சட்டசபை தேர்தலின்போது தேர்தல் குறித்து நேரடியான அனுபவம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் எங்கள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை சீமந்த விழா, காது குத்து விழா, பெயர் சூட்டுவிழா, திருமண விழா, நிச்சயதார்த்த விழா, சுதந்தர தினம், வருடப் பிறப்பு என்று ஒட்டு மொத்த விழாக்களையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, விதவிதமான கெட்டப்களில் பேனர்களில் கலங்கடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்!
எங்கள் குடியிருப்புகளுக்கு இரவு 9 மணிக்கு மேல்தான் ஓட்டு கேட்டு வருகிறார்கள். குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள் சூழ மூன்று மாடிகளையும் மூச்சிரைக்க ஏறி வருகிறார் வேட்பாளர். கூட்டத்தில் ஒருவர் கையில் வேட்பாளரின் நோட்டீஸ். இன்னொருவர் கையில் துண்டுகள். அழைப்பு மணி அடித்ததும் எட்டிப் பார்த்தால், ‘சாரைக் கூப்பிடுங்கள்’ என்கிறார்கள். (பெரும்பாலும் பெண்களின் ஓட்டைத் தீர்மானிப்பது ஆண்கள்தான் என்பதால் இப்படிக் கேட்கிறார்கள் போலிருக்கிறது!)
சார் இல்லை என்றால், என்ன பேசுவது என்று ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். பிறகு ஒரு நோட்டீஸையும் துண்டையும் வைத்து, ’சார் கிட்ட சொல்லிடுங்க. என் சின்னம் பூட்டு, இவர் வார்டுக்கு நிக்கறார், இவர் சின்னம் சீப்பு. எங்களுக்கு மறக்காமல் ஓட்டுப் போடுங்க’ என்கிறார்கள்.
’துண்டு வேண்டாம்’ என்றதும் திடுக்கிடுகிறர்கள். பிறகு சமாளித்து, சிரித்துவிட்டுச் செல்கிறார்கள்.
எதிர் வீட்டில் அவர்கள் கேட்ட ’சார்’ இருந்தார். உடனே அவருக்குத் துண்டைப் போர்த்தினார் வேட்பாளர். கூட வந்தவர்கள் கை தட்டினார்கள். ஓட்டு கேட்டுவிட்டுச் சென்றார்கள்.
துண்டுகளிலும் பல தினுசு. இரண்டு வோட்டுகள் என்றால் காட்டன் துண்டு. நான்கு ஓட்டுகள் என்றால் டர்கி டவல்.
அடுத்த அரை மணி நேரத்தில் வேறொரு வேட்பாளர். அவரிடமும் துண்டு. ‘நான் இளைஞர். நல்லது நடக்கணும்னா உங்க வோட்டு இளைஞருக்குப் போடணும்.’
பத்தரை மணிக்கு மீண்டும் அழைப்பு மணி.
துண்டு இல்லை. கூட்டம் இல்லை. இருவரும் மஞ்சள் ஆடை அணிந்து, மாலை போட்டிருந்தனர்.
‘இவங்க என் மனைவி. பொது வேட்பாளரா நிக்கறாங்க. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஆதரிப்பீங்கன்னு நம்பறேன்’ என்று வண்ண நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
எங்கள் பகுதி வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய, நூறு கார்களில் ஆள்களை அழைத்துச் சென்றாராம். பெண்களுக்கு இருநூறு ரூபாயும் ஆண்களுக்கு ஐந்நூறு ரூபாயும் தந்தார்களாம். சில இடங்களில் ஓட்டுக்கே பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள்.
’எங்களுக்கு ஓட்டே இங்க இல்லை. நாங்களே இந்த வருஷத்துக்குத் தேவையான துண்டுகளை வாங்கிக்கிட்டோம். நீங்க என்ன விவரம் பத்தாதவங்களா இருக்கீங்க? நம்ம கிட்ட எடுத்த காசைத்தானே அவங்க துண்டா தர்றாங்க?’ என்று கேட்டார் எதிர் வீட்டுப் பெண்.
ஊரில் இருப்பவர்களில் பாதிக்கு மேல் வேட்பாளர்களாகக் கலத்தில் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகள்.
4 comments:
thamizagam muzuvathum inthak kaatchikalu panjsam illai. sila uurgalil pattup pudavai kotukkiraargal. panamum kotukkiraargal. innum sila itangkalil iraNtum serththe kotukkiraargal.
ithai ellaam kanakku vaiththu varum kalaththil kallaa katti vituvaargal.
எங்க ஊர்களில் எல்லாம் அவர்கள் உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டால் 20 வருஷ காலமாக புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் எங்களுக்கு கலெக்டர் கையெப்பம் இல்லாமலேயே பட்டா கொடுக்க ஏற்பாடு செய்வோம் என்கிறார்கள்.. இவர்களை எல்லாம் என்ன செய்வது...?
இரவுல வந்தாதான் எல்லாரும் வீட்ல இருப்பாங்கன்னு ப்ளான் பண்ணித்தான் ஓட்டுக் கேக்க வர்றாய்ங்க. ஆனா கூட வர்ற படைங்க பண்ற தொல்லைதான் தாங்கலை எங்க ஏரியாவுல. துண்டென்ன... விட்டா வேட்டியே கொடுத்து ஓட்டுக் கேப்பாங்க... இவங்களை மாத்தறது ரெம்பக் கஷ்டமுங்க...
சுஜாதா,
உங்கள் பகுதி வேட்பாளர், தாங்கள் என்ன செய்ய போகிறோம் என்று எழுத்து மூலம் சொன்னதுண்டா?
அல்லது நீங்கள் கேட்டதுண்டா?
நீங்கள் இந்த முறை வேட்பாளர் பதவிக்கு போட்டியிடவில்லையா?
குமார்
Post a Comment