Monday, September 26, 2011

மரங்களின் தாய்!






இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியப் பிரச்னை சுற்றுச்சூழல் சீர்கேடு. காடுகள் அழிப்பு, மழை வளம் குறைதல், பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்தல் போன்ற காரணங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. அதனால் துருவப்பிரதேசங்களில் இருக்கும் பனி உருகத் தொடங்கிவிட்டது. பனி உருகி கடலில் கலந்தால் நீர் மட்டம் உயரும். நிலப்பகுதிகள் மூழ்கக்கூடிய அபாயம். இதை எப்படித் தடுக்கலாம் என்று உலகம் முழுவதும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இது பற்றி 1980களிலேயே யோசிக்க ஆரம்பித்து, செயலில் இறங்கியவர் வாங்கரி மாத்தாய். 1977-ம் ஆண்டு முதல் 12 ஆப்பிரிக்க நாடுகளில் இவர் ஆரம்பித்த  பசுமைப்பட்டை இயக்கம் மூலம் 3 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன!


70 வயது வாங்கரி மாத்தாய் பிறந்தது கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில். கிராமங்களில் பள்ளிகள் இல்லாத காரணத்தால் 8 வயதில்தான் அவர் கல்வி கற்க ஆரம்பித்தார். 1960-ம் ஆண்டில் கென்யாவிலிருந்து 300 மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதில் ஒருவராகப் படிக்கச் சென்றார். உயிரியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டங்களை முடித்தார். அப்போது அவருக்குச் சுற்றுச் சூழல் மீது ஈடுபாடு வந்தது.
படிப்பை முடித்தவுடன் தாய் நாட்டில், நைரோபி பல்கலைக்கழகத்தில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. ஆர்வத்துடன் வந்து சேர்ந்தார் வாங்கரி. ஆனால், அவருடைய வேலையை வேறொருவருக்கு அளித்திருந்தனர். பெண் என்பதாலும் பழங்குடி என்பதாலும்தான் அந்த வேலை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டார். இரண்டு மாதங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தபோது, ஜெர்மன் பேராசிரியர் ஒருவரிடமிருந்து மைக்ரோஅனாடமி என்ற புதிய துறையில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. பேராசிரியரின் தூண்டுதலில் ஜெர்மன் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்துக்காகப் படித்தார்.


1966-ம் ஆண்டு அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த வாங்கரி, மத்தாய் என்ற கென்யரைச் சந்தித்தார். இருவருக்கும் நட்பு உருவானது. 1969-ம் ஆண்டு இருவரும் நைரோபியில் திருமணம் செய்துகொண்டனர். வாங்கரியின் கணவர் அரசியலில் நுழைந்தார். முதல் மகன் பிறந்தான். 1971-ம் ஆண்டு அனாடமியில் பிஹெச்டி பட்டம் பெற்றார் வாங்கரி. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பிஹெச்டி பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

வாங்கரி வேலை செய்த பல்கலைக்கழகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமைகள் வழங்க வேண்டும் என்று போராடினார். சுற்றுச்சூழல் இயக்கங்கள், கென்ய செஞ்சிலுவைச் சங்கம், பெண்கள் இயக்கம் என்று ஏராளமான இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார் வாங்கரி. அப்போது கிராமப்புறப் பெண்களிடம் பழகியபோதுதான், அவர்களின் பொருளாதாரத் தேவைகள், விவசாயப் பிரச்னைகள், நிலத்துக்கான தேவைகள் எல்லாவற்றையும் அவரால் அறிந்துகொள்ள முடிந்தது.


இதற்கிடையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தார் வாங்கரி. அப்போது நடைபெற்ற தேர்தலில் வாங்கரியின் கணவர் வெற்றி பெற்றார். கென்யாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, வாங்கரிக்கு ஒரு யோசனை தோன்றியது. கிராமப்புறப் பெண்களுக்கு வருமானம்தான் முதல்  பிரச்னை. அவர்களுக்கு வருமானம் அளிக்கும் நேரத்தில் மண்ணையும் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்குச் சரியான வேலை மரம் வளர்ப்பது. கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்தார். மரக்கன்றுகளைக் கொடுத்து தங்கள் நிலங்களில் நடச் சொன்னார். ஓரளவு வருமானத்தையும் அளித்தார். தங்கள் நிலங்களில் மரங்கள் வைத்து முடித்த பிறகு, பிற இடங்களிலும் மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்தார். பெண்களே மரக்கன்றுகளை உருவாக்கும் பண்ணைகளை ஆரம்பித்தனர். இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தனர்.

இதைப் பார்த்து அரசாங்கம் பயந்தது. மக்களுக்கு விழிப்புணவு வந்து, மண்ணையும் மரத்தையும் காப்பாற்றினால், தங்களுடைய காடு அழிப்பு, ஊழல் போன்றவற்றுக்கு முடிவு வந்துவிடுமோ என்று அஞ்சியது. கூட்டம் போடக்கூடாது, ஒன்பது பேருக்கு மேல் கூடி நின்று பேசக்கூடாது என்று தடை விதித்தது. ஒவ்வொன்றையும் தைரியமாக எதிர்கொண்டார் வாங்கரி.
1977-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப்பட்டை இயக்கம் உதயமானது. வாங்கரி ஓய்வின்றி போராடிக்கொண்டிருக்கும் போது, சொந்த வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. கணவர் தனியாகச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

‘அவள் அதிகம் படித்தவள். மிகவும் தைரியமானவள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பவள். உறுதியானவள். என்னால் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை – விவாகரத்துக்கு வாங்கரியின் கணவர் சொன்ன காரணம் இதுதான்!

விவாகரத்துக்காக நிறைய செலவாகியிருந்தது. அத்துடன் மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளானார் வாங்கரி. 6 ஆண்டுகள் குழந்தைகளை, கணவர் பொறுப்பில் விட்டிருந்தார். அடிக்கடிச் சென்று குழந்தைகளைக் கவனித்து வந்தார். பொருளாதாரச் சிக்கல் தீர்ந்த பிறகு, குழந்தைகளை அழைத்து வந்துவிட்டார்.

79-ம் ஆண்டு நேஷனல் கவுன்சில் ஆஃப் உமன் ஃபார் கென்யா என்ற அமைப்புக்குத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் வாங்கரி. இதன் கீழ் பல்வேறு பெண்கள் இயக்கங்கள் இயங்கின. வாங்கரியின் தொடர் போராட்டங்களால் அரசாங்கம் எரிச்சல் அடைந்தது. பல்வேறு இடையூறுகளைத் தந்தது. அப்போதுதான் ஜனநாயக அரசாங்கம் அமைய வேண்டிய தேவையை உணர்ந்தார் வாங்கரி. 1988-ம் ஆண்டு சுற்றுச்சூழல் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்.


1989-ம் ஆண்டில் வாங்கரியின் பசுமைப்பட்டை இயக்கம் அரசாங்கத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. உஹுரு பூங்காவில் பெரிய வணிக வளாகம் அமைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. மரங்களை அழித்து, வளாகம் அமைப்பதை எதிர்த்து கடிதங்கள் எழுதினார். போராட்டங்களை நடத்தினார். எதற்கும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. வாங்கரியை பைத்தியக்காரப் பெண் என்று பட்டம் சூட்டியது. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு 1990-ம் ஆண்டு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

அரசியல்வாதிகள், அரசாங்கம் போன்றவற்றைப் பகைத்துக்கொண்டதால் பலமுறை வாங்கரியும் அவருடைய  இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலமுறை சிறை சென்றிருக்கிறார்கள்.

1992-ல் ரியோடிஜெனிரோவில் நடந்த ஐ.நாவின் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வாங்கரி சென்றார். கென்ய அதிபரும் அதில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பேசுவதற்கு வாங்கரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மிக மோசமான ஊழல் பேர்வழிகளாக இருந்தனர். அவர்களால் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடு. காட்டில் உள்ள மரங்களை அழித்தனர். காட்டையே அழித்தனர். ஊழல் செய்யக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் விடுவதாக இல்லை. வாங்கரி யோசித்தார். அரசியல் அமைப்பை மாற்றினால் தவிர, வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டார். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்தார். கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் இணைந்துகொண்டார்.

1997 தேர்தலில் வாங்கரி போட்டியிட்டார். அவரைப் பற்றிய வதந்திகள் மக்களிடம் பரப்பப்பட்டன. சில வோட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆனால் அவருடைய மனம் சோர்வடையவில்லை. பசுமைப்பட்டை இயக்கம் மூலம் அமைதிக்காக மரங்களை நடும் பணிகளில் கவனம் செலுத்தினார்.

2002-ம் ஆண்டு தேர்தல் வந்தது. வாங்கரி மாத்தாய் ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்றது. வாங்கரி 98% வோட்டுகளைப் பெற்றார். சுற்றுச்சூழலுக்கான இணை அமைச்சராக 2005-ம் ஆண்டு வரை செயல்பட்டார். பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திவந்தார்.

2004-ம் ஆண்டு அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு வாங்கரிக்கு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்க பெண் மற்றும் முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர் இவர். ’இந்தப் பரிசு எளிய மக்களாகிய எங்களின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்கள் உழைப்பு ஒருநாள் உலகை மாற்றும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டார் வாங்கரி மாத்தாய்.

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்களிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்றும் அவருடைய இயக்கம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

’மரங்களால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மழை கிடைக்கிறது. பழங்கள், மருந்து, விறகு, மரம் போன்றவை கிடைக்கின்றன. சுத்தமான காற்று கிடைக்கிறது. மரங்களை விட மிக அற்புதமான விஷயம் உலகில் இல்லை. மரங்களை நேசியுங்கள். மரங்கள் இந்தப் பூமியையே காப்பாற்றும். இயற்கையை அழித்து முன்னேற வேண்டும் என்ற போக்கு நிறைய நாடுகளிடம் உள்ளது. இது அபாயகரமானது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து, செய்யப்படும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றங்களுக்கு அழைத்துச் செல்லும்’  என்கிறார் மரங்களின் தாய்.

(தமிழ் பேப்பரில் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரை)


2 comments:

பால கணேஷ் said...

இயற்கை வளங்களைப் பாதுகாத்து, செய்யப்படும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றங்களுக்கு அழைத்துச் செல்லும்’ என்கிறார் மரங்களின் தாய்.
-அருமையான முத்தாய்ப்பு. மனதில் நிற்கும் கட்டுரை. எப்படி தமிழ் பேப்பரில் படிக்கத் தவறினேன், தெரியவில்லை. நன்று!

Anonymous said...

Wonderful information. Thanks Sujatha.

Kumar