Saturday, June 9, 2012

ஆலா மிஸ்... ஆலா மிஸ்...


ன்று காலை அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். கெட்டி அட்டை, வழவழப்பான தாளில் மிகவும் நேர்த்தியாக இருந்தது. கல்யாண்ஜியின் முன்னுரை, சாலை செல்வத்தின் உரை எல்லாம் தாண்டி யாழினியின் கதைக்கு வந்தேன்...

லா மிஸ் ... இந்த மிஸ் படிக்கச் சொல்ல மாட்டாங்க. எழுதச் சொல்ல மாட்டாங்க. வகுப்பு முழுவதும் கதை சொல்வதாகவும் விளையாட்டாகவும்தான் இருக்கும்! பக்கத்தில் ஆறு ஓடும். ஆலா மிஸ்ஸின் கைகளைப் பிடித்து தொங்கியபடியே விளையாடுவோம். மழை வந்தால் எல்லோரும் சேர்ந்து நனைவோம். கடலுக்குக் கூட்டிட்டுப் போவாங்க ஆலா மிஸ். அங்கே எங்களை மீன்களாக மாற்றி கடலில் விடுவாங்க. நாங்கள் கடலில் உள்ள மீன்கள், டால்பின்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு வருவோம்! எங்கள் எல்லோருக்கும் பிடித்த ஆலா மிஸ்ஸை உங்களுக்கும் பார்க்க ஆசையா? ஆற்றங்கரையில் இருக்கும் ஆல மரம்தான் எங்கள் ஆலா மிஸ்!



தீபாவளிக்கு புதுத் துணிகள், பட்சணங்களை எடுத்துட்டு யாழினியும் மற்ற குழந்தைகளும் காட்டுக்குப் போகிறார்கள். அங்கே குரங்கு, மான், புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு உடைகளைக் கொடுக்கிறார்கள். எல்லோரும் விளையாடுகிறார்கள். சாப்பிடுகிறார்கள். இரவு வந்தவுடன் கிளம்புகிறார்கள்.

“காட்டு மிருகங்கள் பாய் சொல்லவே இல்லப்பா! மிருகங்கள் இப்படிப் பண்ணினா எப்படி? அழுவாச்சி வராதா? கொஞ்சம் சிரிக்கச் சொல்லி எல்லோரும் போட்டோ எடுத்துட்டோம். அப்போ ஒரு குட்டி குரங்கு என் தலை மேல உக்காந்து வெவ்வ்வ்வ்வேன்னு போஸ் கொடுத்துச்சு.’

ம்மா, அப்பா எல்லாம் வேலைக்குப் போய்விடுகிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பூனை, நாய், பல்லி, பூச்சிகள்தான் நண்பர்கள். அவர்களுடன் தான் விளையாட்டு. ஒருநாள் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்த பூனை, நாய், பூச்சிகள் எல்லாம் டிராகன்களாக மாறிவிடுகின்றன.  டிராகனின் தலையில் ஏறி வால் வரைக்கும் வழுக்கிக்கிட்டே வருகிறார்கள்! பெரியவர்கள் யாராவது வந்துவிட்டால் பழையபடி நாய், பூச்சிகளாக மாறிவிடுகின்றன. வீட்டில் போர் அடித்த குழந்தைகளும் டிராகன்களும் ஒருநாள் பார்க்குக்குப் போகிறார்கள். அங்கே பெரியவர்கள் டிராகன்களைச் சுடுவதற்கு வருகிறார்கள். குழந்தைகள் பெரியவர்களுக்கு அவற்றின் அருமையை எடுத்துச் சொல்லி, காப்பாற்றுகிறார்கள். இப்போது எல்லோரும் சந்தோஷமாக டிராகன்களுடன் விளையாடுகிறார்கள்!

பெற்றோர் இருவரும் வேலை செய்யும் வீடுகளில் குழந்தைகளை கம்ப்யூட்டரிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களின் தலை பெரிதாகிக்கொண்டே போகிறது. அதைக் கூட பெற்றோர் கவனிக்கவில்லை. சில குழந்தைகள் தலை வெடித்து இறக்கிறார்கள். ஏன்? கம்ப்யூட்டர் அறிவு எல்லாம் குழந்தைகளுக்கு வந்துவிட்டது! அறிவாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு சந்தோஷமில்லை. விளையாட்டு இல்லை. பூக்களின் வாசனை உணரவில்லை. காடு, மலைகளின் அழகை ரசிக்கவில்லை. இதனால் வருத்தத்தில் குழந்தைகள் தலை வெடித்து இறக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் தாத்தா குல்லாவில் இருந்து ஒரு பாம்பு வருகிறது. உண்மையில் அது பாம்பு இல்லை. பாம்பு வேஷம் போட்ட ஓர் ஆள்.  அதை நிஜப் பாம்பு என்று நினைத்துப் பெரியவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள். பாம்பு இறந்துவிட்டதாக நினைத்து சென்றுவிடுகிறார்கள். சிறிது நேரத்தில் நிஜப் பாம்பு வந்து வேஷம் போட்டவரைக் கடித்துவிடுகிறது. அவரை டாக்டர் காப்பாற்றி விடுகிறார். நிஜப் பாம்பை அடிக்கப் பெரியவர்கள் முயற்சி செய்கிறார்கள். குழந்தைகள் எல்லோரும் அதைத் தடுத்து, விரட்டி விட்டால் ஓடிடும் என்று யோசனை தருகிறார்கள். உடனே குட்டிப் பாம்பும் அம்மா பாம்பும் சந்தோஷமாகப் போகின்றன.

இப்படி யாழினி நிறைய கதைகளை எழுதியிருக்கிறாள். அவளுடைய கதைகளில் குழந்தைகள் நியாயமாக நடந்துகொள்கிறார்கள்.  மரம், விலங்கு, பறவைகள் மீது அன்பு செலுத்துகிறார்கள். இயற்கையின் அருமையை உணர்ந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழலைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். சக குழந்தைகளுடன் சந்தோஷமாக விளையாடுகிறார்கள். ஆர்வமாகக் கதை கேட்கிறார்கள்.

மாறாக, பெரியவர்கள் மீது யாழினி நிறைய குற்றங்களைச் சுமத்தியிருக்கிறாள். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் குழந்தைகளிடம் செலவு செய்யும் நேரம் குறைவு, வீட்டிலும் வெளியிலும் பணிச் சுமை காரணமாக குழந்தைகளிடம் காட்டும் எரிச்சல், குழந்தைகளைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளாதது, குழந்தைகளை டிவி, கம்ப்யூட்டர் முன்பு சரணாகதி அடையச் செய்வது, உயிரினங்களின் அருமையைப் புரிந்துகொள்ளாமல் கொல்ல வருவது, காடுகளை அழிப்பது, முக்கியமாக குழந்தைகளுக்குக் கதை சொல்லாமல் இருப்பது...

யாழினி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. இதுவரை குழந்தைகள் புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் ஒரு குழந்தை இவற்றை எல்லாம் விரும்பும் என்ற எண்ணத்தில் பெரியவர்களால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டவைதான். உண்மையிலேயே அவை எல்லாம் குழந்தைகளுக்கானவைதானா? குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றனவா? என்ற எண்ணம் அடிக்கடி வந்துபோகும். அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கிறாள் யாழினி.

யாழினியின் கற்பனை வளம் பிரமிக்க வைக்கிறது. ஓர் ஆல மரத்தை டீச்சராக மாற்றி அவள் விவரிக்கும் கதை அட்டகாசம்! குழந்தைகளின் தலை பெரிதாகிக்கொண்டே இருக்கின்றன என்ற கதையில் கற்பனையும் கலந்து கருத்தும் சொல்லியிருக்கிறாள். இப்படித்தான் கதை ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் முடிக்க வேண்டும் என்ற சட்டதிட்டமெல்லாம் இந்தக் கதைகளுக்கு இல்லை. அதனால்தான் இந்தக் கதைகள் கூடுதல் சுவாரசியத்தைத் தருகின்றனவோ! பெரும்பாலான கதைகளில் யாழினியும் இருக்கிறாள். ஒரு கதையில் யாழினி என்று குறிப்பிட்டு, அது நான் இல்லை, வேறொரு யாழினி என்று விளக்கம் சொல்லும்போது குழந்தைத்தனம் ரசிக்க வைக்கிறது.

பெரியவர்களின் மொழியில், பேச்சு வழக்கில் இந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கதை, நடை, கருத்து என்று ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்துவிடுகிறது! முக்கியமாக நாம் கடந்து வந்த பால்ய காலத்தை மீண்டும் கொண்டுவந்துவிடுகிறது.  

நான் பள்ளி இறுதி படிக்கும் வரை மா, தென்னை, பலா, முருங்கை, மாதுளை மரங்கள்தான் என்னுடைய மிகச் சிறந்த நண்பர்கள். என் தங்கைகளுடன் சண்டை போட்டாலோ, மதிப்பெண்கள் குறைந்தாலோ, ஏதாவது மனக் கஷ்டம் வந்தாலோ நான் இந்த மரங்களிடம்தான் வாய் விட்டுப் பேசுவேன். கஷ்டமான நேரங்களில் மரங்கள் இலைகள் மூலம் அரவணைத்திருக்கின்றன! பரீட்சைக்குச் செல்லும்போது ஆசிர்வதித்து அனுப்பியிருக்கின்றன! சந்தோஷமான தருணங்களை மேலும் அழகாக மாற்றியிருக்கின்றன!

போட்டி நிறைந்த இந்த உலகத்தில் படிப்பு, நடனம், பாட்டு, ஓவியம் என்று சகலத்திலும் தங்கள் குழந்தைகள் முதலாவதாக வரவேண்டும், அவர்களின் பெற்றோர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் இன்றைய பெற்றோரிடமிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்கள் யாழினியின் பெற்றோர். யாழினிக்குக் கதை சொல்லி, அவள் சொல்வதைக் கேட்டு, எழுதி, திருத்தி, புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது யாழினியின் இரண்டாவது புத்தகம். முதல் புத்தகம் 4 வயதில் வெளிவந்திருக்கிறது. கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களுடன் தரமான தயாரிப்பாக இருக்கிறது புத்தகம்.

யாழினியைப் பார்க்கவும் அவளுடன் பேசவும் கதை கேட்கவும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்!

காடு பெருசா அழகா இருந்துச்சு ரூ.30/-
யாழினி
இயல்வகை பதிப்பகம்,
எண்: 25, மாந்தோப்பு,
ப.உ.ச.நகர்,
போளூர் சாலை,
திருவண்ணாமலை - 1
போன்: 9840932755