Friday, August 21, 2009

இரண்டு நாள் வனவாசம்!

பரம்பிக்குளம் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தோம். அங்கு செல்வதற்கான வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. ஏழு பேர் கொண்ட சின்ன குழுவாகக் கிளம்பினோம். கோவை வரை ரயில் பயணம். அங்கிருந்து பொள்ளாச்சிக்கு ஒரு மணி நேரம் பேருந்தில் பயணம். பொள்ளாச்சியில் காலை 6.15 மணிக்குத் தயாராக நின்றுகொண்டிருந்தது பரம்பிக்குளம் பேருந்து.

பொள்ளாச்சியில் இருந்து கிளம்பிய பத்து நிமிடங்களுக்குள் நகரத்தை விட்டு, கிராமங்களுக்குள் செல்ல ஆரம்பித்தது பேருந்து. சாலையின் இரண்டு பக்கங்களிலும் மிகப் பெரிய தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள். தோப்புகளுக்கு நடுவே சின்ன பங்களாக்கள். சினிமாவில் பார்த்த பண்ணையார் வீடுகள் ... வருவதும் மறைவதுமாக இருந்தன. ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை என்று கடந்த பேருந்து மலைமேல் ஏற ஆரம்பித்தது. அரை மணி நேரப் பயணத்தில் டாப்ஸ்லிப் வந்து நின்றது. இத்துடன் தமிழ்நாட்டு எல்லை முடிவடைகிறது. இனி கேரளா.



குறுகலான மலைப்பாதை. உயர்ந்த தேக்கு மரங்கள். தூணக்கடவு தாண்டி, பரம்பிக்குளம் நெருங்கிக்கொண்டிருந்தோம். நீண்ட தோகை கொண்ட ஓர் ஆண் மயிலும், இரண்டு பெண் மயில்களும் சீரியஸாக உணவு தேடிக்கொண்டிருந்தன. அடுத்த வளைவில் ஓர் யானை ஓரமாக நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் மற்றும் எகோ செண்டர் முன்பு பேருந்து நின்றது. ஹெரான், மைனா, ஹிப்போய் என்ற பறவைகளின் பெயர்களில் 7 டெண்ட்கள் இருந்தன. தரை மட்டும் சிமெண்ட் போடப்பட்டு, அதன் மேலே டெண்ட். சுவர் கிடையாது. பாதுகாப்பான டெண்ட். உள்ளே ஹோட்டலுக்குரிய அத்தனை வசதிகளும் இருந்தன. டெண்டை ஒட்டி, குளியலறை.

நாங்கள் தயாரானதும் சின்ன வன உலாவுக்கு அழைத்துச் சென்றார்கள். சத்தம் போடக்கூடாது; சிவப்பு, மெஜந்தா வண்ண ஆடைகளை அணியக்கூடாது என்று எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டி ஸ்ரீநிதாசன் கூறினார். நடக்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் சரசரவென்று சத்தம் கேட்டது. சில மான்கள் வேகமாக ஓடுவது தெரிந்தது. மரங்கள், செடிகளைப் பார்த்துக்கொண்டு தங்கிய இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.




மதிய உணவு பிரமாதமாக இருந்தது. சைவம், அசைவம் எல்லாம் இருந்தது. நான்கு மணிக்கு வேனில் வன உலாவுக்குக் கிளம்பினோம். சற்று நேரத்தில் நாற்பது, ஐம்பது மான்கள் ஒரே இடத்தில் மேய்ந்துகொண்டிருந்தன. பச்சைப் புல்வெளியில் பழுப்பு வண்ணப் புள்ளி மான்கள் அட்டகாசமாக இருந்தன. மீண்டும் பயணம்... சாம்பார் மான், மயில், சிங்கவால் குரங்குகள் கண்ணில் பட்டன.

கன்னிமரா தேக்கு மரம் மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் முழு உருவத்தையும் எவ்வளவு முயற்சி செய்து கேமராவுக்குள் சிக்க வைக்க முடியவில்லை. அதன் வயது அதிகமில்லை... சுமார் 450 வருடங்கள்!

அங்கிருந்து பரந்து விரிந்துள்ள ஏரிக்குச் சென்றோம். சுற்றிலும் மூங்கில் காடுகள். நடுவில் தண்ணீர். மூங்கிலால் செய்யப்பட்ட சிறிய படகில் சவாரி. தூரத்தில் ஒரு கறுப்பு முதலை தரையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் மான்கள் கூட்டமாகத் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. ஏரியின் நடுவில் 4 கிலோ மீட்டருக்கு ஒரு நிலப்பரப்பு. அதிலும் மரங்கள். அந்தத் தீவிலும் தங்கும் வசதி உண்டு. இரவு நேரத்தில் தீவுக்கு அருகில் யானைகள், புலிகள் தண்ணீர் அருந்த வருவதைப் பார்க்கலாம் என்றார்கள்.

’புலி இதுவரை ஏழு தடவை என் பக்கத்துல வந்துட்டுப் போயிருக்கு. நமக்குப் பயமாகத்தான் இருக்கும். ஆனா அது இதுவரை ஒண்ணும் செய்ததில்லை. பார்த்தாலும் பார்க்காத மாதிரி போயிடும். இந்தக் கரடி இருக்கே, அதுதான் பொல்லாதது’ என்றார் படகோட்டி.

அடுத்து நாங்கள் சென்ற இடம் அணை. காடு கேரளாவுடையது என்றாலும் இங்கிருக்கும் அணைகள் எல்லாம் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில். அணை மீது நடக்கும்போது சுற்றிலும் பல வண்ணப் பச்சை மரங்கள். சில இடங்களில் தேக்கு மரம் பூத்து வித்தியாசமான கலவையாகக் காட்சி தந்தது.

இருட்ட ஆரம்பித்தது. எங்கும் பூச்சிகளின் இன்னிசை. அடுத்து ஊருக்குள் வந்து சேர்ந்தோம். அங்கு மலை வாழ் மக்களின் பாரம்பரிய நடனத்தைப் பார்த்தோம்.
தங்கும் இடத்தை நோக்கி வேன் கிளம்பியது. ஓர் இடத்தில் வேன் நின்றது. சுமார் பத்து காட்டெருமைகள் ஓரமாக நின்றுகொண்டிருந்தன. பளபள தோல். புஷ்டியான உடல். கூர்மையான வளைந்த கொம்புகள். மிகவும் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தன.

சற்றுத்தூரம் சென்ற உடன் எதிரே ஒரு ஜீப் வந்தது. அதில் இருந்தவர்கள் யானை பாதையில் நிற்பதாகச் சொன்னார்கள். வேன் மெதுவாகச் சென்றது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் யானைகள் குடும்பம் குடும்பமாக நின்றுகொண்டிருந்தன. சில யானைகள் வேகமாக மரங்களுக்குள் சென்று மறைந்துகொண்டன.

நாங்கள் இரவு உணவை முடித்துவிட்டு, தூங்கினோம். அதிகாலை பறவைகள், விலங்குகளுடைய விநோதமான ஒலிகள் கேட்டன. எழுந்து பறவைகளைப் பார்ப்பதற்காக மீண்டும் வன உலா. வழியில் கஸ்தூரி மஞ்சள் செடிகள் பூத்திருந்தன. பெயர் தெரியாத பறவைகள் எங்கோ இருந்து சத்தம் கொடுத்துக்கொண்டிருந்தன. ஒன்றிரண்டு பறவைகளை மட்டும் பார்க்க முடிந்தது.

காலை உணவுக்குப் பிறகு மீண்டும் ஒரு நடைப்பயணம். நடுவில் வேறொரு குழுவும் எங்களுடன் இணைந்தது. உயரமான மரத்தில் மலை அணிலைப் பார்த்தோம். பெரிய முயல் அளவுக்கு அதன் உருவம் இருந்தது. திடீரென்று பெரிய மரம் ஒடியும் சத்தம். இரண்டு வழிகாட்டிகளும் ரகசியமாகப் பேசிக்கொண்டனர். காரணம் கேட்டேன். ஒன்றும் இல்லை என்றனர். பிறகு ஒரு பெரிய செடியைப் பறித்து, இடப்பக்கமும் வலப்பக்கமும் வீசிக்கொண்டு நடந்தனர். எங்களுக்கெல்லாம் திக்திக் என்றிருந்தது. அமைதியாக தங்கும் இடத்துக்கு வந்தோம். ‘வேற ஒண்ணும் இல்லை. யானை வாசம் வந்தது. சத்தமும் கேட்டது. அதான்’ என்றார் வழிகாட்டி.




யானை பள்ளத்தாக்கு என்ற இடத்தில் தங்கினோம். தங்கும் விடுதிக்கு அருகில் பெரிய வாணலி பாத்திரம் அளவுக்கு தடங்கள் காணப்பட்டன. விசாரித்தபோது முதல் நாள் இரவு யானைக்கும் காட்டெருமைக்கும் சண்டை என்றார்கள். அதன்பிறகுதான் காட்டெருமையின் கால்தடம் அருகில் இருந்ததைக் கவனித்தோம்.

சுற்றுலா பொறுப்பாளர் ஸ்ரீநிவாசன் வீடு அருகில் இருந்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக இங்கு வசிப்பதாகச் சொன்னார். அவர் வீட்டுக்கு அருகில் உள்ள மரங்களில் சிங்கவால் குரங்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. மழை பெய்யும்போது சிறுத்தை இவர்கள் வீட்டு வாசலில் ஒதுங்கி விட்டுச் செல்லும் என்றார்கள்! கோழி வளர்த்தால் மலைப்பாம்பு பிடித்துச் சென்று விடுமாம்!

எனக்கு ஒரு கேள்வி இருந்துகொண்டிருந்தது. ‘இயற்கை காடு மாதிரி தெரியலை. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தேக்கு மரங்கள் வளர்ந்திருக்கே?’ என்று ஸ்ரீநிவாசனிடம் கேட்டேன்.

‘ பிரிட்டிஷ் காலத்தில் காட்டில் உள்ள மரங்களை அழித்து தேக்கு மரங்களை நட்டிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். அதுதான் இப்ப இப்படி வளர்ந்திருக்கு. சின்னச் சின்ன இலைகள் உள்ள மரங்கள் இல்லாததால பறவைகள், விலங்குகளுக்கு உணவும் இல்லை. வாழறதுக்கான வசதியும் குறைந்து விட்டது. ஹார்ன்பில் போன்ற பறவைகளும் நிறைய விலங்குகளும் இன்னும் தூரத்தில் இருக்கும் இயற்கை காட்டுப்பகுதிகளுக்குச் சென்றுவிட்டன. இங்கே தனியாருக்கு நிலம் கிடையாது. மலைவாழ் மக்கள் 150 குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்கும், காடுகளின் அருமையை எல்லோரும் புரிந்துகொள்ளவும் இந்த வன உலாக்களை நடத்திக்கொண்டிருக்கிறோம் ’ என்றார்.

புகை பிடிக்கத் தடை. மதுபானங்களுக்குத் தடை. பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை. தப்பித் தவறி பிளாஸ்டிக் பைகள் கண்ணில் பட்டால் அதிகாரி முதல் பொதுமக்கள் வரை ஓடி வந்து அப்புறப்படுத்துகிறார்கள். விலங்குகளின் வாய்க்குள் தெரியாமல் போய்விட்டால் கஷ்டம்!

திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள். பூச்சிகளின் ஒலிகள். விலங்குகளின் திடீர் தரிசனங்கள். இதமான குளிர். தொல்லை தராத தொலைபேசிகள் (பிஎஸ் என் எல் தவிர எதுவும் வேலை செய்யாது). டிவி, செய்தித்தாள் போன்ற தகவல் தொடர்புகள் இன்றி, இரண்டு நாள்கள் இயற்கையோடு இயற்கையாக, சுத்தமான, காற்று, தண்ணீருடன் அடடா!

Friday, July 31, 2009

ஐயோ, இது என்ன வலி?

சில மாதங்களுக்கு முன்பு அல்சர் பிரச்னைக்காக மருத்துவரைச் சந்தித்தேன். டெஸ்ட் செய்து விட்டு, வலி, எரிச்சல் இருக்கிறதா என்று கேட்டார். இரைப்பையில் எரிச்சல் இருக்கிறது என்று சொன்னேன். உடனே அவர் சிரித்து விட்டார். ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டோமோ என்று டாக்டரைப் பார்த்தேன். ’எல்லோரும் நெஞ்சு எரிச்சல்னுதான் சொல்வாங்க. நீங்க வித்தியாசமா இரைப்பை எரிச்சல்ங்கறீங்க!’ என்றார்.

நண்பர் ஒருவர் உயிரியல் பேராசிரியர். அவர் அடிக்கடி ஏதாவது பிரச்னைக்காக மருத்துவரிடம் செல்வார். டாக்டர் என்ன பிரச்னை என்றால் நெஞ்சு வலி, வயிற்று வலி என்றெல்லாம் சொல்ல மாட்டார். ‘இதயத்தில் இடது வென்ட்ரிக்கிளிளுக்கும் வலது வென்ட்ரிகிளுக்கும் நடுவில் வலிக்கிறது’ என்றார். திகைத்துப்போன டாக்டர், ‘நீங்களும் மருத்துவரா?’ என்று கேட்டார். ‘இல்லை... எனக்குக் கொஞ்சம் விஷயம் தெரியும்’ என்றார் நண்பர். ’இதயத்தில் ஒண்ணும் பிரச்னை இல்லை. விஷயம் தெரியறதால நீங்களே சாதாரண வலியைக் கூட அதுவோ, இதுவோன்னு கற்பனை செஞ்சுக்கறீங்க. வலியை மட்டும் சொல்லுங்க. என்ன பிரச்னை, எங்கே பிரச்னைன்னு கண்டுபிடிக்கறது எங்களோட வேலை’ என்றார் டாக்டர்.

இப்படி... கொஞ்சம் விஷயம் தெரிந்தாலே ஏதாவது வலி என்றால் ஏதேதோ கற்பனை செய்துவிடுகிறோம். மருத்துவம் படித்த ஒரு டாக்டருக்கு இந்த உணர்வு எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள ரொம்ப ஆசையாக இருந்தது.

சமீபத்தில் அதுக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. என் தோழியும் அவரது கணவரும் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். தோழியின் கணவர் ஒரு மருத்துவர். ஒரு நாள் முழுவதும் எங்களுடன் தங்கியிருந்தனர். குழந்தைகள் விளையாடும்போது, ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது, என்று எந்த நேரத்திலும் அவர் ஓர் அப்பாவாகத் தெரிந்தாரே தவிர, மருத்துவராகத் தெரியவில்லை. அவர்கள் கிளம்பும்போதுதான், அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

‘இவர் வீட்டில் டாக்டரா இருப்பாரா? சாதாரண அப்பாவா இருப்பாரா?’

உடனே டாக்டர் சிரித்தார்.

‘இவரும் நம்மளை மாதிரிதான் இருப்பார். எல்லோரும் கடைபிடிக்கும் சில அடிப்படை சுகாதாரத்தை நாங்களும் கடைபிடிப்போம். மற்றபடி அதைச் சாப்பிடாதே காய்ச்சல் வரும், இதைப் பண்ணாதே சளி பிடிக்கும்ன்னு எல்லாம் சொல்ல மாட்டார்’ என்றார் தோழி.

‘எல்லா மக்களுக்கும் உள்ளதுதானே நம்மளுக்கும். மருத்துவம் தெரிந்ததால சும்மா எல்லா விஷயத்தையும் யோசிச்சிட்டே இருக்கக்கூடாது’ என்றார் டாக்டர்!

Tuesday, July 28, 2009

பள்ளி என்றொரு சர்க்கஸ் கூடாரம்!

காலையில் செய்தித்தாளைப் பார்த்தபோது அதிர்ச்சி. விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்ப்பெரும்பாக்கம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமீபத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா நடத்தியிருக்கிறார்கள். அதில் முக்கிய அம்சமாக கராத்தே மாஸ்டரின் சாகசங்கள்! பத்து வயது மாணவர்கள் சீருடைகளுடன் வரிசையாகக் கைகளை நீட்டி, குப்புறப் படுத்திருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளை குழந்தைகளின் கைகள் மேல் ஓட்டி வருகிறார் மாஸ்டர். குழந்தைகள் பயத்தில் தலையை நிமிர்த்தவில்லை. சுற்றி நிற்கும் கூட்டம் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. அடுத்த சாகசம் தரையில் படுத்திருக்கும் மாணவியின் வயிற்றில் ஒரு பலகை வைத்து, அதன் மீது மோட்டார் சைக்கிளை ஓட்டி வருகிறார் மாஸ்டர்.

குழந்தைகளைத் துன்புறுத்தும் இந்த நிகழ்ச்சி அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊர்ப்பெரியவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது! அதுவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சம்மதத்துடன் எனும்போது என்ன சொல்வது?

2008ம் ஆண்டு எடுத்த புள்ளிவிபரம் அரசாங்கப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதாகக் கூறியிருக்கிறது. அதே போல மாணவர்களின் சேர்க்கையும் குறைந்து வருவதாகச் சொல்கிறது. இந்த நேரத்தில் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் காட்ட வேண்டிய அக்கறையை குழந்தைகளைப் பகடையாக வைத்து, இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளில் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

Wednesday, July 22, 2009

மனிதர்கள் சிறை வைக்கப்பட்டார்கள்!

இந்த முறை அதிகாலையில் சூரிய கிரகணம் நிகழ்வதால் சென்ற முறை கிடைத்த த்ரில் இருக்காது என்பது தெரிந்துவிட்டது. அதிகாலையில் மேக மூட்டம் இருப்பதால் தெரியாது என்று சிலர் சொன்னார்கள். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் கிரகணத்தை எதிர் நோக்கி இருந்தேன். காலை 5.45 க்கு எழுந்து பார்த்தால் பறவைகள் எல்லாம் வழக்கத்தை விட அதிகமாகக் கத்திக்கொண்டிருந்தன. சூரியன் இன்னும் வெளிவரவில்லை. காபி குடித்துவிட்டு, சூரியக் கண்ணாடிகளுடன் மாடிக்குச் சென்றோம்.

96 வீடுகள் நிறைந்த இந்தக் குடியிருப்பில் ஒரு வீட்டுக் கதவும் திறக்கவில்லை. அருகில் குடியிருக்கும் கட்டடத் தொழிலாளர்கள் வீடுகளில் ஒரு பக்கம் சமையல், குளியல் என்று வழக்கமான பணிகள் நடந்துகொண்டிருந்தன. பால்காரர், கீரை விற்பவர், அதிகாலையில் வேலைக்குச் செல்பவர்கள் என்று சொற்பமான மனிதர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். வழக்கம் போல பேருந்துகள் சென்றாலும் கூட்டம் இல்லை.

6.20க்கு ஒரு வழியாக மேகத்தின் பிடியிலிருந்து விடுபட்டு சூரியன் சிறிய கீற்றாக வெளிப்பட்டது. வசதியான இடத்தில் நின்றுகொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் வெளிவந்துகொண்டிருந்தது. யாராவது கண்ணில் பட்டால், கண்ணாடியைக் கொடுத்து கிரகணத்தைப் பார்க்கச் சொல்லலாம் என்று பார்த்தேன். ம்ஹூம். ஒருவரும் வெளியில் வருவதாக இல்லை.

தஞ்சாவூரிலிருந்து அப்பாவும், தாம்பரத்திலிருந்து தங்கையும் கிரகணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தார்கள். ஒன்றிரண்டு வீடுகளில் இருந்து டிவி சத்தம் பூட்டிய கதவைத் தாண்டி வெளியில் வந்துகொண்டிருந்தது. பண்டிகைகளை டிவியுடன் கொண்டாடுவதைப் போல கிரகணத்தையும் டிவியிலாவது பார்க்கிறார்களே!

7.20க்கு சந்திரனின் மறைப்பிலிருந்து முழுவதுமாக தன்னை விடுவித்துக்கொண்டு, சூரியன் வழக்கம்போல தகதகத்தது. 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூரிய கிரகணத்தில் எல்லோரும் வீட்டுக்குள் சிறையிருக்க, எங்கள் குடும்பம் மட்டும் மாடியில் கிரகணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. இன்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை!

Friday, July 10, 2009

சூரிய கிரகணம்

சூரியக் கண்ணாடிகள்

ஜூலை 22, 2009 அன்று காலை 6.23 மணிக்கு நிகழ இருக்கும் சூரியக் கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்கை நிகழ்வு. சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் கண்ணாடிகள் விற்பனை செய்கிறார்கள்.

சூரியக் கண்ணாடி விலை ரூ. 10/-

கிடைக்கும் இடம் :

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை - 86
தொலைபேசி : 28113630

கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக் கூட்டத்தில் சூரிய கிரகணம் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வானியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான என். ராமதுரை சிறப்புரை நிகழ்த்துகிறார்.

நாள் : 18.07.2009 , நேரம் : மாலை 6.30 மணி

இடம் : கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 18

Monday, July 6, 2009

வானில் ஒரு தீபாவளி!

அன்று காலை சூரிய கிரகணம் என்பதால் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி விட்டனர். சாப்பிடக்கூடாது, குளிக்கக்கூடாது, வெளியில் வரக்கூடாது என்று காலம் காலமாகச் சொல்லி வந்த விஷயங்களை மக்கள் சரியாகப் பின்பற்றினார்கள். தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. வழக்கம் போல எங்கள் வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் அன்றும் இருந்தது. அம்மா காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

நேரம் நெருங்கியது. அம்மா, அப்பா, தங்கைகள் அனைவரும் ஆளுக்கு ஒரு சூரியக் கண்ணாடியைத் தூக்கிக்கொண்டு, மாடிக்கு விரைந்தோம். மெதுவாக இருட்டத் தொடங்கியது. பறவைகள் மாலை வேளைகளில் கூட்டுக்குள் அடைவதைப் போல ’காச்மூச்’ என்று கத்திக்கொண்டே தங்கள் கூடுகளுக்குத் திரும்பின. (விடிந்து நாலு புழு, பூச்சிகளைப் பிடிக்கலை. அதுக்குள்ளே இருட்டி விட்டதே என்று நினைத்திருக்குமோ!)

கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது சூரியன். பட்டப்பகலில் இதுபோன்ற அனுபவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு நிமிடத்துக்குள் தொலைந்துபோன சூரியனை யாரோ கண்டுபிடித்தது போல மீண்டும் கண்களுக்குப் புலனாகியது. ஒளிக்கீற்று கொஞ்சம் கொஞ்மாகத் தடித்துக்கொண்டே வந்தது. இறுதியில் முழு சூரியன் வானில் பிரகாசித்தது. அற்புதமான அனுபவம்! வார்த்தைகளில் கொண்டு வருவது கடினம்.

சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சந்திரன் சூரியனை சில நிமிடங்களுக்கு மறைத்து விடுகிறது. இதைத்தான் சூரியகிரகணம் என்கிறோம்.

இந்த அனுபவத்தை இன்னும் ஒரு முறை பெறுவதற்கு இயற்கை நமக்கு வாய்ப்பளித்திருக்கிறது. ஜூலை 22, 2009 அன்று முழு சூரியகிரகணம் நிகழ இருக்கிறது. நேரம் காலை 6.23. இதுவரை 3 நிமிடங்களுக்கு மட்டுமே நிகழ்ந்த இந்த அதிசயம் ஜூலை 22 அன்று 6 1/2 நிமிடங்களுக்கு நீடிக்க இருக்கிறது. சென்னை, மும்பை போன்ற இடங்களில் 80%, கொல்கத்தாவில் 90% கிரகணத்தைப் பார்க்க முடியும்.

சூரியகிரகணத்தின் போது மட்டுமே வைரமோதிரம் எனப்படும் சூரியனின் கரோனாவைக் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரியகிரகணத்தைக் கண்டுகளியுங்கள். இந்த சூரிய கிரகணத்தை விட்டுவிட்டால், அடுத்த சூரியகிரகணத்தை 2087-ம் ஆண்டில்தான் பார்க்க முடியும்!

சூரியகிரகணத்தால் கண்களுக்குப் பாதிப்பா, இல்லையா என்பதை இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே பாதுகாப்பாக சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரிய கிரகணத்தைக் கொண்டாடுவோம்.

Thursday, July 2, 2009

சிதைந்துபோன நம்பிக்கை

எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பாதியில் ஒரு பெண் வந்து சேர்ந்தாள். நெடுநெடு உயரம். சிவப்பாக, ஒல்லியாக இருந்தாள். தோற்றத்தைப் பார்த்தால் பத்தாவது என்று சொல்லலாம். தோற்றம், ஸ்டைல் எல்லாம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று காட்டியது. எல்லோருக்கும் புதிதாகச் சேர்ந்த அந்த மாணவியைப் பார்ப்பதிலும், பேசுவதிலும் ஆர்வம். பேச ஆரம்பித்ததும்தான் தெரிந்தது அவள் இலங்கையைச் சேர்ந்தவள் என்று. மிக விரைவிலேயே பாடங்களைக் கற்று, க்ரூப் லீடர்களில் ஒருவராகி விட்டாள். அத்துடன் எங்களின் நட்பு வட்டத்திலும் இணைந்துவிட்டாள். எங்களுடன் படித்தாலும் அவளை எல்லோரும் அக்கா என்றே அழைத்தோம்.

ஒரு நாள் அவளிடம், ‘நீயும் நாங்களும் ஒன்றாகத்தானே படிக்கிறோம். உன் பேரைச் சொல்லிக் கூப்பிடச் சொல்லேன்’ என்றேன் நான்.

’சொந்தங்களை விட்டு வந்துட்டோம். இங்க எல்லோரும் அக்கான்னு கூப்பிடறப்ப எனக்கு நெருக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. அப்படியே கூப்பிடட்டும்’ என்று சொல்லிவிட்டாள்.

‘எங்க ஊர்ல அப்படி இருக்கும், இப்படி இருக்கும்’ என்று நல்ல விஷயங்களாகத்தான் சொல்லிக்கொண்டிருப்பாள். அவள் சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்படுவோம்.

எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் அவள், அன்று தன் இயல்பைத் தொலைத்திருந்தாள். காரணம் கேட்கக் காத்திருந்தேன். நல்லவேளை கணித ஆசிரியர் அன்று வரவில்லை.

‘என்ன அக்கா?’ என்று நான் கேட்டவுடன் விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

‘நாங்க எல்லோரும் இங்க வரலை. எங்க அண்ணன்கள் ரெண்டு பேர் இலங்கையில இருக்காங்க. ரெண்டு நாளைக்கு முன்னால எங்க ஏரியால குண்டு வீச்சு நடந்திருக்கு. அவங்ககிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லை. எங்கம்மா அழுதுகிட்டே இருக்காங்க’ என்றாள்.

’அழாதே. ஒண்ணும் நடந்திருக்காது’ என்றோம்.

’உங்களுக்கு எல்லாம் தெரியாது. நாங்க இலங்கையில் ரொம்ப வசதியாக வாழ்ந்தோம். எங்க அண்ணன்கள் பிஸினஸ் செய்துக்கிட்டிருந்தாங்க. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தோம். எனக்குப் படிப்புல ஆர்வம் அதிகம். நல்லா படிக்க வைக்கணும்னு எல்லோரும் சொல்வாங்க. அடிக்கடி எங்க நாட்டுல பிரச்னை நடந்துக்கிட்டே இருக்கும். ஒரு நாள் நான், அப்பா, அம்மா, அக்கா மட்டும் வீட்ல இருந்தோம். சிங்கள ராணுவம் தமிழர்கள் வீட்டைத் தேடி வந்துக்கிட்டிருக்காங்கன்னு தகவல் வந்தது. வீட்டில் இருந்த நகைகள், கொஞ்சம் பணம், துணிகளை எடுத்துக்கிட்டு வெளியே வந்தோம். எங்க தெருக்குள்ள ராணுவம் நுழைஞ்சிருச்சு. என்ன பண்ணறதுன்னே தெரியலை...

’பக்கத்து வீட்ல ரொம்ப வருஷமா பழகின சிங்களர் குடும்பம். நாங்க தயங்கினப்ப, தயங்காமல் எங்களை அவங்க வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனாங்க. அக்கம் பக்கத்தில் எங்களைப் பற்றி விசாரித்த ராணுவம், எங்கள் வீட்டைக் கொளுத்தியது. கண் முன்னால நாங்க வாழ்ந்த வீட்டை நெருப்பு தின்பதைப் பார்த்தும் எங்களால் அணைக்கவோ, கதறி அழவோ முடியலை. இரவு முழுவதும் அவங்க வீட்ல அழுதுகொண்டே இருந்தோம்.

’காலையில எங்க அண்ணன்கள் வந்து சேர்ந்தாங்க. எங்களுடன் இரண்டு அண்ணன்களையும் சேர்த்து அனுப்பி வைச்சாங்க. மீதி ரெண்டு பேர் சொந்த மண்ணை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. இங்க வந்தால் இன்னும் கொடுமை. எங்க அண்ணன்களுக்கு ஏற்ற வேலை கிடைக்கல. ஒருத்தர் தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கறார். இன்னொருத்தர் ஒரு கடையில வேலை செய்யறார். ரெண்டு அண்ணன்கள் என்ன ஆனாங்கன்னே தெரியலை’ என்று அழுதாள்.

‘அக்கா கவலைப்படாதே. நாங்க எல்லாம் இருக்கோம்ல. எங்க நாடும், தமிழ்நாட்டு மக்களும் உங்களுக்கு ஆதரவா இருக்காங்க. சீக்கிரம் நல்லது நடக்கும். நீங்க அங்க போயிடலாம்’ என்றேன்.

‘நாங்க மறுபடியும் போவோமா?’

மறுவாரம் அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள் அம்மா அழுதுகொண்டிருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்.

‘காசு, பணம் இல்லாமல் வாழலாம். நாடு இல்லாமல் மட்டும் வாழக்கூடாதும்மா. நாங்க தப்பு பண்ணிட்டோம். எங்க மக்களோட, எங்க மண்ணிலேயே நாங்க செத்துப் போயிருக்கணும். எங்க மக்கள் கஷ்டப்படறப்ப நாங்க மட்டும் இங்கே எப்படி இருக்க முடியும்?‘

அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அன்றும் என்னிடம் இல்லை. இன்றும் என்னிடம் இல்லை.

மூன்று மாதங்களாக இலங்கை தமிழர்களின் நிலை பற்றிய செய்திகளும், வீடியோக்களும் நிம்மதியிழக்கச் செய்துவிட்டன. பல இரவுகளில் தூக்கம் தொலைந்து போனது. துக்கத்தைத் தாங்க முடியாமல் அழுதும், பேசியும் மன உளைச்சலுக்கு ஆளானோம். ஒன்றும் செய்ய முடியாத இயலாமை... இயலாமை... என்ற குற்ற உணர்வு வாட்டி வதைக்கிறது.

ஆதரவு அற்ற இந்தத் தேசத்தில் வசிக்கும் அவலத்தை எண்ணி நீயும் உன் குடும்பமும் எவ்வளவு வலி உணர்வீர்கள் என்பதை நினைக்கும்போது தொண்டை அடைக்கிறது.

அதனால்தான் நேற்று வந்த கனவில் கூட உன் முகத்தை நிமிந்து பார்க்கும் சக்தி என்னிடம் இல்லை அக்கா.