Wednesday, December 29, 2010

தமிழன் என்று சொல்லடா!


மலேஷியாவுக்குச் சென்றதும் அங்குள்ள நண்பர்கள் பத்து மலையை முதலில் பார்க்கும்படி வற்புறுத்தினார்கள். உலகிலேயே மிக உயரமான முருகனை  உருவாக்கிய பெருமிதம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. பிரதான சாலையை ஒட்டி அமைந்திருந்தது கோயில். சற்றுத் தூரத்திலேயே தங்க நிறத்தில் ஜொலித்த முருகன் கண்களில் பட்டார்.  அகலமான நீண்ட தார்ச்சாலைகளை தவிர்த்து,  பத்து மலையைப் பொருத்தவரை வெளிநாட்டில் இருக்கக்கூடிய உணர்வு இல்லை. கோயில் அருகே சென்றதும் தமிழ் நாட்டுக் கோயிலுக்குள் நுழைந்து விட்டோமோ என்று சந்தேகம் வந்தது.

நுழைவாயிலுக்கு முன்பு ஏகப்பட்ட கார்கள் குறுக்கும் நெடுக்குமாக, ஓர் ஒழுங்கின்றி நின்றுகொண்டிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்களுக்கு இடையில் தள்ளு வண்டி கடைகள் இருந்தன. பத்து நாள்களுக்கு முன்புதான் தைப்பூசம் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்தக் கொண்டாட்டங்களின் மிச்ச சொச்சம் இன்னும் இருப்பதால் இப்படி இருக்கிறது என்று விளக்கம் அளித்தார்கள். கார்களில் இருந்து இறங்குபவர்கள் அப்படியே இருக்கும் இடத்தில் காரை வைத்து விட்டு உள்ளே செல்கிறார்கள். மணிக்கணக்கில் பிரார்த்தனை முடித்துவிட்டு வருகிறார்கள். சிலர் அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு, காருக்கு அருகில் வந்து, நடு ரோட்டில் உடை மாற்றுகிறார்கள். 

நுழை வாயிலில் இருந்து வரிசையாகக் கடைகள். பிளாஸ்டிக் பொம்மைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள், இளநீர் கடைகள், ரோஸ், மெஜந்தா, பச்சை வண்ணங்களில் மைசூர் பா, முறுக்கு, ராட்சஷ சைஸில் லட்டு, மிக்சர் என்று ஏகப்பட்ட தின்பண்டங்கள். ஒரு பக்கம் ’வேலய்யா வேலய்யா’ என்று பில்லா படப் பாடல் கந்த சஷ்டி ரேஞ்சுக்குப் பக்தியை ஊட்டிக் கொண்டிருந்தது! இரண்டு, மூன்று ஹோட்டல்கள் இருந்தன. இட்லி, இடியாப்பம், பூரி, தோசை, காபி, டீ என்று இங்கு கிடைக்கும் அத்தனை உணவுகளும் அந்த ஹோட்டல்களில் கிடைக்கின்றன. கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.

முருகனை நெருங்க நெருங்க பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. 140 அடி உயரத்தில் முருகன் சாந்தமாக நின்றுகொண்டிருக்கிறார். இந்திய மதிப்புப்படி  2.4  கோடி ரூபாய் இந்தச் சிலைக்குச் செலவாகியிருக்கிறது. முருகனுக்குப் பின்புறம் பத்து மலை குகை இருக்கிறது.  272  படிகளில் ஏறி அந்தக் குகைக்குச் செல்ல வேண்டும். வழியில் குரங்குகளைக் கொஞ்சம் சமாளிக்க வேண்டும். அவ்வளவு களைப்புற்று மேலே வந்து சேர்ந்தால்,  ஆச்சரியம் காத்திருக்கிறது. மிக மிக பிரம்மாண்டமான குகை. பல்லாயிரக்கணக்கான மக்களைத் தாங்கும் விதத்தில் விசாலமாக இருக்கிறது. குகையை நிமிர்ந்து பார்த்தால், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது, குழம்பாக வடிந்து, உறைந்துபோன பகுதிகள் காட்சியளிக்கின்றன.   ஒரு பக்கம் வானம் தெரிகிறது. காற்றுப் போவதற்கு இயற்கை அளித்த வசதி.

குகைக்குள் ஒரு பக்கம் மீண்டும் முருகன், பிள்ளையார், சிவன், பார்வதி என்று வரிசையாகக் கோயில்கள்.  இன்னும் ஒரு 50 படிக்கட்டுகள் ஏறினால் அங்கு இன்னொரு குகை. அங்கும் சில தெய்வங்கள். வெளியில் வெயிலாக இருந்தாலும் குகைக்குள் நல்ல குளிர்ச்சி. குகை வாயிலில் நின்று பார்த்தால் மலேஷியா தெரிகிறது.  வாயிலுக்கு அருகில் பத்து மலை முருகன் சிலைகள், மலேஷியாவின் அடையாளமான ட்வின் டவர் பொம்மைகள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். படியில் இறங்கும் போது, நன்றாக உடை அணிந்திருந்த ஓர் அம்மா, திடீரென்று கை நீட்டி, பிச்சை கேட்டார். அதிர்ச்சியாக இருந்தது.

கோயில் வளாகத்திலேயே குளியலறை, கழிப்பறை, ஓய்வறைகள் எல்லாம் இருக்கின்றன. சிலர் மொட்டை போடுகிறார்கள். சிலர் காது குத்துகிறார்கள். பாவாடை, தாவணி, சுடிதார், சேலை, வேஷ்டிகளில் மக்களைப் பார்க்க முடிந்தது. உடை, பழக்க வழக்கங்கள், கோயில் என்று பலவற்றை தமிழ் நாட்டுப் பாணியில் பின்பற்றினாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் நாட்டைப் பார்த்ததில்லை. தாத்தா காலத்திலேயே ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வதற்கு மலேஷியாவுக்கு வந்தவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, உறவுகளை மறந்து, அங்கேயே செட்டில் ஆனவர்கள். அரசாங்கப் பதவிகள், உயர் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். சிலர் கடைகள், பிசினஸ் என்று சம்பாதிக்கிறார்கள். சொந்த வீடு, இரண்டு கார்கள் என்று  வசதியாக இருக்கிறார்கள். தங்களை மலேஷியன் தமிழர் என்றுதான் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். நீங்கள் தமிழ் நாட்டுத் தமிழரா அல்லது ஈழத் தமிழரா என்று கேட்கிறார்கள்.  

தைப்பூசம் என்பது மலேஷியாவின் தேசிய விடுமுறை தினம். சிங்கப்பூர், மலேஷியாவிலிருந்து பலரும் அந்த நாளில் பத்து மலையை முற்றுகையிடுவார்களாம். காவடி, கரகம், அலகு குத்துதல் என்று ஊரே களை கட்டுமாம். மலேஷியாவில் தமிழர்கள் பகுதியில் மட்டும்தான் இதுபோன்ற போக்குவரத்து அத்துமீறல்கள் நடப்பதாக அங்குள்ள நண்பர்கள் சொன்னர்கள்.

வாசலுக்கு வந்தோம். ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ் செல்வதற்கான பேருந்து நிறுத்தம் சற்றுத் தூரத்தில் இருந்தது. அருகில் ஒரு டாக்சி வந்து நின்றது.           'என்ன, தமிழா? எங்கே போகணும்?’ என்று கேட்டார் டிரைவர். நாங்கள் இடத்தைச் சொன்னதும், ‘பத்து ரிங்கட் கொடுத்துடுங்க, தமிழர்ங்கிறதால குறைவா சொல்றேன்’ என்று ஏற்றிக்கொண்டார். இடத்தை விசாரித்து, இறக்கி விட்டார், 'எல்லாத்துலயும் நாணயம் வேணும். நாளைக்கு மலேஷிய தமிழன் ஏமாத்திட்டான்னு உங்க ஊர்ல சொல்லக்கூடாது இல்லையா?’ என்றபடி கிளம்பினார்.

திரும்பி வரும்போது இரவு நேரம். அந்த இடத்திலிருந்து நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு ஒரு காரில் ஏறினோம். 5 ரிங்கட் பெற்றுகொண்டு கிளம்பினார் பேரம் பேசாத மலாய்க்காரர்! இங்கிருந்து போகும்போதே ஒரு நண்பர் சொன்னார், ’ தமிழன்னு எந்த வண்டியிலேயும் ஏறாதீங்க, ஏமாத்திருவாங்க’ என்று.  அது அப்போதுதான் நினைவுக்கு வந்தது! 

Wednesday, December 15, 2010

மார்கழி



இலைகளில் ஈரம் கவிந்திருக்கும். பக்கத்து வீட்டைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்குப் புகை மூட்டம். சிலிர்க்கும் குளிர். மார்கழியில்தான் இவற்றை எல்லாம் ரசிக்கவும் உணரவும் முடியும். அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து விடுவோம். இருட்டை விரட்ட வீட்டைச் சுற்றிலும் விளக்குகள் எரியும்.  ஜில் என்ற தண்ணீரில் வாசல் தெளித்து, பெருக்கி முடித்ததும் கோலம் போடும் வேலை. முதல் நாளே திட்டமிட்டு வைத்திருப்பதால் வேலை தங்குதடையின்றி ஆரம்பமாகி விடும்.

கற்பனை, நினைவுத்திறன், ரசனை எல்லாம் அடக்கியதுதான் கோலங்கள். சில கோலங்களைப் புள்ளி வைத்து, பொம்மை, பழங்கள், பூக்கள் எல்லாம் போட்டு, அடிக்கும் நிறங்களைத் தூவினால் அன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சில கோலங்கள் வண்ணங்கள் தூவ அவசியமின்றி, கோடுகளாலேயே போடப்படும். கோடுகளால் ஆன கோலத்தைச் சிறிய அளவிலிருந்து ஒரு தெருவையே அடைத்துக்கொண்டு போடும் அளவுக்குப் பெரிதாகப் போட்டுக்கொண்டே செல்லலாம். பொறுமையும் ஆர்வமும்தான் முக்கியம்.

எங்கள் அம்மா கோல மாவால் கோடு இழுத்தாலே அத்தனை அழகாக இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு கோடுகளைப் பிசிறில்லாமல் போடுவார். அம்மா போடும் நாள்களைத் தவிர, மீதி நாள்களில்  நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் எங்கள் விருப்பப்படி கோலம் போடுவோம். பெரும்பாலும் எங்களுடைய கோலங்கள் எந்தப் புள்ளிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் சிக்காதவையாகவே இருக்கும். பூக்கள் நிறைந்த தொட்டி, கார்ட்டூன்கள், இயற்கைக் காட்சிகள் என்று எங்கள் கற்பனை விரிவடையும். (எங்கள் கோலங்களுக்கு  நிறைய விசிறிகள் உண்டு!) இந்தக் கோலங்களுக்குக் கண்டிப்பாக வண்ணங்கள் வேண்டும். ஒருவர் வரைய வரைய மற்றவர்கள் வண்ணம் தீட்டிக்கொண்டே வருவார்கள். விரைவில் வேலை முடிந்துவிடும். 

தலையில் ஸ்கார்ஃப், அருகில் கொசுவத்திச் சுருள், குளிருக்கு இதமாக அம்மாக்கள் காபியை ஆற்றிக்கொண்டு நிற்கும் காட்சியைப் பெரும்பாலும் எல்லோருடைய வீடுகளிலும்  பார்க்க முடியும்.

வெளிச்சம் வரும்போது எல்லோரும் கோலத்தை முடித்திருப்போம். பிறகு அந்தத் தெரு முழுவதும் ஒரு நடை செல்வோம். ஒவ்வொருவரும் என்ன கோலம் போட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து ரசிப்போம். என்னதான் ஓவியம் தீட்டி, வண்ணம் கொடுத்து அழகு சேர்த்தாலும், கோடுகளில் வித்தைகாட்டும் எதிர் வீட்டு மாமிதான் அதிகம் ஸ்கோர் செய்துவிடுவார்.

கோலத்தை அழிக்காமல் வண்டியை எடுப்பது அப்பாவுக்குச் சவால் நிறைந்த காரியமாக இருக்கும். சைக்கிள், வண்டிகளைக் கண்மண் தெரியாமல் அதுவரை ஓட்டிக்கொண்டிருந்த இளைஞர்கள் மார்கழி மாதங்களில் கோலத்தை அழித்து விடாமல் இருக்க, பார்த்துப் பார்த்துச் செல்வார்கள்.  

கிறிஸ்துமஸ், நியு இயர், பொங்கல் போன்ற விசேஷ நாள்களில்  வழகத்தைவிடச் சிறப்பாகக் கோலம் போடப்படும். மாட்டுப் பொங்கலுடன் ஸ்பெஷல் கோலங்களுக்கு குட்பை. 

ஈரம் காயாத தரையில்  போட்ட கோலங்களையும் அதில் நடுவில் இருக்கும் பறங்கிப் பூக்களையும் பார்த்து பல ஆண்டுகளாகி விட்டன. தெருக்கள் அப்படியேதான் இருக்கின்றன... மனநிலைதான் மாறிவிட்டது. 
  

Tuesday, November 30, 2010

குதிரைக்கால் அரண்மனையும் பாஞ்சாலங்குறிச்சியும்

மிகவும் நேசத்துக்குரிய மாநிலம் கேரளா. சில ஆண்டுகளுக்கு முன்பு குமரகம் சென்றபோதும் சரி, இப்போது திருவனந்தபுரம் சென்றபோதும் சரி பெரிய அளவில் மாற்றம் இல்லை. கேரளாவில் பேருந்தில்  பயணம் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. காத்திருக்க அவசியமின்றி, பேருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. மூன்று நாள்களில் நாங்கள் பயணம் செய்த பேருந்துகளில் பெரும்பாலும் பெண்களே கண்டக்டர்களாக இருந்தனர். பேருந்து கட்டணம் தமிழ்நாட்டைப் போல்தான் இருக்கிறது. ஆனால் ஆட்டோ கட்டணங்களில் ஆச்சரியம்! ஸ்டேஷனிலிருந்து கிழக்கு கோட்டை செல்வதற்கு ஆட்டோவில் பன்னிரண்டு ரூபாய் ஐம்பது காசு என்று மீட்டர் காட்டியது. டிரைவர் பன்னிரண்டு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டார்!

திருவனந்தபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் கோவளம் கடற்கரை. கடற்கரையை ஒட்டி மலைப் பிரதேசம்.  அடர்த்தியாகவும் மிக மிக உயரமாகவும் இருந்தன தென்னை மரங்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு வீடுகள். கடற்கரையை ஒட்டி சிமெண்ட்  நடைபாதை. நடைபாதையை ஒட்டி உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், துணிக்கடைகள், அலங்காரப் பொருள்கள்  கடைகள்... வெளிநாட்டினர் மாதக்கணக்கில் தங்கி, சன்பாத் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆவேசமாக வரும் அலைகளுக்கு நடுவில் தைரியமாக குளிக்கிறார்கள்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கரையில் அமர்ந்து மீண்டும் மீண்டும் அதே அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஏனோ அலுப்பே வருவதில்லை!


கோவளத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது விழிஞ்ஜம். இது ஒரு மீன் பிடித் துறைமுகம். துறைமுகத்தைச் சுற்றிலும் எளிய மக்களின் கூட்டம். நீலம், பச்சை, சிவப்பு என்று பல வண்ணங்களில் துறைமுகம் முழுவதும் ஏராளமான படகுகள் அணிவகுத்திருந்தன. ஒன்றிரண்டு மீன் பிடிக் கப்பல்களும் நின்றிருந்தன. துறைமுகத்துக்கு மறுபுறம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது கடல். துறைமுகத்தைச் சுற்றி இரண்டு தேவாலயங்கள், மசூதிகள் காணப்பட்டன.


அங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது பூவார். இது அலையாத்திக்காடுகள், பூவாறு, கடல் மூன்றும் சங்கமிக்கும் இடம். இரண்டு மணிநேரம் இந்தப் பகுதியில் பயணம் செய்வது அலாதியானது. பருந்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி, மரங்கொத்தி, நீர்க்காகம், பல வண்ண வாத்துகள் என்று பறவைகளை அருகில் பார்க்கலாம். ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சுத்தமான கடற்கரை. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு கடலின் ஆக்ரோஷம் அதிகம். இருபுறமும் தென்னை மரங்களுக்கு நடுவில் மீண்டும் படகில் பயணம். வழியில் ஒரு படகில் இளநீர் கடை. அபார ருசி!


குதிரைக்கால் அரண்மனை பத்மநாபபுரம் கோயில் அருகில் உள்ளது. மிக பிரம்மாண்டமான அரண்மனை. தேக்கு மரங்களில் அற்புதமான வேலைப்பாடுகள். இருநூறு வயது பழைமையான அரண்மனை என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆயுதங்கள், ஆளுயரக் கண்ணாடிகள், கண்ணாடிப் பொருள்கள், யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சிம்மாசனங்கள், ஸ்லைடிங் டோர்கள் அமைந்த ஜன்னல்கள், இசைக்கருவிகள், ஓவியங்கள், புத்தகங்கள் என்று ஆச்சரியமாக இருந்தன. நூறு அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்தது இருபது அறைகளைத்தான். அதுவே இத்தனை பிரம்மாண்டம். இசை... நடனம்... என்று வாழ்க்கையை அனுபவித்து, வாழ்ந்து தீர்த்திருக்கிறார்கள் இந்த ராஜாக்கள்.

எல்லாம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு கேள்வி எழுந்தது. அது இந்திய சுதந்தரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலகட்டம். திருவனந்தபுரத்துக்கு அருகில் தமிழ்நாட்டில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராகக் கொண்டு, 90 கிராமங்களை ஆண்டுகொண்டிருந்தவர்  வீரபாண்டிய கட்ட பொம்மன். சென்ற மாதம் அங்கு சென்றிருந்தபோது ஒரு பெரிய வீடு அளவுடைய அவருடைய அரண்மனை தரைமட்டமாகி, வேலி போடப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. மக்களைக் காப்பாற்றுவதுதான் மன்னரின் வேலை. மீண்டும் மீண்டும் கட்டப்பட்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, ஆயிரக்கணக்கான உயிர்களையும் எடுத்துவிட்டு, நன்றாக விளைந்துகொண்டிருந்த மண்ணில் கருவேலம், காட்டாமணக்கு விதைகளை வீசிச் சென்றிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

சமகாலத்தில் இப்படி வீரப் போர் புரிந்து உயிரை விட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பகுதியில் இசையையும் நடனத்தையும் ரசித்துக்கொண்டு, ஆங்கிலேயர்களுக்குச் சலாம் போட்டுக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்கள் மன்னர்கள்! உண்மையில் பிரம்மாண்டமாக மனத்தில் உயர்ந்திருந்தது தரைமட்டமாகியிருந்த பாஞ்சாலங்குறிச்சியே!

பாலில் மிதக்கும் ரஸமலாய் போல கேரளாவில் தண்ணீருக்கு நடுநடுவே நிலப்பகுதிகள் அமைந்திருக்கின்றன. ரயில் பயணமாக இருந்தாலும் சரி, பேருந்து பயணமாக இருந்தாலும் சரி, இயற்கைக் காட்சிகள் இமைக்க மறந்துவிடச் செய்கின்றன. ஆறுகள், கழிமுகங்களில் சுற்றுலாப்பயணிகள் வீசிய ஒன்றிரண்டு தண்ணீர் பாட்டில்களைத் தவிர, வேறு பிளாஸ்டிக் பைகளை எங்கேயும் பார்க்க முடியவில்லை!

குமரகத்தில் பிரத்யேக கேரள உணவுகளைச் சாப்பிட்டோம். அதேபோல திருவனந்தபுரத்தில் எதிர்பார்த்ததில் ஏமாற்றமே. தமிழ்நாட்டு உணவுகள் கேரளாவை ஆக்கிரமித்து விட்டன.  கண்ணை உறுத்தும் சுவர் விளம்பரங்களோ, பெரிய பெரிய ஃப்ளெக்ஸ்களோ, பிரம்மாண்ட போஸ்டர்களோ  இல்லாதது ஆறுதலாக இருந்தது. விஜய், அஜித், சூர்யாவுக்கு நிறைய ரசிகர் மன்றங்கள் அங்கு இருந்தன.   
 



  

Monday, October 11, 2010

தமிழ் பேப்பர் : பெண் மனம் - 1

ஐயோ, தாத்தா! இது என்ன கால் விரல்ல காயம்?’

‘ ……….’

‘தாத்தா, உங்களைத்தான் கேட்கறேன். கீழே விழுந்துட்டீங்களா?’

‘இல்லம்மா.  கோமளாவைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன். என்னைவிட ரொம்பச் சின்னவளா இருந்தும் ஒரு மரியாதை இல்லாம, ரெண்டு நிமிஷம் கழிச்சு நிதானமா வந்து என்னன்னு கேட்டா. வந்துச்சே பாரு ஒரு கோவம்! அப்படியே காலைத் தூக்கி ஒரு எத்து எத்தினேன்…’

‘என்ன சொல்றீங்க தாத்தா! பாட்டி இறந்து 30 வருஷம் ஆச்சு!’
‘ம்… கால் வலிச்சப்பறம்தான் தெரிஞ்சது நான் கண்டது சொப்பனம்னு.  கட்டில் கம்பில நல்லா கால் இடிச்சிடுச்சு…’

85 வயது தாத்தா. அவர் மனைவி இறந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர் கனவில் கூடத் தன் மனைவியை இப்படி நடத்தியிருக்கிறார் என்றால், அவர் உயிருடன் இருந்த காலங்களில் எப்படி இருந்திருப்பார்!

*

பூமியில் உள்ள உயிரினங்களை எல்லாம் அடக்கி ஆண்டுகொண்டிருப்பது மனித இனம். அறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட இனமாக இருப்பதும் இந்த இனம்தான். இரண்டே வகை உள்ள இனம். அதில் ஒரு வகை  இன்னொரு வகையை இரண்டாம் தரத்தில் வைத்திருக்கும் வேலையைத்  தொடர்ந்து கொண்டே இருக்கிறது பல்லாயிரம் ஆண்டுகளாக. பலர் சொல்லி போரடித்துப் போச்சென்று ஓரினம் தொடர்ந்து சொல்லும். எள்ளலும் துள்ளலும் நக்கலுமாக எகத்தாளமிடும். பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இனம் தோன்றிய நாளாக.

இங்கு பெண்களுக்கு என்று தனியான சிந்தனைகள் இல்லை. செயல்கள் இல்லை. விருப்பங்கள் இல்லை. லட்சியங்கள் இல்லை. ஆசைகள் இல்லை. எல்லாமே காலம் காலமாக ஆண்களால் உருவாக்கப்பட்டவைதான். அடக்கமாக இருக்க வேண்டும். நிமிர்ந்து நடக்கக்கூடாது. உரக்கப் பேசக்கூடாது. சிரிக்கக்கூடாது.

வசதியாக இல்லா விட்டாலும் பெண் என்றால் இப்படித்தான் உடை அணிய வேண்டும். இப்படித்தான் சிந்திக்க வேண்டும். இப்படித்தான் செயல்பட வேண்டும். குறிப்பாக, தங்களுக்குக் கீழாகத்தான் நடக்க வேண்டும் என்று ஆண்களின் ஜீனுக்குள் பொதிந்துகிடக்கும் அபிப்பிராயமே பொதுவான சமூகக் கருத்தாகவும் நிலவுகிறது.

பெண்களைப் பற்றிய ஆண்களின் இத்தகைய மதிப்பீடுகள் அவர்களே உருவாக்கிய மதங்கள், சட்டங்கள், காப்பியங்கள், போதனைகள் மூலமாக வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு, பரப்பப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
பெண்கள் பிரச்னை என்பது உண்மையிலேயே உள்ளதுதானா? அத்தனை பெரிய பிரச்னையா? பெண்கள் எல்லோரும் அடிமையாகவா இருக்கிறார்கள்? எதில் இல்லை சுதந்தரம்? பெண்களே பெண்களுக்கு எதிரி?… இப்படிப்பட்ட கேள்விகளைத் தினமும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிரச்னை என்றபிறகு பெரிய பிரச்னை என்ன, சிறிய பிரச்னை என்ன? எல்லோரும் அடிமையாக இல்லாவிட்டாலும் பெரும்பாலும் அடிமைகளாக இருக்கத்தான் செய்கிறார்கள். அடிமைப்பட்டுக் கிடப்பவர்களுக்குத்தான் சுதந்தரத்தின் பொருள் புரியும்.

‘ஒரு காலத்தில் பெண்களை அடக்கி வைத்திருந்தார்கள், சரி… இப்போதுதான் பெண்கள் படிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இதற்கு மேல் என்ன?’ என்று கேட்கிறார்கள்.

படிப்பு, வேலை என்பதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு பகுதி என்பதை மறுக்க முடியாது.  படிப்பு, வேலை இருப்பதாலேயே பிரச்னை தீர்ந்து விடும் என்றும் சொல்லிவிட முடியாது.  பெண்களைச் சுற்றியுள்ள கூண்டுகளின் கம்பிகள் சற்றுத் தள்ளி நகர்ந்து போயிருக்கின்றன. அவ்வளவுதான்! உண்மையில் சுதந்தரத்தை நோக்கி பெண்கள் செல்லக்கூடிய தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.

பெண்கள் பிறக்கும்போதே சந்திக்கும் போராட்டம் அவள் வாழ்வின் இறுதி வரை தொடர்கிறது. ஏழைகள், பணக்காரர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், கிராமத்தில் இருப்பவர்கள், நகரத்தில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், வீட்டிலிருப்பவர்கள் என்ற பேதங்கள் எல்லாம் பெண்கள் பிரச்னைகளுக்குக் கிடையாது.

சுமார் 1650  ஆண்டுகளுக்கு முன்…

பண்டைய எகிப்தில்  அலெக்ஸாண்டிரியாவில்  கி.பி. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஹைபேஷியா. கிரேக்கம், இத்தாலி, மத்திய தரைக்கடல் நாடுகளுக்குச் சென்று கற்றவர். இலக்கியம், கணிதம், தத்துவம், அறிவியல் போன்ற பல துறைகளில் தலைசிறந்தவராகத் திகழ்ந்தவர். அவரிடம் கல்வி கற்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள்  வந்தனர். பண்டைய கணித நூல்களை எளிமைப்படுத்தி விளக்க உரைகள் எழுதினார்.  இவர் எழுதிய நூல்கள் பிற்காலத்தில் வந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தன.

அறிவும் துணிவும் நிரம்பிய ஹைபேஷியா, ஆண்களைப் போலவே உடை அணிவார். தாமாகவே தேர் ஓட்டிச் செல்வார். எனவே, ஹைபேஷியாவை அன்றைய மதவெறியர்களுக்குப் பிடிக்கவில்லை. தேரில் வந்துகொண்டிருந்தவரை இழுத்து அடித்து உதைத்தனர். ஆடைகளைப் பிய்த்து எறிந்தனர். உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினர்.

ஹைபேஷியா [16ம்நூற்றாண்டு ஓவியம்

போனது ஹைபேஷா என்ற உன்னதமான ஒரு பெண்ணின் உயிர் மட்டுமல்ல; உலகத்துக்குச் சொல்ல வேண்டிய எவ்வளவோ விஞ்ஞான ரகசியங்களும் கண்டுபிடிப்புகளும்தான்!

சுமார் 1650 ஆண்டுகளுக்குப் பின் …

1987. இந்தியாவில் உள்ள ராஜஸ்தான். 18 வயது இளம் பெண் ரூப் கன்வருக்கு மால் சிங் என்ற 24 வயது நபரைத் திருமணம் செய்த  8 மாதங்களில், கணவர் இறந்து போனார். ரூப் கன்வரின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் ஏற்கெனவே ஒழிக்கப்பட்ட ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறுதலை அரங்கேற்றி, தங்கள் கோர முகத்தை இன்னொரு முறை உலகத்துக்குக் காட்டிக்கொண்டனர். வேடிக்கை பார்க்க வந்த ஆயிரக்கணக்கானவர்களின் கண்களுக்கு எதிரே, காப்பாற்ற யாருமின்றி, கதறியபடியே  ரூப் கன்வர் நெருப்பில் எரிந்து, கருகிப் போனார்.

ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாகச் சாகடித்த பிறகு, ‘சதி மாதா’ என்று கொண்டாடும் உலகம் இது.

இன்றைக்குச் சதி இல்லை. ஆணைப் போல் உடை அணிவதில் பிரச்னை இல்லை. இன்னும் பல இல்லைகள், மேலும் பல உண்டுகள். ஆணுக்கு நிகர் என்று ஆண்களில் சிலரேகூட எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடத் தயார்.

அவ்வளவுதானா? எல்லாமே இருக்கிறதா? பெண்ணடிமைக் காலம் இப்போது / இனி இல்லையா? உண்மைதானா?

இன்று பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் அனைத்தும் ஆண்களுக்கும் உண்டு. சந்தேகமில்லை. ஆனால் ஆண்களுக்கு இல்லாத ஒரு பிரச்னை பெண்ணுக்கு உண்டு. அதுதான் இன்னும் தன் ஆக்டோபஸ் கைகளால்  இறுக்கமாக அழுத்திப் பிடித்து வைத்திருக்கிறது.

அது…

0

தமிழ் பேப்பர் இணைய இதழில் நான் எழுதி வெளியாகும் பெண் மனம் தொடரின் முதல் அத்தியாயம் இது: இணைய இதழுக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

Sunday, September 12, 2010

வேண்டாம் அனுராதா...

15 வயதில் திருமணமாகி, இரு குழந்தைகளுக்குத் தாயாகி, வரதட்சணை பிரச்னையில் விவாகரத்து பெற்றவர் அனுராதா. இன்சூரன்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்த அனுராதாவை டாக்டர் மனோஜ் நட்பு ஏற்படுத்தி, மயக்க மருந்து கொடுத்து, போட்டோ எடுத்திருக்கிறான். பிறகு அதையே காரணம் காட்டி மிரட்டி, உறவு வைத்திருக்கிறான். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவனுடன் குடும்பம் நடத்தியிருக்கிறார் அனுராதா. இருவருக்கும் அடிக்கடி பிரச்னைகள். போட்டோவை இணையத்தில் போட்டுவிடுவேன் என்று சொல்லியிருக்கிறான் மனோஜ். வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் அனுராதா. மனோஜ் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

அவர் கொடுத்த புகாரில் மேலும் சில அதிர்ச்சிகள்:

மருத்துவமனையில் பிரசவ வார்டில் வேலையைக் கேட்டு வாங்கிக்கொள்வார். இரவு நேரங்களில்தான் பணிக்குச் செல்வார். பிரசவத்துக்கு வரும் பெண்கள் மயக்க நிலையில் இருக்கும்போது ஆபாசமாக வீடியோ எடுத்துவிடுவார். நானே அந்தப் படங்களைப் பார்த்துச் சண்டை போட்டிருக்கிறேன். 

என்னுடைய மகனை அடித்து உதைத்து, கொடுமைப்படுத்துவார்.  என் பெற்றோரிடம் இருந்து என்னைப் பிரித்து விட்டார். 

இப்படி நடந்த விஷயங்களைத் தெளிவாக, பதற்றம் இல்லாமல் தொலைக்காட்சியில் சொல்லும்போது அனுராதாவின் தைரியத்தைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. கடவுளுக்கு அடுத்த நிலையில் நம் மக்கள் மருத்துவர்களைத்தான் நினைக்கிறார்கள். மருத்துவர் என்று வரும்போது அவர் ஆணா, பெண்ணா என்று பார்ப்பதில்லை. இப்படிப்பட்ட தொழிலைச் செய்யும் மருத்துவர் மனத்தில் இப்படியொரு கீழ்த்தரமான எண்ணம். அருவருப்பாக இருக்கிறது.

அனுராதா தான் ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்த உடனேயே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டும். மானம் போய் விடும் என்ற ஒரு காரணத்துக்காக ஒரு கேடுகெட்டவனோடு பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியிருக்கிறார். மிரட்டலுக்கு அடி பணிந்தால் அது என்றென்றைக்கும்  இன்னும் பெரிய பிரச்னைகளுக்கு வழி வகுத்துக்கொண்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

காலம் கடந்தாவது சமூகத்தைச் சீரழிக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்த ஒருவனை, வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்திய அனுராதாவை பாராட்டத் தோன்றிய நேரத்தில், அவர் இன்னோர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டார்.

“என்னை எப்படியாவது அவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு கேட்டிருக்கேன். இனிமேல் நான் எப்படி வாழ முடியும்?’

அவருடைய வக்கீல் ஜீவகுமாரும், “பெண்கள் பெரும்பாலும் இப்படித்தான் விரும்புகிறார்கள். கல்யாணம் செய்து வைக்கச் சொல்லியிருக்கிறார் அனுராதா’ என்றார்.

இது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்! தன்னையும் பிற பெண்களையும் கேவலமாகப் படம் எடுக்கும் வக்கிரப்புத்திக் கொண்டவனிடம் மீண்டும் சேர்ந்து வாழ்வது என்பது எவ்வளவு கேவலம்! அனுராதாவுக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எதிர்காலத்தில் அவனால் ஆபத்து வராது என்று என்ன நிச்சயம்? ஏற்கெனவே மகன் அவனால் துன்பப்பட்டிருக்கும்போது யாருக்காகச் சேர்ந்து வாழ நினைக்கிறார்? அனுராதா கொடுத்த இந்தப் புகாருக்கே மனோஜால் வெளி வர முடியாது எனும்போது, மருத்துவமனையில் அவன் எடுத்த வீடியோவால் வேலையே பறிபோகாதா? சாதாரணமாகவே சைக்கோவாக இருந்த மனோஜ், தான் தண்டனைக்கு உள்ளாகி, ஊர் முழுவதும் தெரிந்த பிறகு அனுராதாவை எப்படித் திருமணம் செய்துகொள்வான்?

இதுபோன்ற கேள்விகளைக் கூட யோசிக்க விடாமல் ஊடகங்கள், சினிமாக்கள், சமூக அமைப்பு போன்றவை செயல்பட வைக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. கிராமத்து பஞ்சாயத்துகளும் சினிமாக்களும் கெடுத்தவனுக்கே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும் அற்புதமான நீதியை அல்லவா வழங்கிக்கொண்டிருக்கின்றன! இங்கு தவறு செய்தவனுக்குப் பரிசும் பாதிக்கப்பட்டவளுக்குத் தண்டனையும் வழங்கும் வினோதமும் தொடர்கதையாக இருக்கின்றன. இப்படிப் பார்த்துப் பார்த்து வளரும் பெண்கள், பிரச்னைகளில் இருந்து வெளிவர நினைக்காமல், எப்படியாவது கணவன் திருந்தி, அவனுடன் வாழ மாட்டோமா என்றுதான் நினைக்கிறார்கள். சமூகப் பார்வை மாறும்வரை அனுராதாக்கள் மீண்டும் மீண்டும் புதைகுழியில் விழுந்துகொண்டுதான் இருப்பார்கள்.    

 

Monday, September 6, 2010

ஹாஸ்டல் கதைகள் 3 : கன்னியர் தீவு!

ஹாஸ்டல் கதைகள் 1
ஹாஸ்டல் கதைகள் 2

பெண்கள்... பெண்கள்... எங்கும் பெண்கள் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஓர் இடமாகத்தான் இருந்தது எங்கள் பள்ளி. சுமார் இரண்டாயிரம் பெண்கள் படிக்கும் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசியர்கள், உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், வார்டன்கள் என்று அத்தனை பேரும் பெண்களாகவே இருந்தார்கள். மொத்தத்தில் அது ஒரு கன்னியர் தீவு!

இதில் இரண்டே இரண்டு ஆண்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.  ஒருவர் வாட்ச்மேன். கடுகடு ஆசாமி. எப்போதும் யாரையேனும் திட்டிக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டாலே அலறியடித்து ஒதுங்கிவிடுவார்கள். இன்னொருவர் அந்தோணி அண்ணன்.  பள்ளிக்குள் சிறிய கடை வைத்திருந்தார்.   கடையில் இல்லாத பொருள்களைக் கேட்டாலும் மறுநாளே வாங்கிக் கொடுத்து விடுவார். அன்பாகப் பேசுவார்.

பதின்ம வயதுப் பெண்களுக்கு இருக்கும் எதிர்பாலின ஈர்ப்பாலோ அல்லது ஹார்மோன்கள் அதிகம் சுரந்ததாலோ  ஹாஸ்டல் அக்காக்களுக்கு ஆண்களைப் பற்றிப் பேசுவது என்றால் கொண்டாட்டமாக இருந்தது.

“ மேரி, ஊர்ல இருந்து நான் பதினோரு மணி பஸ்ஸைப் பிடிக்க அம்மாவோட வந்துக்கிட்டிருந்தேன். சைக்கிள்ல  வந்துக்கிட்டிருந்த டேவிட், திடீர்னு என்னைப் பார்த்து கண்ணடிச்சான். எனக்கு ஒரே படபடப்பா இருந்துச்சு. பஸ் ஏறி ஜன்னல் வழியா மெதுவா பார்த்தேன், டாடா காண்பிச்சான்...   “

“ அந்த மேலத் தெரு டேவிட்டா? அந்தச் சனியன் நான் ரெண்டரை மணி பஸ் பிடிக்க வந்தப்ப என்னைப் பார்த்தும் கண்ணடிச்சான், கை ஆட்டினான்... நான் நல்லா வஞ்சுப்புட்டேன்...’

“நெசமாத்தான் சொல்றீயா மேரி?’

“இல்ல. உன் மேல உள்ள பொறாமையில அவனைப் பத்திச் சொன்னேன். கனவுல மிதக்காம கணக்குப் போடற வழியைப் பாருடி...’

இப்படித் தங்களைப் பாதித்த விஷயங்களையும் ஊரில் பார்த்த, கேட்ட காதல் கதைகளையும் அலுக்காமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.  (வேறு என்னதான் செய்ய முடியும்? பாடப் புத்தகங்கள், பைபிள் தவிர வேறு புத்தகங்களுக்கு அனுமதி இல்லை. படிப்பு, பிரார்த்தனை தவிர்த்து கிடைக்கும் நேரங்களில் இப்படிப் பேசித்தான் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியிருந்தது!)

இந்தச் சிறை வாழ்க்கையில் வாரம் ஒருமுறை மட்டும் நான்கு மணி நேரம் விடுதலை கிடைக்கும்.  அது ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போகும் நேரம். அன்று மட்டும் எல்லோருக்கும் கூடுதல் சுறுசுறுப்பு வந்து விடும். ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிப்பார்கள். அன்று மட்டும் எப்படி வேண்டுமானாலும் தலை வாரிக்கொள்ளலாம். பளிச் நிறங்களில் உடைகள் அணிவார்கள். சர்ச்சுக்குச் செல்லாத மாணவிகளிடமிருந்து பாவாடை, தாவணி எல்லாம் இரவல் வாங்கிக்கொள்வார்கள். இத்தனை நாள் நாம் பார்த்தவர்களா இவர்கள் என்று நினைக்கும் அளவுக்கு வசீகரிப்பார்கள்.
காற்றில் அலையும் கூந்தலுடன் இடது கையில் பைபிளைப் பிடித்தபடி அவர்கள் செல்வதைப் பார்க்கும் போது பாரதிராஜா ஹீரோயின்கள்  போல இருக்கும்! இரண்டு வரிசைகளாகச் செல்வார்கள். தெருக்கள், வீட்டு ஜன்னல்கள், மாடிகளில் இருந்து இளைஞர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்! வரிசையில் செல்லும் ஒவ்வொருவரும் தன்னைத்தான்  பார்ப்பதாக நினைத்து, சந்தோஷமடைவார்கள். கூட்டத்தில் தன்னை மட்டும் தனித்துக் காட்ட நினைக்கும் பெண்கள், வரிசையை விட்டு விலகி, “ஏய், ஒழுங்காகப் போங்க’ என்று குரல் கொடுப்பார்கள்.

அடுத்த ஞாயிறு வரை பச்சை சட்டைக்காரன், ஒட்டடக்குச்சி, குண்டு பூசணி என்று ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் வைத்து, இதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஆண்கள் இல்லாத பாலைவனமாக இருந்த ஹாஸ்டல் வாழ்க்கையில், திடீரென்று ஒரு சோலை பூத்தது. தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்துக்குள்ளேயே குடி வந்து விட்டார். அவருக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். மூன்று பேருமே உயர் கல்விக்காக வெளியூர்களில் படித்து வந்தார்கள். 

தலைமை ஆசிரியரின் நெருங்கிய உறவினர்களின் பெண்களும் ஹாஸ்டலில் இருந்தார்கள். ஆனால் உறவினர் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் தலைமை ஆசிரியர் சிறிய சலுகைக்கூட காட்ட மாட்டார். அதேசமயம் உறவினர்கள் யாராவது சிறிய தவறு செய்தாலும் பெரிய அளவில் தண்டனை கொடுத்து விடுவார். அவ்வளவு கண்டிப்பானவர்.

ஒருநாள்  ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்து, தோளில் ஒரு பையுடன் ஸ்டைலாக ஓர் இளைஞர்  பள்ளி மைதானத்துக்குள் வந்துகொண்டிருந்தார். யார் அவர்? எல்லோரும் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். 

“கனி, ஜான் வர்றாங்க... ஜான்...’ என்று பதற்றத்தோடு ஓடி வந்தார் ரத்னா அக்கா.

“ஜான் மட்டும் இல்லை, பின்னாலேயே பெரியம்மாவும் வர்றாங்க...’ என்று கனிமொழி சொன்னதும் ரத்னாவின் முகம் வாடிவிட்டது.

இருவரும் வீட்டுக்குள் சென்று விட்டார்கள்.

“ காலேஜ் போனதும் ஜான் ரொம்ப ஸ்மார்ட்டா ஆயிட்டாங்க இல்ல!  நான் நல்லா மேட்ச் ஆவேனா  கனி?’ என்று கேட்டார் ரத்னா.

“ஜான் உனக்கு மட்டும் அத்தை மகன் இல்ல. ரீட்டா, பிரின்ஸி கூட முறைப் பெண்கள்தான் ஞாபகம் வச்சுக்க.  என் அண்ணன் மனசுல எவ இருக்காளோ’ என்றார் கனிமொழி.

“எனக்குத்தான் சொந்த அத்தை மகன்... எவளும் என் கூடப் போட்டிப் போட முடியாது...’

ஹாஸ்டலுக்கு அருகில் இருந்த தலைமை ஆசிரியர் வீட்டுப் பக்கம் வேண்டுமென்றே  மாணவிகள் அடிக்கடிச் செல்வார்கள். ஜன்னல் வழியாக ஜானின் தலை தெரியாதா, தோட்டத்தில் வந்து அமர மாட்டாரா என்று ஏங்குவார்கள். ஆனால்  ஒருநாளும் ஜான் யாருக்கும் தரிசனம் தரவில்லை.

அன்று வெளியில் சென்றிருந்த ஜான் பள்ளிக்குள் நுழைந்தார். தலைமை ஆசிரியர் வெளியே போயிருந்த தைரியத்தில் பெண்கள் அவர் கவனத்தைப் பெற நினைத்தார்கள். கொலுசை ஆட்டினார்கள். சத்தம் போட்டுப் பேசினார்கள். ரத்னா அக்கா கொஞ்சம் தைரியமாக இரண்டடி இடைவெளியில் ஜான் கூடவே நடந்து வந்தார். ம்ஹும்...  குனிந்த தலை நிமிரவே இல்லை ஜான். எந்த விஷயமும் அவரை அன்னிச்சையாகக் கூடத் திரும்பிப் பார்க்க வைக்கவில்லை! அத்தனைப் பெரிய மைதானத்தையும்  கடந்து, வீட்டுக்குள் புகுந்துவிட்டார்.

“என்னங்கடி! என் அண்ணன் கிட்ட உங்க பாச்சா எல்லாம் பலிக்காது.  அண்ணன் மேல வச்சிருக்கிற நம்பிக்கையாலதானே பெரியம்மா இங்கே  குடி வந்திருக்காங்க! இது கூடத் தெரியாமல் என்னவெல்லாம் பண்ணறீங்கடி! போங்க... போய் தனியா உட்காந்து கனவு காணுங்க...’ என்றார் கனிமொழி.

மாலை ஹாஸ்டல் பக்கமாக வந்தார் தலைமை ஆசிரியர். ரத்னாவைப் பார்த்து, “ என்ன போன மாதத் தேர்வுல மார்க் எல்லாம் குறைஞ்சிருச்சு போல. ஒழுங்கா படிப்புல மட்டும் கவனம் செலுத்து...’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

“நான் ஜான் கூட நடந்து  வந்ததை வாட்ச்மேன் போட்டுக்கொடுத்துருச்சு போல...’ என்று ரத்னா பல்லைக் கடித்தார்.

Monday, August 16, 2010

2020ல் இந்தியாவும் மாணவர்களின் கனவும்

·    இந்தியா வல்லரசு ஆகியிருக்கும். கூரை வீடுகளே இருக்காது. அனைவரும்  மாடி வீடுகளில் குடியிருப்பார்கள்.
·    நான் எஞ்சினியராகி இந்தியாவின் கடனை அடைப்பேன். பிறகு இந்தியாவை உயர்த்துவேன்!
·    இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் முறியடிக்கப்பட்டிருக்கும்.
·    அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.
·    பெண்கள் சமமாக நடத்தப்படுவார்கள். வரதட்சணை ஒழிக்கப்பட்டிருக்கும். (மாணவிகள் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் குறிப்பிட்டிருந்தனர்)
·    இந்தியா பசுஞ்சோலையாக மாறியிருக்கும்.
·    இன்று இலங்கை தமிழர்களைப் பாத்துக்கொண்டு சும்மா இருப்பது போன்ற நிலை இருக்காது. தமிழர்கள் தலை நிமிர்ந்திருப்பார்கள்.
·    மக்கள் தொகையில் நாம் சீனாவை முந்தியிருப்போம்!
·    இன்று ஒரு காபி ரூ.10. தங்கம் ஒரு பவுன் ரூ. 15,000. 2020-ல் இன்னும் பொருளாதாரம் வளர்ந்து கற்பனைக்கு எட்டாத அளவுக்குச் சென்று விடும். (ஐயோ விலை ஏற்றத்தை பொருளாதார வளர்ச்சி என்று நினைத்துவிட்டார்களே!)
·    பாகிஸ்தான் அடக்கப்பட்டிருக்கும்.
·    சீனாவின் வளர்ச்சியோடு இந்தியா சரிசமமாகப் போட்டியிடும்.
·    எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்கும்.
·    வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பியிருப்பார்கள்!
·    நல்ல அரசியல்வாதிகள் உருவாகியிருப்பார்கள்.

இவை எல்லாம் மாணவர்கள் சொன்ன சில கருத்துகள்.

பூம்புகார் பள்ளியில் ’இந்தியா 2020 என் கனவு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி 6 முதல் 12-ம் வகுப்பு வரை நடத்தப்பட்டது. பரிசுக்கான கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்பு வாரியாகப் போட்டி நடத்தப்பட்டிருந்தாலும் மாணவர்களின் சிந்தனையில் பெரிய மாற்றம் இல்லை என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஆறாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் இடையே மொழியில், விரிவாக எழுதுவதில் வித்தியாசம் இருந்ததே தவிர, அவர்கள் சொன்ன விஷங்களில் மாற்றம் இல்லை!

அப்துல் கலாம், புவி வெப்பம், மக்கள் தொகை கட்டுப்பாடு, வேலை வாய்ப்பு, கல்வி போன்ற விஷயங்களைச் சுமார் 80 சதவிகித  கட்டுரைகளில் காண முடிந்தது.  100 சதவிகிதம் இருந்த ஒரு விஷயம் ’வல்லரசு’. வல்லரசு என்றால் அனைவரும் மாடி வீட்டில் வசிப்பது என்று பெரும்பாலும் குறிப்பிட்டிருந்தனர். யார் கொடுத்த விளக்கமோ தெரியவில்லை!

Friday, July 9, 2010

ஹாஸ்டல் கதைகள் - 2 : வசந்தி அக்கா!

திருட்டு. இந்த வார்த்தைக்கு அர்த்தம் ஹாஸ்டலில்தான் தெரிந்தது. நான் ஹாஸ்டலில் சேர்ந்த மூன்றாம் நாளே சிவப்பு நிறப் புது பிளாஸ்டிக் வாளி காணாமல் போனது. வாளி இல்லாமல் என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. யாரிடம் கேட்பது, எப்படிக் கண்டுபிடிப்பது? கனிமொழி அக்காவிடம் சென்றேன். அவர்தான் சேர்ந்த அன்றிலிருந்து என்னிடம் நட்பு வைத்திருப்பவர்.

’பள்ளிக்கூடம் திறந்ததுமே ஆரம்பிச்சிட்டாளுகளா? வா, நான் கண்டுபிடிக்கிறேன்’ என்று அழைத்துப் போனார்.

அங்கு என்னுடைய வாளியைப் போல நான்கு வாளிகள் இருந்தன. நான்கு புது வாளிகள். அதில் மூன்று வாளிகளின் அடியில் பெயிண்ட் மூலம் பெயர் எழுதப்பட்டிருந்தது. கடைசியில் இருந்தது ஒரு வாளி. அடையாளம் எதுவும் இருந்தால் சொல்லச் சொன்னார் கனிமொழி. இப்படி எல்லாம் நடக்கும் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்காததால் வாளியை அவ்வளவு துல்லியமாக கவனித்திருக்கவில்லை. எடுத்தவள் சாதாரணமாக நிற்க, தொலைத்தவள் திருதிருவென்று நின்றேன். கனிமொழிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

’என்ன கூட்டம்?’ என்று கேட்டபடி இன்பா அக்கா வந்தார்.

விஷயத்தை அறிந்தவர், “மாதவி உன் கிட்ட பக்கெட் இல்லைன்னுதானே நேத்து மேரி கிட்ட வாங்கிட்டுப் போனே? அதுக்குள்ள எப்படி பக்கெட் வாங்கினே?’

’டேஸ்காலர் பிள்ளை கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன். அவளோட பக்கெட்டுன்னு அடையாளம் சொல்லச் சொல்லு பார்க்கலாம்!’ என்றாள் மாதவி.

கண் முன்னே வாளி இருந்தும் என்னிடம் நிரூபிக்க முடியவில்லை.

பேனா, பென்சில், ரப்பர், உள்ளாடைகள், பணம் என்று திருட்டுப் போகாத பொருள்களே இல்லை என்பது அன்றுதான் தெரிந்தது. பொருள்களில் பெயர் எழுதி வைப்பது, பணத்தை வார்டனிடம் கொடுத்து வைப்பது, உள்ளாடைகளை உள்ளுக்குள் போட்டு, அதன் மீது பாவாடை, தாவணியைக் காய வைக்கும் உத்தி எல்லாம் பிறகு கற்றுக்கொண்டேன்.

இப்படி அவ்வப்போது யாருக்காவது பொருள்கள் காணாமல் போவது தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் விஷயம் பெரிதாகவில்லை.

**

வசந்தி கிறிஸ்டிபாய். பெயரைப் போலவே அவரும் வசீகரிப்பார். நானும் அவரும் ஒரே ஊர் என்பது நான் ஹாஸ்டலுக்கு வந்து ஒருமாதம் கழிந்தபிறகுதான் தெரிந்தது. அதற்குள் நான் கனிமொழியின் அன்புப் பிடியில் சிக்கி விட்டேன். அதனால் நான் அவருடன் நெருக்கமாக முடியவில்லை. ஆனால் அவரே வந்து என்னை அடிக்கடி விசாரிப்பார். ஊருக்குப் போகும்போது பத்திரமாக அழைத்துச் செல்வார். சீனியர் மாணவியாக இருந்தாலும் ஜூனியர் மாணவிகளிடம் அன்புடன் பழகுவதால் வசந்தியை எல்லோருக்கும் பிடிக்கும்.

நன்றாகப் படிப்பார். அழகாக உடுத்துவார். தெரிந்தவர், தெரியாதவர் பார்க்காமல் உதவி செய்வார். பேஸ்கட் பால் கேப்டனாக இருந்தார். ஹாஸ்டல் தலைவிகளில் ஒருவர். வார்டன், ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவி. அவருடன் படித்தவர்களுக்கு அன்புத் தோழி. விடுதியில் இருந்த என்னைப் போன்ற ஏராளமான ஜூனியர் மாணவிகளுக்கு வசந்தி கிறிஸ்டி பாய் ஒரு ரோல் மாடல்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். பார்க்க வந்தவர்கள் உணவு கொண்டு வந்திருந்தால் அன்று விடுதியில் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வசந்தி அக்காவின் குழுதான் அந்த வாரம் பரிமாற வேண்டும்.சந்தோஷமாக வந்தார் வசந்தி. வார்டனிடம், ’எங்க அண்ணன் சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க. பரிமாறிட்டு மட்டும் போயிடறேன்’என்றார். வார்டன் சிரித்துக்கொண்டே தலையசைத்தார்.

தன் பொறுப்பை மற்றவர்கள் போலத் தட்டிக் கழிக்காத அவருடைய நடத்தை, அவர் மீது இன்னும் கொஞ்சம் மதிப்பை உயர்த்தியது. வசந்தி அக்காவிடம் படிக்கப் போகும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டேன்!(ஆசிரியராவதுதான் அவர் விருப்பம்.)

மாலை நான்கு மணிக்கு ஹாஸ்டலில் ஏதோ சலசலப்பு. விஷயம் ஒன்றும் புரியவில்லை. சிலுவைச் செல்வி, அமுதாவுடன் நான் மைதானத்துக்குச் சென்று விட்டேன். மீண்டும் ஐந்து மணிக்குத் திரும்பினோம். கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அமுதா விசாரித்துவிட்டு வந்தாள்.

’இன்னிக்கு வாங்கிட்டு வந்த ஃப்ரான்ஸ்சிஸ்காவோட புதுச் செருப்பைக் காணோமாம்’ என்றாள் எங்களிடம்.

’சரி, ஒரு செருப்புக் காணோம்னா இப்படியா ஹாஸ்டலே பரபரப்பாகும்?’

’செருப்புக் காணோம்ங்கிறதுக்காக பரபரப்பாகலை சுஜா. செருப்பை எடுத்தவங்கன்னு அவ சொல்றவங்களாலதான் பரபரப்பு...’

’யாருப்பா?’

’யார் கிட்டேயும் சொல்ல வேணாம், செருப்பு உனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யறேன்னு வார்டன் சொன்னதால பேரைச் சொல்லல. ஆனால் பிளஸ் டூ படிக்கறவங்கதான் எடுத்திருக்காங்கன்னு மத்தவங்க சொல்றாங்க... ’

’ஃப்ரான்சிஸ்கா அடிச்சுப் பேசறதைப் பார்த்தா அவ பொய் சொல்லற மாதிரி இல்லை...’

’வார்டன் ஃப்ரான்சிஸ்காவையும் அவ குற்றம் சொல்றவங்களையும் தனியா வச்சு விசாரிச்சிருக்காங்க. இவ பெட்டியைத் திறந்து காட்டச் சொன்னாளாம். ஆனா அவங்க மாட்டேன்னு சாதிச்சிட்டாங்களாம்...’

உணவுக்காக மணி அடித்தது. அமைதியாகச் சாப்பிட்டோம். சிறப்புப் பிரார்த்தனைக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. மீண்டும் செருப்பு விஷயம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

’குரூப் லீடரா இருக்கறவங்கள்ள ஒருத்தர் தானாம் சுஜா!’

’குரூப் லீடரா...? வசந்தி அக்காவா இருக்கக் கூடாது!’

’நானும் அதைத்தான் ஜீசஸ் கிட்ட ஜெபிக்கிறேன்...’ என்றாள் சிலுவைச் செல்வி.

பிரார்த்தனைக்காக மணி அடிக்கப்பட்டது. வாய் மட்டும் கூட்டத்தோடு சேர்ந்து பாடியது. அவர்கள் பேசிய எந்த விஷயமும் காதில் விழுந்ததே தவிர, மனத்தில் பதியவில்லை. திருட்டு என்ற சொல்லைக் கூட மனம் ஏற்கவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று யோசனையில் இருந்தேன். எப்படியோ கூட்டம் முடிந்தது. படுப்பதற்குப் போர்வை, தலையணை எடுப்பதற்காக அறைக்குத் திரும்பினோம். ஃபிரான்சிஸ்கா சந்தோஷத்துடன் செருப்பைக் காட்டி, தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

’நல்லவேளை, யாருன்னு வெளியில் தெரியாமலே செருப்பு கிடைச்சது’ என்று பெருமூச்சு விட்டபடி படுக்கை அறை நோக்கி நடந்தேன். வழியில் கனிமொழி அக்காவைப் பார்த்தேன்.

’சுஜா, விஷயம் தெரியுமா?’

’என்னக்கா?’

’செருப்பை எடுத்தது...’ என்று கிசுகிசுப்பாகச் சொல்ல வந்தார்.

’வேண்டாம்... அதான் கிடைச்சிருச்சே...விட்டுடுங்க...!’

Friday, July 2, 2010

சந்தோஷ்

ஆ... ஐயோ...

என்ன ஆச்சு?

மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தார் பிருந்தா.

“இந்தப் பொண்ணு கண் முழிச்சிருச்சு’ என்று அருகில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்த பெண், மீண்டும் பிருந்தாவைப் பார்த்தார்.

“எமன் மாதிரி வந்த அந்த லாரி இடிச்சுப்புட்டு நிக்காம போயிட்டான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது’ என்று என்றார்.

சற்றுத் தூரத்தில் ராஜாவின் முனகல் கேட்டது. மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தார் பிருந்தா. கண்களை மூடிக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தார். கையை ஊன்றி வேகமாக உட்கார முயற்சி செய்யும்போதுதான் தெரிந்தது, அவருடைய இடது கை முட்டி உடைந்திருந்தது.ராஜாவுக்குக் கால் முட்டி உடைந்திருந்தது.

’கடவுளே, இந்தச் சந்தர்ப்பத்திலாவது என்னைக் காப்பாற்று’ என்று தனக்குள் நினைத்தபடி பிருந்தாவின் கண்கள் அங்கும் இங்கும் தேடின.

’என்னம்மா உன் குழந்தையையா தேடற? கடவுள் புண்ணியத்துல அவனுக்கு ஒண்ணும் ஆகல. சின்னச் சிராய்ப்புத்தான்... நீ கவ... ’

’ஐயோ... கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கற? நான் வேண்டாத நேரம் இல்லையே...’

வெடித்து அழுதார் பிருந்தா.

சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

**

’சந்தோஷ், அப்பா ஆபிஸ் போயிட்டு வரேன். பை!’
...

’சந்தோஷ் குட்டி, உனக்கு கார்ட்டூன் சானல் வைக்கட்டுமா?’
...

’தம்பி சமர்த்தா டிவி பார்ப்பானாம். அம்மா சமைச்சிட்டு வந்துடுவேனாம்...’
...

’சந்தோஷ் அம்மாவைக் கூப்பிடு... ரெண்டு பேருக்கும் கதை சொல்றேன்!’
...

இப்படி பிருந்தா, ராஜாவின் குரல்கள் மட்டுமே அந்த வீட்டில் கேட்கும். யார் சந்தோஷ்? அவன் எப்படி இருப்பான்? கேட்கவும் தயக்கமாக இருந்தது.

ஒரு வாரத்துக்குப் பிறகு பிருந்தா தயங்கித் தயங்கி வந்தார்.

“வீட்ல யாரும் இல்லையே?’

“இல்ல... என்ன சொல்லுங்க?’

“எனக்கு ஒரு உதவி... கொஞ்சம் வர்றீங்களா?’

போனேன்.

ஹாலில் வெள்ளைவெளேரென்று ஒல்லியான, உயரமான உருவம் ஒன்று படுத்திருந்தது.

“சந்தோஷ் ஆன்ட்டிக்கு வணக்கம் சொல்லு...’
...

’இவன் எங்க பையன். பதிமூணு வயசாச்சு. பிறக்கும்போதே இப்படித்தான் இருந்தான். என்னென்னவோ காரணம் சொன்னாங்க. பார்க்காத வைத்தியம் இல்லை. பேச முடியாது. எதையும் புரிஞ்சுக்க முடியாது. நடக்க முடியாது. அசைய முடியாது. கண்ணை மட்டும் சுத்திச் சுத்திப் பார்ப்பான். தினமும் குளிக்க ஊத்தணும். இல்லைன்னா புண் வந்துரும். இவங்க அப்பா ஊருக்குப் போயிருக்கார். தனியா ஊத்த முடியாது. நீங்க தண்ணி ஊத்தினா போதும். மத்ததை நான் பார்த்துக்குவேன்...’

“என்னங்க இதுக்கு இவ்வளவு தயக்கமா?’

இருவரும் சந்தோஷைக் குளிப்பாட்டினோம்.

உடல் முழுவதும் பவுடர் போட்டு, அழகாக டிரஸ் செய்து, மீண்டும் படுக்கையில் கிடத்தப்பட்டான் சந்தோஷ்.

’ஆன்ட்டிக்கு தேங்க்ஸ் சொல்லு சந்தோஷ்!’

...

’ரொம்பக் கஷ்டமா இருக்கு...’

“குழந்தை ஊனமாவோ, மூளை வளர்ச்சி இல்லாமலோ இருந்தால் கூடப் பரவாயில்லை. உயிர் மட்டும் இருக்கற ஒரு பொம்மையா இருக்கறது ரொம்பக் கொடுமை. கிட்டத்தட்ட நானும் அவரும் இவனை மாதிரிதான் வாழ்ந்துட்டிருக்கோம். பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு நாங்க சந்தோஷமா வெளியில போய். நல்லது, கெட்டது எதுக்கும் போறதில்லை. சம்பாதித்ததை எல்லாம் செலவு பண்ணிப் பார்த்துட்டோம். கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை.’

“சந்தோஷ், ஆன்ட்டிக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்...’

“சந்தோஷ் என்ன சாப்பிடுவான்?’

“எதையும் மிக்ஸியில் அரைச்சு கூழ் மாதிரி ஊட்டணும். நம்மளா பார்த்து தண்ணி கொடுக்கணும். பிறந்த குழந்தைக்கு மாதிரி ஆச்சா, மூச்சா எல்லாம் சுத்தம் பண்ணனும்...’

எனக்குப் பேச்சு வரவில்லை.

“இவ்வளவு பிரச்னை இருக்கறதாலவோ என்னவோ காய்ச்சல், சளி மாதிரியான தொந்தரவு எல்லாம் சந்தோஷுக்கு வர்றதில்லை. மருத்துவத்துலதான் சரியாகலை. எங்க பிரார்த்தனையிலாவது சரியாகுமான்னு யார் என்ன சொன்னாலும் செஞ்சிட்டிருந்தோம். இப்ப ரெண்டு வருஷாமா அதையும் விட்டுட்டோம்...’

“உங்க மாமியார், அம்மா யாரையாவது உதவிக்கு வச்சுக்கலாமே?

“அவங்க வந்தாங்கன்னா இன்னொரு குழந்தை பெத்துக்கச் சொல்லி ஒரே தொந்தரவு. நீங்களே சொல்லுங்க, அந்தக் குழந்தையும் இவனை மாதிரி பொறந்தான்னா நான் என்ன பண்ணறது? இவங்களுக்கு அது புரிய மாட்டேங்குது...’

“உங்க கையில் என்ன தழும்பு?’

“அதை ஏன் கேட்கறீங்க? ரெண்டு வருஷத்துக்கு முன்னால பழனியில் வேண்டுதலை முடிச்சிட்டு, காரில் திரும்பி வந்தோம். அப்ப ஒரு ஆக்சிடெண்ட். எனக்குக் கை முட்டி உடைஞ்சிருச்சு. அவருக்குக் கால் முட்டி. அந்த விபத்துல குழந்தைக்கு ஏதாவது ஆயிருக்கணும்னு வேண்டிக்கிட்டே திரும்பிப் பார்த்தேன். சின்னச் சிராய்ப்போட குழந்தை அப்படியே இருந்தான்...!’

Friday, June 25, 2010

ரசிக்க... சிரிக்க...

தினமும் இரண்டு முறை செல்லும் வழிதான். ஆனாலும் கடந்த ஒரு வாரமாக சுவாரசியம் கூட்டுகிறது. பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவசர அவசரமாகப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதில் சிலர் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். சில பெயர்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன; சில பெயர்கள் சிரிக்கும்படியாக இருக்கின்றன!

நேஷனல் மட்கலன் - National Ceramics
சிவா வணிகம் நடுவம் - Siva Enterprises
குமார் வன்பொருளகம் - Kumar Hardwares
ரவீஸ் வெதுப்பகம் - Ravees Cakes
குமார் அடுமனை - Kumar Bakery
மை லேடி தேடல் - My lady’s choice
எஸ்.டி. தூதஞ்சல் - S.T. Courier
ஸ்ரீ தேவி தானியங்கி - Sridevi Automobiles
ராஜ் தொலைபேசி நடுவன் - Raj Telephone Centre
ஏ.கே. முகவாண்மை - A. K. Agencies
பி.கே. வீட்டுக் குழுமம் - B.K. Housing Group
சந்திரன் ஒட்டும் பலகைகள் - Chandran Plywoods
அன்பு மின்பொருளகம் & வன்பொருளகம் - Anbu Electricals & Hardwares
மன்னா இனிப்புகள், வெதுப்பகம், நொறுவைகள் - Manna Sweets, Cakes, Snacks
கேக் அலைகள் - Cake Waves
சிவா குளிர் பான அருந்தகம் - Siva Coolbar
புஷ்பக் அணிகலன்கள் - Pushpak Jeweller
ஜோதி நறுமணப் பொருள்கள் - Jothi Cosmetics

Thursday, June 24, 2010

ஹாஸ்டல் கதைகள் - 1 : எஸ்தருக்கு இறங்கி வந்த ஏசு!

ஹாஸ்டலில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் எஸ்தர். ஆறாம் வகுப்பில் இருந்து ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருக்கிறாள். நான் சேர்ந்த அன்றே அவளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு வந்தது. இரவு உணவுக்காக எல்லோரும் அமர்ந்திருந்தோம். உணவு பரிமாறி, பிரார்த்தனை முடியும் வரை யாரும் தட்டில் கை வைக்கக்கூடாது. ஆனால் பிரார்த்தனைக்கு முன்பே சாப்பிட்டு, தண்டனையாக நின்றுகொண்டிருந்தாள் எஸ்தர். அத்தனைப் பேர் மத்தியில் ஒருத்திக்குத் தண்டனை எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குக் கவலையாக இருந்தது.

மறுநாள் காலை உணவு வேளை. முதலில் இட்லி பரிமாறப்பட்டது. ஆறிப் போய், புளிப்பேறியிருந்த இட்லியின் வாசம் குடலைப் புரட்டியது. ஆனால் சற்றுத் தூரத்தில் அமர்ந்திருந்த எஸ்தர் தட்டு நிறைய இட்லிகளை வாங்கியிருந்தாள். சுவையான கேக்கைச் சாப்பிடும் பாவத்தில் இட்லிகளைப் பிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள். சட்னி வரும்போது அவள் தட்டில் இரண்டே இட்லிகள்தான் இருந்தன. பிரார்த்தனை முடிவதற்குள் இன்னும் ஓர் இட்லி மாயமானது. அங்கு வந்த வார்டன், எஸ்தரை எழுந்து நிற்கச் சொன்னார்.

’நீயெல்லாம் ஒரு கிறிஸ்துவப் பெண்ணா? எல்லோரும் பிரேயர் முடிகிறவரை காத்திருக்காங்க. உனக்கென்ன? ஒழுங்கீனம்... ஒழுங்கீனம்... உன்னைப் பார்த்து மத்த பிள்ளைகளும் கெட்டுப் போகும்’ என்று திட்டினார்.

எதையும் காதில் வாங்காத எஸ்தர் நின்றுகொண்டே பிரார்த்தனை முடித்து, அடுத்த ஒரு நிமிடத்துக்குள் மீதி இருந்த இட்லியைக் காலி செய்துவிட்டு, முதல் ஆளாக வெளியேறினாள்.

இப்படிச் சாப்பிடும் இடம், தூங்கும் இடம், பிரார்த்தனை நேரம், படிக்கும் நேரம் எல்லாம் எஸ்தர் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் இருப்பாள். எதையும் மீறுவது அவள் குணமாக மாறி இருந்தது. தண்டனை கொடுத்து, கொடுத்து வார்டன்களுக்கும் சலிப்பு வந்துவிட்டது. இவ்வளவு தண்டனை வாங்கினாலும் அவள் மேல் கொஞ்சம் பரிவு இருந்ததற்குக் காரணம் ஓரளவு நன்றாகப் படித்துவிடுவாள் என்பதே.

எஸ்தர் வீட்டில் அவளைச் சேர்த்து மூன்று பிள்ளைகள். ஆசிரியராக இருந்த அவளுடைய அப்பாவின் சொற்ப வருமானத்தில் மூன்று பிள்ளைகளையும் ஹாஸ்டலில் படிக்க வைப்பதால், அவளைப் பார்ப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். மாதாமாதம் மணியார்டர் வரும். அவள் ஊரிலிருந்து யாராவது வந்தால் சத்துமாவு கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் அவள் யாரும் பார்க்க வரவில்லையே என்று கவலைப்பட்டதாகவே தெரியாது.
தன் தோழிகளுடன் எப்போதும் சந்தோஷமாக இருப்பாள். ஞாயிற்றுக்கிழமை தலை குளித்து, யாரிடமாவது வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறப் பாவாடை, தாவணி
வாங்கி அணிந்துகொண்டு முதல் ஆளாக தேவாலயத்துக்குக் கிளம்பிவிடுவாள். அதற்கு அவள் சொல்லும் காரணம், ‘இந்த ஒரு நாள் தான் நம்மள வெளியில் கூட்டிட்டுப் போறாங்க. நாலு பேரைப் பார்க்க முடியுது!’

அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். அப்பா வருகிறார் என்பதால் சிலுவைச் செல்வி தேவாலயம் செல்லவில்லை. (பார்வையாளர்கள் வராத கிறிஸ்துவ மாணவிகள் தேவாலயம் செல்லாவிட்டால் தண்டனை!) நானும் அமுதாவும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்று விட்டோம்.

ஒரு மணி நேரம் கழித்து சிலுவைச் செல்வி எங்களைத் தேடிக் கொண்டு ஓடி வந்தாள். காரணம் புரியாமல் நானும் அமுதாவும் பார்த்தோம். “எங்கெல்லாம் உங்களைத் தேடுறது? பிரேயர் ஹால்ல ஒரே கூட்டம்... பரபரப்பா இருக்கு. எங்கப்பா கிளம்பிட்டார். வாங்கடி போய்ப் பார்ப்போம்’ என்றாள் மூச்சிரைத்தபடி.

அவளுடைய பதற்றம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது. வேக வேகமாக நடந்தோம். வழியில் சில பெண்கள் வந்தார்கள். அவர்களிடம் விசாரித்தோம்.

’பிரேயர் ஹால்ல ஏசு தெரியறார்! நாங்க எல்லாம் பார்த்துட்டோம். சீக்கிரம் போங்க!’

புத்தகங்களை அறையில் வைத்துவிட்டு ஓடினோம்.

’நம்ம எஸ்தருக்குத்தான் முதலில் ஏசு காட்சி கொடுத்தார். அவ சொல்லித்தான் எல்லோரும் பாத்திருக்காங்க! எனக்கும் தெரிஞ்சார்!’ என்று தேன்மொழி அக்கா சொன்னார்.

பிரார்த்தனை கூடத்துக்குள் வழக்கத்தை விடக் கூட்டம். பார்க்க வந்த பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் கூரையை நோக்கி ஜெபித்தபடி இருந்தனர். சிலர் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. அமுதாவும் சிலுவைச் செல்வியும் முட்டி போட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். நானும் பார்த்தேன். அந்த இடத்தில் சிறிது காரை பெயர்ந்திருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, கற்பனை செய்து பார்த்தால் கொஞ்சம் சிலுவைக் குறி போலத் தெரிந்தது. மற்றபடி ஒன்றும் தெரியவில்லை.

அமுதாவையும் சிலுவைச் செல்வியையும் பார்த்தேன். அவர்கள் மும்முரமாக ஜபித்தபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் சென்றதும் வெளியில் போகலாம் என்றேன். சிலுவைச் செல்வியும் அமுதாவும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அந்தக் கசகசப்பையும் சத்தத்தையும் விட்டு நான் வெளியில் வந்து நின்றேன்.

அரை மணி நேரத்துக்குப் பிறகு அமுதாவும் சிலுவைச் செல்வியும் வருத்தத்துடன் வெளியே வந்தார்கள். அவர்கள் முகமே விஷயத்தைச் சொன்னது. இருந்தாலும் கேட்டேன்.

’உனக்குத் தெரிஞ்சதா சிலுவை?’

’இல்லப்பா... ’ என்று அழுதபடிச் சொன்னாள் சிலுவைச் செல்வி.

அமுதாவைப் பார்த்தேன், அவள் தான் ஏதோ குற்றம் செய்துவிட்டதால்தான் ஏசு தனக்குக் காட்சி தரவில்லை என்றாள்.

’இல்ல அமுதா, எனக்கும் தெரியலை’ என்றேன்.

அமுதாவுக்கும் சிலுவைச் செல்விக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

நாங்கள் மேலும் பலரை விசாரித்தோம். எல்லோரும் தங்களுக்கு ஏசு காட்சி தந்ததாகப் பரவசத்துடன் சொன்னார்கள். சிலுவைச் செல்வியும் அமுதாவும் மறுபடியும் அழ ஆரம்பித்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்குச் சென்றேன். நாங்கள் மூவரும் விரக்தியுடன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அப்போது பக்கத்து அறையில் பேச்சுச் சத்தம். யாரு? ஆ...! எஸ்தரிடம் அவள் தோழிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

’என்ன நடந்துச்சு எஸ்தர்? இப்பவாவது சொல்லு.’

’உங்களுக்கு எல்லாம் விசிட்டர்ஸ் வந்து, போயிட்டீங்க. எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை. சர்ச்சுக்கும் போகப் பிடிக்கலை. அதான் பிரேயர் ஹால்ல போய்த் தனியா உட்கார்ந்து யோசிச்சிட்டிருந்தேன். என்னைப் பார்க்க யாரும் வரமாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சதும் எனக்கு அழுகை வந்துருச்சு. அந்த நேரம் பார்த்து ஏசு பைத்தியம் பிடிச்ச லூசு வந்துச்சு...’

’எத்தனையோ லூசு இருக்கு. எந்த லூசு? ’

’அங்காளப் பரமேஸ்வரி. என்னன்னு காரணம் கேட்டாள். ஒரு இந்துப் பிள்ளை எப்படி ஏசு மேல நம்பிக்கை வச்சிருக்கா பாருன்னு அன்னிக்கு வார்டன் அவளைக் காட்டி, என்னைத் திட்டினது ஞாபகம் வந்துச்சு. உடனே இந்த லூசை இன்னும் லூசாக்கிடலாம்னு முடிவு பண்ணி, ஏசு தெரியறார்னு அந்தக் காரையைக் காட்டினேன். அவ்வளவுதான்! அவ முட்டி போட்டு ஜபிக்க ஆரம்பிச்சிட்டா. திடீர்னு சத்தம் போட்டு அழுதாள். நானே பயந்துட்டேன்! அவளைத் தேடிக்கிட்டு அவளுடைய ஃப்ரெண்ட்ஸ் வந்தாங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா எல்லோருக்கும் ஏசு தெரிய ஆரம்பிச்சார்!’

’அடிப்பாவி! எல்லாம் உன்னுடைய வேலைதானா? எங்களுக்குத் தெரியலையேன்னு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. உன்னை என்ன பண்ணலாம்?’

‘ஒண்ணும் பண்ண வேணாம். நான் இப்ப சந்தோஷமா இருக்கேன். மத்த பிள்ளைகளோட அம்மா, அப்பா எல்லாம் அன்பா விசாரிச்சாங்க. ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. கூட்டம் கூடி, நிலைமை கட்டு மீறிடுச்சு. இப்ப வெளியில் இருந்து ஃபாதர் எல்லாம் வரப்போறாங்க. சிறப்புப் பிரார்த்தனை நடக்கப் போகுது’ என்று சொல்லி முடித்தாள் எஸ்தர்.

நாங்கள் மூவரும் ஆச்சரியத்தில் உட்கார்ந்திருந்தோம்.

ஹாஸ்டல் மணி ஒலித்தது.

’என்னடி பார்க்கறீங்க? இன்னும் கொஞ்ச நாளைக்கு வார்டன், டீச்சர் எல்லாம் என்கிட்ட எவ்வளவு மரியாதையா நடந்துக்கப் போறாங்கன்னு பாருங்க!’ என்றபடி எழுந்தாள் எஸ்தர்.

மறுநாள் உணவு வேளையில் வழக்கம் போல இட்லிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் எஸ்தர். வார்டன் கண்டும் காணாதது போல நகர்ந்து விட்டார்! நான், அமுதா, சிலுவைச் செல்வி மூவரும் பட்டென்று சிரித்துவிட்டோம். வார்டன் திரும்பினார். நாங்கள் மூவரும் முதல் முறையாக எழுந்து நின்றோம்!

Wednesday, June 9, 2010

இவர்களா காப்பாற்றப் போகிறார்கள்?

அந்தக் கொடூரம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் மரண ஓலங்கள் நிற்கவில்லை. உயிர் அற்ற உடல்களும் எலும்புக்கூடுகளும் கண் முன்னே வந்து நியாயம் கேட்கின்றன. பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போய்விட்டனர். இந்த 26 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் இல்லை. தண்ணீரிலும் மண்ணிலும் கலந்த நஞ்சால் இன்று பிறக்கும் குழந்தை கூட அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகிக்கு இணையானது இந்தியாவின் போபால்.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கொள்கைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்த காரணத்தால் பல நாடுகளும் இதனை அனுமதிக்கவில்லை. ஆனால் மக்களின் உயிர் மேல் மதிப்பு இல்லாத இந்திய அரசு இருகரம் நீட்டி, அதனை அரவணைத்தது. நிறுவனம் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தபோது சோதனைக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பு விஷயங்கள் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதை எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும் அலட்சியம் தொடர்ந்திருக்கிறது. அந்த அலட்சியத்துக்கு விலையாக ஒன்றும் அறியாத அப்பாவிகள் பலியாகியிருக்கின்றனர். பல குடும்பங்களில் ஒருவர் கூட மிச்சம் இல்லை. கை, கால் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல், கேன்சர், தோல் வியாதிகள் என்று உயிர் பிழைத்த பலரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. 8 பேருக்கு 2 ஆண்டு காலம் சிறைத் தண்டனை அளித்த கையோடு, ஜாமீனையும் வழங்கி சாதனை செய்திருக்கிறது நீதிமன்றம்!. மீண்டும் ஒருமுறை இந்திய மக்கள் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் தலைகுனிந்து நிற்கிறார்கள். கால் நூற்றாண்டு போராட்டத்துக்கு ஒன்றும் பலன் இல்லை.

மிகக் குறைந்த காப்பீட்டுத் தொகை வழங்கியதோடு எங்கள் கடமை முடிந்தது என்று கழன்றுகொண்டுவிட்டது யூனியன் கார்பைட் நிறுவனம். யூனியன் கார்பைடின் தலைவர் வாரன் ஆண்டர்சன்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜாமீனில் வெளிநாடு சென்றுவிட்டார். இதுவரை இந்தியா திரும்பவில்லை. தீர்ப்பு வந்த திங்களன்று வரை சொகுசாக அவருடைய இல்லத்தில் வசித்திருக்கிறார். இப்போது அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. தீர்ப்பில் அவரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை! குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவர் மரணமடைந்து விட்டார். மீதி ஏழு பேரும் அந்த நிறுவனத்தின் இந்திய உயர் அதிகாரிகள்.

மக்களுக்காகத்தான் அரசாங்கம். ஆனால் நீண்ட கால வழக்கு இழுத்தடிப்பு, குற்றவாளிகள் தப்பித்தல் போன்ற காரணங்களுக்கு இந்திய அரசே துணை நின்றிருக்கிறது! இதில் ஒரு குற்றவாளிக்கு பத்மபூஷன் விருது (வழக்கு நடந்ததால் வழங்கப்படவில்லை) வேறு அறிவித்திருக்கிறது!

குற்றவாளிகள் பலரும் இப்போதே முதுமையில் இருக்கிறார்கள். இதற்குப் பிறகு மேல்முறையீடு செய்து, ஒருவேளை தண்டனை கிடைத்தால் அதை அனுபவிக்க யார் இருக்கப் போகிறார்கள்? ருச்சிகா கிர்ஹோத்ரா வழக்கிலும் இதுவே நடந்திருக்கிறது. பணம், அதிகாரம், அரசியல் பலம் இருந்தால் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு மிகவும் கேவலமானது.

சொந்த நாட்டு மக்களின் உயிர்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள விரும்பாத இந்திய அரசாங்கமா ஈழத்தில் அழிந்துகொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்றப் போகிறது?

Sunday, June 6, 2010

ஏதோ ஒன்று குறைகிறது!

இரண்டு நாள்களாகக் கவனித்து வருகிறேன். எங்கள் அபார்ட்மெண்ட் குழந்தைகளில் ஆறு பேர் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, மாடியில் குழுமிவிடுகிறார்கள். ஒரு பெட் ஷீட் விரித்து உட்கார்கிறார்கள். யோகா, ஓடிப்பிடித்தல், பாட்டு, நடனம் என்று சில நிமிடங்களுக்குள் காட்சி மாறுகிறது. அருகில் ஒரு பெரிய பாட்டில் தண்ணீர், ஒரு ஃபேண்டா பாட்டில், சிப்ஸ், முறுக்கு...! ஓ... இவர்கள் எல்லோரும் பிக்னிக் வந்திருக்கிறார்கள்! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு தின்பண்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அடடா! அதே கான்செப்ட்!

என்னுடைய எட்டு வயதில் ஒரு முறை எங்கள் கிராமத்துக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தோம். சினிமாவில் வரும் கிராமங்களைப் போல அவ்வளவு பசுமையான கிராமம் அல்ல. கம்மாய், ஊருணி, கோயில், இடிந்த அரண்மனை, கருவேலங்காடு, வயல்காடு என்று இருக்கும். என் வயதை ஒத்த பெண்கள் கூட அப்போதே சமைக்க, தண்ணீர் எடுக்க, வீட்டு வேலை செய்ய என்றுதான் இருப்பார்கள். அந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு விளையாட என்று அவர்களுக்குத் தனியாக நேரம் இருக்காது. ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையில் விளையாட வருவார்கள். சிறிது நேரத்திலேயே அவர்களைத் தேடிக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். இதனால் இந்தப் பெண்கள் எல்லாம் சேர்ந்து ‘கூட்டாஞ்சோறு’ என்று ஒரு ரகசிய விளையாட்டை ஆண்டுக்குச் சிலமுறை விளையாடுவது வழக்கம்.

நான் சென்றிருந்தபோது அவர்கள் விளையாடத் திட்டமிட்டிருந்தனர். இந்தக் கூட்டத்துக்கு என் அத்தைப் பெண் நாகவள்ளிதான் தலைவி. அவர் தோழிகள் ஐந்து பேர், அவர்களுடன் நாகவள்ளியின் தங்கை மீனா. அவர்களைவிட இளையவர்களைப் பொதுவாக அவர்கள் இந்த விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. மீனாவின் சிபாரிசில் என்னைச் சேர்த்துக்கொண்டார் நாகவள்ளி. பல நாள்களாக அவர்கள் யோசித்து திட்டத்தைத் தீட்டி வைத்திருந்தார்கள்.

இந்த முறை அவர்கள் (நாங்கள்!) சமைக்கப் போவது கேசரி. ரவை, சர்க்கரை, எண்ணெய், விறகு, பாத்திரம், குடம், தீப்பெட்டி என்று ஆளுக்கு ஒரு பொருளை யார் யார் கொண்டுவருவது, எத்தனை மணிக்குக் கிளம்புவது என்று முடிவு செய்தார்கள். எந்த வீட்டிலும் அனுமதி கிடைக்காது என்பதால் இந்த விளையாட்டு ரகசியமாகவே விளையாடப்படும். நான் மட்டும் அம்மாவிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தேன்.

மறுநாள் காலை வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு ஒவ்வொருவராக இடிந்த அரண்மனைக்குப் பின்பக்கம் வந்து சேர்ந்தார்கள். கருவேல மரங்களுக்கு நடுவில் பயணம் ஆரம்பித்தது. ஆள் அரவம் இல்லாத இடமாகப் பார்த்து ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். சற்றுத் தூரத்தில் கம்மாய் இருந்தது.

ஒருவர் தண்ணீர் கொண்டுவர, இன்னொருவர் முள் எடுத்து வர என்று பரபரப்பாக இயங்கினார்கள். மூன்று கற்களை வைத்து அடுப்பை உருவாக்கி முள்ளையும் விறகையும் வைத்து எரிக்க ஆரம்பித்தார் நாகவள்ளி. ரவை நிறைய இருந்தது, ஆனால் சர்க்கரை மிகவும் குறைவாக இருந்தது. நாகவள்ளி சர்க்கரை கொண்டு வந்தவளையும் எண்ணெய் கொண்டு வந்தவளையும் திட்டினார். பிறகு ஒருவழியாகச் சமாதானமாகி, கேசரி செய்ய ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் அடுப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு, ஊர்க் கதைகள் பேசினார்கள். ஊரில் நடக்கும் ஒரு காதல் கதையைப் பகிர்ந்துகொண்டார்கள். எனக்கு அவர்கள் பேசுவது புரியா விட்டாலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அரைமணி நேரத்தில் கேசரி தயாராகிவிட்டது. சூடு குறையட்டும் என்று சொல்லிவிட்டு, விளையாட ஆரம்பித்தோம். கேசரி என்பதால் விளையாட்டில் யாருக்கும் அவ்வளவு ஈடுபாடு இல்லை. (அப்போதெல்லாம் கேசரி எப்போதாவது தான் செய்வார்கள்). அருகில் இருந்த பூசணி இலைகளைப் பறிந்து வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கரண்டி கேசரி பரிமாறப்பட்டது.

வண்ணம் சேர்க்காத வெள்ளை நிறக் கேசரியாக இருந்தாலும் ஆர்வத்தைத் தூண்டியது. எல்லோரும் மிகவும் ரசித்து, ருசித்துப் பேசிக்கொண்டே, சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தோம். சர்க்கரை பத்தாமல், போதிய எண்ணெய் இல்லாமல், உப்புமாவுக்குச் சர்க்கரைத் தொட்டு சாப்பிடுவதைப் போலத்தான் இருந்தது அந்த கூட்டாங் கேசரி . ஆனால் எங்கள் யாருக்கும் அப்போது இப்படித் தோன்றவேயில்லை. வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாக வந்த த்ரில், அரட்டை, நாங்களே செய்த இனிப்பு என்ற பெருமிதம் எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு சந்தோஷத்தை அளித்திருந்தது. எல்லோரும் வயிறு நிறைய சாப்பிட்டு, தண்ணீர் குடித்து, சற்று ஓய்வெடுத்தோம். பாத்திரங்களைச் சுத்தம் செய்தோம். அவரவர் பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தோம்.

ஊருக்குள் நுழைந்தவுடன், எதிரில் வந்த ஓர் அம்மா, “ ஏண்டி அங்காளம், எங்கே போயிருந்தே? உங்கம்மா உன்னைக் காணாம்னு தேடிக்கிட்டு இருக்கு’ என்று சொல்லவும் எல்லோரும் தேனீ கூட்டில் கல் பட்டது போல களைந்து சென்றார்கள். நானும் எங்கள் வீடு நோக்கி ஓடி வந்தேன். வழியில் அங்காளத்தின் அம்மா அருகில் இருந்த குச்சியை எடுத்துகொண்டு, “எங்கே போனடி? தனியாளா வேலை செஞ்சிட்டிருக்கேன். தண்ணி எடுக்கப் போறேன்னு கிளம்பினவ இப்பத்தான் வர்றீயா?’ என்றபடி ஓடி வர, அங்காளம் பக்கத்துச் சந்தில் புகுந்து மறைந்தார்.

இன்று நெய் வடிய, முந்திரிப் பருப்பு மிதக்க, பச்சைக் கற்பூர வாசனையுடன் கேசரி செய்தாலும், அந்தக் கூட்டாங் கேசரியில் இருந்த சுவையில் ஏதோ ஒன்று குறைவது போலிருக்கிறது!

Wednesday, May 26, 2010

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் : இந்திய மருத்துவக் கொள்கை

போலி மருந்துகளையும், காலாவதியான மருந்துகளையும் தேடிப்பிடித்து அழிக்கும் பணி ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் மருத்துவக் கொள்கை குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் திரு. சுகுமாரனைத் தொடர்பு கொண்டோம்.

சுகுமாரன், FMRAI (Federation of Medical and Sales Representatives Association of India) அமைப்பின் அனைத்து இந்திய முன்னாள் துணைத் துலைவர். TNMSRA (Tamil Nadu Medical and Sales Representatives Association) அமைப்பில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர். இந்திய மருத்துவக் கொள்கைகள் குறித்து கூர்மையான விமரிசனங்களை பல்வேறு பொதுக்கூட்டங்களில் முன்வைத்து வருபவர். கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவும் விவாதிக்கவும் ஆர்வமாக இருக்கிறார்.

* வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பல இந்தியாவில் சுதந்தரமாக விற்பனை செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது உண்மையா? இந்திய அரசு எப்படி இதனை அனுமதிக்கிறது?
* ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட கிராமப்புறங்களில் ஏழை மக்கள் மீது மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் அவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவ்வப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன. எனில், இந்தியா ஒரு பரிசோதனைக் கூடமாக மாறிவருகிறதா?
* பெருகும் நோய்கள், பெருகும் போலி மருந்துகள்.
* பெருகும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்.

ஆழமாகவும் அகலமாகவும் இன்னும் நிறைய விவாதிக்கலாம். அனைவரும் வருக.

* தேதி : ஜூன் 4, வெள்ளிக்கிழமை
* நேரம் : மாலை 6.30 மணி
* இடம் : கிழக்கு மொட்டை மாடி.
* முகவரி : 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18

Tuesday, May 11, 2010

பள்ளிகள் இப்படிச் செய்யலாமா?

ஒரு பக்கம் பள்ளிகளில் இருந்து இடை நிறுத்தம் செய்யும் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி பல்வேறு அமைப்புகளால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பணி சாதாரணமானது அல்ல.

கல்வியே வியாபாரமாகி விட்ட இந்த நாளில் தனியார் பள்ளிகள், தங்கள் அருமை பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்வதற்காக மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்குகின்றன. சுமாராகப் (!) படிக்கும் பத்தாம் வகுப்புக்குள் நுழையும் மாணவர்களை, டிசி கொடுத்து வெளியே அனுப்பி விடுகின்றன. இதன் மூலம் நூற்றுக்கு நூறு தேர்ச்சி என்று விளம்பரம் செய்து, அதன் மூலம் ஏராளமான மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும், பெற்றோரிடமிருந்து பணத்தைக் கறந்துகொள்ளவும் செய்கின்றன.

தஞ்சாவூரில் ஒரு தனியார் பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்புக்குத் தேறிய முப்பது மாணவர்கள், அந்தப் பள்ளியால் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். முதல் வகுப்பில் இருந்து காசு கொட்டிப் படித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களை, மற்ற பள்ளிகளும் பத்தாம் வகுப்பில் சேர்த்துக்கொள்வதில்லை. பிரைவேட்டாகப் படித்து பரீட்சை எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதன் மூலம் மாணவர்களும் பெற்றோரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குத்தான் பள்ளிகளில் இடம் என்றால் மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வது? சுமாராகப் படிக்கும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, அவர்களையும் படிக்க வைத்து, உயர்த்துவதுதானே ஒரு பள்ளியின் கடமை! நன்றாகப் படிப்பவர்களை மட்டும்தான் சேர்த்துக்கொள்ளும் பள்ளிக்கும் ஜெயிக்கிற குதிரை மீது பணம் கட்டும் ரேஸுக்கும் என்ன வித்தியாசம்?

சென்ற மாதம் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கச் சொல்லி ஊர்வலம் நடத்தினார்கள். ஆங்கிலப் பள்ளிகளின் மேல் மோகம், பணம் கொடுத்துப் படித்தால்தான் நல்ல கல்வி என்று நினைக்கும் மக்களின் மனத்தை இதுபோன்ற ஊர்வலங்களாலும், பிரசாரங்களாலும் மாற்றி விட முடியாது. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

சென்ற ஆண்டு யூனிசெஃப் நடத்திய ஆய்வுகளில் இந்திய அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் கற்கும் திறன் வித்தியாசப்படுகிறது என்கிறது. அதாவது அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தை, மற்ற பள்ளிகளில் இரண்டாம், மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையின் அளவுக்குத்தான் கற்கும் திறனைப் பெற்றிருக்கிறது. இப்படி ஒரு நிலை இருந்தால் எந்தப் பெற்றோர்தான் விரும்பி அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்?

காசு கொடுத்துப் படிக்க வைக்கும் எல்லா பள்ளிகளும் தரம் வாய்ந்தவை அல்ல. சிறிய இடங்களில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், தகுதியான ஆசிரியர்களை வைத்துப் பாடம் நடத்தாமல், குழந்தைகளின் மேல் போதிய அக்கறை இல்லாமல் இருக்கும் பள்ளிகளும் ஏராளமாக இருக்கின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்து இதுபோன்ற பள்ளிகளில் சேர்த்துப் பணத்தைக் கொடுத்துவிட்டு, நம் குழந்தைகள் படித்து, உயர்ந்த இடத்தை அடைந்துவிடுவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள். இந்த மாயையிலிருந்து எப்படி விடுவிப்பது?

மதிப்பெண் என்பது என்ன? மனப்பாடம் செய்து ஒப்பித்து மதிப்பெண் வாங்கினால் மட்டும் ஒருவர் புத்திசாலியாகி விட முடியுமா?

காலம் காலமாக இருந்து வரும் மெகாலே கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். பள்ளி என்றால் பயந்து அலறாமல், விருப்பத்துடன் கல்வி கற்க குழந்தைகள் வர வேண்டிய நிலை வேண்டும். மாறி வரும் உலகத்தைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து, அவர்களை அப்டேட் செய்துகொள்ள வைக்க வேண்டும். இப்படி அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயரும்போது தனியார் பள்ளிகளின் மேல் இருக்கும் மோகம் விலகும்.

ஐஐஎம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு முன்பே பரிசோதித்து, தகுதியான மாணவர்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஓர் அடிப்படைக் கல்விக்கு, ஏற்கெனவே அந்தப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களை வெளியேற்றுவது என்பது எவ்விதத்தில் நியாயம்?

Friday, April 16, 2010

விவாகரத்து என்றொரு வேதனை!


மீண்டும் மீண்டும் அந்த முகங்கள் நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கின்றன. இன்று அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்ன நினைப்பார்கள்? எதிர்காலம் அவர்களை பட்டுக்கம்பளத்துடன் வரவேற்குமா, இல்லை கரடுமுரடான பாதைகளில் இட்டுச் செல்லுமா? என்ன? எப்படி? ஏன்சதா இந்தக் கேள்விகள் ஆட்டம் போடுகின்றன.

என் தோழிக்காகச் சென்னை உயர்நீதிமன்றம் சென்றேன். கேஸ் கட்டுகளும் கறுப்பு ஜாக்கெட்டுமாக வழக்கறிஞர்கள், பல்வேறு விதமான மக்கள், டீ, காபி விற்பவர்கள் என்று கூட்டம். பல கட்டடங்களைக் கடந்து ஒரு கட்டடத்துக்குள் நுழைந்தோம். பெரிய ஹால். முழுவதும் மனிதர்கள். நடுவில் கொஞ்சம் வழக்கறிஞர்கள். நீதிபதிக்கு அருகில் சிலர். அவருக்கு இடது பக்கத்தில் ஒரு கூண்டு. நான்  நினைத்துக்கொண்டிருந்த நீதிமன்றத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. ஒருவேளை குடும்ப நீதிமன்றம் என்பதால் இப்படி இருக்கிறதோ என்னவோ!

நீதிபதி கேஸ் கட்டைப் பிரித்துப் படித்து, வாதி, பிரதிவாதி வந்திருக்கிறார்களா என்று பார்த்து, வழக்கறிஞரிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு வெளியில் இருக்கும் அறைக்குள் நுழைந்துவிட்டார் வழக்கறிஞர். அறையை விட்டு வெளியில் வந்தோம். வராண்டாவில் போடப்பட்டுள்ள இருக்கை முழுவதும் ஆள்கள் அமர்ந்திருந்தார்கள். எல்லோருக்கும் 30 - 35 வயதுக்குள்தான் இருக்கும். சில காலங்களுக்கு முன்பு  ஜோடியாக இருந்தவர்கள், இன்று தனித்தனி தீவுகளாக அமர்ந்திருந்தார்கள். என்னதான் விவாகரத்து என்று வந்துவிட்டாலும் சிலரின் முகங்களில் ஒருவித தர்மசங்கடம் தெரிந்தது. அம்மா, அப்பா, உறவினர்களுடன் வந்தவர்கள் மத்தியில் சிலர் தனியாளாகவும் தைரியமாகவும் இருந்தார்கள்.

ஒரு மணிக்கு மேல் விவாகரத்துக்கான டாகுமெண்ட்கள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஜோடியாக அழைக்கப்பட்டார்கள். பெயர் அறிவித்தவுடன் வெவ்வேறு பக்கங்களில் இருந்து ஆணும் பெண்ணும் நீதிபதி அறைக்கு முன் வந்து நின்றார்கள். வழக்கைப் பொறுத்து இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள் விவாகரத்து செய்து, அனுப்பிக்கொண்டிருந்தார் நீதிபதி.

ஏற்கெனவே மனத்தளவில் பிரிந்திருந்த தம்பதி இன்றுடன் சட்டப்பூர்வமாகப் பிரிகிறார்கள். இந்த நேரத்திலும் இந்தப் பெண்ணின் கணவன் யார், அந்த ஆணின் மனைவி யார் என்று பார்ப்பதில் ஆர்வம் ஏன் வந்தது என்று தெரியவில்லை. ஜீன்ஸ், குர்தா, தடித்த தாலி செயின், பட்டையான மெட்டியுடன் இருந்த ஒரு பெண் மிகவும் சாதாரணமாகச் சிரித்துக்கொண்டே இருந்தார். அவரின் கணவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இருவரும் விவாகரத்துப் பெற்றுத் திரும்பினார்கள். அப்போதும் அதே சிரிப்பு! பின்னால் வந்த முன்னாள் கணவர், ‘எக்ஸ் யூஸ் மீஎன்று அழைத்தார். அந்தப் பெண் திரும்பிய உடன், ‘பெஸ்ட் ஆப் லக்என்று கையை நீட்டினார். அவரும் கை குலுக்கிவிட்டு வேகமாக நடந்தார்.

சில பெண்கள் கண்கலங்கியபடி வந்தார்கள். இரண்டு ஆண்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வலியில் இருந்து விடுதலை  அடைந்த நிம்மதி பல ஜோடிகளிடம் தெரிந்தது. 

எல்லா முகங்களும் நல்ல முகங்களாகவே இருந்தன. ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்து திருமணம் செய்தவர்கள், பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள்தான் இன்று இங்கு நின்றுகொண்டிருக்கிறார்கள்.  பேராசை, சந்தேகம், புரியாமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, துன்புறுத்தல், ஆதிக்கம் செலுத்துதல்... என்ன பிரச்னையாக இருக்கும்? நல்லவனா (ளா), கெட்டவனா (ளா) என்று பார்க்கும் மாயக் கண்ணாடி நம்மிடம் இல்லை. வாழ்ந்து பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

விவாகரத்து என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். யாருடைய வலியையும் அடுத்தவர்களால் முழுதாக உணர்ந்துகொள்ள முடியாது. விவாகரத்து ஆன ஆண்களுக்கு இந்தச் சமூகம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு? பெற்றோர், உறவினர் துணை வேண்டியிருக்கிறது. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இருக்கிறது.  பொருளாதாரப் பிரச்னையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஓர் ஆணைப் போலப் பெண்ணால் திருமணம் முறிவு ஏற்பட்டவுடன்  மறுமணம் பற்றி யோசிக்க முடியாது. வயதான ஆண்களும் இரண்டாம் தாரம் செய்யும் ஆண்களும் குழந்தைகள்இல்லாத  விவாகரத்துப் பெற்ற பெண்ணை எதிர்பார்க்கும் அளவுக்குத்தான் அவர்களின் முற்போக்கு வளர்ந்திருக்கிறது! 

முதல் திருமணம் கொடுத்த பயத்திலும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலும் பெரும்பாலான பெண்கள் மறுமணம் பற்றி யோசிப்பது கூட இல்லை. அவர்கள் வாழ்க்கை அவ்வளவுதான்.  தான் சந்தோஷமாக வாழ முடியாத இடத்தில் தன் குழந்தைகள் எப்படி சந்தோஷமாக இருக்கும்?’ என்ற எண்ணமும் தாய்ப்பாசமும் பெண்களுக்கு இங்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன. பெண்களின் இந்த எண்ணம் ஆண்களுக்குச் சாதகமாகிவிடுகிறது. மீண்டும் ஒரு திருமணத்துக்குப் புது மாப்பிள்ளையாக மணமேடை ஏற வைத்துவிடுகிறது.

படித்து, நல்ல வேலையில் இருக்கும் பெண்கள் பொருளாதாரப் பிரச்னையில் இருந்து தப்பி விடுகிறார்கள். என்னதான் டிகிரி படித்திருந்தாலும் வேலை செய்யாத, வெளியுலகம் தெரியாத பெண்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினமாக அமைந்துவிடுகிறது. கணவனால் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும், ‘ எப்படியாவது திருந்த மாட்டானா? குழந்தைகளுக்காகவாவது விவாகரத்து வேண்டாம் என்று சொல்ல மாட்டானா? கஷ்டமோ, நஷ்டமோ அவனுடன் மீதிக்காலத்தை ஓட்ட மாட்டோமாஎன்று பெண்கள் நினைக்க இதுதான் காரணம்.

பெண்களை ஏதோ படிக்க வைத்து, கல்யாணம் செய்து கொடுத்துவிடக்கூடாது. வேலைக்குக் கண்டிப்பாக அனுப்ப வேண்டும். வெளியுலக அனுபவம் தைரியத்தைக் கொடுக்கும். சிறிய வயதிலேயே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டும். ஒரு மனிதன் நல்லவனா என்பதை ஜாதகமோ, ஓரிரு சந்திப்புகளோ காட்டிவிட முடியாது. எனவே எப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்தாலும், அதைச் சந்திக்கப் பெண்களைத் தயார் செய்ய வேண்டும்.  பிரச்னை வரும்போது பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.  மண முறிவுக்குப் பிறகு இருக்கும் வாழ்க்கை கடினமானதுதான், ஆனால் இல்லறத்தில் ஏற்பட்ட இன்னல்களை விடக் கடினமானது அல்ல என்று புரிய வைக்க வேண்டும்.    கல்யாணம் முடிந்ததும் கடமை முடிந்தது என்ற போக்கு இன்று பெற்றோர்களுக்கு நிச்சயம் இல்லை. 

துவரை ஐந்து ஜோடிகள் தனிப் புறாக்களாகக் கிளம்பினார்கள். அருகில் இருந்த ஓர் அம்மா, “இந்த வயசிலேயும் எங்க வீட்டுக்காரர் கோவிச்சுட்டுப் போறார் பாருங்க. இவர் படுத்தலுக்கு நான்தான் விவாகரத்துக்கு வந்திருக்கணும். பிரச்னையே இல்லாம என் பையனும் மருமகளும் விவாகரத்துக்கு வந்திருக்காங்க. எல்லாம் விளையாட்டா போச்சுஎன்றார் கவலையுடன்.   

பிடிக்காமல், சரிவராமல், சண்டை சச்சரவுகளுடன் சேர்ந்து வாழ்வது இயலாத காரியம்தான். அதேசமயம் ஈகோ, மற்றவர்கள் தலையீடு, சகிப்புத்தன்மை குறைதல் போன்ற அற்ப காரணங்களுக்காக விவாகரத்துக்கு வருவதும் வேதனையான விஷயம்தானே.

எதையோ எழுதிக் கொண்டிருந்த ஒரு வழக்கறிஞர் திரும்பி, பர்தா அணிந்த பெண்ணை அழைத்தார். அடிச்சாராம்மா?’.  “ஆமாம் சார். கல்யாணம் நடந்த ரெண்டு வாரத்துல அவரும் வீட்ல உள்ளவங்களும் சேர்ந்து...என்று அந்த இருபது வயதுப் பெண் சொல்லிக்கொண்டிருந்தார்...

Wednesday, April 7, 2010

உதவுங்கள்...

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBIN 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

Saturday, March 27, 2010

சுத்தம்.. சோறு.. சிங்கப்பூர்!

மிகப் பிரம்மாண்டமான விமான நிலையம். விமான நிலையத்துக்கு நிகரான ரயில் நிலையம். ரயில் நிலையத்தின் வாயிலில் பேருந்து நிலையம். டாக்சி என்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லாமல், போக்குவரத்து மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது சிங்கப்பூரில். பத்து, பதினைந்து டாலர் கொடுத்து அட்டைகளை வாங்கிவிட்டால் போதும். ரயிலிலும் பேருந்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏறும்போது ஒரு முறை, இறங்கும்போது ஒரு முறை அட்டையைத் தேய்க்க வேண்டும். பணம் காலியாகும் முன் எச்சரிக்கை மணி வருகிறது.



இரண்டு, மூன்று தளங்கள் கொண்ட ரயில் நிலையங்கள். ஒரு ரயிலிலிருந்து இன்னொரு ரயிலில் பயணம் செய்ய, எஸ்கலேட்டரில் ஏறி, இறங்கினால் போதும். ரயில், பேருந்துகள் குளிர்சாதன வசதிகளுடன் இருக்கின்றன. எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அலுப்பு வரவில்லை. வரப் போவது என்ன ஸ்டேஷன், நாம் இறங்கும் ஸ்டேஷன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது போன்ற விவரங்கள் மானிட்டரில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது தவிர, சீனம், தமிழ், ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. யாருக்கும் உதவி தேவையிருக்கவில்லை. அளவான வேகத்தில் பேருந்து செல்கிறது. நிறைய பேருந்துகள் இருப்பதால் நெருக்கியடிக்கும் கூட்டம் இல்லை. பேருந்திலும் ரயிலிலும் ஒரு சின்னக் காகிதமோ, குப்பையோ கண்ணில் படவில்லை. காகிதம், புகை, உணவு, துரியன் பழம் ஆகியவற்றுக்குத் தடை என்று போட்டிருக்கிறார்கள்.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகனங்களோ, மனிதர்களோ இல்லாவிட்டாலும் கூட பேருந்து ஓட்டுனர்கள் (கேப்டன்கள்) சிக்னலை மதிக்கிறார்கள். சாலையை அவசரமாகக் கடக்க வேண்டும் என்றாலோ, வயதானவர்கள் கடக்க வேண்டும் என்றாலோ சாலை ஓரத்தில் இருக்கும் பட்டனைத் தட்டிவிட்டு, கடக்கலாம்.

ரயில், பேருந்து பயணங்களில் இரைச்சல் இல்லை. மொபைல் போன், லேப்டாப், புத்தகங்களில் மூழ்கிவிடுகிறார்கள். மொபைல் போன் அழைப்புகள் கூட வெளியே கேட்கவில்லை. அமைதியாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென்று “ என் பேரு மீனா குமாரி... என் ஊரு கன்னியாகுமாரி’ என்று நம்மவர்கள் தொலைபேசி அலறுகிறது. கண்ணாடியால் ஆன பெரிய ஜன்னல்கள் வழியே ஊரை ரசித்துக்கொண்டே செல்ல முடிகிறது.

எங்கும் விண்ணை முட்டும் அடுக்குமாடிக் கட்டடங்கள். அகலமான தார்ச் சாலைகள். ஆங்காங்கு தெரியும் நிலப் பரப்புகளில் பச்சைப் பசேல் என்று புற்கள் வளர்க்கப்பட்டிருப்பதால், தரையைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.




லிட்டில் இந்தியா என்று ஓர் இடம். தமிழர்களால் (தமிழர்களுக்கு) நடத்தப்படும் கடைகள். ஒரு கடையில் இளையராஜாவும் இன்னொரு கடையில் சித்ராவும் பாடிக்கொண்டிருந்தார்கள்! மல்லிகை, ரோஜா, தாமரை, கதம்பம் என்று எல்லாப் பூக்களும் மாலைகளும் கிடைக்கின்றன. முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரையிலிருந்து பசலைக் கீரை வரை வாடாமல் வதங்காமல் அணிவகுத்து நிற்கின்றன. காய்கள், பழங்கள் என்று எதற்கும் குறைவில்லை. கோமள விலாஸ் உணவு விடுதியில் இட்லி, தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி, பூரி என்று டிபன் வகைகளும் சாம்பார், ரசம், மோர், மூன்று காய்கள், பாயசத்துடன் முழு மதிய உணவும் கிடைக்கின்றன. தஞ்சாவூர் டிகிரி காபிக்குப் பெரும்பாலும் தமிழர்களும் சில சீனர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள். மளிகை, நகை, துணி, எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் என்று வரிசையாகக் கடைகள். இதே போல் சைனா டவுன் என்ற இடத்தில் சீனர்களின் கடைகள், உணவு விடுதிகள்.


லிட்டில் இந்தியாவைத் தவிர, பெரிய மால்களில் இந்திய உணவுகள் கிடைக்கின்றன. பெரிய ஜூஸ் தம்ளர்களில் காபி அல்லது டீயுடன் உணவைச் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சீன உணவுகளைப் பற்றிய செய்திகள் எல்லாம் பொய்க்கும் விதத்தில் ஆச்சரியத்தை அளித்தன. இருபது வகை உணவுகள் கண் முன்னே வைக்கப்பட்டிருந்தன. மீல்ஸ் என்றால் ஒரு கப் சாதம், இரண்டு காய், ஒரு மீன் அல்லது கோழித் துண்டு சேர்ந்தது. சைவம் என்றால் மூன்று காய்கள் வாங்கிக் கொள்ளலாம். நம் விருப்பப்படி காய்களைப் பரிமாறுகிறார்கள். ஒரு காய் குழம்பு போன்று இருக்கிறது. அதைச் சாதத்தின் மேல் ஊற்றுகிறார்கள். உருளைக் கிழங்கு, சோயா உருண்டைகள், கீரை என்று தட்டு நிறைய வைத்துத் தருகிறார்கள். புதுச் சுவையாக இருந்தாலும் எல்லாமே சாப்பிடக்கூடிய ருசியில் இருந்தன. காரம் இல்லை. புளி இல்லை. எண்ணெய் இல்லை. உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவுகள்! பார்சல் என்றால் ஒரே டப்பாவில் சாதம், மூன்று காய்களைப் போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். பொரித்த கோழி, வாத்து இறைச்சிகளும் மீன்களும் எங்கும் கிடைக்கின்றன. பல்வேறு காம்பினேஷன் ஜூஸ்கள்!

சிங்கப்பூரின் மிக அழகான விஷயம் சீனப் பெண்கள். அளவான உயரம், ஒல்லியான உடல், வெண்ணெய் போன்ற நிறத்தில் மெழுகு பொம்மை போல் அத்தனை அழகாக இருக்கிறார்கள். தோடுகளோ வேறு எதுவும் நகைகளோ அணியாமல் மேக் அப் இல்லாமல் அட்டகாசமாகத் தெரிகிறார்கள். குறிப்பிட்ட அளவு சீனர்கள் தமிழர்களைப் போல் தோடு, வளையல், செயின் எல்லாம் அணிந்திருக்கிறார்கள். முழு பேண்ட், முக்கால் பேண்ட்களை வயதான பெண்களில் இருந்து இளம் பெண்கள் வரை அணிகிறார்கள். பதின்ம பருவத்துப் பெண்களை மிகக் குட்டையான டைட் டிராயர்களில் அதிகமாகப் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்வாகு அது போன்ற உடைகளையும் மிகவும் நாகரிகமாகவே காட்டியது.

விமான நிலையம், பேருந்து, ரயில், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் எங்கும் ஓர் ஆண்- ஒரு பெண் என்ற அளவில் பெண்கள் வேலை செய்கிறார்கள். எந்த நாட்டினராக இருந்தாலும் அவர்களின் தாய் மொழியை, பிரைவேட்டாகவாவது படித்திருக்க வேண்டும் என்பது சிங்கப்பூர் சட்டமாம். தரமான பள்ளிகள், கல்லூரிகள் இருக்கின்றன. படித்தவர்கள், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தவர்களாகத் தெரிகிறார்கள். படிப்பு, வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

சாலை போடும் வேலைகள், கிரேன் ஆப்பரேட்டர்கள், ஆழ்குழாய் கிணறு தோண்டுகிறவர்கள் என்று கடினமான வேலைகளைச் செய்யக் கூடியவர்கள் தமிழர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷ்காரர்களாக இருக்கிறார்கள். அதிலும் பங்களாதேஷ்காரர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுபோன்ற இடங்களில் சீனர்கள் கண்களுக்குத் தென்படவில்லை. விமான நிலையம் போன்ற இடங்களில் உள்ள உணவு விடுதிகளில் பெரும்பாலும் தமிழ்ப் பெண்கள் வேலை செய்கிறார்கள்.

மக்கள் அதிகம் புழங்கக்கூடிய இடங்களில் கூடத் தூசியையோ, குப்பையையோ, எச்சிலையோ பார்க்க முடியவில்லை. அத்தனை சுத்தம். சுவர்களில் ‘தலைவரின் பிறந்தநாள்’ என்ற கிறுக்கல்கள் இல்லை. முகத்தில் அறையும் ஃபிளக்ஸ்கள் இல்லை. காதைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள் இல்லை. பத்துப் பேர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர் தமிழர்களாக இருக்கிறார்கள்.


சின்ன நாடாக இருப்பதால் இருக்கும் இடத்துக்குள் அத்தனைப்பேரும் வாழ வேண்டிய கட்டாயம். அதனால் பத்து, இருபது மாடிக் கட்டடங்கள் மக்கள் குடியிருப்புகளாக இருக்கின்றன. தனி வீடுகள் மிகவும் குறைவு. மக்கள் ஓரளவு(!) வசதியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் டவுன் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மிகப் பெரிய ஹால், மூன்று அறைகள், நவீன சமையல் அறை, பால்கனியுடன் இருக்கிறது வீடு. வீட்டில் தண்ணீர் தேங்காமல், சுத்தமாக வைத்திருக்கவேண்டும். டவுன் கவுன்சில் அடிக்கடி சோதனை செய்கிறது. சுத்தமாக இல்லாவிட்டால் அபராதம் கட்டவேண்டியதுதான். குடியிருப்புகளின் கீழே குழந்தைகள் விளையாடுவதற்கு என்று மைதானம், சறுக்கு மரம், ஊஞ்சல் என்று நிறைய வசதிகள். கார், சைக்கிள் வைக்க தனி இடம். குடியிருப்புக்குள் இருந்து சாலைக்கு சைக்கிளில் வர, தனி பாதை அமைத்திருக்கிறார்கள்.


லிஃப்டில் ஏறும்போது ஏதாவது பிரச்னை என்றால், லிஃப்டுக்குள் என்ன செய்ய வேண்டும், யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று விவரங்கள் உள்ளன. நாங்கள் மாட்டிக் கொண்டபோது, தொலைபேசியில் புகார் செய்து ஐந்து நிமிடங்களுக்குள் டவுன் கவுன்சிலில் இருந்து ஆள்கள் வந்துவிட்டார்கள்.

Thursday, March 4, 2010

சாமி! பிடிபட்டால் ஆசாமி!


ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு விஷயம் விவாதத்துக்குரியதாக அமைந்து விடுகிறது. இந்த வாரம் நித்யானந்தர். இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. நூற்றுக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் சாமியார்களில் இருந்து ஆயிரம், லட்சம், கோடிகளில் புரளும் சாமியார்கள் வரை நாம் பார்த்திருக்கிறோம். பிடிபடுகிறவரை சாமி. பிடிபட்டால் ஆசாமி.

உண்மையில் இந்தச் சாமியார்கள் வானத்திலிருந்து குதித்தார்களா? சாதாரண ராஜசேகராக இருந்தவனை முப்பத்து மூன்று வயதுக்குள், அதுவும் பொதுவாழ்க்கைக்கு வந்து ஏழாண்டுகளுக்குள் மிகப் பெரிய கோடீஸ்வரனாகவும், நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தன் (பக்தி) வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பவனாகவும் மாற்றியது யார்?

நான்கு ஸ்லோகம் சொல்லி, தெளிவாகத் தமிழ் பேசிவிட்டால் குட்டிச் சாமியார். ஒரு மரம் சற்றுக் கோணலாகக் காட்சியளித்தால் ஏதோ ஒர் உருவம் கொண்ட கடவுள். தெருவோரங்களில் கிடக்கும் மைல்கல் கூட கடவுள். இவர் பால் குடிக்கிறார், அவர் பேப்பர் படிக்கிறார்... இப்படியெல்லாம் கொண்டாடுவது யார்?

சாமானியர்கள் வாழவே முடியாத அளவு தினம் தினம் உயரும் விலைவாசி பொருளாதாரப் பிரச்னை ஒருபக்கம். தேர்வில் வெற்றி பெறுவோமா, வேலை கிடைக்குமா, கிடைத்த வேலையைத் தக்க வைக்க முடியுமா என்ற பயம் ஒரு பக்கம். கார், பங்களா, ஷேர் மார்க்கெட் என்று பேராசை ஒரு பக்கம். தொழிலில் போட்டி, கறுப்புப் பணம், கடன் என்று உழலும் கூட்டம் ஒரு பக்கம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள். இவற்றுக்குத் தீர்வு சொல்ல பூஜையறயில் இருக்கும் தெய்வங்களால் முடிவதில்லை. தெருவில் இருக்கும் தெய்வங்களால் முடிவதில்லை. ஊர் விட்டு ஊர் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினாலும் பிரச்னை தீர்வதில்லை. யாராவது ஒரு வழி காட்டமாட்டார்களா என்று தவிக்கும்போது இதுபோன்ற சாமியார்களின் தேவை ஏற்படுகிறது.

அந்தத் தேவையைப் (கொஞ்சம்) புத்திசாலித்தனம் கொண்டவர்கள் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். படிப்பு, பல மொழிகள் போன்ற தகுதிகளை வளர்த்துக்கொண்டு, வசீகரிக்கும் பேச்சால் எதிராளியை வீழ்த்தி விடுகிறார்கள். ஹைடெக் உலகம் என்பதால் யோகா, தியானம், மனப்பயிற்சி, வாழும் கலை என்று பல்வேறு பயிற்சிகள், பல்லாயிரக் கணக்கில் கட்டணங்கள் என்று தங்களையும் நவீனமாக்கிக் கொள்கிறார்கள். சிலர் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்துகொள்கிறார்கள்.

படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு எல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது. எல்லோருக்குமே குருட்டு நம்பிக்கைதான்!

வாயிலிருந்து லிங்கம் எடுத்த சாமியார், பழம் தரும் சாமியார், பௌர்ணமி சாமியார், நள்ளிரவு பூஜை செய்யும் சாமியார் என்று பலவித சாமியார்களின் மோசடிகளைத் தெரிந்துகொண்டதும் இவர்கள் கடவுள் மறுப்புக்கொள்கைக்குள்ளோ, பகுத்தறிவுக்குள்ளோ செல்வதில்லை. வேறொரு சாமியாரை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். சுமையை இறக்கி வைக்கவோ, மனம் பாரம் குறையவோ ஓர் ஆளோ, அமைப்போ தேவைப்படுகிறது.

நித்யானந்தர் விஷயத்தில் பிரம்மச்சரியம் பேசுகிற ஒரு சாமியார் இப்படிச் செய்துவிட்டாரே என்ற வருத்தமோ, அதிர்ச்சியோ அல்லது நாம் ஏமாற்றப்பட்டோம் என்ற கோபத்தையோவிட அவர் செய்த காரியம், அது கொடுத்த கிளுகிளுப்புத்தான் இங்கு பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அந்தப் பெண் எந்த நடிகை, வேறு யார் யார்  இப்படி! பார் எப்படி மயக்கறா?’ புவனேஸ்வரி சொன்னது உண்மைதான்...’ - இதுபோன்ற பேச்சுகள்தான் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

சினிமா உலகத்தின் சாதகபாதகங்கள் பலருக்கும் தெரிந்ததுதான். ஒரு நடிகை உடலால், உழைப்பால், ஊதியத்தால் சுரண்டப்படுகிறார். இத்தனை அவமானங்களையும் சந்தித்து வரும் நடிகைகளுக்கு, அவர்கள் வாழும் சூழல் தவறாகத் தெரியாது. புவனேஸ்வரியைத் தேடிவரும் ஆண்களைப் பற்றியோ, ரஞ்சிதாவிடம் குடும்பம் நடத்திய நித்யானந்தரைப் பற்றியோ இங்கு யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பரிதாபத்துக்குரிய பெண்களையும் கிளுகிளுப்பாகப் பார்ப்பதே  இலக்கு.

ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களில் கூடப் பெண்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடிகிறதா? சினிமாவில் மட்டுமின்றி, மேடைகளிலும் நடிகைகளை ஆடவிட்டுப் பல மணிநேரம் வாய்பிளந்தபடி ரசித்துவிட்டு, அந்தப் பெண்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் நினைக்கும் ஒழுக்க விதிக்குள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?   

பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் எவ்வளவு பொறுப்பும் சமுதாயக் கடமையும் இருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்ட இந்த நிகழ்ச்சி ஒன்றே போதும். போலியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன் என்று எவ்வளவு கீழ்த்தரமான விஷயங்களை நம் வீட்டுக்குள் நுழைய வைத்துவிட்டார்கள்? நித்யானந்தர் செய்ததை விட இது பெரிய கேடு இல்லையா?   

ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் எழுதிய டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட் நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் போலத்தான்  ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் ஒரு ஹைட்இருக்கிறான். டாக்டர் ஜெகில்போல வெளியில், ‘இது ரொம்ப மோசம், இப்படிக் காட்டியிருக்கக்கூடாதுஎன்று சொன்னாலும், ஒவ்வொருவரும் ஹைடாக இதை ரசிக்கவே செய்திருக்கிறார்கள். இங்கு கேவலப்பட்டு நிற்பது நித்யானந்தாவா, இல்லை நம் வக்கிர எண்ணங்களா?.