Sunday, September 12, 2010

வேண்டாம் அனுராதா...

15 வயதில் திருமணமாகி, இரு குழந்தைகளுக்குத் தாயாகி, வரதட்சணை பிரச்னையில் விவாகரத்து பெற்றவர் அனுராதா. இன்சூரன்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்த அனுராதாவை டாக்டர் மனோஜ் நட்பு ஏற்படுத்தி, மயக்க மருந்து கொடுத்து, போட்டோ எடுத்திருக்கிறான். பிறகு அதையே காரணம் காட்டி மிரட்டி, உறவு வைத்திருக்கிறான். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவனுடன் குடும்பம் நடத்தியிருக்கிறார் அனுராதா. இருவருக்கும் அடிக்கடி பிரச்னைகள். போட்டோவை இணையத்தில் போட்டுவிடுவேன் என்று சொல்லியிருக்கிறான் மனோஜ். வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் அனுராதா. மனோஜ் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

அவர் கொடுத்த புகாரில் மேலும் சில அதிர்ச்சிகள்:

மருத்துவமனையில் பிரசவ வார்டில் வேலையைக் கேட்டு வாங்கிக்கொள்வார். இரவு நேரங்களில்தான் பணிக்குச் செல்வார். பிரசவத்துக்கு வரும் பெண்கள் மயக்க நிலையில் இருக்கும்போது ஆபாசமாக வீடியோ எடுத்துவிடுவார். நானே அந்தப் படங்களைப் பார்த்துச் சண்டை போட்டிருக்கிறேன். 

என்னுடைய மகனை அடித்து உதைத்து, கொடுமைப்படுத்துவார்.  என் பெற்றோரிடம் இருந்து என்னைப் பிரித்து விட்டார். 

இப்படி நடந்த விஷயங்களைத் தெளிவாக, பதற்றம் இல்லாமல் தொலைக்காட்சியில் சொல்லும்போது அனுராதாவின் தைரியத்தைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. கடவுளுக்கு அடுத்த நிலையில் நம் மக்கள் மருத்துவர்களைத்தான் நினைக்கிறார்கள். மருத்துவர் என்று வரும்போது அவர் ஆணா, பெண்ணா என்று பார்ப்பதில்லை. இப்படிப்பட்ட தொழிலைச் செய்யும் மருத்துவர் மனத்தில் இப்படியொரு கீழ்த்தரமான எண்ணம். அருவருப்பாக இருக்கிறது.

அனுராதா தான் ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்த உடனேயே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டும். மானம் போய் விடும் என்ற ஒரு காரணத்துக்காக ஒரு கேடுகெட்டவனோடு பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியிருக்கிறார். மிரட்டலுக்கு அடி பணிந்தால் அது என்றென்றைக்கும்  இன்னும் பெரிய பிரச்னைகளுக்கு வழி வகுத்துக்கொண்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

காலம் கடந்தாவது சமூகத்தைச் சீரழிக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்த ஒருவனை, வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்திய அனுராதாவை பாராட்டத் தோன்றிய நேரத்தில், அவர் இன்னோர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டார்.

“என்னை எப்படியாவது அவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு கேட்டிருக்கேன். இனிமேல் நான் எப்படி வாழ முடியும்?’

அவருடைய வக்கீல் ஜீவகுமாரும், “பெண்கள் பெரும்பாலும் இப்படித்தான் விரும்புகிறார்கள். கல்யாணம் செய்து வைக்கச் சொல்லியிருக்கிறார் அனுராதா’ என்றார்.

இது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்! தன்னையும் பிற பெண்களையும் கேவலமாகப் படம் எடுக்கும் வக்கிரப்புத்திக் கொண்டவனிடம் மீண்டும் சேர்ந்து வாழ்வது என்பது எவ்வளவு கேவலம்! அனுராதாவுக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எதிர்காலத்தில் அவனால் ஆபத்து வராது என்று என்ன நிச்சயம்? ஏற்கெனவே மகன் அவனால் துன்பப்பட்டிருக்கும்போது யாருக்காகச் சேர்ந்து வாழ நினைக்கிறார்? அனுராதா கொடுத்த இந்தப் புகாருக்கே மனோஜால் வெளி வர முடியாது எனும்போது, மருத்துவமனையில் அவன் எடுத்த வீடியோவால் வேலையே பறிபோகாதா? சாதாரணமாகவே சைக்கோவாக இருந்த மனோஜ், தான் தண்டனைக்கு உள்ளாகி, ஊர் முழுவதும் தெரிந்த பிறகு அனுராதாவை எப்படித் திருமணம் செய்துகொள்வான்?

இதுபோன்ற கேள்விகளைக் கூட யோசிக்க விடாமல் ஊடகங்கள், சினிமாக்கள், சமூக அமைப்பு போன்றவை செயல்பட வைக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. கிராமத்து பஞ்சாயத்துகளும் சினிமாக்களும் கெடுத்தவனுக்கே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும் அற்புதமான நீதியை அல்லவா வழங்கிக்கொண்டிருக்கின்றன! இங்கு தவறு செய்தவனுக்குப் பரிசும் பாதிக்கப்பட்டவளுக்குத் தண்டனையும் வழங்கும் வினோதமும் தொடர்கதையாக இருக்கின்றன. இப்படிப் பார்த்துப் பார்த்து வளரும் பெண்கள், பிரச்னைகளில் இருந்து வெளிவர நினைக்காமல், எப்படியாவது கணவன் திருந்தி, அவனுடன் வாழ மாட்டோமா என்றுதான் நினைக்கிறார்கள். சமூகப் பார்வை மாறும்வரை அனுராதாக்கள் மீண்டும் மீண்டும் புதைகுழியில் விழுந்துகொண்டுதான் இருப்பார்கள்.    

 

4 comments:

Anonymous said...

கற்றவர்களுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு!
கல்லாதவர்களுக்கு?
... ... .... ....
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைக்கும் பெண்கள் ஏராளம்
ஆனால்
வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்கோ
இப்படியும் வாழலம் என்ற எண்ணம் தோன்றுவதில் ஐயமில்லையே!

சுந்தரா said...

//இங்கு தவறு செய்தவனுக்குப் பரிசும் பாதிக்கப்பட்டவளுக்குத் தண்டனையும் வழங்கும் வினோதமும் தொடர்கதையாக இருக்கின்றன.//

ரொம்பச் சரியாச் சொல்லியிருக்கீங்க.

பெண்களின் இந்த மனநிலை எப்போ மாறுமோ???

பிரதிபலிப்பான் said...

// இப்படிப் பார்த்துப் பார்த்து வளரும் பெண்கள், பிரச்னைகளில் இருந்து வெளிவர நினைக்காமல், எப்படியாவது கணவன் திருந்தி, அவனுடன் வாழ மாட்டோமா என்றுதான் நினைக்கிறார்கள். சமூகப் பார்வை மாறும்வரை அனுராதாக்கள் மீண்டும் மீண்டும் புதைகுழியில் விழுந்துகொண்டுதான் இருப்பார்கள். //

மிகவும் சரியான பார்வையில் வைக்கப்பட்ட ஒரு கருத்து இந்த கருத்தை நானும் மீண்டும் வலியுறுத்தி இது போன்று தப்பு செய்யும் ஆண்களுக்கு, பெண்கள் துணைபோகமல் நிற்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தக்க தண்டனையை பெற்று தர மனவலிமையோடு வெளியே வரவேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற அக்கரமங்களை தடுத்து நிறுத்துவது மட்டுமின்றி மீண்டும் இது போன்ற உணர்வுகள் மற்ற ஆண்கள் மத்தியில் எழாமல் பெண்களை அடிமைகளாக பாவிக்கும் ஆண்களின் மனோபாவம் மாறுகின்ற சூழ்நிலை தழைத்தோங்கும் என்பதை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்க நினைக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

Anonymous said...

தங்களின் எழுத்துகளில் ஆழம் இருக்கிறது. கூடவே கோபமும் இருக்கிறதே. கொஞ்சம் சாந்தம் அடையுங்கள்..