· கடந்த வாரம் நடந்த சட்டக்கல்லூரி விவகாரம் எல்லோரையும் ஒரு பிரேக் போட்டு நிறுத்தியிருக்கிறது.
· பள்ளி நிர்வாகத்தைப் பழிவாங்குவதற்காக சம்பந்தமே இல்லாத எட்டு வயது மோனிஷாவைக் கொன்றிருக்கிறார் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர்.
· குடித்துக்கொண்டிருக்கும்போது வலுத்த வாக்குவாதத்தால் நண்பனையே கொலை செய்திருக்கிறார் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர்.
இப்படித் தினம்தோறும் மாலை நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் இடம் பெறுகின்றன. இவை எல்லாம் உணர்த்தும் விஷயம் ஒன்றே. பொதுவாக மனிதர்களுக்குச் சகிப்புத்தன்மை குறைந்து வருவதுதான். அறியாமை, ஜாதி வெறி, பழிவாங்கும் நோக்கம் என காரணங்கள் வேறாக இருந்தாலும் சகிப்புத் தன்மை இல்லாததும், மனித உயிரின் அருமை புரியாததுமே அடிப்படை.
ஓர் ஆண் இன்னோர் ஆணின் மீது உரசிவிட்டான் என்று நேற்று கிண்டியிலிருந்து போரூர் வந்து சேரும் வரை பேருந்தில் பயங்கரச் சண்டை. எந்த நேரத்திலும் கைகலப்பில் முடியலாம் என்ற நிலை. சக பயணிகள் அவ்வப்போது தடுத்ததால் காதில் கேட்க முடியாத வசைகளுடன் அந்தச் சண்டை நின்று விட்டது. தடுக்காவிட்டால் அடிதடிதான்.
அலுவலகத்தில் யாரிடமாவது ’என்ன இப்படிப் பண்ணிருக்கே?’ என்று கேட்டுப்பாருங்கள். இவன் என்ன என்னைக் கேள்வி கேட்டுவிட்டான் என்ற கோபத்தில் வந்து விழும் வார்த்தைகள் மிகவும் மோசமாகவே இருக்கும். அலுவலக நடவடிக்கைகளுக்குப் பயந்தோ அல்லது வருமானத்துக்கு அஞ்சியோதான் கைகலப்பு வரை செல்லாமல் (நல்லவேளை!) வார்த்தைப் போரில் முடிந்து போகின்றன இந்தச் சண்டைகள்.
இப்படி இளைய தலைமுறையினர் சகிப்புத்தன்மை குறைந்து போகவும் மனித உயிர்களின் அருமை புரியாமலும் மாறிக்கொண்டிருப்பதற்கு இந்தச் சமூகமே காரணமாக இருக்கிறது.
குழந்தை சற்று விவரம் தெரிய ஆரம்பித்த உடனே ’ஜெட்டிக்ஸ்’ பார்க்க ஆரம்பித்து விடுகிறது. பெரியவர்களுக்கே பயம் தரும் விதத்தில் அவற்றில் வரும் கதாபாத்திரங்களின் முகங்கள், எந்நேரமும் யாரும் யாரையாவது அடிப்பது, உதைப்பது, கொல்வது என்று வன்முறை பார்த்தே வளர்கிறது குழந்தை. பெரியவர்கள் பார்க்கும் சீரியல்களிலோ கேட்கவே வேண்டாம்... யாரும் யாரையாவது பழி தீர்க்கப் புறப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இப்படி ஒவ்வோர் அரை மணிக்கும் வெவ்வேறு ஆள்கள் வெவ்வேறு சீரியல்களில் தவறான காரியங்களைச் செய்வதும், சீரியல்களின் ஆயுளை நீட்டுவதற்கு வில்லன்கள் சுலபமாகத் தப்பிப்பதையும் பார்த்து வளர்கிறவர்களுக்கு வன்முறை எப்படித் தவறாகத் தெரியும்? ஒருவேளை தப்பாக இருந்தாலும் தப்பித்துவிடமுடியும் என்ற எண்ணத்தையும் இவை தோற்றுவிக்கின்றன.
தான் கேட்டதைக் கொடுக்காததால் கோபம் கொண்ட ஐந்து வயதுச் சிறுவன், அருகிலிருந்த அடிகுழாயைப் போய் ஆட்டுஆட்டு என்று ஆட்டியிருக்கிறான். அருகிலிருந்தவர்கள் காரணம் கேட்டபோது ‘இதைப் பிடுங்கி எங்க அம்மாவை அடிக்கப்போறேன்’ என்று சொல்லியிருக்கிறான். கோபம் வந்து அவன் அம்மா அடிக்க, ‘நேத்து ரஜினி மட்டும் கோபத்துல குழாயைப் பிடுங்கி எல்லோரையும் அடிக்கலாம். நான் அடிக்கக்கூடாதா?’ என்று கேட்டிருக்கிறான்!
சென்னையைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுவனை அவன் அத்தை கண்டித்திருக்கிறார். இந்த விஷயத்தை அவன் பள்ளியில் தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான். ’கவலைப்படாதடா. உங்க அத்தையை இன்னிக்குப் போட்டுருவோம். உன்னைக் கூப்பிடறதுக்கு மார்க்கெட் வழியாதானே வரணும்?’ என்று கேட்டிருக்கின்றனர். நான்கு சாலை பிரியும் மார்க்கெட் அருகில் நான்கு சிறுவர்களும் குப்பையில் கிடந்த வாழை மட்டைகளுடன் காத்திருந்தனர். சிறுவனின் அத்தை அங்கு வந்ததும் நால்வரும் கோபத்துடன் ரவுண்ட் கட்டி மட்டையால் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அருகில் இருந்தவர்கள் சிறுவர்களைப் பிடித்து, நன்றாகக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்!
ஒரு காலத்தில் சினிமாவில் ஹீரோ, வில்லன் என்று இரண்டு பேர் இருந்தனர். இன்று தாதாக்களே ஹீரோக்கள். அவர்களும் வசதியாக இருக்கிறார்கள். அழகான பெண்களைக் காதலிக்கிறார்கள். அல்லது அழகான பெண்களால் காதலிக்கப்படுகிறார்கள்.
கும்பகோணத்தில் நூறு குழந்தைகள் பலியானது, தீவிரவாதிகள் நடத்தும் கொலைகள், இலங்கை, இராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் நடக்கும் மனித பலிகள் போன்றவை இன்று செய்தி என்ற வடிவத்தில் நம் வீட்டிலேயே வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் மனித மனம் தன்னை அறியாமலே இதுபோன்ற சம்பவங்களை வழக்கமான விஷயங்களில் ஒன்றாகப் பார்க்கப் பழகிவிடுகிறது. மனித உயிரின் மகத்துவம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது.
அப்படி இல்லை என்றால் எப்படிக் குக்கிராமத்திலிருந்து சென்னை ஐநாக்ஸ் தியேட்டர்வரை சுப்ரமணியபுரத்தில் வரும் கழுத்தறுப்புக் காட்சியை கைதட்டி ரசிக்க முடியும்?
படித்தவர்கள், பாமரர்கள், வசதியானவர்கள், வறுமையில் இருப்பவர்கள் என்ற பேதம் இன்றி எல்லோர் மனத்திலும் இதுபோன்ற வன்முறைகள் குடியேறிவிட்டன. பலருக்குச் சந்தர்ப்பம் கிடைக்காததால் அந்த எண்ணம் அடி ஆழத்தில் ஒளிந்திருக்கிறது. சிலருக்கு வாய்ப்புக் கிடைப்பதால் வெட்டவெளிச்சமாகி விடுகிறது.
வீடு, சுற்றுப்புறத்தைப் போலவே கல்விக்கும் தனிமனித வளர்ச்சியில் பங்கிருக்கிறது. வெறும் மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்யும் கல்வி முறை மாறவேண்டும். வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வை ஊட்டக்கூடிய கடமை கல்வி முறைக்குக் கட்டாயம் இருக்கிறது. மனிதனை மனிதனாக மாற்றாத கல்வியால் என்ன பயன்?
இனிமேலாவது நம் குழந்தைகளை டாக்டராகவோ, எஞ்சினியராகவோ, என்.ஆர்.ஐ. ஆகவோ மாற்ற முயற்சிக்க வேண்டாம். மனிதனாக மாற்றுவோம். அதுதான் நாம் வரக்கூடிய தலைமுறைக்குச் செய்யவேண்டிய மிகப் பெரிய உதவி.