Monday, July 23, 2012

காணாமல் போன ஆறு...




வைகை ஆற்றங்கரை ஓரம் இருந்த வீட்டில் நாங்கள் இரண்டு ஆண்டுகள் வசித்திருக்கிறோம். பொதுவாக எல்லோர் வீடுகளிலும் விளையாடுவதற்குப் பெரிய இடங்கள் இருக்கும். பகல் நேரங்களில் அங்கு விளையாடுவோம். மாலை நேரங்களில் பெரும்பாலான சிறுவர்கள் வைகை ஆற்றுக்குத்தான் விளையாடச் செல்வார்கள். வருடத்தில் சில நாள்கள் மட்டுமே வைகையில் தண்ணீர் வரும். அதனால் விளையாட மிகச் சிறந்த இடமாக வைகை ஆறு இருந்தது. இரண்டு கோயில்கள், தியேட்டர்களைத் தவிர அந்த ஊரில் பொழுதுபோக வேறு இடம் இல்லாததால், பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் ஆற்றுக்குச் செல்வார்கள். கரை ஓரங்களில் கருவேல மரங்களும் குப்பைகளும் இருந்தாலும், இரண்டு நிமிட நடையில் நல்ல மண் இருக்கும் பகுதியை அடைந்துவிடலாம்.

வெயில் நேரங்களில் ஆற்று மணலில் நடப்பது கொடுமை. ஆனால் மாலை வேளைகளில் மணலுக்குள் கால்கள் புதைந்து, தூக்கித் தூக்கி நடக்க சுவாரசியமாக இருக்கும். விளையாட்டுக்கு இடையில் தண்ணீர் தவித்தால் என்ன செய்வது? அவரவர் விளையாடும் இடங்களுக்கு அருகில் ஓர் ஊற்று தோண்டுவோம். தோண்ட தோண்ட கை ஈரமாகும்.  மழைக்காலங்களில் அரை அடியிலும் கோடை காலங்களில் ஓர் அடியிலும் தண்ணீர் ஊறி வரும். ஐந்தே நிமிடங்களில் தண்ணீருடன் ஓர் ஊற்று கிடைத்துவிடும். ஆற்றுத் தண்ணீர் சுவையாக இருக்கும் என்பதால் பெண்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு வந்திருப்பார்கள். அவர்களிடம் கிண்ணம் வாங்கி, எல்லோரும் தாகம் தணிப்போம். மீண்டும் விளையாட்டு.

ஓர் ஊற்றிலிருந்து சில குடங்கள் தண்ணீரை எடுக்க முடியும். சில சமயங்களில் ஊற்று பாதியிலேயே இடிந்துவிடும். அழுக்கான மேல் மண் கலந்துவிடுவதால்,  வேறு ஒரு புதிய ஊற்றைத் தோண்டுவார்கள். தண்ணீர் எடுத்து முடிந்ததும் தானாகவோ, மனிதர்களாலோ இந்த ஊற்றுகள் இடிந்து, மூடிவிடும். ஆனால் மூட முடியாத ஒன்றிரண்டு பெரிய ஊற்றுகளும் ஆற்றில் இருக்கும். இந்த ஊற்றுக்குள் தகரத்தில் அரண் அமைத்திருப்பார்கள். இதில் சிறிய கிணற்றில் இருக்கும் அளவுக்குத் தண்ணீர் கிடைக்கும். அந்தத் தண்ணீரை எடுத்துக் குளிப்பார்கள்; துவைப்பார்கள்.

திருவிழாக் காலங்களில் ஆற்றில்தான் ஊர் மக்கள் இருப்பார்கள். மாலை நேரங்களில் தின்பண்டம், பலூன்கள், பொம்மைகள் விற்பார்கள்.  ராட்டினத்தில் விளையாடுவார்கள். இரவில் வெட்டவெளியில் படுத்துக்கொண்டு சினிமா பார்ப்பார்கள். நாடகம் பார்ப்பார்கள். பட்டிமன்ற பேச்சுகளைக் கேட்பார்கள். பத்தாவது நாள் சித்ரா பௌர்ணமி அன்று ஆற்றுக்குள் வைத்து, விதவிதமான உணவுகளைக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள்.

இப்படி எல்லாம் மக்களோடு மக்களாகக் கலந்துவிட்ட வைகை ஆறு இன்று? மணல் அள்ளப்பட்டு, கட்டாந்தரையாகக் காட்சியளிக்கிறது. நடுநடுவே சில குடிசை வீடுகளும் தென்பட்டன. கருவேலை மரங்கள் வளர்ந்துள்ளன. இரு கரைகளைத் தவிர, ஆற்றுக்குரிய எந்த அம்சமும் அங்கு இல்லை. குழந்தைகளிடம் ஆற்றுக்கு விளையாடப் போவீர்களா என்றால், ‘அங்கெல்லாம் ஏன் போறோம்? என்ன இருக்கு? பொழுது போக டிவி இருக்கே!’ என்றனர்.

அவர்களை எந்த விதத்திலும் ஈர்க்கக்கூடிய அம்சம் ஆற்றுக்கு இன்று இல்லை.
செய்திகளில் பார்க்கும்போது பல ஆறுகளிலும் இதே நிலைதான்... அரிசோனா பள்ளம் அளவுக்கு மண்வெட்டியால் ஊற்றைத் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. அந்தப் பள்ளத்துக்குள் பள்ளம் என்று இரண்டு, மூன்று பள்ளங்களுக்குப் பிறகு கொஞ்சம் தண்ணீர் கசிகிறது. ஒரு நீண்ட அகப்பையை வைத்து நான்கு, ஐந்து ஸ்பூன் தண்ணீரை எடுத்து குடத்தில் ஊற்றுகிறார்கள். ஒரு குடம் நிறைய ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகிறது என்றார்கள். வெயில் நேரம் என்பதால் குடை எல்லாம் பிடித்துக்கொண்டு தண்ணீர் எடுக்கும் காட்சி வருத்தத்தைத் தந்தது.

எந்த விஷயமும் தனக்கு வந்தால்தான் மனிதன் எதிர்ப்பு காட்டுகிறான். இப்போது மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டபிறகு, மணல் அள்ள வருபவர்களை விரட்டியடிக்கிறார்கள். ஆனால் இழந்த இயற்கை செல்வத்தை ஒரு மந்திரம் போட்டு, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியுமா?