Monday, September 6, 2010

ஹாஸ்டல் கதைகள் 3 : கன்னியர் தீவு!

ஹாஸ்டல் கதைகள் 1
ஹாஸ்டல் கதைகள் 2

பெண்கள்... பெண்கள்... எங்கும் பெண்கள் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஓர் இடமாகத்தான் இருந்தது எங்கள் பள்ளி. சுமார் இரண்டாயிரம் பெண்கள் படிக்கும் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசியர்கள், உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், வார்டன்கள் என்று அத்தனை பேரும் பெண்களாகவே இருந்தார்கள். மொத்தத்தில் அது ஒரு கன்னியர் தீவு!

இதில் இரண்டே இரண்டு ஆண்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.  ஒருவர் வாட்ச்மேன். கடுகடு ஆசாமி. எப்போதும் யாரையேனும் திட்டிக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டாலே அலறியடித்து ஒதுங்கிவிடுவார்கள். இன்னொருவர் அந்தோணி அண்ணன்.  பள்ளிக்குள் சிறிய கடை வைத்திருந்தார்.   கடையில் இல்லாத பொருள்களைக் கேட்டாலும் மறுநாளே வாங்கிக் கொடுத்து விடுவார். அன்பாகப் பேசுவார்.

பதின்ம வயதுப் பெண்களுக்கு இருக்கும் எதிர்பாலின ஈர்ப்பாலோ அல்லது ஹார்மோன்கள் அதிகம் சுரந்ததாலோ  ஹாஸ்டல் அக்காக்களுக்கு ஆண்களைப் பற்றிப் பேசுவது என்றால் கொண்டாட்டமாக இருந்தது.

“ மேரி, ஊர்ல இருந்து நான் பதினோரு மணி பஸ்ஸைப் பிடிக்க அம்மாவோட வந்துக்கிட்டிருந்தேன். சைக்கிள்ல  வந்துக்கிட்டிருந்த டேவிட், திடீர்னு என்னைப் பார்த்து கண்ணடிச்சான். எனக்கு ஒரே படபடப்பா இருந்துச்சு. பஸ் ஏறி ஜன்னல் வழியா மெதுவா பார்த்தேன், டாடா காண்பிச்சான்...   “

“ அந்த மேலத் தெரு டேவிட்டா? அந்தச் சனியன் நான் ரெண்டரை மணி பஸ் பிடிக்க வந்தப்ப என்னைப் பார்த்தும் கண்ணடிச்சான், கை ஆட்டினான்... நான் நல்லா வஞ்சுப்புட்டேன்...’

“நெசமாத்தான் சொல்றீயா மேரி?’

“இல்ல. உன் மேல உள்ள பொறாமையில அவனைப் பத்திச் சொன்னேன். கனவுல மிதக்காம கணக்குப் போடற வழியைப் பாருடி...’

இப்படித் தங்களைப் பாதித்த விஷயங்களையும் ஊரில் பார்த்த, கேட்ட காதல் கதைகளையும் அலுக்காமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.  (வேறு என்னதான் செய்ய முடியும்? பாடப் புத்தகங்கள், பைபிள் தவிர வேறு புத்தகங்களுக்கு அனுமதி இல்லை. படிப்பு, பிரார்த்தனை தவிர்த்து கிடைக்கும் நேரங்களில் இப்படிப் பேசித்தான் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியிருந்தது!)

இந்தச் சிறை வாழ்க்கையில் வாரம் ஒருமுறை மட்டும் நான்கு மணி நேரம் விடுதலை கிடைக்கும்.  அது ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போகும் நேரம். அன்று மட்டும் எல்லோருக்கும் கூடுதல் சுறுசுறுப்பு வந்து விடும். ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிப்பார்கள். அன்று மட்டும் எப்படி வேண்டுமானாலும் தலை வாரிக்கொள்ளலாம். பளிச் நிறங்களில் உடைகள் அணிவார்கள். சர்ச்சுக்குச் செல்லாத மாணவிகளிடமிருந்து பாவாடை, தாவணி எல்லாம் இரவல் வாங்கிக்கொள்வார்கள். இத்தனை நாள் நாம் பார்த்தவர்களா இவர்கள் என்று நினைக்கும் அளவுக்கு வசீகரிப்பார்கள்.
காற்றில் அலையும் கூந்தலுடன் இடது கையில் பைபிளைப் பிடித்தபடி அவர்கள் செல்வதைப் பார்க்கும் போது பாரதிராஜா ஹீரோயின்கள்  போல இருக்கும்! இரண்டு வரிசைகளாகச் செல்வார்கள். தெருக்கள், வீட்டு ஜன்னல்கள், மாடிகளில் இருந்து இளைஞர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்! வரிசையில் செல்லும் ஒவ்வொருவரும் தன்னைத்தான்  பார்ப்பதாக நினைத்து, சந்தோஷமடைவார்கள். கூட்டத்தில் தன்னை மட்டும் தனித்துக் காட்ட நினைக்கும் பெண்கள், வரிசையை விட்டு விலகி, “ஏய், ஒழுங்காகப் போங்க’ என்று குரல் கொடுப்பார்கள்.

அடுத்த ஞாயிறு வரை பச்சை சட்டைக்காரன், ஒட்டடக்குச்சி, குண்டு பூசணி என்று ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் வைத்து, இதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஆண்கள் இல்லாத பாலைவனமாக இருந்த ஹாஸ்டல் வாழ்க்கையில், திடீரென்று ஒரு சோலை பூத்தது. தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்துக்குள்ளேயே குடி வந்து விட்டார். அவருக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். மூன்று பேருமே உயர் கல்விக்காக வெளியூர்களில் படித்து வந்தார்கள். 

தலைமை ஆசிரியரின் நெருங்கிய உறவினர்களின் பெண்களும் ஹாஸ்டலில் இருந்தார்கள். ஆனால் உறவினர் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் தலைமை ஆசிரியர் சிறிய சலுகைக்கூட காட்ட மாட்டார். அதேசமயம் உறவினர்கள் யாராவது சிறிய தவறு செய்தாலும் பெரிய அளவில் தண்டனை கொடுத்து விடுவார். அவ்வளவு கண்டிப்பானவர்.

ஒருநாள்  ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்து, தோளில் ஒரு பையுடன் ஸ்டைலாக ஓர் இளைஞர்  பள்ளி மைதானத்துக்குள் வந்துகொண்டிருந்தார். யார் அவர்? எல்லோரும் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். 

“கனி, ஜான் வர்றாங்க... ஜான்...’ என்று பதற்றத்தோடு ஓடி வந்தார் ரத்னா அக்கா.

“ஜான் மட்டும் இல்லை, பின்னாலேயே பெரியம்மாவும் வர்றாங்க...’ என்று கனிமொழி சொன்னதும் ரத்னாவின் முகம் வாடிவிட்டது.

இருவரும் வீட்டுக்குள் சென்று விட்டார்கள்.

“ காலேஜ் போனதும் ஜான் ரொம்ப ஸ்மார்ட்டா ஆயிட்டாங்க இல்ல!  நான் நல்லா மேட்ச் ஆவேனா  கனி?’ என்று கேட்டார் ரத்னா.

“ஜான் உனக்கு மட்டும் அத்தை மகன் இல்ல. ரீட்டா, பிரின்ஸி கூட முறைப் பெண்கள்தான் ஞாபகம் வச்சுக்க.  என் அண்ணன் மனசுல எவ இருக்காளோ’ என்றார் கனிமொழி.

“எனக்குத்தான் சொந்த அத்தை மகன்... எவளும் என் கூடப் போட்டிப் போட முடியாது...’

ஹாஸ்டலுக்கு அருகில் இருந்த தலைமை ஆசிரியர் வீட்டுப் பக்கம் வேண்டுமென்றே  மாணவிகள் அடிக்கடிச் செல்வார்கள். ஜன்னல் வழியாக ஜானின் தலை தெரியாதா, தோட்டத்தில் வந்து அமர மாட்டாரா என்று ஏங்குவார்கள். ஆனால்  ஒருநாளும் ஜான் யாருக்கும் தரிசனம் தரவில்லை.

அன்று வெளியில் சென்றிருந்த ஜான் பள்ளிக்குள் நுழைந்தார். தலைமை ஆசிரியர் வெளியே போயிருந்த தைரியத்தில் பெண்கள் அவர் கவனத்தைப் பெற நினைத்தார்கள். கொலுசை ஆட்டினார்கள். சத்தம் போட்டுப் பேசினார்கள். ரத்னா அக்கா கொஞ்சம் தைரியமாக இரண்டடி இடைவெளியில் ஜான் கூடவே நடந்து வந்தார். ம்ஹும்...  குனிந்த தலை நிமிரவே இல்லை ஜான். எந்த விஷயமும் அவரை அன்னிச்சையாகக் கூடத் திரும்பிப் பார்க்க வைக்கவில்லை! அத்தனைப் பெரிய மைதானத்தையும்  கடந்து, வீட்டுக்குள் புகுந்துவிட்டார்.

“என்னங்கடி! என் அண்ணன் கிட்ட உங்க பாச்சா எல்லாம் பலிக்காது.  அண்ணன் மேல வச்சிருக்கிற நம்பிக்கையாலதானே பெரியம்மா இங்கே  குடி வந்திருக்காங்க! இது கூடத் தெரியாமல் என்னவெல்லாம் பண்ணறீங்கடி! போங்க... போய் தனியா உட்காந்து கனவு காணுங்க...’ என்றார் கனிமொழி.

மாலை ஹாஸ்டல் பக்கமாக வந்தார் தலைமை ஆசிரியர். ரத்னாவைப் பார்த்து, “ என்ன போன மாதத் தேர்வுல மார்க் எல்லாம் குறைஞ்சிருச்சு போல. ஒழுங்கா படிப்புல மட்டும் கவனம் செலுத்து...’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

“நான் ஜான் கூட நடந்து  வந்ததை வாட்ச்மேன் போட்டுக்கொடுத்துருச்சு போல...’ என்று ரத்னா பல்லைக் கடித்தார்.

No comments: