Saturday, June 18, 2011

பிருந்தாவனம்...தஞ்சாவூரில் தோட்டங்களுடன் கூடிய தனித்தனி வீடுகளாகத்தான் இருக்கும். தென்னை, மா, பலா, வாழை, கொய்யா, முருங்கை, கறிவேப்பிலை போன்ற மரங்கள் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் கண்டிப்பாக இருக்கும். சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை போன்றவை சில வீடுகளில் இருந்தன.

செம்மண் பூமி என்பதால் எதை வைத்தாலும் நன்றாக வளர்ந்து, பூத்து, காய்த்துக் குலுங்கிவிடும்.

நாங்கள் அந்த வீட்டுக்கு வந்தபோது, வலது மூலையில் நந்தியாவட்டை மரமும், பின்புறத்தில் ஆயுள் முடிந்த இரண்டு வாழை மரங்களும்தான் இருந்தன. எங்கள் வீட்டில் அனைவருக்குமே செடி, கொடி, மரங்கள் மீது தீராத ஆர்வம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தோட்டத்துடன் கூடிய வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு அப்போதுதான் கிடைத்திருந்தது. குப்பைகள், முள்செடிகள் எல்லாம் அப்புறப்படுத்தி, நான்கு தென்னங்கன்றுகள் வாங்கி  நடப்பட்டன.

அப்பாவின் நண்பர்கள் எல்லாம், ‘எதுக்கு வாடகை வீட்டில் தென்னை மரங்களை எல்லாம் நடறீங்க? கொஞ்ச வருஷத்துல காலி பண்ணிட்டுப் போயிடுவீங்க? யாரோ அனுபவிக்கப் போறாங்க. ஏதாவது காய்கறிச் செடி, கொடிகள் வச்சா, நீங்களே அனுபவிக்கலாம்என்றார்கள்.

‘நீங்க சொல்றதில் நியாயம் இருக்கு. ஆனா எங்களுக்கு மரம் வளர்க்கறதுலதான் ஆர்வம். அதை யார் அனுபவிச்சாலும் வருத்தமில்லைஎன்றார் அப்பா.

வாழைக் கன்று, கறிவேப்பிலைக் கன்று, கொய்யா, பப்பாளி என்று வரிசையாகக் குடிவந்தன. ‘நிறையத் தண்ணீர் ஊற்றினால்தான் தென்னை நல்லா காய்க்கும்என்று யாரோ சொல்ல, குடம் குடமாகத் தண்ணீரைக் கொட்டினோம்.

விவசாயப் பண்ணையில் இருந்து கத்தரி, வெண்டை, மிளகாய், பாகற்காய், புடலை, தக்காளி, பூசணி என்று விதைகள் வாங்கி வந்து, ஊன்றி வைத்தோம். பொன்னாங்கண்ணி (இது வயலட்டும் பச்சையும் கலந்த நிறத்தில் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும், சாப்பிடவும் செய்யலாம்!), கொத்தமல்லி, புதினா என்று ஒருபக்கம் கீரைகளும் வளர ஆரம்பித்தன.

விதை ஊன்றியதில் இருந்து தினமும் கவனிப்போம். நான்கு நாள்களில் முளை தெரியும். கொடிகள் வளரும் வேகம் மலைப்பைத் தரும். முதல்நாள் பார்த்தது போல மறுநாள் இருப்பதில்லை. நேற்றுப் பிஞ்சாகத் தெரிந்த பாகற்காய், இன்று பறிக்கும் பதத்துக்கு வந்திருக்கும். (இரவு முழுவதும் விழித்திருந்து செடி, காய் வளர்வது, பூ மலர்வது எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்ததெல்லாம் உண்டு.)

கொடிகள் வளருவதற்கு நேர் எதிராகக் கத்தரி, வெண்டை போன்றவை மெதுவாக வளரும். குறைவாகவே காய்க்கும். இரண்டு கத்தரிக்காய்கள் காய்த்தாலும், குழம்பில் வேறு காய்களைச் சேர்க்காமல் சமைத்து, ஆளுக்கொரு துண்டு  வைத்துவிடுவார் அம்மா.

நாமே விதை ஊன்றி, தண்ணீர் ஊற்றி வளர்த்து, காயைப் பறித்து, சமைத்துச் சாப்பிடும் சந்தோஷத்துக்கு நிகர் வேறில்லை. சொந்த உழைப்பில் விளைவித்த பொருளுக்குக் கூடுதல் சுவை இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.

கத்தரி, வெண்டை போன்றவை மிகக் குறைவாகக் காய்த்தாலும் பாகற்காய், புடலங்காய், தக்காளி, பூசணி போன்றவை காய்த்துத் தள்ளின. அதுவும் சிறிய பாகற்காயும் பெரிய பாகற்காயும் தினமும் பறிக்கும் அளவுக்குக் காய்த்தன. பாகற்காய் பிரியர்கள் என்றாலும் தினமும் சாப்பிட முடியாது. அக்கம்பக்கம், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குக் கொடுத்து விடுவோம்.

சிறிய பாகற்காய் ஆழம் குறைந்த குழியில்தான் பயிரிட்டிருந்தோம். தினமும் காலை எழுந்ததும் சின்னப் பாகற்காய்களைப் பறிப்பதற்காகக் கொடியோடு கொடியாக ஐக்கியமாகியிருப்போம்.

‘பாம்பு ஏதாவது இருக்கப் போகுது... செடி கிட்ட இப்படிப் போய் உட்காராதீங்கஎன்று சொல்லிக்கொண்டே இருப்பார் அம்மா. ஆனால் எங்கள் காதில் அது விழாது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருநாள் பாகற்காய் கொடியையே வெட்டி எறிந்துவிட்டார்கள். கண்ணீரே வந்துவிட்டது.

நண்பர்கள் வீடுகளில் இருக்கும் பூச்செடிகள், குரோட்டன்ஸ்களை எங்களிடம் இருக்கும் செடிகளைக் கொடுத்து, பண்டமாற்று செய்துகொள்வோம். இதனால் எங்கள் தோட்டத்துக்கு நிறைய தாவரங்கள் குடிவந்தன. நடுவில் வெள்ளை நிறப் பூக்கள் கொண்ட செடிகள். அடுத்த ரவுண்ட் வயலட் வண்ணப் பூக்கள். அதற்கடுத்த ரவுண்ட் வெள்ளை... ஒருபக்கம் சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை நிற ரோஜாக்கள், சாமந்திப் பூக்கள், அடுக்கு மல்லி, செம்பருத்தி... இப்படி எங்கள் தோட்டத்தின் அழகு கூடிக்கொண்டே சென்றது.  

நூற்றுக்கு மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகளை அறிமுகம் செய்து வைத்ததும் எங்கள் தோட்டம்தான். தோட்டத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. படிப்பது, எழுதுவது, சகோதரிகளுடன் சண்டை வந்து புலம்புவது எல்லாம் மரங்கள், செடி கொடிகளுடன்தான்!  

எங்கள் தோட்டத்தைப் பார்ப்பதற்காகவே அப்பாவின் நண்பர்கள் தினமும் வருவார்கள். ரசிப்பார்கள். ‘பிருந்தாவனத்துக்கு வந்துட்டுப் போற மாதிரி இருக்கு. செடிகள் மேல இருக்கற உங்க ஆர்வத்துக்குப் பரிசா இந்த வீட்டையே நீங்க வாங்கிட்டீங்கஎன்பார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தென்னை, மா, பலா, கொய்யா, சாத்துக்குடி மரங்கள் எல்லாம் காய்க்க ஆரம்பித்திருந்தன.

அம்மாவுக்கு ஒரே வருத்தம். ‘கஷ்டப்பட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்த பிள்ளைகள் எல்லாம் கல்யாணம் ஆகிப் போயிட்டாங்க. அவங்களால பலனை அனுபவிக்க முடியலை...

ஒவ்வொரு வீட்டுக்கும் பார்சலில் பலாப்பழம் அனுப்பிவைக்கப்பட்டன.

‘அவங்க பணம் கட்டி இங்கே அனுப்பி, அதைப் போய் வாங்கிட்டு வந்து சாப்பிடறதுக்கு ஆகற செலவுல, இங்கேயே ஒரு பழத்தை வாங்கிச் சாப்பிட்டுடலாம்... என்றனர் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள்.

அவர்களுக்கு என்ன தெரியும்!.

         

11 comments:

Anonymous said...

‘கஷ்டப்பட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்த பிள்ளைகள் எல்லாம் கல்யாணம் ஆகிப் போயிட்டாங்க. அவங்களால பலனை அனுபவிக்க முடியலை...’

இந்த வரிகளில் அம்மாவின் வருத்தம் தெரிகிறது.

பார்சலில் வாங்கிய பலாப்பழத்தை நினைக்கும்போது உங்கள் பிந்தாவனத்தின் வனப்பு மேலோங்குகிறது. அருமை...

Tanuthias said...

Good

TANUTHIAS said...

நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கு

அருணன் பாரதி said...

வணக்கம் சுஜாதா. குழந்தைப் பருவ, சிறு வயது அனுபவங்களை அனுபவித்து, உங்கள் நண்பர்களான செடிகொடிகளைப் பற்றி பெருமிதத்துடன் எழுதி உள்ளீர்கள். எங்கள் வீட்டில் நானும் தம்பியும் தோட்டம் போட்டது அதன் பலனை 10 ஆண்டுக்குப் பின்னர் நம் வீட்டு மக்கள் அனவரும் அனுபவித்தது நினைவுத் தொட்டிலில் தாலாட்டியது.பகிவ்ர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.

TAMILSUJATHA said...

மோகனா,

தோட்டக்கலையில் நீங்கள் எக்ஸ்பர்ட். உங்கள் வீட்டுத் தோட்டம், மாடிப்படிகள் என எங்கும் தாவரங்கள் நிறைந்திருக்கும். நாங்கள் வீட்டுக்கு ஒருமுறை வந்தபோது வினு தோட்டத்தில் பாகற்காய் பறித்துக்கொண்டிருந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. இப்போதுள்ள வீட்டில் இருக்கும் சொற்ப இடத்தில் கூட நிறையச் செடிகளும் கொடிகளும் வளர்த்து வருவதைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.

சுஜாதா

புண்ணியக்காய் said...

தோட்டத்தில் விதவிதமாகக் காய்த்துக் குலுங்கினாலும் பாவக்காய் பொறியல் தவிர வேறு எதையும் அலுவலகத்துக்கு எடுத்துவர மாட்டீர்கள் என்று கிழக்கு நண்பர் ஒருவர் புலம்பினார். உண்மையா?

TAMILSUJATHA said...

பல ஆண்டுகளுக்கு முன்பு காய்த்துக் குலுங்கிய காயகளை இப்போது எப்படிக் கொண்டு வர முடியும்? உங்கள் நண்பருக்குப் பாகற்காய் கொடுக்காத வருத்தத்தில் புலம்பி இருப்பாரோ என்னவோ!

Sathish K said...

கசப்பு என்றாலும் பாகற்காயை விரும்பும் பல ஜீவன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சிறு வயதில் என் பாட்டி வீட்டில் பார்த்தது தான் தோட்டம். அவர்களும் பின்னர் தோட்டத்தை எடுத்துவிட்டு வீடு கட்டி விட்டார்கள்.

சென்னையில் தோட்டத்தைப் பார்ப்பது சிம்ம சொப்பனம். புறநகர் பகுதிகளில் வேண்டுமானால் பார்க்க வாய்ப்பு இருக்கலாம்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஊரில் இருந்து பலாப்பழம் கொண்டு வந்தார். அதை வீட்டுக்குக் கொண்டு வருவதற்கு பலாப்பழ விலையை விட அதிக செலவானது. அதற்காக கால் டாக்ஸியை வைக்க வேண்டியதாகி விட்டது. :)

Sathish K said...

உங்கள் பதிவைப் படிக்கத் துவங்கும் போது தலைப்பு வேறாக இருக்கிறதே என்று நினைத்தேன். பின்னர் தான் பூக்களைப் பற்றியும் சொல்லி இருப்பதைப் படித்தேன். பிருந்தாவனம் என்றால் என் நினைவுக்கு வருவது பூக்கள் மட்டும் தான்.

Anonymous said...

கஷ்டப்பட்டு காய்கறிகளை விளைவித்து அதைச் சாப்பிடும் ருசியே தனி என்பதைப் படித்தவுடன் நாமும் அதுபோல் செய்ய வேண்டும் என்ற ஆவலை உருவாக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள் சுஜாதா மேடம். -பாலா.கணேஷ்

Anonymous said...

Very nice and interesting.

-Kumar