Wednesday, December 15, 2010

மார்கழி



இலைகளில் ஈரம் கவிந்திருக்கும். பக்கத்து வீட்டைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்குப் புகை மூட்டம். சிலிர்க்கும் குளிர். மார்கழியில்தான் இவற்றை எல்லாம் ரசிக்கவும் உணரவும் முடியும். அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து விடுவோம். இருட்டை விரட்ட வீட்டைச் சுற்றிலும் விளக்குகள் எரியும்.  ஜில் என்ற தண்ணீரில் வாசல் தெளித்து, பெருக்கி முடித்ததும் கோலம் போடும் வேலை. முதல் நாளே திட்டமிட்டு வைத்திருப்பதால் வேலை தங்குதடையின்றி ஆரம்பமாகி விடும்.

கற்பனை, நினைவுத்திறன், ரசனை எல்லாம் அடக்கியதுதான் கோலங்கள். சில கோலங்களைப் புள்ளி வைத்து, பொம்மை, பழங்கள், பூக்கள் எல்லாம் போட்டு, அடிக்கும் நிறங்களைத் தூவினால் அன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சில கோலங்கள் வண்ணங்கள் தூவ அவசியமின்றி, கோடுகளாலேயே போடப்படும். கோடுகளால் ஆன கோலத்தைச் சிறிய அளவிலிருந்து ஒரு தெருவையே அடைத்துக்கொண்டு போடும் அளவுக்குப் பெரிதாகப் போட்டுக்கொண்டே செல்லலாம். பொறுமையும் ஆர்வமும்தான் முக்கியம்.

எங்கள் அம்மா கோல மாவால் கோடு இழுத்தாலே அத்தனை அழகாக இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு கோடுகளைப் பிசிறில்லாமல் போடுவார். அம்மா போடும் நாள்களைத் தவிர, மீதி நாள்களில்  நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் எங்கள் விருப்பப்படி கோலம் போடுவோம். பெரும்பாலும் எங்களுடைய கோலங்கள் எந்தப் புள்ளிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் சிக்காதவையாகவே இருக்கும். பூக்கள் நிறைந்த தொட்டி, கார்ட்டூன்கள், இயற்கைக் காட்சிகள் என்று எங்கள் கற்பனை விரிவடையும். (எங்கள் கோலங்களுக்கு  நிறைய விசிறிகள் உண்டு!) இந்தக் கோலங்களுக்குக் கண்டிப்பாக வண்ணங்கள் வேண்டும். ஒருவர் வரைய வரைய மற்றவர்கள் வண்ணம் தீட்டிக்கொண்டே வருவார்கள். விரைவில் வேலை முடிந்துவிடும். 

தலையில் ஸ்கார்ஃப், அருகில் கொசுவத்திச் சுருள், குளிருக்கு இதமாக அம்மாக்கள் காபியை ஆற்றிக்கொண்டு நிற்கும் காட்சியைப் பெரும்பாலும் எல்லோருடைய வீடுகளிலும்  பார்க்க முடியும்.

வெளிச்சம் வரும்போது எல்லோரும் கோலத்தை முடித்திருப்போம். பிறகு அந்தத் தெரு முழுவதும் ஒரு நடை செல்வோம். ஒவ்வொருவரும் என்ன கோலம் போட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து ரசிப்போம். என்னதான் ஓவியம் தீட்டி, வண்ணம் கொடுத்து அழகு சேர்த்தாலும், கோடுகளில் வித்தைகாட்டும் எதிர் வீட்டு மாமிதான் அதிகம் ஸ்கோர் செய்துவிடுவார்.

கோலத்தை அழிக்காமல் வண்டியை எடுப்பது அப்பாவுக்குச் சவால் நிறைந்த காரியமாக இருக்கும். சைக்கிள், வண்டிகளைக் கண்மண் தெரியாமல் அதுவரை ஓட்டிக்கொண்டிருந்த இளைஞர்கள் மார்கழி மாதங்களில் கோலத்தை அழித்து விடாமல் இருக்க, பார்த்துப் பார்த்துச் செல்வார்கள்.  

கிறிஸ்துமஸ், நியு இயர், பொங்கல் போன்ற விசேஷ நாள்களில்  வழகத்தைவிடச் சிறப்பாகக் கோலம் போடப்படும். மாட்டுப் பொங்கலுடன் ஸ்பெஷல் கோலங்களுக்கு குட்பை. 

ஈரம் காயாத தரையில்  போட்ட கோலங்களையும் அதில் நடுவில் இருக்கும் பறங்கிப் பூக்களையும் பார்த்து பல ஆண்டுகளாகி விட்டன. தெருக்கள் அப்படியேதான் இருக்கின்றன... மனநிலைதான் மாறிவிட்டது. 
  

3 comments:

ramakannan said...

சிலீரென்ற மலரும் நினைவுகள்:-)

Sathish K said...

நகரத்திலேயே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து கோலம் போட்டதைப் பார்த்தக் காலம் நினைவுக்கு வருகிறது. இன்று கோலங்களைப் பார்ப்பது அரிதாகத் தான் இருக்கிறது.

கலையும் கணிதமும் நிறைந்த கோலத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் ஆசைப்பட்டதோடு சரி. :)

Tanuthias said...

"மார்கழி" கோலங்கள் -- 1980 களில் எங்கள் வீதியில் நட்ந்ததை அப்படியே படம் பிடித்தது போல் உள்ளது. எங்கள அம்மாஉக்கும் கோலம்னா கொள்ளை ஆசை. அவங்க முடியாத வயதிலும் காலையில் எழுந்து வித, விதமான கோலம் போடுவாங்க. ஆனால் எனது மனைவிக்கு அவ்வளவா ஆர்வம் கிடையாது. ரொம்ப பிகு பண்ணிகிட்டு வந்து கலர் தூவுவா.. கலர் காம்பினேஷனுக்கு நான் ஐடியா கொடுப்பேன்.. எங்கம்மா எனக்கும் கோலம் சொல்லி கொட்த்தாங்க.. 21 புள்ளி - இடுக்கு புள்ளி 1 - ல் நிறுத்தனும் ... அபப்டீன்னு சிடுக்குககள் நிறைந்த ஒரு கோலம் சொன்னாங்க.. நானும் ஸ்க்ள் வைத்து ஒரு புள்ளிகும் இனொரு புள்ளிகும் இடையே ஒரு சென்டிமீட்டர் இடைவெளி விட்டு ரொம்ப கஷ்டப்பட்டு போட்டேன். ஆனாலும் எங்கம்மா மண் தரையில் அரிசி மாவும் கல்லு மாவும் கலந்த கலவையினால் சர, சர, வென புள்ளி வைத்து கோலம் போட்டாங்கன்னா அப்படியே கோலம் சதுரிச்சு விழும். ஸ்கேல், ரூல் தடியெல்லாம் பிச்சை வாங்கணும்.. ஆச்சி கோலம்னா எல்லோரும் ஆசையா பார்ப்பாங்க..
எங்கம்மா கோலத்தி எல்லாம் நோட்டு புஸ்தகத்தில் கலர் கலரா போடு காண்பிப்பேன். ஏங்க பொமப்ளை மாதிரி கோலம் போட்டுகிட்டு நேரத்தை வீணடிக்கிறீங்க... எனது மனைவியின் தாக்குதலையும் சமாளிக்க வேண்டி இருக்கும். அவ கிடக்கறாடா மூளை இருக்கற்வங்கதாண்டா கோலம் போட முடியம் என்று எனக்கு ஸ்ப்போர்ட் பண்ணுவாங்க. இதெல்லாம் ஆரோக்கியமான சம்பாஷ்னையாகத்தான் இருக்கும். எனது மனைவி எந்து தாய் மாமா மகள்தான். அதாவ்து எங்கம்மா எனது மனிவிக்கு அத்தை.
நல்லதான போய்கிட்டு இருந்து... இந்த உறவு முறை எல்லாம் எதுக்கு என கேட்கலாம்.
ஆத்தாளும் மொவனும் சேர்ந்துகிட்டு எங்க பெண் இனத்தை பாடாய் படுத்தனீர்களா ? என் சண்டைக்கு வந்துடுவீங்களோ என்ற பயம்தான்..

எங்கம்மா இப்ப இல்ல..