Monday, January 24, 2011

ஹாஸ்டல் கதைகள் - 5 தண்ணீர்... தண்ணீர்...


இன்று வரை ராமநாதபுரத்தை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்னை குடி தண்ணீர். சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடும்போதும் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் மோசமான பழக்கம் எனக்கு இருந்தது.  ஹாஸ்டலில் சேர்ந்த முதல் நாள் தண்ணீர் கேனுடன் சாப்பிடச் சென்றேன். என்னை எல்லோரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள். சிறிது நேரத்தில் எல்லோரும் ஆளுக்கு ஒரு வாய் குடித்துவிட்டு, வெறும் கேனைத் திருப்பித் தந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன், உணவறையில் தண்ணீர்ப் பானையும் இல்லை; யாரும் தண்ணீர் கேனையும் கொண்டுவரவில்லை என்று! கனிமொழி அக்காவிடம் கேட்டேன்.

“நீ தங்கத்தைக் கேட்டால் ஒருவேளை யாராவது கொடுத்துடலாம். ஆனா, தண்ணியைக் கேட்டா ஒருத்தியும் தரமாட்டாளுக. உன்கிட்ட வாங்கிக் குடிச்சவங்க கூடத் தரமாட்டாங்க. இனிமே தண்ணியைக் கொண்டு வர்ற வேலை எல்லாம் வச்சுக்காதே...’

‘என்னக்கா, இப்படிச் சொல்றீங்க! எனக்கு விக்கல் எடுத்தா...?’

“அதெல்லாம் எடுக்காது. நாங்க எத்தனை வருஷமா இப்படிச் சாப்பிட்டுட்டு வர்றோம். ரொம்ப விக்குச்சுனா சட்னி, ரசம், மோர் எதையாவது குடிச்சுக்க வேண்டியதுதான்!’

அதிர்ந்து போனேன்.

வாரத்துக்கு ஒருமுறை லாரியில் தண்ணீர் வரும். சமையலுக்குப் பிடித்தது போக, மீதித் தண்ணீரைக் குடிப்பதற்குப் பிடித்துக்கொள்ளலாம். அடுத்த வாரம் வரை தினமும்  மூன்று வேளைக்கு ஒரு மூடி வீதம்  தண்ணீரைக் குடிக்க வேண்டும். வீட்டிலிருந்து வரும் சில தாராள மனம் படைத்த மாணவியர், தோழியராகக் கிடைத்தால், கூடுதலாகத் தண்ணீரைக் குடிக்கும் பாக்கியம் கிடைக்கலாம்!
சில வாரம் லாரி தண்ணீர் வராது. அப்போது நிலைமை பாலைவனத்தில் வசிக்கும் அனுபவத்தைத் தந்துவிடும்.  கனிமொழி அக்காவுக்கு சில ஆசிரியர்களிடம் நல்ல பழக்கம் இருந்ததால், அவர்கள் அறைகளில் இருந்து தண்ணீர் வாங்கித் தருவார். அதுவும் வாய்க்காதவர்கள் கிணற்றுத் தண்ணீரை வழியின்றி குடித்து, அவதிப்படுவார்கள்.

எதை வாங்கி வருகிறார்களோ இல்லையோ, பார்வையாளர்கள் தினத்தில், பார்க்க வருகிறவர்கள் கண்டிப்பாக கேன் நிறைய தண்ணீர் கொண்டுவருவார்கள்!

லாரி தண்ணீர் வராவிட்டால் சமைப்பது எப்படி?

சனி, ஞாயிறாக இருந்தால் பகலில் எப்போது வேண்டுமானாலும், பள்ளி நாள்களாக இருந்தால் மாலையிலும் அவரவர் வாளியைத் தூக்கிக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். பதினைந்து நிமிட  தூரத்தில் இருக்கும் தேவாலயத்தில் தண்ணீர்ப் பிடித்து வர வேண்டும். பெரிய மாணவியர் வாளி நிறைய தண்ணீர் எடுத்து வருவார்கள். நானும் அமுதாவும் முக்கால் வாளியை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்தபடி வருவோம். நடக்க நடக்க தண்ணீர் தளும்பி, கீழே போனது போக எஞ்சிய தண்ணீரைத்தான் பயன்படுத்தமுடியும்! 

குடி தண்ணீர் தான் இப்படி என்றால்... கிணற்று நீர்?

பம்ப்செட் போட்ட பெரிய கிணறு. அந்தக் கிணற்றுக்கு அருகில் பெரிய தொட்டி ஒன்று. ஐந்து மணிக்கு மோட்டார் போடுவார்கள். தண்ணீர் தபதபவென்று கொட்டும். அந்த அரைமணி நேரத்துக்குள் குளித்து, துவைத்து விட வேண்டும். சில நேரங்களில் பதினைந்து நிமிடங்களிலேயே தண்ணீர் நின்று விடுவதும் உண்டு. இருட்டு நேரத்தில், மெல்லிய விளக்கு வெளிச்சத்தில், கடமையே கண்ணாக இருந்தால் மட்டுமே காரியத்தில் வெற்றி பெற முடியும்!  இல்லாவிட்டால் யாரிடமாவது கயிறும் வாளியும் வாங்கி, தண்ணீர் இறைக்க வேண்டும். ராட்டினம் இல்லாமல் தண்ணீர் இழுக்கத் தெரியாத என் போன்றவர்களுக்கு பம்ப்செட் விட்டால் வேறு வழியில்லை. எப்போதாவது மழை பெய்தாலும் நனைந்துகொண்டே குளிர்த்து முடிக்க வேண்டும்.

No comments: