Friday, June 25, 2010

ரசிக்க... சிரிக்க...

தினமும் இரண்டு முறை செல்லும் வழிதான். ஆனாலும் கடந்த ஒரு வாரமாக சுவாரசியம் கூட்டுகிறது. பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவசர அவசரமாகப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதில் சிலர் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். சில பெயர்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன; சில பெயர்கள் சிரிக்கும்படியாக இருக்கின்றன!

நேஷனல் மட்கலன் - National Ceramics
சிவா வணிகம் நடுவம் - Siva Enterprises
குமார் வன்பொருளகம் - Kumar Hardwares
ரவீஸ் வெதுப்பகம் - Ravees Cakes
குமார் அடுமனை - Kumar Bakery
மை லேடி தேடல் - My lady’s choice
எஸ்.டி. தூதஞ்சல் - S.T. Courier
ஸ்ரீ தேவி தானியங்கி - Sridevi Automobiles
ராஜ் தொலைபேசி நடுவன் - Raj Telephone Centre
ஏ.கே. முகவாண்மை - A. K. Agencies
பி.கே. வீட்டுக் குழுமம் - B.K. Housing Group
சந்திரன் ஒட்டும் பலகைகள் - Chandran Plywoods
அன்பு மின்பொருளகம் & வன்பொருளகம் - Anbu Electricals & Hardwares
மன்னா இனிப்புகள், வெதுப்பகம், நொறுவைகள் - Manna Sweets, Cakes, Snacks
கேக் அலைகள் - Cake Waves
சிவா குளிர் பான அருந்தகம் - Siva Coolbar
புஷ்பக் அணிகலன்கள் - Pushpak Jeweller
ஜோதி நறுமணப் பொருள்கள் - Jothi Cosmetics

Thursday, June 24, 2010

ஹாஸ்டல் கதைகள் - 1 : எஸ்தருக்கு இறங்கி வந்த ஏசு!

ஹாஸ்டலில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் எஸ்தர். ஆறாம் வகுப்பில் இருந்து ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருக்கிறாள். நான் சேர்ந்த அன்றே அவளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு வந்தது. இரவு உணவுக்காக எல்லோரும் அமர்ந்திருந்தோம். உணவு பரிமாறி, பிரார்த்தனை முடியும் வரை யாரும் தட்டில் கை வைக்கக்கூடாது. ஆனால் பிரார்த்தனைக்கு முன்பே சாப்பிட்டு, தண்டனையாக நின்றுகொண்டிருந்தாள் எஸ்தர். அத்தனைப் பேர் மத்தியில் ஒருத்திக்குத் தண்டனை எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குக் கவலையாக இருந்தது.

மறுநாள் காலை உணவு வேளை. முதலில் இட்லி பரிமாறப்பட்டது. ஆறிப் போய், புளிப்பேறியிருந்த இட்லியின் வாசம் குடலைப் புரட்டியது. ஆனால் சற்றுத் தூரத்தில் அமர்ந்திருந்த எஸ்தர் தட்டு நிறைய இட்லிகளை வாங்கியிருந்தாள். சுவையான கேக்கைச் சாப்பிடும் பாவத்தில் இட்லிகளைப் பிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள். சட்னி வரும்போது அவள் தட்டில் இரண்டே இட்லிகள்தான் இருந்தன. பிரார்த்தனை முடிவதற்குள் இன்னும் ஓர் இட்லி மாயமானது. அங்கு வந்த வார்டன், எஸ்தரை எழுந்து நிற்கச் சொன்னார்.

’நீயெல்லாம் ஒரு கிறிஸ்துவப் பெண்ணா? எல்லோரும் பிரேயர் முடிகிறவரை காத்திருக்காங்க. உனக்கென்ன? ஒழுங்கீனம்... ஒழுங்கீனம்... உன்னைப் பார்த்து மத்த பிள்ளைகளும் கெட்டுப் போகும்’ என்று திட்டினார்.

எதையும் காதில் வாங்காத எஸ்தர் நின்றுகொண்டே பிரார்த்தனை முடித்து, அடுத்த ஒரு நிமிடத்துக்குள் மீதி இருந்த இட்லியைக் காலி செய்துவிட்டு, முதல் ஆளாக வெளியேறினாள்.

இப்படிச் சாப்பிடும் இடம், தூங்கும் இடம், பிரார்த்தனை நேரம், படிக்கும் நேரம் எல்லாம் எஸ்தர் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் இருப்பாள். எதையும் மீறுவது அவள் குணமாக மாறி இருந்தது. தண்டனை கொடுத்து, கொடுத்து வார்டன்களுக்கும் சலிப்பு வந்துவிட்டது. இவ்வளவு தண்டனை வாங்கினாலும் அவள் மேல் கொஞ்சம் பரிவு இருந்ததற்குக் காரணம் ஓரளவு நன்றாகப் படித்துவிடுவாள் என்பதே.

எஸ்தர் வீட்டில் அவளைச் சேர்த்து மூன்று பிள்ளைகள். ஆசிரியராக இருந்த அவளுடைய அப்பாவின் சொற்ப வருமானத்தில் மூன்று பிள்ளைகளையும் ஹாஸ்டலில் படிக்க வைப்பதால், அவளைப் பார்ப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். மாதாமாதம் மணியார்டர் வரும். அவள் ஊரிலிருந்து யாராவது வந்தால் சத்துமாவு கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் அவள் யாரும் பார்க்க வரவில்லையே என்று கவலைப்பட்டதாகவே தெரியாது.
தன் தோழிகளுடன் எப்போதும் சந்தோஷமாக இருப்பாள். ஞாயிற்றுக்கிழமை தலை குளித்து, யாரிடமாவது வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறப் பாவாடை, தாவணி
வாங்கி அணிந்துகொண்டு முதல் ஆளாக தேவாலயத்துக்குக் கிளம்பிவிடுவாள். அதற்கு அவள் சொல்லும் காரணம், ‘இந்த ஒரு நாள் தான் நம்மள வெளியில் கூட்டிட்டுப் போறாங்க. நாலு பேரைப் பார்க்க முடியுது!’

அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். அப்பா வருகிறார் என்பதால் சிலுவைச் செல்வி தேவாலயம் செல்லவில்லை. (பார்வையாளர்கள் வராத கிறிஸ்துவ மாணவிகள் தேவாலயம் செல்லாவிட்டால் தண்டனை!) நானும் அமுதாவும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்று விட்டோம்.

ஒரு மணி நேரம் கழித்து சிலுவைச் செல்வி எங்களைத் தேடிக் கொண்டு ஓடி வந்தாள். காரணம் புரியாமல் நானும் அமுதாவும் பார்த்தோம். “எங்கெல்லாம் உங்களைத் தேடுறது? பிரேயர் ஹால்ல ஒரே கூட்டம்... பரபரப்பா இருக்கு. எங்கப்பா கிளம்பிட்டார். வாங்கடி போய்ப் பார்ப்போம்’ என்றாள் மூச்சிரைத்தபடி.

அவளுடைய பதற்றம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது. வேக வேகமாக நடந்தோம். வழியில் சில பெண்கள் வந்தார்கள். அவர்களிடம் விசாரித்தோம்.

’பிரேயர் ஹால்ல ஏசு தெரியறார்! நாங்க எல்லாம் பார்த்துட்டோம். சீக்கிரம் போங்க!’

புத்தகங்களை அறையில் வைத்துவிட்டு ஓடினோம்.

’நம்ம எஸ்தருக்குத்தான் முதலில் ஏசு காட்சி கொடுத்தார். அவ சொல்லித்தான் எல்லோரும் பாத்திருக்காங்க! எனக்கும் தெரிஞ்சார்!’ என்று தேன்மொழி அக்கா சொன்னார்.

பிரார்த்தனை கூடத்துக்குள் வழக்கத்தை விடக் கூட்டம். பார்க்க வந்த பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் கூரையை நோக்கி ஜெபித்தபடி இருந்தனர். சிலர் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. அமுதாவும் சிலுவைச் செல்வியும் முட்டி போட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். நானும் பார்த்தேன். அந்த இடத்தில் சிறிது காரை பெயர்ந்திருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, கற்பனை செய்து பார்த்தால் கொஞ்சம் சிலுவைக் குறி போலத் தெரிந்தது. மற்றபடி ஒன்றும் தெரியவில்லை.

அமுதாவையும் சிலுவைச் செல்வியையும் பார்த்தேன். அவர்கள் மும்முரமாக ஜபித்தபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் சென்றதும் வெளியில் போகலாம் என்றேன். சிலுவைச் செல்வியும் அமுதாவும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அந்தக் கசகசப்பையும் சத்தத்தையும் விட்டு நான் வெளியில் வந்து நின்றேன்.

அரை மணி நேரத்துக்குப் பிறகு அமுதாவும் சிலுவைச் செல்வியும் வருத்தத்துடன் வெளியே வந்தார்கள். அவர்கள் முகமே விஷயத்தைச் சொன்னது. இருந்தாலும் கேட்டேன்.

’உனக்குத் தெரிஞ்சதா சிலுவை?’

’இல்லப்பா... ’ என்று அழுதபடிச் சொன்னாள் சிலுவைச் செல்வி.

அமுதாவைப் பார்த்தேன், அவள் தான் ஏதோ குற்றம் செய்துவிட்டதால்தான் ஏசு தனக்குக் காட்சி தரவில்லை என்றாள்.

’இல்ல அமுதா, எனக்கும் தெரியலை’ என்றேன்.

அமுதாவுக்கும் சிலுவைச் செல்விக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

நாங்கள் மேலும் பலரை விசாரித்தோம். எல்லோரும் தங்களுக்கு ஏசு காட்சி தந்ததாகப் பரவசத்துடன் சொன்னார்கள். சிலுவைச் செல்வியும் அமுதாவும் மறுபடியும் அழ ஆரம்பித்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்குச் சென்றேன். நாங்கள் மூவரும் விரக்தியுடன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அப்போது பக்கத்து அறையில் பேச்சுச் சத்தம். யாரு? ஆ...! எஸ்தரிடம் அவள் தோழிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

’என்ன நடந்துச்சு எஸ்தர்? இப்பவாவது சொல்லு.’

’உங்களுக்கு எல்லாம் விசிட்டர்ஸ் வந்து, போயிட்டீங்க. எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை. சர்ச்சுக்கும் போகப் பிடிக்கலை. அதான் பிரேயர் ஹால்ல போய்த் தனியா உட்கார்ந்து யோசிச்சிட்டிருந்தேன். என்னைப் பார்க்க யாரும் வரமாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சதும் எனக்கு அழுகை வந்துருச்சு. அந்த நேரம் பார்த்து ஏசு பைத்தியம் பிடிச்ச லூசு வந்துச்சு...’

’எத்தனையோ லூசு இருக்கு. எந்த லூசு? ’

’அங்காளப் பரமேஸ்வரி. என்னன்னு காரணம் கேட்டாள். ஒரு இந்துப் பிள்ளை எப்படி ஏசு மேல நம்பிக்கை வச்சிருக்கா பாருன்னு அன்னிக்கு வார்டன் அவளைக் காட்டி, என்னைத் திட்டினது ஞாபகம் வந்துச்சு. உடனே இந்த லூசை இன்னும் லூசாக்கிடலாம்னு முடிவு பண்ணி, ஏசு தெரியறார்னு அந்தக் காரையைக் காட்டினேன். அவ்வளவுதான்! அவ முட்டி போட்டு ஜபிக்க ஆரம்பிச்சிட்டா. திடீர்னு சத்தம் போட்டு அழுதாள். நானே பயந்துட்டேன்! அவளைத் தேடிக்கிட்டு அவளுடைய ஃப்ரெண்ட்ஸ் வந்தாங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா எல்லோருக்கும் ஏசு தெரிய ஆரம்பிச்சார்!’

’அடிப்பாவி! எல்லாம் உன்னுடைய வேலைதானா? எங்களுக்குத் தெரியலையேன்னு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. உன்னை என்ன பண்ணலாம்?’

‘ஒண்ணும் பண்ண வேணாம். நான் இப்ப சந்தோஷமா இருக்கேன். மத்த பிள்ளைகளோட அம்மா, அப்பா எல்லாம் அன்பா விசாரிச்சாங்க. ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. கூட்டம் கூடி, நிலைமை கட்டு மீறிடுச்சு. இப்ப வெளியில் இருந்து ஃபாதர் எல்லாம் வரப்போறாங்க. சிறப்புப் பிரார்த்தனை நடக்கப் போகுது’ என்று சொல்லி முடித்தாள் எஸ்தர்.

நாங்கள் மூவரும் ஆச்சரியத்தில் உட்கார்ந்திருந்தோம்.

ஹாஸ்டல் மணி ஒலித்தது.

’என்னடி பார்க்கறீங்க? இன்னும் கொஞ்ச நாளைக்கு வார்டன், டீச்சர் எல்லாம் என்கிட்ட எவ்வளவு மரியாதையா நடந்துக்கப் போறாங்கன்னு பாருங்க!’ என்றபடி எழுந்தாள் எஸ்தர்.

மறுநாள் உணவு வேளையில் வழக்கம் போல இட்லிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் எஸ்தர். வார்டன் கண்டும் காணாதது போல நகர்ந்து விட்டார்! நான், அமுதா, சிலுவைச் செல்வி மூவரும் பட்டென்று சிரித்துவிட்டோம். வார்டன் திரும்பினார். நாங்கள் மூவரும் முதல் முறையாக எழுந்து நின்றோம்!

Wednesday, June 9, 2010

இவர்களா காப்பாற்றப் போகிறார்கள்?

அந்தக் கொடூரம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் மரண ஓலங்கள் நிற்கவில்லை. உயிர் அற்ற உடல்களும் எலும்புக்கூடுகளும் கண் முன்னே வந்து நியாயம் கேட்கின்றன. பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போய்விட்டனர். இந்த 26 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் இல்லை. தண்ணீரிலும் மண்ணிலும் கலந்த நஞ்சால் இன்று பிறக்கும் குழந்தை கூட அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகிக்கு இணையானது இந்தியாவின் போபால்.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கொள்கைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்த காரணத்தால் பல நாடுகளும் இதனை அனுமதிக்கவில்லை. ஆனால் மக்களின் உயிர் மேல் மதிப்பு இல்லாத இந்திய அரசு இருகரம் நீட்டி, அதனை அரவணைத்தது. நிறுவனம் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தபோது சோதனைக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பு விஷயங்கள் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதை எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும் அலட்சியம் தொடர்ந்திருக்கிறது. அந்த அலட்சியத்துக்கு விலையாக ஒன்றும் அறியாத அப்பாவிகள் பலியாகியிருக்கின்றனர். பல குடும்பங்களில் ஒருவர் கூட மிச்சம் இல்லை. கை, கால் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல், கேன்சர், தோல் வியாதிகள் என்று உயிர் பிழைத்த பலரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. 8 பேருக்கு 2 ஆண்டு காலம் சிறைத் தண்டனை அளித்த கையோடு, ஜாமீனையும் வழங்கி சாதனை செய்திருக்கிறது நீதிமன்றம்!. மீண்டும் ஒருமுறை இந்திய மக்கள் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் தலைகுனிந்து நிற்கிறார்கள். கால் நூற்றாண்டு போராட்டத்துக்கு ஒன்றும் பலன் இல்லை.

மிகக் குறைந்த காப்பீட்டுத் தொகை வழங்கியதோடு எங்கள் கடமை முடிந்தது என்று கழன்றுகொண்டுவிட்டது யூனியன் கார்பைட் நிறுவனம். யூனியன் கார்பைடின் தலைவர் வாரன் ஆண்டர்சன்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜாமீனில் வெளிநாடு சென்றுவிட்டார். இதுவரை இந்தியா திரும்பவில்லை. தீர்ப்பு வந்த திங்களன்று வரை சொகுசாக அவருடைய இல்லத்தில் வசித்திருக்கிறார். இப்போது அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. தீர்ப்பில் அவரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை! குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவர் மரணமடைந்து விட்டார். மீதி ஏழு பேரும் அந்த நிறுவனத்தின் இந்திய உயர் அதிகாரிகள்.

மக்களுக்காகத்தான் அரசாங்கம். ஆனால் நீண்ட கால வழக்கு இழுத்தடிப்பு, குற்றவாளிகள் தப்பித்தல் போன்ற காரணங்களுக்கு இந்திய அரசே துணை நின்றிருக்கிறது! இதில் ஒரு குற்றவாளிக்கு பத்மபூஷன் விருது (வழக்கு நடந்ததால் வழங்கப்படவில்லை) வேறு அறிவித்திருக்கிறது!

குற்றவாளிகள் பலரும் இப்போதே முதுமையில் இருக்கிறார்கள். இதற்குப் பிறகு மேல்முறையீடு செய்து, ஒருவேளை தண்டனை கிடைத்தால் அதை அனுபவிக்க யார் இருக்கப் போகிறார்கள்? ருச்சிகா கிர்ஹோத்ரா வழக்கிலும் இதுவே நடந்திருக்கிறது. பணம், அதிகாரம், அரசியல் பலம் இருந்தால் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு மிகவும் கேவலமானது.

சொந்த நாட்டு மக்களின் உயிர்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள விரும்பாத இந்திய அரசாங்கமா ஈழத்தில் அழிந்துகொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்றப் போகிறது?

Sunday, June 6, 2010

ஏதோ ஒன்று குறைகிறது!

இரண்டு நாள்களாகக் கவனித்து வருகிறேன். எங்கள் அபார்ட்மெண்ட் குழந்தைகளில் ஆறு பேர் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, மாடியில் குழுமிவிடுகிறார்கள். ஒரு பெட் ஷீட் விரித்து உட்கார்கிறார்கள். யோகா, ஓடிப்பிடித்தல், பாட்டு, நடனம் என்று சில நிமிடங்களுக்குள் காட்சி மாறுகிறது. அருகில் ஒரு பெரிய பாட்டில் தண்ணீர், ஒரு ஃபேண்டா பாட்டில், சிப்ஸ், முறுக்கு...! ஓ... இவர்கள் எல்லோரும் பிக்னிக் வந்திருக்கிறார்கள்! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு தின்பண்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அடடா! அதே கான்செப்ட்!

என்னுடைய எட்டு வயதில் ஒரு முறை எங்கள் கிராமத்துக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தோம். சினிமாவில் வரும் கிராமங்களைப் போல அவ்வளவு பசுமையான கிராமம் அல்ல. கம்மாய், ஊருணி, கோயில், இடிந்த அரண்மனை, கருவேலங்காடு, வயல்காடு என்று இருக்கும். என் வயதை ஒத்த பெண்கள் கூட அப்போதே சமைக்க, தண்ணீர் எடுக்க, வீட்டு வேலை செய்ய என்றுதான் இருப்பார்கள். அந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு விளையாட என்று அவர்களுக்குத் தனியாக நேரம் இருக்காது. ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையில் விளையாட வருவார்கள். சிறிது நேரத்திலேயே அவர்களைத் தேடிக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். இதனால் இந்தப் பெண்கள் எல்லாம் சேர்ந்து ‘கூட்டாஞ்சோறு’ என்று ஒரு ரகசிய விளையாட்டை ஆண்டுக்குச் சிலமுறை விளையாடுவது வழக்கம்.

நான் சென்றிருந்தபோது அவர்கள் விளையாடத் திட்டமிட்டிருந்தனர். இந்தக் கூட்டத்துக்கு என் அத்தைப் பெண் நாகவள்ளிதான் தலைவி. அவர் தோழிகள் ஐந்து பேர், அவர்களுடன் நாகவள்ளியின் தங்கை மீனா. அவர்களைவிட இளையவர்களைப் பொதுவாக அவர்கள் இந்த விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. மீனாவின் சிபாரிசில் என்னைச் சேர்த்துக்கொண்டார் நாகவள்ளி. பல நாள்களாக அவர்கள் யோசித்து திட்டத்தைத் தீட்டி வைத்திருந்தார்கள்.

இந்த முறை அவர்கள் (நாங்கள்!) சமைக்கப் போவது கேசரி. ரவை, சர்க்கரை, எண்ணெய், விறகு, பாத்திரம், குடம், தீப்பெட்டி என்று ஆளுக்கு ஒரு பொருளை யார் யார் கொண்டுவருவது, எத்தனை மணிக்குக் கிளம்புவது என்று முடிவு செய்தார்கள். எந்த வீட்டிலும் அனுமதி கிடைக்காது என்பதால் இந்த விளையாட்டு ரகசியமாகவே விளையாடப்படும். நான் மட்டும் அம்மாவிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தேன்.

மறுநாள் காலை வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு ஒவ்வொருவராக இடிந்த அரண்மனைக்குப் பின்பக்கம் வந்து சேர்ந்தார்கள். கருவேல மரங்களுக்கு நடுவில் பயணம் ஆரம்பித்தது. ஆள் அரவம் இல்லாத இடமாகப் பார்த்து ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். சற்றுத் தூரத்தில் கம்மாய் இருந்தது.

ஒருவர் தண்ணீர் கொண்டுவர, இன்னொருவர் முள் எடுத்து வர என்று பரபரப்பாக இயங்கினார்கள். மூன்று கற்களை வைத்து அடுப்பை உருவாக்கி முள்ளையும் விறகையும் வைத்து எரிக்க ஆரம்பித்தார் நாகவள்ளி. ரவை நிறைய இருந்தது, ஆனால் சர்க்கரை மிகவும் குறைவாக இருந்தது. நாகவள்ளி சர்க்கரை கொண்டு வந்தவளையும் எண்ணெய் கொண்டு வந்தவளையும் திட்டினார். பிறகு ஒருவழியாகச் சமாதானமாகி, கேசரி செய்ய ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் அடுப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு, ஊர்க் கதைகள் பேசினார்கள். ஊரில் நடக்கும் ஒரு காதல் கதையைப் பகிர்ந்துகொண்டார்கள். எனக்கு அவர்கள் பேசுவது புரியா விட்டாலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அரைமணி நேரத்தில் கேசரி தயாராகிவிட்டது. சூடு குறையட்டும் என்று சொல்லிவிட்டு, விளையாட ஆரம்பித்தோம். கேசரி என்பதால் விளையாட்டில் யாருக்கும் அவ்வளவு ஈடுபாடு இல்லை. (அப்போதெல்லாம் கேசரி எப்போதாவது தான் செய்வார்கள்). அருகில் இருந்த பூசணி இலைகளைப் பறிந்து வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கரண்டி கேசரி பரிமாறப்பட்டது.

வண்ணம் சேர்க்காத வெள்ளை நிறக் கேசரியாக இருந்தாலும் ஆர்வத்தைத் தூண்டியது. எல்லோரும் மிகவும் ரசித்து, ருசித்துப் பேசிக்கொண்டே, சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தோம். சர்க்கரை பத்தாமல், போதிய எண்ணெய் இல்லாமல், உப்புமாவுக்குச் சர்க்கரைத் தொட்டு சாப்பிடுவதைப் போலத்தான் இருந்தது அந்த கூட்டாங் கேசரி . ஆனால் எங்கள் யாருக்கும் அப்போது இப்படித் தோன்றவேயில்லை. வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாக வந்த த்ரில், அரட்டை, நாங்களே செய்த இனிப்பு என்ற பெருமிதம் எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு சந்தோஷத்தை அளித்திருந்தது. எல்லோரும் வயிறு நிறைய சாப்பிட்டு, தண்ணீர் குடித்து, சற்று ஓய்வெடுத்தோம். பாத்திரங்களைச் சுத்தம் செய்தோம். அவரவர் பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தோம்.

ஊருக்குள் நுழைந்தவுடன், எதிரில் வந்த ஓர் அம்மா, “ ஏண்டி அங்காளம், எங்கே போயிருந்தே? உங்கம்மா உன்னைக் காணாம்னு தேடிக்கிட்டு இருக்கு’ என்று சொல்லவும் எல்லோரும் தேனீ கூட்டில் கல் பட்டது போல களைந்து சென்றார்கள். நானும் எங்கள் வீடு நோக்கி ஓடி வந்தேன். வழியில் அங்காளத்தின் அம்மா அருகில் இருந்த குச்சியை எடுத்துகொண்டு, “எங்கே போனடி? தனியாளா வேலை செஞ்சிட்டிருக்கேன். தண்ணி எடுக்கப் போறேன்னு கிளம்பினவ இப்பத்தான் வர்றீயா?’ என்றபடி ஓடி வர, அங்காளம் பக்கத்துச் சந்தில் புகுந்து மறைந்தார்.

இன்று நெய் வடிய, முந்திரிப் பருப்பு மிதக்க, பச்சைக் கற்பூர வாசனையுடன் கேசரி செய்தாலும், அந்தக் கூட்டாங் கேசரியில் இருந்த சுவையில் ஏதோ ஒன்று குறைவது போலிருக்கிறது!