிதம் எழுதினார்கள்!. அப்படி எழுதிய ஒரு பெண்ணுக்கு, பிரசாந்த்திடம் இருந்து, அவர் கையெழுத்து போட்ட போட்டோ ஒன்று வந்தது. அவள் வானில் சிறகடித்துப் பறந்தாள்! (படிப்பு முடித்தவுடன் முதல் திருமணம் அவளுடையதுதான்!)

**

யாரும் எதிர்பார்க்காத சூழலில் மிகச் சிறிய வயதில் அத்தைப் பெண்கள் இருவர் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இருவரின் கணவர்களும் மிக மோசமாக நடந்துகொண்டார்கள். குடி, அடி, பணக் கஷ்டம்... எல்லாம் பட்டு ஒரு கட்டத்தில் கணவர்கள் இறந்து போனார்கள். அதில் ஒருத்தி சொன்னாள்: ‘அவர் மோசம்னு எனக்கு முன்னாலேயே தெரியும். அவரைத் திருத்தறேன்னு என் தோழிகளிடம் சவால் விட்டேன். ஆனால் தோத்து போகப் போறேன்னு அப்ப தெரியலை’ என்றாள். துயரமான காதல்கள்.

**

காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமோ, எதுவாக இருந்தாலும் காதல் இருக்க வேண்டும் என்று பிறகு புரிந்தது. எங்கள் குடும்பத்துக்கு காதல் ராசி (!) இல்லை என்ற அவப் பெயர் போகும் விதத்தில் பெரியப்பா வீட்டிலும் எங்கள் வீட்டிலும் சித்தப்பா வீட்டிலும் காதல்கள் பூத்தன. திருமணங்களில் முடிந்தன.

என் தம்பி தன் அம்மாவிடம் அனுமதி பெற்ற பிறகே, தன் காதலை வெளிப்படுத்தினான். அப்போது ஆமோதித்த சித்தி, அவன் திருமணம் என்றதும் பின்வாங்கிய காரணம் இன்றுவரை புரியவில்லை! முப்பது வயதுக்குப் பிறகே, செட்டில் ஆனவுடன் திருமணம் என்றார் சித்தி. வாழ்க்கையில் செட்டிலாகும்போது எல்லாம் இருக்கும், ஆனால் அந்தப் பெண் இருக்கமாட்டாள். அவளுக்குத் திருமணம் ஏற்பாடு நடக்கிறது என்றான் தம்பி. இறுதியில் திருமணம் நடந்தது. சித்தப்பா இல்லாததால் சின்ன வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவன், திருமண வாழ்க்கையை காதலால் நிரப்பி வருவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது!