Friday, October 21, 2011

காணாமல் போகும் கதைகள்...


ஸ்நேகா நான்கு வயதாக இருந்தபோது கதை கேட்பது, சொல்வது, படிப்பது என்றால் மிகவும் விருப்பம். ஒரு கதை சொன்னால், அதைத் திருப்பிச் சொல்லும்போது நாம் சொன்ன கதையிலிருந்து கொஞ்சம் மாற்றி, புதுக் கதையாக வேறொன்றைச் சொல்வாள்.
“ஏன் ஸ்நேகா, நான் இப்படிச் சொல்லலையே?’ என்று கேட்டால், ‘உங்களுக்குத் தெரிந்த கதையையே நான் சொன்னால் போரடிக்குமே. அதான் மாத்திச் சொன்னேன்’ என்று சிரிப்பாள்.

ஆனால் அந்தக் கதை சரியாக இருக்கும்... அந்தக் கதையை வேறு யாராவது சொல்லச் சொன்னால், அது இன்னொரு புதிய கதையாக மலரும்... இப்படி ஸ்நேகாவின் கற்பனை விரிய விரிய கதைகளுக்குப் பஞ்சமே இருக்காது.

கதை கேட்பதிலும் சொல்வதிலும் பட்டுவுக்கும் பிரமாதமான திறமை இருக்கிறது. நான்கு வயதிலேயே ஸ்படிகம் போல அத்தனை தெளிவான உச்சரிப்போடு கதை சொல்வதைக் கேட்டால், தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஹனுமன் கதையாக இருக்கட்டும் கிருஷ்ணன் கதையாக இருக்கட்டும் நல்ல பாவத்துடன் சொல்வாள். கதை மட்டும் அல்லாமல், காந்தி என்ற ஒரு மனிதரின் வாழ்க்கையைக் கூட அத்தனை அழகாகக் கதை போலச் சொன்னதில் அசந்து போயிருக்கிறோம்.  சென்ற ஆண்டு அவள் “நோவா’ கதை சொல்லப் போகிறேன் என்றாள். அந்தக் கதைக்கு அதிக நேரம் எடுக்கும் என்று அவள் அப்பா எச்சரித்தார். “சீக்கிரம் முடிச்சுடறேன்’ என்று பத்து நிமிடங்களில் சொல்லி முடித்தாள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் 20 நிமிடங்கள் சொல்ல வேண்டிய கதையை அழகாக எடிட் செய்து, பத்து நிமிடங்களில் பட்டு சொல்லியிருந்தாள். எடிட் செய்த போர்ஷனைக் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு குழந்தையால் சொல்ல முடியும் என்பது இன்று வரை வியப்பாகவே இருக்கிறது. (பாராவின் மகள் என்பதால் எடிட்டிங்கும் தானாகவே வருகிறதோ! பாரா கதை சொல்லும்போது அவரே ஒரு குழந்தையாக மாறி, குரலை மாற்றி, சத்தம் எழுப்பி அழகாகச் சொல்வார். பூமி உருண்டையை வைத்துக்கொண்டு, பட்டுவுக்கு கதையோடு நாடுகளை அவர் அறிமுகம் செய்யும்போது, பட்டு அத்தனை ஆர்வமாகக் கேட்பாள்! பல கதைகளில் பட்டுவும் ஒரு கேரக்டராக இருப்பாள்!)

சில சிறுவர்களிடம் கதை சொல்லச் சொன்னால், “டமால்... டுமீல்... பட் படார்... பவர்ரேஞ்சர்... ஊ... ஆ.... ஸ்பீடா போனான்... பத்துப் பேரைச் சுட்டான்.. ஜம்முனு மேலயிருந்து குதிச்சான்...’ என்று ஆக்ஷனுடன் மிரட்டி விடுகிறார்கள்.
...
கோகுலத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு குழந்தைகளிடமிருந்து ஏராளமான கதைகள் வரும். ஏற்கெனவே படித்த கதைகள், பெரியவர்கள் சொல்ல எழுதிய கதைகள் எல்லாம் போக, கதையாக எழுதத் தெரியாவிட்டாலும் நல்ல கதைக் கரு கிடைக்கும். ரீ ரைட் செய்து பயன்படுத்திவிடலாம். கதை, படக்கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இன்று உள்ள குழந்தைகள் கதை கேட்பதை, படிப்பதை விட, பார்ப்பதையே விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது.

கோகுலம் சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் மிகச் சுமாரான கதைகள் வெகு சிலவே. இதில் பெரும்பாலான கதைகள் அறிவுரை சொல்வதாகவே இருந்தன. பொதுவாக யாருக்குமே அறிவுரை சொல்வது பிடிப்பதில்லை. ஆனால் குழந்தைகளுக்கான கதைகள் என்றால் பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி அறிவுரை சொல்வதாகவே எழுதுகிறார்களே... காரணம் என்ன? அறிவுரை சொல்லும் கதைகளைத்தான் தேர்வு செய்வார்கள் என்று நினைக்கிறார்களா? “திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, தீய நட்பு கூடாது, பெரியவர்களை எதிர்த்துப் பேசக்கூடாது...’ இப்படிப் பட்டியல் நீள்கிறது. இதில் சுற்றுச் சூழல், திருநங்கை போன்ற புதிய களத்தை ஓரிரு கதைகள் தொட்டுச் சென்றிருப்பது நல்ல விஷயம்.

‘வானத்தில் தாரிகா காணாமல் போனதைப் பற்றி நட்சத்திரங்களிடையே சர்ச்சை கிளம்பியது’ என்று அழகாக ஆரம்பித்த அஹமது பைசல், கதையை எழுதத் தவறிவிட்டார்.

“புறா பீட்சாவுக்கு ஆர்டர் செய்தது. ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்து புறாவிடம் பீட்சாவை டெலிவரி செய்தாள்’ என்று சுவாரசியமாக ஆரம்பித்த சங்கர குமாரும் கதை எழுதவில்லை.   

இருவரும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதைகள் கிடைத்திருக்கும்.

நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் கதைப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்துதான் படைப்புகள் வந்திருந்தன.

பொதுவாகவே கதை வாசிக்கும், எழுதும் வழக்கம் குறைந்து வருகிறது என்றே தோன்றுகிறது. தமிழுக்குத்தான் இந்தப் பிரச்னையோ என்று யோசித்தேன். ஆங்கில கோகுலத்துக்கு இந்தியா முழுவதும் வாசகர்கள் இருக்கிறார்கள். சில காலத்துக்கு முன்பு வரை குழந்தைகளின் படைப்புகளைப் போட்டு மாளாது. ஆனால் இன்று படைப்புகள் மிகவும் குறைந்துவிட்டதாகவே சொல்கிறார் யாமினி.

கதை கேட்கும்போதும் படிக்கும்போதும் தோன்றும் கற்பனை, இன்று கதையாகத் தொலைக்காட்சியில் காணும்போது தொலைந்து போய்விடுகிறது. கற்பனை வற்ற வற்ற கதைக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிடுகிறது.

Thursday, October 6, 2011

உள்ளாட்சித் தேர்தலும் சில துண்டுகளும்


சட்டசபை தேர்தலின்போது தேர்தல் குறித்து நேரடியான அனுபவம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் எங்கள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை சீமந்த விழா, காது குத்து விழா, பெயர் சூட்டுவிழா, திருமண விழா, நிச்சயதார்த்த விழா, சுதந்தர தினம், வருடப் பிறப்பு என்று ஒட்டு மொத்த விழாக்களையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, விதவிதமான கெட்டப்களில் பேனர்களில் கலங்கடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

எங்கள் குடியிருப்புகளுக்கு இரவு 9 மணிக்கு மேல்தான் ஓட்டு கேட்டு வருகிறார்கள். குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள் சூழ மூன்று மாடிகளையும் மூச்சிரைக்க ஏறி வருகிறார் வேட்பாளர். கூட்டத்தில் ஒருவர் கையில் வேட்பாளரின் நோட்டீஸ். இன்னொருவர் கையில் துண்டுகள். அழைப்பு மணி அடித்ததும் எட்டிப் பார்த்தால், ‘சாரைக் கூப்பிடுங்கள்’ என்கிறார்கள். (பெரும்பாலும் பெண்களின் ஓட்டைத் தீர்மானிப்பது ஆண்கள்தான் என்பதால் இப்படிக் கேட்கிறார்கள் போலிருக்கிறது!)

சார் இல்லை என்றால், என்ன பேசுவது என்று ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். பிறகு ஒரு நோட்டீஸையும் துண்டையும் வைத்து, ’சார் கிட்ட சொல்லிடுங்க. என் சின்னம் பூட்டு, இவர் வார்டுக்கு நிக்கறார், இவர் சின்னம் சீப்பு. எங்களுக்கு மறக்காமல் ஓட்டுப் போடுங்க’ என்கிறார்கள்.

’துண்டு வேண்டாம்’ என்றதும் திடுக்கிடுகிறர்கள். பிறகு சமாளித்து, சிரித்துவிட்டுச் செல்கிறார்கள். 

எதிர் வீட்டில் அவர்கள் கேட்ட ’சார்’ இருந்தார். உடனே அவருக்குத் துண்டைப் போர்த்தினார் வேட்பாளர். கூட வந்தவர்கள் கை தட்டினார்கள். ஓட்டு கேட்டுவிட்டுச் சென்றார்கள்.

துண்டுகளிலும் பல தினுசு. இரண்டு வோட்டுகள் என்றால் காட்டன் துண்டு. நான்கு ஓட்டுகள் என்றால் டர்கி டவல்.

அடுத்த அரை மணி நேரத்தில் வேறொரு வேட்பாளர். அவரிடமும் துண்டு. ‘நான் இளைஞர். நல்லது நடக்கணும்னா உங்க வோட்டு இளைஞருக்குப் போடணும்.’

பத்தரை மணிக்கு மீண்டும் அழைப்பு மணி.

துண்டு இல்லை. கூட்டம் இல்லை. இருவரும் மஞ்சள் ஆடை அணிந்து, மாலை போட்டிருந்தனர்.

‘இவங்க என் மனைவி. பொது வேட்பாளரா நிக்கறாங்க. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஆதரிப்பீங்கன்னு நம்பறேன்’ என்று வண்ண நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

எங்கள் பகுதி வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய, நூறு கார்களில் ஆள்களை அழைத்துச் சென்றாராம். பெண்களுக்கு இருநூறு ரூபாயும் ஆண்களுக்கு ஐந்நூறு ரூபாயும் தந்தார்களாம். சில இடங்களில் ஓட்டுக்கே பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள்.

’எங்களுக்கு ஓட்டே இங்க இல்லை. நாங்களே இந்த வருஷத்துக்குத் தேவையான துண்டுகளை வாங்கிக்கிட்டோம். நீங்க என்ன விவரம் பத்தாதவங்களா இருக்கீங்க? நம்ம கிட்ட எடுத்த காசைத்தானே அவங்க துண்டா தர்றாங்க?’ என்று கேட்டார் எதிர் வீட்டுப் பெண்.


ஊரில் இருப்பவர்களில் பாதிக்கு மேல் வேட்பாளர்களாகக் கலத்தில் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகள்.

Monday, September 26, 2011

மரங்களின் தாய்!






இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியப் பிரச்னை சுற்றுச்சூழல் சீர்கேடு. காடுகள் அழிப்பு, மழை வளம் குறைதல், பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்தல் போன்ற காரணங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. அதனால் துருவப்பிரதேசங்களில் இருக்கும் பனி உருகத் தொடங்கிவிட்டது. பனி உருகி கடலில் கலந்தால் நீர் மட்டம் உயரும். நிலப்பகுதிகள் மூழ்கக்கூடிய அபாயம். இதை எப்படித் தடுக்கலாம் என்று உலகம் முழுவதும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இது பற்றி 1980களிலேயே யோசிக்க ஆரம்பித்து, செயலில் இறங்கியவர் வாங்கரி மாத்தாய். 1977-ம் ஆண்டு முதல் 12 ஆப்பிரிக்க நாடுகளில் இவர் ஆரம்பித்த  பசுமைப்பட்டை இயக்கம் மூலம் 3 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன!


70 வயது வாங்கரி மாத்தாய் பிறந்தது கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில். கிராமங்களில் பள்ளிகள் இல்லாத காரணத்தால் 8 வயதில்தான் அவர் கல்வி கற்க ஆரம்பித்தார். 1960-ம் ஆண்டில் கென்யாவிலிருந்து 300 மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதில் ஒருவராகப் படிக்கச் சென்றார். உயிரியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டங்களை முடித்தார். அப்போது அவருக்குச் சுற்றுச் சூழல் மீது ஈடுபாடு வந்தது.
படிப்பை முடித்தவுடன் தாய் நாட்டில், நைரோபி பல்கலைக்கழகத்தில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. ஆர்வத்துடன் வந்து சேர்ந்தார் வாங்கரி. ஆனால், அவருடைய வேலையை வேறொருவருக்கு அளித்திருந்தனர். பெண் என்பதாலும் பழங்குடி என்பதாலும்தான் அந்த வேலை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டார். இரண்டு மாதங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தபோது, ஜெர்மன் பேராசிரியர் ஒருவரிடமிருந்து மைக்ரோஅனாடமி என்ற புதிய துறையில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. பேராசிரியரின் தூண்டுதலில் ஜெர்மன் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்துக்காகப் படித்தார்.


1966-ம் ஆண்டு அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த வாங்கரி, மத்தாய் என்ற கென்யரைச் சந்தித்தார். இருவருக்கும் நட்பு உருவானது. 1969-ம் ஆண்டு இருவரும் நைரோபியில் திருமணம் செய்துகொண்டனர். வாங்கரியின் கணவர் அரசியலில் நுழைந்தார். முதல் மகன் பிறந்தான். 1971-ம் ஆண்டு அனாடமியில் பிஹெச்டி பட்டம் பெற்றார் வாங்கரி. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பிஹெச்டி பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

வாங்கரி வேலை செய்த பல்கலைக்கழகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமைகள் வழங்க வேண்டும் என்று போராடினார். சுற்றுச்சூழல் இயக்கங்கள், கென்ய செஞ்சிலுவைச் சங்கம், பெண்கள் இயக்கம் என்று ஏராளமான இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார் வாங்கரி. அப்போது கிராமப்புறப் பெண்களிடம் பழகியபோதுதான், அவர்களின் பொருளாதாரத் தேவைகள், விவசாயப் பிரச்னைகள், நிலத்துக்கான தேவைகள் எல்லாவற்றையும் அவரால் அறிந்துகொள்ள முடிந்தது.


இதற்கிடையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தார் வாங்கரி. அப்போது நடைபெற்ற தேர்தலில் வாங்கரியின் கணவர் வெற்றி பெற்றார். கென்யாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, வாங்கரிக்கு ஒரு யோசனை தோன்றியது. கிராமப்புறப் பெண்களுக்கு வருமானம்தான் முதல்  பிரச்னை. அவர்களுக்கு வருமானம் அளிக்கும் நேரத்தில் மண்ணையும் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்குச் சரியான வேலை மரம் வளர்ப்பது. கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்தார். மரக்கன்றுகளைக் கொடுத்து தங்கள் நிலங்களில் நடச் சொன்னார். ஓரளவு வருமானத்தையும் அளித்தார். தங்கள் நிலங்களில் மரங்கள் வைத்து முடித்த பிறகு, பிற இடங்களிலும் மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்தார். பெண்களே மரக்கன்றுகளை உருவாக்கும் பண்ணைகளை ஆரம்பித்தனர். இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தனர்.

இதைப் பார்த்து அரசாங்கம் பயந்தது. மக்களுக்கு விழிப்புணவு வந்து, மண்ணையும் மரத்தையும் காப்பாற்றினால், தங்களுடைய காடு அழிப்பு, ஊழல் போன்றவற்றுக்கு முடிவு வந்துவிடுமோ என்று அஞ்சியது. கூட்டம் போடக்கூடாது, ஒன்பது பேருக்கு மேல் கூடி நின்று பேசக்கூடாது என்று தடை விதித்தது. ஒவ்வொன்றையும் தைரியமாக எதிர்கொண்டார் வாங்கரி.
1977-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப்பட்டை இயக்கம் உதயமானது. வாங்கரி ஓய்வின்றி போராடிக்கொண்டிருக்கும் போது, சொந்த வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. கணவர் தனியாகச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

‘அவள் அதிகம் படித்தவள். மிகவும் தைரியமானவள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பவள். உறுதியானவள். என்னால் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை – விவாகரத்துக்கு வாங்கரியின் கணவர் சொன்ன காரணம் இதுதான்!

விவாகரத்துக்காக நிறைய செலவாகியிருந்தது. அத்துடன் மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளானார் வாங்கரி. 6 ஆண்டுகள் குழந்தைகளை, கணவர் பொறுப்பில் விட்டிருந்தார். அடிக்கடிச் சென்று குழந்தைகளைக் கவனித்து வந்தார். பொருளாதாரச் சிக்கல் தீர்ந்த பிறகு, குழந்தைகளை அழைத்து வந்துவிட்டார்.

79-ம் ஆண்டு நேஷனல் கவுன்சில் ஆஃப் உமன் ஃபார் கென்யா என்ற அமைப்புக்குத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் வாங்கரி. இதன் கீழ் பல்வேறு பெண்கள் இயக்கங்கள் இயங்கின. வாங்கரியின் தொடர் போராட்டங்களால் அரசாங்கம் எரிச்சல் அடைந்தது. பல்வேறு இடையூறுகளைத் தந்தது. அப்போதுதான் ஜனநாயக அரசாங்கம் அமைய வேண்டிய தேவையை உணர்ந்தார் வாங்கரி. 1988-ம் ஆண்டு சுற்றுச்சூழல் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்.


1989-ம் ஆண்டில் வாங்கரியின் பசுமைப்பட்டை இயக்கம் அரசாங்கத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. உஹுரு பூங்காவில் பெரிய வணிக வளாகம் அமைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. மரங்களை அழித்து, வளாகம் அமைப்பதை எதிர்த்து கடிதங்கள் எழுதினார். போராட்டங்களை நடத்தினார். எதற்கும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. வாங்கரியை பைத்தியக்காரப் பெண் என்று பட்டம் சூட்டியது. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு 1990-ம் ஆண்டு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

அரசியல்வாதிகள், அரசாங்கம் போன்றவற்றைப் பகைத்துக்கொண்டதால் பலமுறை வாங்கரியும் அவருடைய  இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலமுறை சிறை சென்றிருக்கிறார்கள்.

1992-ல் ரியோடிஜெனிரோவில் நடந்த ஐ.நாவின் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வாங்கரி சென்றார். கென்ய அதிபரும் அதில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பேசுவதற்கு வாங்கரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மிக மோசமான ஊழல் பேர்வழிகளாக இருந்தனர். அவர்களால் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடு. காட்டில் உள்ள மரங்களை அழித்தனர். காட்டையே அழித்தனர். ஊழல் செய்யக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் விடுவதாக இல்லை. வாங்கரி யோசித்தார். அரசியல் அமைப்பை மாற்றினால் தவிர, வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டார். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்தார். கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் இணைந்துகொண்டார்.

1997 தேர்தலில் வாங்கரி போட்டியிட்டார். அவரைப் பற்றிய வதந்திகள் மக்களிடம் பரப்பப்பட்டன. சில வோட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆனால் அவருடைய மனம் சோர்வடையவில்லை. பசுமைப்பட்டை இயக்கம் மூலம் அமைதிக்காக மரங்களை நடும் பணிகளில் கவனம் செலுத்தினார்.

2002-ம் ஆண்டு தேர்தல் வந்தது. வாங்கரி மாத்தாய் ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்றது. வாங்கரி 98% வோட்டுகளைப் பெற்றார். சுற்றுச்சூழலுக்கான இணை அமைச்சராக 2005-ம் ஆண்டு வரை செயல்பட்டார். பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திவந்தார்.

2004-ம் ஆண்டு அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு வாங்கரிக்கு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்க பெண் மற்றும் முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர் இவர். ’இந்தப் பரிசு எளிய மக்களாகிய எங்களின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்கள் உழைப்பு ஒருநாள் உலகை மாற்றும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டார் வாங்கரி மாத்தாய்.

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்களிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்றும் அவருடைய இயக்கம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

’மரங்களால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மழை கிடைக்கிறது. பழங்கள், மருந்து, விறகு, மரம் போன்றவை கிடைக்கின்றன. சுத்தமான காற்று கிடைக்கிறது. மரங்களை விட மிக அற்புதமான விஷயம் உலகில் இல்லை. மரங்களை நேசியுங்கள். மரங்கள் இந்தப் பூமியையே காப்பாற்றும். இயற்கையை அழித்து முன்னேற வேண்டும் என்ற போக்கு நிறைய நாடுகளிடம் உள்ளது. இது அபாயகரமானது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து, செய்யப்படும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றங்களுக்கு அழைத்துச் செல்லும்’  என்கிறார் மரங்களின் தாய்.

(தமிழ் பேப்பரில் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரை)


Saturday, June 18, 2011

பிருந்தாவனம்...



தஞ்சாவூரில் தோட்டங்களுடன் கூடிய தனித்தனி வீடுகளாகத்தான் இருக்கும். தென்னை, மா, பலா, வாழை, கொய்யா, முருங்கை, கறிவேப்பிலை போன்ற மரங்கள் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் கண்டிப்பாக இருக்கும். சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை போன்றவை சில வீடுகளில் இருந்தன.

செம்மண் பூமி என்பதால் எதை வைத்தாலும் நன்றாக வளர்ந்து, பூத்து, காய்த்துக் குலுங்கிவிடும்.

நாங்கள் அந்த வீட்டுக்கு வந்தபோது, வலது மூலையில் நந்தியாவட்டை மரமும், பின்புறத்தில் ஆயுள் முடிந்த இரண்டு வாழை மரங்களும்தான் இருந்தன. எங்கள் வீட்டில் அனைவருக்குமே செடி, கொடி, மரங்கள் மீது தீராத ஆர்வம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தோட்டத்துடன் கூடிய வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு அப்போதுதான் கிடைத்திருந்தது. குப்பைகள், முள்செடிகள் எல்லாம் அப்புறப்படுத்தி, நான்கு தென்னங்கன்றுகள் வாங்கி  நடப்பட்டன.

அப்பாவின் நண்பர்கள் எல்லாம், ‘எதுக்கு வாடகை வீட்டில் தென்னை மரங்களை எல்லாம் நடறீங்க? கொஞ்ச வருஷத்துல காலி பண்ணிட்டுப் போயிடுவீங்க? யாரோ அனுபவிக்கப் போறாங்க. ஏதாவது காய்கறிச் செடி, கொடிகள் வச்சா, நீங்களே அனுபவிக்கலாம்என்றார்கள்.

‘நீங்க சொல்றதில் நியாயம் இருக்கு. ஆனா எங்களுக்கு மரம் வளர்க்கறதுலதான் ஆர்வம். அதை யார் அனுபவிச்சாலும் வருத்தமில்லைஎன்றார் அப்பா.

வாழைக் கன்று, கறிவேப்பிலைக் கன்று, கொய்யா, பப்பாளி என்று வரிசையாகக் குடிவந்தன. ‘நிறையத் தண்ணீர் ஊற்றினால்தான் தென்னை நல்லா காய்க்கும்என்று யாரோ சொல்ல, குடம் குடமாகத் தண்ணீரைக் கொட்டினோம்.

விவசாயப் பண்ணையில் இருந்து கத்தரி, வெண்டை, மிளகாய், பாகற்காய், புடலை, தக்காளி, பூசணி என்று விதைகள் வாங்கி வந்து, ஊன்றி வைத்தோம். பொன்னாங்கண்ணி (இது வயலட்டும் பச்சையும் கலந்த நிறத்தில் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும், சாப்பிடவும் செய்யலாம்!), கொத்தமல்லி, புதினா என்று ஒருபக்கம் கீரைகளும் வளர ஆரம்பித்தன.

விதை ஊன்றியதில் இருந்து தினமும் கவனிப்போம். நான்கு நாள்களில் முளை தெரியும். கொடிகள் வளரும் வேகம் மலைப்பைத் தரும். முதல்நாள் பார்த்தது போல மறுநாள் இருப்பதில்லை. நேற்றுப் பிஞ்சாகத் தெரிந்த பாகற்காய், இன்று பறிக்கும் பதத்துக்கு வந்திருக்கும். (இரவு முழுவதும் விழித்திருந்து செடி, காய் வளர்வது, பூ மலர்வது எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்ததெல்லாம் உண்டு.)

கொடிகள் வளருவதற்கு நேர் எதிராகக் கத்தரி, வெண்டை போன்றவை மெதுவாக வளரும். குறைவாகவே காய்க்கும். இரண்டு கத்தரிக்காய்கள் காய்த்தாலும், குழம்பில் வேறு காய்களைச் சேர்க்காமல் சமைத்து, ஆளுக்கொரு துண்டு  வைத்துவிடுவார் அம்மா.

நாமே விதை ஊன்றி, தண்ணீர் ஊற்றி வளர்த்து, காயைப் பறித்து, சமைத்துச் சாப்பிடும் சந்தோஷத்துக்கு நிகர் வேறில்லை. சொந்த உழைப்பில் விளைவித்த பொருளுக்குக் கூடுதல் சுவை இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.

கத்தரி, வெண்டை போன்றவை மிகக் குறைவாகக் காய்த்தாலும் பாகற்காய், புடலங்காய், தக்காளி, பூசணி போன்றவை காய்த்துத் தள்ளின. அதுவும் சிறிய பாகற்காயும் பெரிய பாகற்காயும் தினமும் பறிக்கும் அளவுக்குக் காய்த்தன. பாகற்காய் பிரியர்கள் என்றாலும் தினமும் சாப்பிட முடியாது. அக்கம்பக்கம், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குக் கொடுத்து விடுவோம்.

சிறிய பாகற்காய் ஆழம் குறைந்த குழியில்தான் பயிரிட்டிருந்தோம். தினமும் காலை எழுந்ததும் சின்னப் பாகற்காய்களைப் பறிப்பதற்காகக் கொடியோடு கொடியாக ஐக்கியமாகியிருப்போம்.

‘பாம்பு ஏதாவது இருக்கப் போகுது... செடி கிட்ட இப்படிப் போய் உட்காராதீங்கஎன்று சொல்லிக்கொண்டே இருப்பார் அம்மா. ஆனால் எங்கள் காதில் அது விழாது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருநாள் பாகற்காய் கொடியையே வெட்டி எறிந்துவிட்டார்கள். கண்ணீரே வந்துவிட்டது.

நண்பர்கள் வீடுகளில் இருக்கும் பூச்செடிகள், குரோட்டன்ஸ்களை எங்களிடம் இருக்கும் செடிகளைக் கொடுத்து, பண்டமாற்று செய்துகொள்வோம். இதனால் எங்கள் தோட்டத்துக்கு நிறைய தாவரங்கள் குடிவந்தன. நடுவில் வெள்ளை நிறப் பூக்கள் கொண்ட செடிகள். அடுத்த ரவுண்ட் வயலட் வண்ணப் பூக்கள். அதற்கடுத்த ரவுண்ட் வெள்ளை... ஒருபக்கம் சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை நிற ரோஜாக்கள், சாமந்திப் பூக்கள், அடுக்கு மல்லி, செம்பருத்தி... இப்படி எங்கள் தோட்டத்தின் அழகு கூடிக்கொண்டே சென்றது.  

நூற்றுக்கு மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகளை அறிமுகம் செய்து வைத்ததும் எங்கள் தோட்டம்தான். தோட்டத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. படிப்பது, எழுதுவது, சகோதரிகளுடன் சண்டை வந்து புலம்புவது எல்லாம் மரங்கள், செடி கொடிகளுடன்தான்!  

எங்கள் தோட்டத்தைப் பார்ப்பதற்காகவே அப்பாவின் நண்பர்கள் தினமும் வருவார்கள். ரசிப்பார்கள். ‘பிருந்தாவனத்துக்கு வந்துட்டுப் போற மாதிரி இருக்கு. செடிகள் மேல இருக்கற உங்க ஆர்வத்துக்குப் பரிசா இந்த வீட்டையே நீங்க வாங்கிட்டீங்கஎன்பார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தென்னை, மா, பலா, கொய்யா, சாத்துக்குடி மரங்கள் எல்லாம் காய்க்க ஆரம்பித்திருந்தன.

அம்மாவுக்கு ஒரே வருத்தம். ‘கஷ்டப்பட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்த பிள்ளைகள் எல்லாம் கல்யாணம் ஆகிப் போயிட்டாங்க. அவங்களால பலனை அனுபவிக்க முடியலை...

ஒவ்வொரு வீட்டுக்கும் பார்சலில் பலாப்பழம் அனுப்பிவைக்கப்பட்டன.

‘அவங்க பணம் கட்டி இங்கே அனுப்பி, அதைப் போய் வாங்கிட்டு வந்து சாப்பிடறதுக்கு ஆகற செலவுல, இங்கேயே ஒரு பழத்தை வாங்கிச் சாப்பிட்டுடலாம்... என்றனர் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள்.

அவர்களுக்கு என்ன தெரியும்!



.

         

Monday, January 24, 2011

ஹாஸ்டல் கதைகள் - 5 தண்ணீர்... தண்ணீர்...


இன்று வரை ராமநாதபுரத்தை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்னை குடி தண்ணீர். சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடும்போதும் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் மோசமான பழக்கம் எனக்கு இருந்தது.  ஹாஸ்டலில் சேர்ந்த முதல் நாள் தண்ணீர் கேனுடன் சாப்பிடச் சென்றேன். என்னை எல்லோரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள். சிறிது நேரத்தில் எல்லோரும் ஆளுக்கு ஒரு வாய் குடித்துவிட்டு, வெறும் கேனைத் திருப்பித் தந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன், உணவறையில் தண்ணீர்ப் பானையும் இல்லை; யாரும் தண்ணீர் கேனையும் கொண்டுவரவில்லை என்று! கனிமொழி அக்காவிடம் கேட்டேன்.

“நீ தங்கத்தைக் கேட்டால் ஒருவேளை யாராவது கொடுத்துடலாம். ஆனா, தண்ணியைக் கேட்டா ஒருத்தியும் தரமாட்டாளுக. உன்கிட்ட வாங்கிக் குடிச்சவங்க கூடத் தரமாட்டாங்க. இனிமே தண்ணியைக் கொண்டு வர்ற வேலை எல்லாம் வச்சுக்காதே...’

‘என்னக்கா, இப்படிச் சொல்றீங்க! எனக்கு விக்கல் எடுத்தா...?’

“அதெல்லாம் எடுக்காது. நாங்க எத்தனை வருஷமா இப்படிச் சாப்பிட்டுட்டு வர்றோம். ரொம்ப விக்குச்சுனா சட்னி, ரசம், மோர் எதையாவது குடிச்சுக்க வேண்டியதுதான்!’

அதிர்ந்து போனேன்.

வாரத்துக்கு ஒருமுறை லாரியில் தண்ணீர் வரும். சமையலுக்குப் பிடித்தது போக, மீதித் தண்ணீரைக் குடிப்பதற்குப் பிடித்துக்கொள்ளலாம். அடுத்த வாரம் வரை தினமும்  மூன்று வேளைக்கு ஒரு மூடி வீதம்  தண்ணீரைக் குடிக்க வேண்டும். வீட்டிலிருந்து வரும் சில தாராள மனம் படைத்த மாணவியர், தோழியராகக் கிடைத்தால், கூடுதலாகத் தண்ணீரைக் குடிக்கும் பாக்கியம் கிடைக்கலாம்!
சில வாரம் லாரி தண்ணீர் வராது. அப்போது நிலைமை பாலைவனத்தில் வசிக்கும் அனுபவத்தைத் தந்துவிடும்.  கனிமொழி அக்காவுக்கு சில ஆசிரியர்களிடம் நல்ல பழக்கம் இருந்ததால், அவர்கள் அறைகளில் இருந்து தண்ணீர் வாங்கித் தருவார். அதுவும் வாய்க்காதவர்கள் கிணற்றுத் தண்ணீரை வழியின்றி குடித்து, அவதிப்படுவார்கள்.

எதை வாங்கி வருகிறார்களோ இல்லையோ, பார்வையாளர்கள் தினத்தில், பார்க்க வருகிறவர்கள் கண்டிப்பாக கேன் நிறைய தண்ணீர் கொண்டுவருவார்கள்!

லாரி தண்ணீர் வராவிட்டால் சமைப்பது எப்படி?

சனி, ஞாயிறாக இருந்தால் பகலில் எப்போது வேண்டுமானாலும், பள்ளி நாள்களாக இருந்தால் மாலையிலும் அவரவர் வாளியைத் தூக்கிக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். பதினைந்து நிமிட  தூரத்தில் இருக்கும் தேவாலயத்தில் தண்ணீர்ப் பிடித்து வர வேண்டும். பெரிய மாணவியர் வாளி நிறைய தண்ணீர் எடுத்து வருவார்கள். நானும் அமுதாவும் முக்கால் வாளியை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்தபடி வருவோம். நடக்க நடக்க தண்ணீர் தளும்பி, கீழே போனது போக எஞ்சிய தண்ணீரைத்தான் பயன்படுத்தமுடியும்! 

குடி தண்ணீர் தான் இப்படி என்றால்... கிணற்று நீர்?

பம்ப்செட் போட்ட பெரிய கிணறு. அந்தக் கிணற்றுக்கு அருகில் பெரிய தொட்டி ஒன்று. ஐந்து மணிக்கு மோட்டார் போடுவார்கள். தண்ணீர் தபதபவென்று கொட்டும். அந்த அரைமணி நேரத்துக்குள் குளித்து, துவைத்து விட வேண்டும். சில நேரங்களில் பதினைந்து நிமிடங்களிலேயே தண்ணீர் நின்று விடுவதும் உண்டு. இருட்டு நேரத்தில், மெல்லிய விளக்கு வெளிச்சத்தில், கடமையே கண்ணாக இருந்தால் மட்டுமே காரியத்தில் வெற்றி பெற முடியும்!  இல்லாவிட்டால் யாரிடமாவது கயிறும் வாளியும் வாங்கி, தண்ணீர் இறைக்க வேண்டும். ராட்டினம் இல்லாமல் தண்ணீர் இழுக்கத் தெரியாத என் போன்றவர்களுக்கு பம்ப்செட் விட்டால் வேறு வழியில்லை. எப்போதாவது மழை பெய்தாலும் நனைந்துகொண்டே குளிர்த்து முடிக்க வேண்டும்.

Wednesday, January 19, 2011

ஹாஸ்டல் கதைகள் - 4 உணவும் வேலைப் பங்கீடும்

காலை உணவு பெரும்பாலும் இட்லிதான். ஒரு நாள் தேங்காய் சட்னி, மறுநாள் தக்காளி சட்னி. மாதத்துக்கு இரண்டு தடவை தோசை. மிக அரிதாக உப்புமா.

கோஸ், பீன்ஸ், கேரட், அவரை, பீட்ரூட்  என்று ஏதாவது இரண்டு பொரியல்கள், சாம்பார், ரசம், மோர் மதிய உணவு.   இதில் இரண்டு நாள்கள்  மட்டன் கிரேவி, அப்பளம் இருக்கும். மட்டன் சாப்பிடாதவர்களுக்கு இரண்டு அப்பளங்கள். இரண்டு  நாள்கள் கீரை, முட்டை, புளிக்குழம்பு, ரசம், மோர்.

மாலை (இரவு) உணவு சாதம், ரசம், ஒரு காய்.

நான் விடுதியில் சேர்ந்த ஒரு மாதம் வரை மிகவும் கஷ்டப்பட்டேன். கழுநீர் தண்ணீர் போன்ற காபியும் புளிப்பேறிய இட்லியையும் பார்க்கும்போதே  அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று தொண்டைக்கு வந்து, வாந்தி எடுக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும். கண்கள் கலங்கி நிற்கும். கூடவே அம்மாவின் அற்புதமான சமையலும், அதை உதாசீனப்படுத்திய காட்சிகளும் கண் முன்னே விரியும். சட்டென்று இரண்டு சொட்டு கண்ணீர் வெளியே வந்துவிடும். சட்னி பிடிக்கவில்லை என்று, இட்லிப் பொடியுடன் சென்றாலும், அந்தப் புளிப்புக்குப் பொடி விஷமாக மாறியது போல ஒரு கசப்பைத் தரும். சாப்பிடாமல் இருக்கவும் முடியாது. இட்லிகளை வாங்கி, கனிமொழி அக்காவிடம் கொடுத்துவிட்டு, ஒரே ஓர் இட்லியுடன் அமர்ந்திருப்பேன். சிறிய தட்டில் பொடி இருக்கும். ஓரிரு துண்டுகளைக் கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு, சிறிய தட்டில் இட்லியை வைத்து, பெரிய தட்டால் மறைத்தபடி சென்று, கொட்டி விடுவேன்.

மதியம் உணவு சாப்பிடும்படி இருக்கும். ஆனால் எனக்குத்தான் அதிலும் பிரச்னை. கோஸ், புடலங்காய், பீர்க்கங்காய், சௌசௌ... இவை எல்லாம் எனக்குப் பிடிக்காத காய்கள். ஆனால் இவைதான் பெரும்பாலும் இருக்கும். காலையில் சாப்பிடாததால், மதியம் பசி அதிகமிருக்கும். பசிக்குச் சாப்பிடும் அருமை அப்போதுதான் புரிந்தது. சாம்பார் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, ரசத்தைக் குடித்துவிட்டு எழுந்துவிடுவேன்.

இரவு உணவைப் பொறுத்தவரை என்னை அதிகம் இம்சிக்கவில்லை. வாரத்தில் ஒருநாள் சௌசௌ கூட்டை மட்டும் அமுதாவிடம் தள்ளிவிடுவேன். ஊறுகாய் வைத்து சமாளித்துக்கொள்வேன். மறுநாள் அமுதாவுக்குப் பிடிக்காத சேனைக்கிழங்கு வறுவல் எனக்கு வந்து விடும்.

எங்கள் ஹாஸ்டலில் மூன்று பிரிவுகள் இருந்தன. ஒன்று நான் சாப்பிடக்கூடிய, மாதக் கட்டணம் ரூ.120/- . இன்னொன்று ரூ.90/-. (இதில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் இட்லி, மற்ற நாள்களில் சுடு கஞ்சி. மதியம் ஒரே ஒரு காய். வாரத்துக்கு ஒரு நாள் மட்டன், ஒரு நாள் முட்டை. மாலை உணவு எங்ககளைப் போன்றதே.) முப்பது ரூபாய் அதிகம் கொடுத்தால், ஓரளவு நல்ல உணவு கிடைத்துவிடும். ஆனால் அதைக் கூட கொடுக்க முடியாதவர்கள் அதிகம் இருந்தனர். இதில் அக்கா, தங்கை இருவர் இருந்தால், ஒருவர் இந்த மெனுவிலும் இன்னொருவர் அந்த மெனுவிலும் இருக்கக்கூடிய விநோதம் எல்லாம் இருக்கும்! மூன்றாவது வகையில் சற்றுக் குறைவான எண்ணிக்கையில் மாணவியர். ஆதரவு அற்றவர்கள், மிக மிக ஏழைமையில் இருக்கக்கூடியவர்கள்.   

*

ஹாஸ்டலில் பெருக்குதல், உணவு பரிமாறுதல் போன்ற வேலைகளை மாணவியரை வைத்தே செய்துவிடுவார்கள். ஆரம்பத்தில் இந்த வேலைகளைச் செய்யும்போது கோபமாக வரும். ஆள் வைத்து செய்துகொள்ளாமல், மாணவியரை இப்படி வேலை வாங்குகிறார்களே என்று! அவரவருக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளைப் பெருக்கிவிட்டு, பிறகுதான் படிக்க வரவேண்டும். அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இல்லை. ஆனால் இந்தப் பரிமாறுதல்?

நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட, 9 -12 வகுப்பு மாணவியர்தான் பரிமாறும் வேலைகளைச் செய்ய வேண்டும். உணவறைக்கும் சமையலறைக்கும் தூரம் அதிகம். அங்கிருந்து அவரவர் குழு ஆள்களுடன் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவை எடுத்து வர வேண்டும். தட்டை உணவறையில் வைத்துவிட்டு, உணவுகளைக் கொண்டு வர வேண்டும். அப்படி நான் போவதற்குள் இட்லி, பொரியல், முட்டை, கீரை போன்ற சிறிய பாத்திரங்கள் எல்லாம் ஏற்கெனவே போயிருக்கும். சாதம், குழம்பு, ரசம், மோர்  போன்ற ஏதோ ஒன்றைப் பரிமாறிவிட்டு, அந்தப் பாத்திரத்தைச் சுத்தம் செய்துவிட்டு, உணவறைக்கு வந்து சாப்பிட வேண்டும். எப்படி மற்றவர்கள் இவ்வளவு சாமர்த்தியமாக இருக்கிறார்கள் என்று நான் யோசித்துப் பார்த்தும் சூட்சுமம் புரியவில்லை.

கனிமொழிதான் என்னைக் கவனித்து அந்த டெக்னிக்கைச் சொல்லித் தந்தார்.

“நீ ஒன்பதாம் வகுப்பு படிக்கிற சின்னப் பொண்ணு. பெரிய பாத்திரங்கள் எல்லாம் தூக்காத. இனிமேல் நீ பரிமாறுகிற வாரத்தில் நானே தட்டை எடுத்துட்டு வந்துடறேன். நீ பெல் அடிச்சதும் நேரா கிச்சனுக்குப் போயிரு. ஈஸியா என்ன இருக்கோ, அதை மத்தவங்களோட சேர்ந்து எடுத்துட்டு வந்துரு. சாதம் போடறதுக்குள்ள உன் வேலையை முடிச்சிட்டு வந்துடலாம்’ என்றார்.

அடடா! அதற்குப் பிறகு நானும் அதுபோலச் செய்தேன். அப்படியும் என்னை விட சாமர்த்தியசாலிகள் எப்படியோ சில நேரங்களில் என்னை முந்திவிடுவார்கள்! 

பெரும்பாலும் 11, 12 படிப்பவர்கள்தான் பரிமாறுவார்கள். நாங்கள் எல்லாம் தட்டுகளை வாங்கிக் கொடுக்கும் பணியைத்தான் செய்வோம். இப்படி அவர்கள் அந்த வேலையைக் கையில் வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. எல்லோருக்கும் பரிமாறிய பிறகு, மீதி எது இருந்தாலும் இன்னொரு ரவுண்ட் பரிமாறிவிடலாம். அப்படிப் பரிமாறும்போது யார் பரிமாறுகிறாரோ அவருடைய தட்டில் இருந்துதான் இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும்! காய்களைக் கண்டுகொள்ளாமல் விடும் மற்றவர்கள், மட்டன் பரிமாறும்போது மட்டும் எரிச்சலைக் காட்டுவார்கள். ஆனாலும் அவர்கள் பரிமாறும்போதும் இப்படித்தா ன் செய்வார்கள்.

என்னைப் போல் ஒன்றிரண்டு பேரைத் தவிர, மற்றவர்கள் யாரும் உணவு பிடிக்கவில்லை என்று கொட்ட மாட்டார்கள். இட்லி பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே, நான்கு இட்லிகளைச் சாப்பிட்டு விடுவார்கள். எஸ்தர், தேன் மொழி போன்றவர்கள் தட்டு நிறைய இட்லிகளை வைத்து, மிகவும் ரசனையாக சட்னிக்குள் நனைத்து, உறிஞ்சி சாப்பிடுவார்கள்.
இவர்களைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஹாஸ்டலில் இருக்கக்கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிராமங்களிலிருந்து,  ஏழைமையில்
வந்தவர்கள் என்று பிறகுதான் புரிந்தது.

ஹாஸ்டலில் எந்த வித பாகுபாடுமின்றி ஒரு விஷயம் எல்லோரிடமும் இருந்தது. அது சத்து மாவு. மாதம் முழுவதும் நொறுக்குத் தீனிகளை வைத்திருக்க முடியாது.  கடையில் தின்பண்டம் வாங்கிச் சாப்பிடுவதற்கு வசதியும் இருக்காது.  இந்தச் சத்துமாவை மாதக்கணக்கில் வைத்திருக்கலாம். வேர்க்கடலை, பச்சைப்பயறு, அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் என்று அவரவர் பக்குவத்துக்கும் வசதிக்கும் ஏற்ப சத்துமாவு வைத்திருப்பார்கள். சிலர் தண்ணீரில் பிசைந்து உருண்டையாகச் சாப்பிடுவார்கள். சிலர் ஒரு கிண்ணத்தில் கொட்டி, அவ்வப்போது ஒரு ஸ்பூன் மாவை வாயில் போடுவார்கள். இது சில நேரங்களில் புரை ஏற்றிவிடும் என்பதால், கொஞ்சம் எண்ணெய் கலந்து சாப்பிடுவார்கள்.  தேசிய உணவு போல சத்துமாவுதான் ஹாஸ்டல் வட்டார உணவு!