Saturday, March 27, 2010

சுத்தம்.. சோறு.. சிங்கப்பூர்!

மிகப் பிரம்மாண்டமான விமான நிலையம். விமான நிலையத்துக்கு நிகரான ரயில் நிலையம். ரயில் நிலையத்தின் வாயிலில் பேருந்து நிலையம். டாக்சி என்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லாமல், போக்குவரத்து மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது சிங்கப்பூரில். பத்து, பதினைந்து டாலர் கொடுத்து அட்டைகளை வாங்கிவிட்டால் போதும். ரயிலிலும் பேருந்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏறும்போது ஒரு முறை, இறங்கும்போது ஒரு முறை அட்டையைத் தேய்க்க வேண்டும். பணம் காலியாகும் முன் எச்சரிக்கை மணி வருகிறது.இரண்டு, மூன்று தளங்கள் கொண்ட ரயில் நிலையங்கள். ஒரு ரயிலிலிருந்து இன்னொரு ரயிலில் பயணம் செய்ய, எஸ்கலேட்டரில் ஏறி, இறங்கினால் போதும். ரயில், பேருந்துகள் குளிர்சாதன வசதிகளுடன் இருக்கின்றன. எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அலுப்பு வரவில்லை. வரப் போவது என்ன ஸ்டேஷன், நாம் இறங்கும் ஸ்டேஷன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது போன்ற விவரங்கள் மானிட்டரில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது தவிர, சீனம், தமிழ், ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. யாருக்கும் உதவி தேவையிருக்கவில்லை. அளவான வேகத்தில் பேருந்து செல்கிறது. நிறைய பேருந்துகள் இருப்பதால் நெருக்கியடிக்கும் கூட்டம் இல்லை. பேருந்திலும் ரயிலிலும் ஒரு சின்னக் காகிதமோ, குப்பையோ கண்ணில் படவில்லை. காகிதம், புகை, உணவு, துரியன் பழம் ஆகியவற்றுக்குத் தடை என்று போட்டிருக்கிறார்கள்.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகனங்களோ, மனிதர்களோ இல்லாவிட்டாலும் கூட பேருந்து ஓட்டுனர்கள் (கேப்டன்கள்) சிக்னலை மதிக்கிறார்கள். சாலையை அவசரமாகக் கடக்க வேண்டும் என்றாலோ, வயதானவர்கள் கடக்க வேண்டும் என்றாலோ சாலை ஓரத்தில் இருக்கும் பட்டனைத் தட்டிவிட்டு, கடக்கலாம்.

ரயில், பேருந்து பயணங்களில் இரைச்சல் இல்லை. மொபைல் போன், லேப்டாப், புத்தகங்களில் மூழ்கிவிடுகிறார்கள். மொபைல் போன் அழைப்புகள் கூட வெளியே கேட்கவில்லை. அமைதியாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென்று “ என் பேரு மீனா குமாரி... என் ஊரு கன்னியாகுமாரி’ என்று நம்மவர்கள் தொலைபேசி அலறுகிறது. கண்ணாடியால் ஆன பெரிய ஜன்னல்கள் வழியே ஊரை ரசித்துக்கொண்டே செல்ல முடிகிறது.

எங்கும் விண்ணை முட்டும் அடுக்குமாடிக் கட்டடங்கள். அகலமான தார்ச் சாலைகள். ஆங்காங்கு தெரியும் நிலப் பரப்புகளில் பச்சைப் பசேல் என்று புற்கள் வளர்க்கப்பட்டிருப்பதால், தரையைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.
லிட்டில் இந்தியா என்று ஓர் இடம். தமிழர்களால் (தமிழர்களுக்கு) நடத்தப்படும் கடைகள். ஒரு கடையில் இளையராஜாவும் இன்னொரு கடையில் சித்ராவும் பாடிக்கொண்டிருந்தார்கள்! மல்லிகை, ரோஜா, தாமரை, கதம்பம் என்று எல்லாப் பூக்களும் மாலைகளும் கிடைக்கின்றன. முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரையிலிருந்து பசலைக் கீரை வரை வாடாமல் வதங்காமல் அணிவகுத்து நிற்கின்றன. காய்கள், பழங்கள் என்று எதற்கும் குறைவில்லை. கோமள விலாஸ் உணவு விடுதியில் இட்லி, தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி, பூரி என்று டிபன் வகைகளும் சாம்பார், ரசம், மோர், மூன்று காய்கள், பாயசத்துடன் முழு மதிய உணவும் கிடைக்கின்றன. தஞ்சாவூர் டிகிரி காபிக்குப் பெரும்பாலும் தமிழர்களும் சில சீனர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள். மளிகை, நகை, துணி, எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் என்று வரிசையாகக் கடைகள். இதே போல் சைனா டவுன் என்ற இடத்தில் சீனர்களின் கடைகள், உணவு விடுதிகள்.


லிட்டில் இந்தியாவைத் தவிர, பெரிய மால்களில் இந்திய உணவுகள் கிடைக்கின்றன. பெரிய ஜூஸ் தம்ளர்களில் காபி அல்லது டீயுடன் உணவைச் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சீன உணவுகளைப் பற்றிய செய்திகள் எல்லாம் பொய்க்கும் விதத்தில் ஆச்சரியத்தை அளித்தன. இருபது வகை உணவுகள் கண் முன்னே வைக்கப்பட்டிருந்தன. மீல்ஸ் என்றால் ஒரு கப் சாதம், இரண்டு காய், ஒரு மீன் அல்லது கோழித் துண்டு சேர்ந்தது. சைவம் என்றால் மூன்று காய்கள் வாங்கிக் கொள்ளலாம். நம் விருப்பப்படி காய்களைப் பரிமாறுகிறார்கள். ஒரு காய் குழம்பு போன்று இருக்கிறது. அதைச் சாதத்தின் மேல் ஊற்றுகிறார்கள். உருளைக் கிழங்கு, சோயா உருண்டைகள், கீரை என்று தட்டு நிறைய வைத்துத் தருகிறார்கள். புதுச் சுவையாக இருந்தாலும் எல்லாமே சாப்பிடக்கூடிய ருசியில் இருந்தன. காரம் இல்லை. புளி இல்லை. எண்ணெய் இல்லை. உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவுகள்! பார்சல் என்றால் ஒரே டப்பாவில் சாதம், மூன்று காய்களைப் போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். பொரித்த கோழி, வாத்து இறைச்சிகளும் மீன்களும் எங்கும் கிடைக்கின்றன. பல்வேறு காம்பினேஷன் ஜூஸ்கள்!

சிங்கப்பூரின் மிக அழகான விஷயம் சீனப் பெண்கள். அளவான உயரம், ஒல்லியான உடல், வெண்ணெய் போன்ற நிறத்தில் மெழுகு பொம்மை போல் அத்தனை அழகாக இருக்கிறார்கள். தோடுகளோ வேறு எதுவும் நகைகளோ அணியாமல் மேக் அப் இல்லாமல் அட்டகாசமாகத் தெரிகிறார்கள். குறிப்பிட்ட அளவு சீனர்கள் தமிழர்களைப் போல் தோடு, வளையல், செயின் எல்லாம் அணிந்திருக்கிறார்கள். முழு பேண்ட், முக்கால் பேண்ட்களை வயதான பெண்களில் இருந்து இளம் பெண்கள் வரை அணிகிறார்கள். பதின்ம பருவத்துப் பெண்களை மிகக் குட்டையான டைட் டிராயர்களில் அதிகமாகப் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்வாகு அது போன்ற உடைகளையும் மிகவும் நாகரிகமாகவே காட்டியது.

விமான நிலையம், பேருந்து, ரயில், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் எங்கும் ஓர் ஆண்- ஒரு பெண் என்ற அளவில் பெண்கள் வேலை செய்கிறார்கள். எந்த நாட்டினராக இருந்தாலும் அவர்களின் தாய் மொழியை, பிரைவேட்டாகவாவது படித்திருக்க வேண்டும் என்பது சிங்கப்பூர் சட்டமாம். தரமான பள்ளிகள், கல்லூரிகள் இருக்கின்றன. படித்தவர்கள், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தவர்களாகத் தெரிகிறார்கள். படிப்பு, வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

சாலை போடும் வேலைகள், கிரேன் ஆப்பரேட்டர்கள், ஆழ்குழாய் கிணறு தோண்டுகிறவர்கள் என்று கடினமான வேலைகளைச் செய்யக் கூடியவர்கள் தமிழர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷ்காரர்களாக இருக்கிறார்கள். அதிலும் பங்களாதேஷ்காரர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுபோன்ற இடங்களில் சீனர்கள் கண்களுக்குத் தென்படவில்லை. விமான நிலையம் போன்ற இடங்களில் உள்ள உணவு விடுதிகளில் பெரும்பாலும் தமிழ்ப் பெண்கள் வேலை செய்கிறார்கள்.

மக்கள் அதிகம் புழங்கக்கூடிய இடங்களில் கூடத் தூசியையோ, குப்பையையோ, எச்சிலையோ பார்க்க முடியவில்லை. அத்தனை சுத்தம். சுவர்களில் ‘தலைவரின் பிறந்தநாள்’ என்ற கிறுக்கல்கள் இல்லை. முகத்தில் அறையும் ஃபிளக்ஸ்கள் இல்லை. காதைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள் இல்லை. பத்துப் பேர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர் தமிழர்களாக இருக்கிறார்கள்.


சின்ன நாடாக இருப்பதால் இருக்கும் இடத்துக்குள் அத்தனைப்பேரும் வாழ வேண்டிய கட்டாயம். அதனால் பத்து, இருபது மாடிக் கட்டடங்கள் மக்கள் குடியிருப்புகளாக இருக்கின்றன. தனி வீடுகள் மிகவும் குறைவு. மக்கள் ஓரளவு(!) வசதியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் டவுன் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மிகப் பெரிய ஹால், மூன்று அறைகள், நவீன சமையல் அறை, பால்கனியுடன் இருக்கிறது வீடு. வீட்டில் தண்ணீர் தேங்காமல், சுத்தமாக வைத்திருக்கவேண்டும். டவுன் கவுன்சில் அடிக்கடி சோதனை செய்கிறது. சுத்தமாக இல்லாவிட்டால் அபராதம் கட்டவேண்டியதுதான். குடியிருப்புகளின் கீழே குழந்தைகள் விளையாடுவதற்கு என்று மைதானம், சறுக்கு மரம், ஊஞ்சல் என்று நிறைய வசதிகள். கார், சைக்கிள் வைக்க தனி இடம். குடியிருப்புக்குள் இருந்து சாலைக்கு சைக்கிளில் வர, தனி பாதை அமைத்திருக்கிறார்கள்.


லிஃப்டில் ஏறும்போது ஏதாவது பிரச்னை என்றால், லிஃப்டுக்குள் என்ன செய்ய வேண்டும், யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று விவரங்கள் உள்ளன. நாங்கள் மாட்டிக் கொண்டபோது, தொலைபேசியில் புகார் செய்து ஐந்து நிமிடங்களுக்குள் டவுன் கவுன்சிலில் இருந்து ஆள்கள் வந்துவிட்டார்கள்.

5 comments:

அண்ணாச்சி சொன்னா... said...

‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ப்ரியா’, போன்ற படங்கள் பார்த்த மாதிரி இருக்கிறது.

Sundaraprakash said...

akka ,nice one.....i am also trying there ...

ரகுராமன் said...

Nice one.. I heard that people are from singapore also realy good thats y they are keeping the city clean.Also Goverment of singapore is good...

Sathish K said...

நீண்ட நாட்களாய் எதிர்பார்த்த பதிவு. அருமை வழக்கம் போல்.

கொஞ்சம் நீண்ட பதிவு. சிறு சிறு பதிவுகளாக்கி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்து இருக்கும்.

நாம் பார்த்தவற்றில் நல்லவற்றை சொல்லியதில் சந்தோஷம். நிச்சயம் அங்கும் கெட்டன இருக்கும். ஆனால் நல்லவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.

சிறு வருத்தம் என்னவெனில், அங்கு உள்ள நல்லனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இங்கு உள்ள கெட்ட விஷயங்களைக் கோடிட்டு காட்டி இருக்கிறீர்கள்.

ஆமாம், என்ன பெண்களை நீங்கள் ‘சைட்’ அடிக்கிறீர்கள். :)

அங்கேயும் லிஃப்டுக்குள்ள மாட்ட வேண்டியிருக்கா... அடக் கடவுளே!

Unknown said...

something relevant to the question arised by sathish.k,..

read the short story here

http://jeyanthisankar.blogspot.com/2005/02/blog-post_20.html

by the famous writer Jayanthi Sankar