Wednesday, January 19, 2011

ஹாஸ்டல் கதைகள் - 4 உணவும் வேலைப் பங்கீடும்

காலை உணவு பெரும்பாலும் இட்லிதான். ஒரு நாள் தேங்காய் சட்னி, மறுநாள் தக்காளி சட்னி. மாதத்துக்கு இரண்டு தடவை தோசை. மிக அரிதாக உப்புமா.

கோஸ், பீன்ஸ், கேரட், அவரை, பீட்ரூட்  என்று ஏதாவது இரண்டு பொரியல்கள், சாம்பார், ரசம், மோர் மதிய உணவு.   இதில் இரண்டு நாள்கள்  மட்டன் கிரேவி, அப்பளம் இருக்கும். மட்டன் சாப்பிடாதவர்களுக்கு இரண்டு அப்பளங்கள். இரண்டு  நாள்கள் கீரை, முட்டை, புளிக்குழம்பு, ரசம், மோர்.

மாலை (இரவு) உணவு சாதம், ரசம், ஒரு காய்.

நான் விடுதியில் சேர்ந்த ஒரு மாதம் வரை மிகவும் கஷ்டப்பட்டேன். கழுநீர் தண்ணீர் போன்ற காபியும் புளிப்பேறிய இட்லியையும் பார்க்கும்போதே  அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று தொண்டைக்கு வந்து, வாந்தி எடுக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும். கண்கள் கலங்கி நிற்கும். கூடவே அம்மாவின் அற்புதமான சமையலும், அதை உதாசீனப்படுத்திய காட்சிகளும் கண் முன்னே விரியும். சட்டென்று இரண்டு சொட்டு கண்ணீர் வெளியே வந்துவிடும். சட்னி பிடிக்கவில்லை என்று, இட்லிப் பொடியுடன் சென்றாலும், அந்தப் புளிப்புக்குப் பொடி விஷமாக மாறியது போல ஒரு கசப்பைத் தரும். சாப்பிடாமல் இருக்கவும் முடியாது. இட்லிகளை வாங்கி, கனிமொழி அக்காவிடம் கொடுத்துவிட்டு, ஒரே ஓர் இட்லியுடன் அமர்ந்திருப்பேன். சிறிய தட்டில் பொடி இருக்கும். ஓரிரு துண்டுகளைக் கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு, சிறிய தட்டில் இட்லியை வைத்து, பெரிய தட்டால் மறைத்தபடி சென்று, கொட்டி விடுவேன்.

மதியம் உணவு சாப்பிடும்படி இருக்கும். ஆனால் எனக்குத்தான் அதிலும் பிரச்னை. கோஸ், புடலங்காய், பீர்க்கங்காய், சௌசௌ... இவை எல்லாம் எனக்குப் பிடிக்காத காய்கள். ஆனால் இவைதான் பெரும்பாலும் இருக்கும். காலையில் சாப்பிடாததால், மதியம் பசி அதிகமிருக்கும். பசிக்குச் சாப்பிடும் அருமை அப்போதுதான் புரிந்தது. சாம்பார் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, ரசத்தைக் குடித்துவிட்டு எழுந்துவிடுவேன்.

இரவு உணவைப் பொறுத்தவரை என்னை அதிகம் இம்சிக்கவில்லை. வாரத்தில் ஒருநாள் சௌசௌ கூட்டை மட்டும் அமுதாவிடம் தள்ளிவிடுவேன். ஊறுகாய் வைத்து சமாளித்துக்கொள்வேன். மறுநாள் அமுதாவுக்குப் பிடிக்காத சேனைக்கிழங்கு வறுவல் எனக்கு வந்து விடும்.

எங்கள் ஹாஸ்டலில் மூன்று பிரிவுகள் இருந்தன. ஒன்று நான் சாப்பிடக்கூடிய, மாதக் கட்டணம் ரூ.120/- . இன்னொன்று ரூ.90/-. (இதில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் இட்லி, மற்ற நாள்களில் சுடு கஞ்சி. மதியம் ஒரே ஒரு காய். வாரத்துக்கு ஒரு நாள் மட்டன், ஒரு நாள் முட்டை. மாலை உணவு எங்ககளைப் போன்றதே.) முப்பது ரூபாய் அதிகம் கொடுத்தால், ஓரளவு நல்ல உணவு கிடைத்துவிடும். ஆனால் அதைக் கூட கொடுக்க முடியாதவர்கள் அதிகம் இருந்தனர். இதில் அக்கா, தங்கை இருவர் இருந்தால், ஒருவர் இந்த மெனுவிலும் இன்னொருவர் அந்த மெனுவிலும் இருக்கக்கூடிய விநோதம் எல்லாம் இருக்கும்! மூன்றாவது வகையில் சற்றுக் குறைவான எண்ணிக்கையில் மாணவியர். ஆதரவு அற்றவர்கள், மிக மிக ஏழைமையில் இருக்கக்கூடியவர்கள்.   

*

ஹாஸ்டலில் பெருக்குதல், உணவு பரிமாறுதல் போன்ற வேலைகளை மாணவியரை வைத்தே செய்துவிடுவார்கள். ஆரம்பத்தில் இந்த வேலைகளைச் செய்யும்போது கோபமாக வரும். ஆள் வைத்து செய்துகொள்ளாமல், மாணவியரை இப்படி வேலை வாங்குகிறார்களே என்று! அவரவருக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளைப் பெருக்கிவிட்டு, பிறகுதான் படிக்க வரவேண்டும். அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இல்லை. ஆனால் இந்தப் பரிமாறுதல்?

நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட, 9 -12 வகுப்பு மாணவியர்தான் பரிமாறும் வேலைகளைச் செய்ய வேண்டும். உணவறைக்கும் சமையலறைக்கும் தூரம் அதிகம். அங்கிருந்து அவரவர் குழு ஆள்களுடன் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவை எடுத்து வர வேண்டும். தட்டை உணவறையில் வைத்துவிட்டு, உணவுகளைக் கொண்டு வர வேண்டும். அப்படி நான் போவதற்குள் இட்லி, பொரியல், முட்டை, கீரை போன்ற சிறிய பாத்திரங்கள் எல்லாம் ஏற்கெனவே போயிருக்கும். சாதம், குழம்பு, ரசம், மோர்  போன்ற ஏதோ ஒன்றைப் பரிமாறிவிட்டு, அந்தப் பாத்திரத்தைச் சுத்தம் செய்துவிட்டு, உணவறைக்கு வந்து சாப்பிட வேண்டும். எப்படி மற்றவர்கள் இவ்வளவு சாமர்த்தியமாக இருக்கிறார்கள் என்று நான் யோசித்துப் பார்த்தும் சூட்சுமம் புரியவில்லை.

கனிமொழிதான் என்னைக் கவனித்து அந்த டெக்னிக்கைச் சொல்லித் தந்தார்.

“நீ ஒன்பதாம் வகுப்பு படிக்கிற சின்னப் பொண்ணு. பெரிய பாத்திரங்கள் எல்லாம் தூக்காத. இனிமேல் நீ பரிமாறுகிற வாரத்தில் நானே தட்டை எடுத்துட்டு வந்துடறேன். நீ பெல் அடிச்சதும் நேரா கிச்சனுக்குப் போயிரு. ஈஸியா என்ன இருக்கோ, அதை மத்தவங்களோட சேர்ந்து எடுத்துட்டு வந்துரு. சாதம் போடறதுக்குள்ள உன் வேலையை முடிச்சிட்டு வந்துடலாம்’ என்றார்.

அடடா! அதற்குப் பிறகு நானும் அதுபோலச் செய்தேன். அப்படியும் என்னை விட சாமர்த்தியசாலிகள் எப்படியோ சில நேரங்களில் என்னை முந்திவிடுவார்கள்! 

பெரும்பாலும் 11, 12 படிப்பவர்கள்தான் பரிமாறுவார்கள். நாங்கள் எல்லாம் தட்டுகளை வாங்கிக் கொடுக்கும் பணியைத்தான் செய்வோம். இப்படி அவர்கள் அந்த வேலையைக் கையில் வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. எல்லோருக்கும் பரிமாறிய பிறகு, மீதி எது இருந்தாலும் இன்னொரு ரவுண்ட் பரிமாறிவிடலாம். அப்படிப் பரிமாறும்போது யார் பரிமாறுகிறாரோ அவருடைய தட்டில் இருந்துதான் இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும்! காய்களைக் கண்டுகொள்ளாமல் விடும் மற்றவர்கள், மட்டன் பரிமாறும்போது மட்டும் எரிச்சலைக் காட்டுவார்கள். ஆனாலும் அவர்கள் பரிமாறும்போதும் இப்படித்தா ன் செய்வார்கள்.

என்னைப் போல் ஒன்றிரண்டு பேரைத் தவிர, மற்றவர்கள் யாரும் உணவு பிடிக்கவில்லை என்று கொட்ட மாட்டார்கள். இட்லி பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே, நான்கு இட்லிகளைச் சாப்பிட்டு விடுவார்கள். எஸ்தர், தேன் மொழி போன்றவர்கள் தட்டு நிறைய இட்லிகளை வைத்து, மிகவும் ரசனையாக சட்னிக்குள் நனைத்து, உறிஞ்சி சாப்பிடுவார்கள்.
இவர்களைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஹாஸ்டலில் இருக்கக்கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிராமங்களிலிருந்து,  ஏழைமையில்
வந்தவர்கள் என்று பிறகுதான் புரிந்தது.

ஹாஸ்டலில் எந்த வித பாகுபாடுமின்றி ஒரு விஷயம் எல்லோரிடமும் இருந்தது. அது சத்து மாவு. மாதம் முழுவதும் நொறுக்குத் தீனிகளை வைத்திருக்க முடியாது.  கடையில் தின்பண்டம் வாங்கிச் சாப்பிடுவதற்கு வசதியும் இருக்காது.  இந்தச் சத்துமாவை மாதக்கணக்கில் வைத்திருக்கலாம். வேர்க்கடலை, பச்சைப்பயறு, அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் என்று அவரவர் பக்குவத்துக்கும் வசதிக்கும் ஏற்ப சத்துமாவு வைத்திருப்பார்கள். சிலர் தண்ணீரில் பிசைந்து உருண்டையாகச் சாப்பிடுவார்கள். சிலர் ஒரு கிண்ணத்தில் கொட்டி, அவ்வப்போது ஒரு ஸ்பூன் மாவை வாயில் போடுவார்கள். இது சில நேரங்களில் புரை ஏற்றிவிடும் என்பதால், கொஞ்சம் எண்ணெய் கலந்து சாப்பிடுவார்கள்.  தேசிய உணவு போல சத்துமாவுதான் ஹாஸ்டல் வட்டார உணவு!

No comments: