Friday, March 6, 2009

ஏலம் போனவை பொருள்கள் மட்டுமா?

தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகாலம் இனவெறிக்கு எதிராகவும், இந்தியர்களின் உரிமைக்காகவும் போராடி வெற்றி கண்டார் காந்தி. அவர் வக்கீல் தொழில் பார்த்த நேரத்தை விட பொதுச்சேவைக்கு செலவிட்ட நேரம்தான் அதிகம். இதனால் அவர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போதும் தான் செய்யும் சேவைக்கு எதையும் எதிர் பார்த்ததில்லை.

தென்னாப்பிரிக்கப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு, இந்தியாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளில் இருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் காந்திக்கு பரிசுப் பொருள்களுடன் அவரது வீட்டுக்கு வந்தனர்.

‘காந்திஜி, உங்களைப் பற்றி நன்கு தெரியும். நீங்கள் எந்தப் பொருளையும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் இது எங்களின் அன்பு. இதை உங்களால் நிராகரிக்க முடியாது’ என்று சொல்லிவிட்டு, பரிசுப் பெட்டியை வைத்துவிட்டுச் சென்று விட்டனர்.

பெட்டியைப் பிரித்துப் பார்த்தால் விலையுயர்ந்த வைரம், ரத்தினம், மரகதக் கற்கள் மின்னிக்கொண்டிருந்தன. இவை தவிர, ஐம்பத்திரண்டு பவுனுக்கு ஒரு தங்கச் சங்கிலியும் அதில் இருந்தது.

’பொதுச்சேவைக்குப் பணமாகப் பெறாமல், பரிசாகப் பெற்றாலும் அதுவும் ஊதியம் தானே! அப்படி இந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டால் இது எப்படிப் பொதுச்சேவையாகும்? மக்களின் அன்பை மட்டுமே என்னால் பரிசாகப் பெற்றுக்கொள்ள முடியும்’ என்று உறுதியுடன் இருந்தார் காந்தி.

தன் குழந்தைகள், மனைவியின் சம்மதத்துடன் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஓர் அறக்கட்டளை தொடங்கி, அதற்கு இந்த விலைமதிப்பு மிக்கப் பரிசுப் பொருள்களை உயிலாக எழுதி வைத்துவிட்டார்.

உண்மை, எளிமை, நேர்மை, உயிர்களிடத்தில் அன்பு, பொறுமை ... இப்படி காந்தி தன் வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எத்தனையோ கருத்துகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது கொள்கைகளைத்தான் நம்மால் காப்பாற்றவோ, பின்பற்றவோ முடியவில்லை. அவரது செருப்பு, கண்ணாடி, கடிகாரம், குவளை போன்ற பொருள்களையாவது காப்பாற்றலாம் என்று அரசியல்வாதிகளும், மக்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள் போலிருக்கிறது!

காந்தி பயன்படுத்திய பொருள்கள்தான் முக்கியம் என்று நினைத்தால், அதையாவது ஒழுங்காகப் பாதுகாத்திருக்கக்கூடாதா? இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியாளர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? எப்படி இந்தப் பொருள்கள் நாடு கடந்து சென்றன? காந்தி இறந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சர்ச்சை! லஹோ ரஹோ முன்னாபாய் படத்தில் நடித்ததற்காக சஞ்சய் தத்தில் இருந்து மாறுவேடப் போட்டியில் காந்தி வேஷம் போட்ட குழந்தை வரை கருத்துக் கேட்டு ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன மீடியாக்கள்!

மும்பை தாக்குதல் போல ஏலம் விஷயத்தில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த மீடியாக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஜய் மல்லையா!