Sunday, June 6, 2010

ஏதோ ஒன்று குறைகிறது!

இரண்டு நாள்களாகக் கவனித்து வருகிறேன். எங்கள் அபார்ட்மெண்ட் குழந்தைகளில் ஆறு பேர் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, மாடியில் குழுமிவிடுகிறார்கள். ஒரு பெட் ஷீட் விரித்து உட்கார்கிறார்கள். யோகா, ஓடிப்பிடித்தல், பாட்டு, நடனம் என்று சில நிமிடங்களுக்குள் காட்சி மாறுகிறது. அருகில் ஒரு பெரிய பாட்டில் தண்ணீர், ஒரு ஃபேண்டா பாட்டில், சிப்ஸ், முறுக்கு...! ஓ... இவர்கள் எல்லோரும் பிக்னிக் வந்திருக்கிறார்கள்! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு தின்பண்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அடடா! அதே கான்செப்ட்!

என்னுடைய எட்டு வயதில் ஒரு முறை எங்கள் கிராமத்துக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தோம். சினிமாவில் வரும் கிராமங்களைப் போல அவ்வளவு பசுமையான கிராமம் அல்ல. கம்மாய், ஊருணி, கோயில், இடிந்த அரண்மனை, கருவேலங்காடு, வயல்காடு என்று இருக்கும். என் வயதை ஒத்த பெண்கள் கூட அப்போதே சமைக்க, தண்ணீர் எடுக்க, வீட்டு வேலை செய்ய என்றுதான் இருப்பார்கள். அந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு விளையாட என்று அவர்களுக்குத் தனியாக நேரம் இருக்காது. ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையில் விளையாட வருவார்கள். சிறிது நேரத்திலேயே அவர்களைத் தேடிக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். இதனால் இந்தப் பெண்கள் எல்லாம் சேர்ந்து ‘கூட்டாஞ்சோறு’ என்று ஒரு ரகசிய விளையாட்டை ஆண்டுக்குச் சிலமுறை விளையாடுவது வழக்கம்.

நான் சென்றிருந்தபோது அவர்கள் விளையாடத் திட்டமிட்டிருந்தனர். இந்தக் கூட்டத்துக்கு என் அத்தைப் பெண் நாகவள்ளிதான் தலைவி. அவர் தோழிகள் ஐந்து பேர், அவர்களுடன் நாகவள்ளியின் தங்கை மீனா. அவர்களைவிட இளையவர்களைப் பொதுவாக அவர்கள் இந்த விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. மீனாவின் சிபாரிசில் என்னைச் சேர்த்துக்கொண்டார் நாகவள்ளி. பல நாள்களாக அவர்கள் யோசித்து திட்டத்தைத் தீட்டி வைத்திருந்தார்கள்.

இந்த முறை அவர்கள் (நாங்கள்!) சமைக்கப் போவது கேசரி. ரவை, சர்க்கரை, எண்ணெய், விறகு, பாத்திரம், குடம், தீப்பெட்டி என்று ஆளுக்கு ஒரு பொருளை யார் யார் கொண்டுவருவது, எத்தனை மணிக்குக் கிளம்புவது என்று முடிவு செய்தார்கள். எந்த வீட்டிலும் அனுமதி கிடைக்காது என்பதால் இந்த விளையாட்டு ரகசியமாகவே விளையாடப்படும். நான் மட்டும் அம்மாவிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தேன்.

மறுநாள் காலை வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு ஒவ்வொருவராக இடிந்த அரண்மனைக்குப் பின்பக்கம் வந்து சேர்ந்தார்கள். கருவேல மரங்களுக்கு நடுவில் பயணம் ஆரம்பித்தது. ஆள் அரவம் இல்லாத இடமாகப் பார்த்து ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். சற்றுத் தூரத்தில் கம்மாய் இருந்தது.

ஒருவர் தண்ணீர் கொண்டுவர, இன்னொருவர் முள் எடுத்து வர என்று பரபரப்பாக இயங்கினார்கள். மூன்று கற்களை வைத்து அடுப்பை உருவாக்கி முள்ளையும் விறகையும் வைத்து எரிக்க ஆரம்பித்தார் நாகவள்ளி. ரவை நிறைய இருந்தது, ஆனால் சர்க்கரை மிகவும் குறைவாக இருந்தது. நாகவள்ளி சர்க்கரை கொண்டு வந்தவளையும் எண்ணெய் கொண்டு வந்தவளையும் திட்டினார். பிறகு ஒருவழியாகச் சமாதானமாகி, கேசரி செய்ய ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் அடுப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு, ஊர்க் கதைகள் பேசினார்கள். ஊரில் நடக்கும் ஒரு காதல் கதையைப் பகிர்ந்துகொண்டார்கள். எனக்கு அவர்கள் பேசுவது புரியா விட்டாலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அரைமணி நேரத்தில் கேசரி தயாராகிவிட்டது. சூடு குறையட்டும் என்று சொல்லிவிட்டு, விளையாட ஆரம்பித்தோம். கேசரி என்பதால் விளையாட்டில் யாருக்கும் அவ்வளவு ஈடுபாடு இல்லை. (அப்போதெல்லாம் கேசரி எப்போதாவது தான் செய்வார்கள்). அருகில் இருந்த பூசணி இலைகளைப் பறிந்து வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கரண்டி கேசரி பரிமாறப்பட்டது.

வண்ணம் சேர்க்காத வெள்ளை நிறக் கேசரியாக இருந்தாலும் ஆர்வத்தைத் தூண்டியது. எல்லோரும் மிகவும் ரசித்து, ருசித்துப் பேசிக்கொண்டே, சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தோம். சர்க்கரை பத்தாமல், போதிய எண்ணெய் இல்லாமல், உப்புமாவுக்குச் சர்க்கரைத் தொட்டு சாப்பிடுவதைப் போலத்தான் இருந்தது அந்த கூட்டாங் கேசரி . ஆனால் எங்கள் யாருக்கும் அப்போது இப்படித் தோன்றவேயில்லை. வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாக வந்த த்ரில், அரட்டை, நாங்களே செய்த இனிப்பு என்ற பெருமிதம் எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு சந்தோஷத்தை அளித்திருந்தது. எல்லோரும் வயிறு நிறைய சாப்பிட்டு, தண்ணீர் குடித்து, சற்று ஓய்வெடுத்தோம். பாத்திரங்களைச் சுத்தம் செய்தோம். அவரவர் பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தோம்.

ஊருக்குள் நுழைந்தவுடன், எதிரில் வந்த ஓர் அம்மா, “ ஏண்டி அங்காளம், எங்கே போயிருந்தே? உங்கம்மா உன்னைக் காணாம்னு தேடிக்கிட்டு இருக்கு’ என்று சொல்லவும் எல்லோரும் தேனீ கூட்டில் கல் பட்டது போல களைந்து சென்றார்கள். நானும் எங்கள் வீடு நோக்கி ஓடி வந்தேன். வழியில் அங்காளத்தின் அம்மா அருகில் இருந்த குச்சியை எடுத்துகொண்டு, “எங்கே போனடி? தனியாளா வேலை செஞ்சிட்டிருக்கேன். தண்ணி எடுக்கப் போறேன்னு கிளம்பினவ இப்பத்தான் வர்றீயா?’ என்றபடி ஓடி வர, அங்காளம் பக்கத்துச் சந்தில் புகுந்து மறைந்தார்.

இன்று நெய் வடிய, முந்திரிப் பருப்பு மிதக்க, பச்சைக் கற்பூர வாசனையுடன் கேசரி செய்தாலும், அந்தக் கூட்டாங் கேசரியில் இருந்த சுவையில் ஏதோ ஒன்று குறைவது போலிருக்கிறது!

3 comments:

unnalmudiyum said...

கூட்டாஞ்சோறு சாப்பிட்ட திருப்தி.

சாப்பாட்டு ராமன் said...

நல்லா சாப்பிட்டு இருப்பீங்க போலிருக்குது?

அது சரி இப்பொழுதாவது உங்களுக்கு கேசரி செய்ய தெரியுமா?

நல்ல சிறுகதை, வாழ்த்துக்கள்.

எல் கே said...

:)))