Wednesday, May 9, 2012

அறிவியல் குப்தா




“தீக்குச்சி விளையாட்டு’ என்ற புத்தகத்தின் மூலம்தான் அரவிந்த் குப்தா அறிமுகமானார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் எளிய அறிவியல் பரிசோதனைகள், தீக்குச்சி விளையாட்டுகள் என்று பல சுவாரசியமான அரவிந்த் குப்தாவின் புத்தகங்கள் வெளிவந்தன. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு, உபயோகமாக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த காலகட்டம். பூக்கள், ஓவியங்கள், பொம்மைகள் என்று செய்துகொண்டிருந்தபோது, ஆர்வத்தை அறிவியல் பக்கம் திருப்பி, நேரத்தையும் கற்பனையையும் உபயோகமாகச் செலவழிக்க வைத்தவர் அரவிந்த் குப்தா.

தீக்குச்சிகளையும் ரப்பர் டியூபையும் வைத்து நூற்றுக்கணக்கான வடிவங்களைக் கொண்டுவருவது ரொம்ப சுவாரசியமானது. பிய்ந்து போன செருப்பு, உபயோகமில்லாத பேட்டரி, குச்சி, ரப்பர் பேண்ட், பலூன், பேனா.. இப்படி வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து ரயில் எஞ்சின், மோட்டார் படகு, இயற்பியல்-வேதியியல் பரிசோதனைகள் என்று ஏராளமான விஷயங்களைக் கற்றதுடன், நாங்களே செய்தும் பார்த்தோம். துளிர் இல்லங்கள், பள்ளிகளில் இவற்றைச் செயல்படுத்திக் காட்டி, அறிவியல் இயக்கத்தில் ஏராளமான குழந்தைகளையும் ஆசிரியர்களையும் இணைய வைத்தோம்.

அரவிந்த் குப்தா பெயர்தான் தெரியுமே தவிர, அவரை நேரில் பார்த்ததில்லை. ஒருமுறை டெல்லியில் அறிவியல் இயக்க பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது, அவர் ரிசோர்ஸ் பர்சனாக வந்திருந்தார்.  கதர் ஜிப்பாவில் மிக மிக எளிய மனிதராகக் காட்சியளித்தார். அவரது விரல்கள் எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டே இருந்தன. அவரைச் சுற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. எதைப் பற்றிக் கேட்டாலும் கொஞ்சம் கூட களைப்பின்றி, உற்சாகமாக, அழகாக விளக்குவார். செய்து காட்டுவார். நம்மையும் செய்யச் சொல்வார். எந்தப் பொருளும் அவர் கை பட்டவுடன் இரண்டு நிமிடங்களில் வேறு ஒன்றாகப் பரிணமிப்பது பிரமிப்பாக இருக்கும்!

கான்பூர் ஐஐடியில் பொறியியல் படித்த அரவிந்த் குப்தா, சமூகத்துக்கு வேலை செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளவர். அறிவியலை மக்களிடம் பரப்புவதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்தியா முழுவதும் 3000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியலைப் பரப்பி வருகிறார். அறிவியல், கணிதம் போன்றவற்றில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய புத்தகங்கள் தமிழ் உள்பட 13 இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளன. மாற்றுக் கல்வியைக் கொண்டு வருவதிலும் அதிக அக்கறை செலுத்தி, வேலை செய்து வருகிறார் அரவிந்த் குப்தா.

அவருடைய புத்தகங்கள், பரிசோதனைகள் அனைத்தும் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் அவருடைய இணையதளத்தில் கிடைக்கின்றன. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பரிசோதனையும் எளிமையாகவும் நாமே செய்துபார்க்கும்படியும் இருக்கிறது. பெரியவர்களைக்கூட கட்டிப்போட்டு வைத்திருக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்ட அந்தப் பரிசோதனைகளை குழந்தைகள் நிச்சயம் கொண்டாடுவார்கள். இந்த இணையதளத்தில் அரவிந்த் குப்தாவின் புத்தகமாகட்டும், பரிசோதனைகளாகட்டும், படங்களாகட்டும் எதற்கும் காப்பி ரைட் கிடையாது. மக்களுக்காகத் தன் படைப்புகளைஅர்பணித்திருக்கிறார் அரவிந்த் குப்தா. யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்! இங்கிருந்து ஒவ்வொரு நாளும் 6000 புத்தகங்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய, படிக்காத பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் அரவிந்த் குப்தா. “அவர்கள் படிக்கவில்லை என்றாலும் எங்களை எல்லாம் நன்றாகப் படிக்க வைத்தனர். ஒருபோதும் நாங்கள் இப்படி வரவேண்டும், அப்படி வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை. எங்களை எங்கள் விருப்பப்படி வளர்த்தார்கள். அறிவை வளர்த்துக்கொள்வதற்குத்தான் கல்வி. என்னுடைய இந்தப் பணியில் மிகவும் மகிழ்ச்சியாகச் செயல்படுகிறேன்’ என்கிறார்.

யுனெஸ்கோ, யூனிசெஃப், இண்டர்நேஷனல் டாய் ரிசர்ச் அசோசியேஷன், பாஸ்டன் சைன்ஸ் செண்டர், வால்ட் டிஸ்னி ஆய்வுக்கூடம் போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டவர், இந்திய அளவில் அறிவியலை மக்களிடம் பரப்பியதற்காகப் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
பொறியாளர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என்று பல்வேறு விதங்களில் செயல்பட்டு வரும் அரவிந்த் குப்தா, அன்பிலும் அமைதியிலும் அதிக நம்பிக்கைக் கொண்டவர்!

http://www.arvindguptatoys.com/

த்ரீ இடியட்ஸ் - நண்பன் ஆமீர் கான் / விஜய் கதாபாத்திரங்கள் அரவிந்த் குப்தாவைத் தழுவி உருவாக்கப்பட்டவை என்று தோன்றுகிறது!




3 comments:

ganesan.k said...

சுட்டிகளை கவர்ந்த மனிதர்
திரு குப்தாஜி தற்போது prostrate cancer நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற வேண்டும்...

uli said...

அர்விந்த் குப்தாஜியை வேலூர் CMC மருத்துவமனை விடுதியில் சந்தித்தேன். அவருக்கெ உரிய உற்சாகத்துடன் பேசினார். நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக்ச் சொன்னார். அவர் உருவாக்கிய இரண்டு விளையாட்டுப் பொருட்களை அன்புப் பரிசாகக் கொடுத்தார். அருமையான, எளிமையான மனிதர். ‌

Sha said...

90 களில்நான் ஆரம்பபள்ளி பாடசாலையின் ஆசிரியராக இருந்த போது அர்விந்த் குப்தாவில் இரண்டு சிறிய நூல்கள் எனக்கு மிக சிறந்த வழிகாட்டியாகவும், ஆர்வத்தையும் ஊட்டின. அதன் தொடர்ச்சியாக அறிவியல் கல்வி மேம்பாட்டுக்கு என்னாலான முயற்சிகளை செய்து வருகிறேன்.பின்வரும் வலைப்பூவில் இனையத்தில் கிடைக்கும் எளிய அறிவியல் பரிசோதனைகளை தமிழாக்கம் செய்து வருகிறேன்.

http://www.oseefoundation.org