Thursday, June 24, 2010

ஹாஸ்டல் கதைகள் - 1 : எஸ்தருக்கு இறங்கி வந்த ஏசு!

ஹாஸ்டலில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் எஸ்தர். ஆறாம் வகுப்பில் இருந்து ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருக்கிறாள். நான் சேர்ந்த அன்றே அவளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு வந்தது. இரவு உணவுக்காக எல்லோரும் அமர்ந்திருந்தோம். உணவு பரிமாறி, பிரார்த்தனை முடியும் வரை யாரும் தட்டில் கை வைக்கக்கூடாது. ஆனால் பிரார்த்தனைக்கு முன்பே சாப்பிட்டு, தண்டனையாக நின்றுகொண்டிருந்தாள் எஸ்தர். அத்தனைப் பேர் மத்தியில் ஒருத்திக்குத் தண்டனை எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குக் கவலையாக இருந்தது.

மறுநாள் காலை உணவு வேளை. முதலில் இட்லி பரிமாறப்பட்டது. ஆறிப் போய், புளிப்பேறியிருந்த இட்லியின் வாசம் குடலைப் புரட்டியது. ஆனால் சற்றுத் தூரத்தில் அமர்ந்திருந்த எஸ்தர் தட்டு நிறைய இட்லிகளை வாங்கியிருந்தாள். சுவையான கேக்கைச் சாப்பிடும் பாவத்தில் இட்லிகளைப் பிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள். சட்னி வரும்போது அவள் தட்டில் இரண்டே இட்லிகள்தான் இருந்தன. பிரார்த்தனை முடிவதற்குள் இன்னும் ஓர் இட்லி மாயமானது. அங்கு வந்த வார்டன், எஸ்தரை எழுந்து நிற்கச் சொன்னார்.

’நீயெல்லாம் ஒரு கிறிஸ்துவப் பெண்ணா? எல்லோரும் பிரேயர் முடிகிறவரை காத்திருக்காங்க. உனக்கென்ன? ஒழுங்கீனம்... ஒழுங்கீனம்... உன்னைப் பார்த்து மத்த பிள்ளைகளும் கெட்டுப் போகும்’ என்று திட்டினார்.

எதையும் காதில் வாங்காத எஸ்தர் நின்றுகொண்டே பிரார்த்தனை முடித்து, அடுத்த ஒரு நிமிடத்துக்குள் மீதி இருந்த இட்லியைக் காலி செய்துவிட்டு, முதல் ஆளாக வெளியேறினாள்.

இப்படிச் சாப்பிடும் இடம், தூங்கும் இடம், பிரார்த்தனை நேரம், படிக்கும் நேரம் எல்லாம் எஸ்தர் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் இருப்பாள். எதையும் மீறுவது அவள் குணமாக மாறி இருந்தது. தண்டனை கொடுத்து, கொடுத்து வார்டன்களுக்கும் சலிப்பு வந்துவிட்டது. இவ்வளவு தண்டனை வாங்கினாலும் அவள் மேல் கொஞ்சம் பரிவு இருந்ததற்குக் காரணம் ஓரளவு நன்றாகப் படித்துவிடுவாள் என்பதே.

எஸ்தர் வீட்டில் அவளைச் சேர்த்து மூன்று பிள்ளைகள். ஆசிரியராக இருந்த அவளுடைய அப்பாவின் சொற்ப வருமானத்தில் மூன்று பிள்ளைகளையும் ஹாஸ்டலில் படிக்க வைப்பதால், அவளைப் பார்ப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். மாதாமாதம் மணியார்டர் வரும். அவள் ஊரிலிருந்து யாராவது வந்தால் சத்துமாவு கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் அவள் யாரும் பார்க்க வரவில்லையே என்று கவலைப்பட்டதாகவே தெரியாது.
தன் தோழிகளுடன் எப்போதும் சந்தோஷமாக இருப்பாள். ஞாயிற்றுக்கிழமை தலை குளித்து, யாரிடமாவது வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறப் பாவாடை, தாவணி
வாங்கி அணிந்துகொண்டு முதல் ஆளாக தேவாலயத்துக்குக் கிளம்பிவிடுவாள். அதற்கு அவள் சொல்லும் காரணம், ‘இந்த ஒரு நாள் தான் நம்மள வெளியில் கூட்டிட்டுப் போறாங்க. நாலு பேரைப் பார்க்க முடியுது!’

அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். அப்பா வருகிறார் என்பதால் சிலுவைச் செல்வி தேவாலயம் செல்லவில்லை. (பார்வையாளர்கள் வராத கிறிஸ்துவ மாணவிகள் தேவாலயம் செல்லாவிட்டால் தண்டனை!) நானும் அமுதாவும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்று விட்டோம்.

ஒரு மணி நேரம் கழித்து சிலுவைச் செல்வி எங்களைத் தேடிக் கொண்டு ஓடி வந்தாள். காரணம் புரியாமல் நானும் அமுதாவும் பார்த்தோம். “எங்கெல்லாம் உங்களைத் தேடுறது? பிரேயர் ஹால்ல ஒரே கூட்டம்... பரபரப்பா இருக்கு. எங்கப்பா கிளம்பிட்டார். வாங்கடி போய்ப் பார்ப்போம்’ என்றாள் மூச்சிரைத்தபடி.

அவளுடைய பதற்றம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது. வேக வேகமாக நடந்தோம். வழியில் சில பெண்கள் வந்தார்கள். அவர்களிடம் விசாரித்தோம்.

’பிரேயர் ஹால்ல ஏசு தெரியறார்! நாங்க எல்லாம் பார்த்துட்டோம். சீக்கிரம் போங்க!’

புத்தகங்களை அறையில் வைத்துவிட்டு ஓடினோம்.

’நம்ம எஸ்தருக்குத்தான் முதலில் ஏசு காட்சி கொடுத்தார். அவ சொல்லித்தான் எல்லோரும் பாத்திருக்காங்க! எனக்கும் தெரிஞ்சார்!’ என்று தேன்மொழி அக்கா சொன்னார்.

பிரார்த்தனை கூடத்துக்குள் வழக்கத்தை விடக் கூட்டம். பார்க்க வந்த பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் கூரையை நோக்கி ஜெபித்தபடி இருந்தனர். சிலர் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. அமுதாவும் சிலுவைச் செல்வியும் முட்டி போட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். நானும் பார்த்தேன். அந்த இடத்தில் சிறிது காரை பெயர்ந்திருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, கற்பனை செய்து பார்த்தால் கொஞ்சம் சிலுவைக் குறி போலத் தெரிந்தது. மற்றபடி ஒன்றும் தெரியவில்லை.

அமுதாவையும் சிலுவைச் செல்வியையும் பார்த்தேன். அவர்கள் மும்முரமாக ஜபித்தபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் சென்றதும் வெளியில் போகலாம் என்றேன். சிலுவைச் செல்வியும் அமுதாவும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அந்தக் கசகசப்பையும் சத்தத்தையும் விட்டு நான் வெளியில் வந்து நின்றேன்.

அரை மணி நேரத்துக்குப் பிறகு அமுதாவும் சிலுவைச் செல்வியும் வருத்தத்துடன் வெளியே வந்தார்கள். அவர்கள் முகமே விஷயத்தைச் சொன்னது. இருந்தாலும் கேட்டேன்.

’உனக்குத் தெரிஞ்சதா சிலுவை?’

’இல்லப்பா... ’ என்று அழுதபடிச் சொன்னாள் சிலுவைச் செல்வி.

அமுதாவைப் பார்த்தேன், அவள் தான் ஏதோ குற்றம் செய்துவிட்டதால்தான் ஏசு தனக்குக் காட்சி தரவில்லை என்றாள்.

’இல்ல அமுதா, எனக்கும் தெரியலை’ என்றேன்.

அமுதாவுக்கும் சிலுவைச் செல்விக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

நாங்கள் மேலும் பலரை விசாரித்தோம். எல்லோரும் தங்களுக்கு ஏசு காட்சி தந்ததாகப் பரவசத்துடன் சொன்னார்கள். சிலுவைச் செல்வியும் அமுதாவும் மறுபடியும் அழ ஆரம்பித்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்குச் சென்றேன். நாங்கள் மூவரும் விரக்தியுடன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அப்போது பக்கத்து அறையில் பேச்சுச் சத்தம். யாரு? ஆ...! எஸ்தரிடம் அவள் தோழிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

’என்ன நடந்துச்சு எஸ்தர்? இப்பவாவது சொல்லு.’

’உங்களுக்கு எல்லாம் விசிட்டர்ஸ் வந்து, போயிட்டீங்க. எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை. சர்ச்சுக்கும் போகப் பிடிக்கலை. அதான் பிரேயர் ஹால்ல போய்த் தனியா உட்கார்ந்து யோசிச்சிட்டிருந்தேன். என்னைப் பார்க்க யாரும் வரமாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சதும் எனக்கு அழுகை வந்துருச்சு. அந்த நேரம் பார்த்து ஏசு பைத்தியம் பிடிச்ச லூசு வந்துச்சு...’

’எத்தனையோ லூசு இருக்கு. எந்த லூசு? ’

’அங்காளப் பரமேஸ்வரி. என்னன்னு காரணம் கேட்டாள். ஒரு இந்துப் பிள்ளை எப்படி ஏசு மேல நம்பிக்கை வச்சிருக்கா பாருன்னு அன்னிக்கு வார்டன் அவளைக் காட்டி, என்னைத் திட்டினது ஞாபகம் வந்துச்சு. உடனே இந்த லூசை இன்னும் லூசாக்கிடலாம்னு முடிவு பண்ணி, ஏசு தெரியறார்னு அந்தக் காரையைக் காட்டினேன். அவ்வளவுதான்! அவ முட்டி போட்டு ஜபிக்க ஆரம்பிச்சிட்டா. திடீர்னு சத்தம் போட்டு அழுதாள். நானே பயந்துட்டேன்! அவளைத் தேடிக்கிட்டு அவளுடைய ஃப்ரெண்ட்ஸ் வந்தாங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா எல்லோருக்கும் ஏசு தெரிய ஆரம்பிச்சார்!’

’அடிப்பாவி! எல்லாம் உன்னுடைய வேலைதானா? எங்களுக்குத் தெரியலையேன்னு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. உன்னை என்ன பண்ணலாம்?’

‘ஒண்ணும் பண்ண வேணாம். நான் இப்ப சந்தோஷமா இருக்கேன். மத்த பிள்ளைகளோட அம்மா, அப்பா எல்லாம் அன்பா விசாரிச்சாங்க. ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. கூட்டம் கூடி, நிலைமை கட்டு மீறிடுச்சு. இப்ப வெளியில் இருந்து ஃபாதர் எல்லாம் வரப்போறாங்க. சிறப்புப் பிரார்த்தனை நடக்கப் போகுது’ என்று சொல்லி முடித்தாள் எஸ்தர்.

நாங்கள் மூவரும் ஆச்சரியத்தில் உட்கார்ந்திருந்தோம்.

ஹாஸ்டல் மணி ஒலித்தது.

’என்னடி பார்க்கறீங்க? இன்னும் கொஞ்ச நாளைக்கு வார்டன், டீச்சர் எல்லாம் என்கிட்ட எவ்வளவு மரியாதையா நடந்துக்கப் போறாங்கன்னு பாருங்க!’ என்றபடி எழுந்தாள் எஸ்தர்.

மறுநாள் உணவு வேளையில் வழக்கம் போல இட்லிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் எஸ்தர். வார்டன் கண்டும் காணாதது போல நகர்ந்து விட்டார்! நான், அமுதா, சிலுவைச் செல்வி மூவரும் பட்டென்று சிரித்துவிட்டோம். வார்டன் திரும்பினார். நாங்கள் மூவரும் முதல் முறையாக எழுந்து நின்றோம்!

6 comments:

ஏசுபிரான் said...

இது என்ன உண்மையான நிகழ்ச்சியா? இல்லை நீங்கள் எழுதும் சிறுகதையா?

கண்டிப்பாக நீங்கள் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

எப்பொழுதும் போல் பதில் சொல்லாமல் இருக்காதீங்க.

எதுவாக இருந்தாலும் எழுதியவிதம் நன்றாக இருந்தது.

வாழ்த்துக்கள்.

unnalmudiyum said...

இந்தக் காலகட்டத்திலும் எத்தனையே படித்த மேதாவிகளும் ஆன்மீகம் என்ற ஒரு போர்வையில்தானே பலரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக பிள்ளையார் பால்குடிப்பது, வேப்பமரத்தில் பால்வடிவது, அம்மன் கண் திறந்து பார்ப்பது, ஆஸ்பத்திரிக்கு போகாமலே ஹல்லா ஓதி குணமடைவது, இறந்தவர்களிடம் குறிகேட்டு வருங்கால வாழ்க்கையை நிர்ணயிப்பது, வேலையில் வெற்றியை தோல்வியை நியூமரலாஜி படி மாற்றிக் கொள்வது போன்ற எத்தனையோ பல ஏமாற்று பேர்வழிகள் இன்றும் வாழ்கிற இந்த காலகட்டத்தில் அந்த எஸ்தருக்கு நிகழ்த்திய நாடகம் ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. கதை நன்றாக இருந்தது.

மனிதன் said...

எப்படி இருந்தால் என்ன இப்ப எஸ்தர் எப்படி இருக்காங்க. எந்த ஸ்கூல்ல படிச்சீங்க.

எஸ்தர் இப்ப எங்க இருக்காங்க?

இப்பொழுதும் சர்ச்க்கு போர வழக்கம் இருக்கா?

நன்றி

பிரதிபலிப்பான் said...

நன்றாக இருக்கிறது உங்களது பதிவு மேடம். நிறைய பதிவுகளை எழுத எனது வாழ்த்துக்கள்.

அண்ணாச்சிச் சொன்னா said...

சமீபத்தில் பரங்கிமலையில் ஒரு வீட்டு மொசைக் தரையில் ஏசு தெரிகிறார் என்று பரபரப்பான சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஆர்.முத்துக்குமார் said...

சுஜாதா,

எளிமையான மொழியில் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். ஹாஸ்டல் கதைகள் தொடரட்டும்.

ஆர். முத்துக்குமார்