Wednesday, October 8, 2008

பச்மரியும் பல்லுபோன கதையும்

சில வருடங்களுக்கு முன் 'சக்மக்' என்ற ஹிந்தி அறிவியல் மாத இதழ் எப்படித் தயாராகிறது என்பதை அறிய நான்கு பேர் கொண்ட ஒரு குழுவாக மத்தியப்பிரதேசத் தலைநகர் போபாலுக்குச் சென்றோம்.முதல் இரண்டு தினங்கள் சக்மக் அலுவலகம், நூலகம், அச்சுக்கூடங்கள் என்று ஓடிவிட்டன. அடுத்து இரண்டு நாள்கள் போபாலில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பச்மரி மலைவாசஸ்தலத்துக்குச் சென்றுவர முடிவு செய்தோம்.

ஹொசங்காபாத் மாவட்டத்தில் விந்திய சாத்பூரா மலைகளின் ஒரு சிறிய பகுதியில் அழகான அமைதியுடன் அமைந்திருக்கிறது பச்மரி. மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் ஒரே மலைவாசஸ்தலம் பச்மரி மட்டுமே. நான்கு மணிநேரப் பயணத்துக்குப் பின் பச்மரி மலையடிவாரத்தை அடைந்தோம். அங்கிருந்து டவுன் பஸ்சில் பயணம். டவுன் பஸ்ஸுக்குரிய எந்த லட்சணமும் அந்த பஸ்ஸுக்கு இல்லை. ஒரு நாளைக்கு ஒரிரு பஸ்கள் மட்டுமே பச்மரிக்குச் செல்வதால் பயங்கர கூட்டம். அடித்துப்பிடித்து ஏறி, மணிக்கணக்கில் ஊர்ந்து சென்றது. மெல்ல மெல்ல குளிர் தெரிய ஆரம்பித்தது. வழியெல்லாம் மூங்கில் மற்றும் சில பெயர் தெரியாத மரங்களின் அணிவகுப்பு. பன்னிரண்டு மணிக்கு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரண்டு மணிக்கு ஒரு வண்டி இடங்களைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது.

வேனில் அத்தனை பேரும் புதுமணத் தம்பதிகள், எங்களைத் தவிர. முழங்கை வரை செக்கச் சிவந்த மெஹந்தி, வண்ணக் கண்ணாடி வளையல்கள், உதட்டில் மெஜந்தா, சிவப்பு நிறங்களில் அடர்ந்த லிப்ஸ்டிக், நெற்றியில் வஞ்சனையின்றி கொட்டி வைத்த குங்குமம் என்று புதுமணப் பெண்ணுக்குரிய அடையாளங்களுடன் பளிச்சென்று தெரிந்தனர். ஜீன்ஸ், சுடிதார், தலையில் முக்காடிட்ட சேலை என்று உடையில் மட்டுமே வேறுபாடு.

முதலில் நாங்கள் சென்ற இடம் பூங்கா. வழக்கமான பூங்காவைப் போல பல வண்ண மலர்கள் வரிசை கலையாமல் நின்றுகொண்டிருந்தன. பூங்காவுக்கு வெளியிலும் வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் காட்டுப்பூக்கள் எந்தவிதக் கட்டுபாடுகளும் கவனிப்புகளும் இன்றி குப்பென்று பூத்திருந்தன. அடுத்து பாண்டவர் குகைகள். பஞ்ச பாண்டவர்கள் வனங்களில் வசித்தபோது இந்த மலைக்குகையில் தங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள். அதனால்தான் இந்த ஊரும் பச்மரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து குகைகளில் முதலாம் நூற்றாண்டில் புத்த துறவிகள் வந்து தங்கியிருந்தார்கள் என்று சொன்னார்கள்.

மாலை ப்ரியதரிஷிணி பாயிண்ட்டுக்கு வந்து சேர்ந்தோம். சாத்பூரா மலைகளிலேயே இதுதான் மிகவும் உயரமான சிகரம். 1857-ம் ஆண்டு கேப்டன் ஜேம்ஸ் ஃபோர்சித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பெயராலேயே ஃபோர்சித் பாயிண்ட் என்று அழைக்கப்பட்டு, பின்னர் ப்ரியதரிஷிணி பாயிண்ட்டாக பெயர் மாறிவிட்டது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வட்டச் சிவப்பு சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தமனம் ஆனது, அருமையான அனுபவம்.

திரும்பி வரும் வழியில் வேனில் வந்த அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டோம். மறுநாள் இதே அணி முழு நாள் சுற்றுலாவுக்குச் செல்வதாக முடிவானது. மறுநாள் மஹாதேவோ என்று அழைக்கப்பட்ட சிவலிங்கம் இருக்கும் குகைக்குச் சென்றோம். ஒன்றிரண்டு கடைகள், ஏழெட்டுச் சாமியார்கள் தென்பட்டனர். எல்லோரும் இருட்டுக் குகைக்குள் சென்று லிங்கத்தைப் பார்த்துவிட்டு, திரும்பினோம். வழியில் ஒரு ஜோடி ஹிந்தி பாடல்களைப் பாட ஆரம்பித்தது. இன்னும் சில ஜோடிகளும் அவர்களுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தனர். அடுத்து வேன் போய் நின்ற இடம் ராஜாத் பிரதாப்.

அருவியோ அல்லது மலையையோ நாம் ஏறிச் சென்றுதான் பார்த்திருப்போம். ராஜாத் பிரதாபோ முற்றிலும் வித்தியாசமானது. உயரமான இடத்திலிருந்து கீழ்நோக்கி இறங்கிச் சென்றால்தான் அருவியைக் காண முடியும். ஏறுவதுதானே கஷ்டம் என்று நினைத்த நாங்கள் இறங்குவதற்குத் தயாரானோம். அப்போதுதான் தெரிந்தது. படிகளோ, சரியான பாதையோ கிடையாது. இயற்கையாக அமைந்திருந்த பெரிய பெரிய பாறைகள் சற்று முன்னும் பின்னுமாக அமைந்திருந்தன. ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குக் கவனமாகக் கால் வைத்து இறங்க வேண்டும். கொஞ்சம் தடுமாறினாலும் விழுந்து அடிபட வேண்டியதுதான். எங்கள் குழுவில் குழந்தைகளோ, வயதானவர்களோ இல்லாததால் ஜோடியாகக் கைகளைப் பிடித்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தனர். தட்டுத் தடுமாறி, 15 நிமிடப் பயணத்தின் முடிவில் சற்றுத் தூரத்தில் ஹோவென்று அருவி கொட்டிக்கொண்டிருந்தது.

நாங்கள் தூரத்திலிருந்தே அருவியை ரசித்துக்கொண்டிருந்தோம். எங்களுடன் வந்தவர்கள் இன்னும் சில பாறைகளைக் கடந்து அருவிக்கு அருகில் சென்றார்கள். எனக்கும் அருவி நீரில் கைநனைக்க ஆசையாக இருந்தது. நான் இறங்க வேண்டிய பாறைக்கும் நின்ற பாறைக்கும் இடையே கூடுதல் இடைவெளி. கால் பேலன்ஸ் செய்ய முடியாமல் அப்படியே விழ ஆரம்பித்தேன். எதிரில் மிகவும் கூர்மையான ஓரங்களைக் கொண்ட பெரிய பாறை. 'சரியாக நெற்றிப் பொட்டில் படப்போகிறது. நான் காலி' என்று நினைத்தபடி பாறையில் விழுந்தேன்.

சில நிமிடங்கள் கழித்துக் கண் விழித்தேன். வாய்ப்பக்கம் கடுமையான வலி. ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்த ஒரு பெண் பஞ்சை நனைத்து சுத்தம் செய்தார். அப்போதுதான் அதை நான் கவனித்தேன். வாயிலிருந்து நூல் போல் ஏதோ ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதன் நுனியில் வெள்ளையாக... ஐயோ என்னுடைய பல். ஒன்றும் யோசிக்கவில்லை. பல்லை அப்படியே எடுத்து அதன் பழைய இடத்தில் வைத்துவிட்டேன். வேகமாக மேலே வந்தோம். அத்தனை ஜோடிகளும் எங்களுடன் மேலே வந்து சேர்ந்தனர். நாங்கள் தனியாக ஒரு காரைப் பிடித்து, டாக்டரைப் பார்க்கப் போகிறோம் என்றோம். ஜோடிகள் அத்தனைபேரும் தங்கள் ட்ரிப்பை இத்துடன் முடித்துக்கொண்டு, எங்களுடன் வருவதாக அடம்பிடித்தனர். அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, டாக்டர் வீட்டுக்கு வந்தோம்.

சான்றிதழ் மட்டுமே அவர் ஒரு டாக்டர் என்பதை எடுத்துக்காட்டியது. அவருடைய வீட்டு வராண்டாவில் சிறிய அலமாரியில் அடிப்படை மருத்துவக் கருவிகள் மட்டுமே வைத்திருந்தார்.

‘உங்க நல்ல நேரம் நான் இன்னிக்கு ஊருக்குப் போகல. மாதத்துக்குப் பத்து நாள் வெளியூர் போயிடுவேன். இங்க இருக்கற ஒரே டாக்டர் நான்தான்’ என்றபடி பெரிய கோணி தைக்கும் ஊசிபோல் ஒன்றை எடுத்துச் சரி பார்த்தார்.

எனக்குப் பயத்தில் உடல் நடுங்கியது. நல்ல வேளை, அது சரியில்லை என்று வேறொரு ஊசியை எடுத்து, பிய்ந்து போன மேல் உதட்டை சாக்குமூட்டையைக் கட்டுவது போல் முடிச்சாகத் தையல் போட்டார். அந்த வலியிலிலும் இது சரியில்லை என்று சொன்னேன். ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தவர், நான் சற்றும் எதிர்பாராவண்ணம் நூலைப் பிடித்து இழுத்தார். நான் கத்திய அலறலில் மலையே ஒரு குலுங்கு குலுங்கியிருக்கும். மறுபடியும் சுமாராக தைத்து முடித்தார். உடன் வந்தவர்கள் உடைந்த பல்லைக் காட்டச் சொன்னார்கள். இந்த டாக்டரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று வெளியே வந்துவிட்டேன்.

பல் உடைந்ததில் பாதியில் நின்றுவிட்டது பச்மரி பயணம். பேருந்து வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி என அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் எத்தனை இருக்கின்றவனவோ!

3 comments:

யூர்கன் க்ருகியர் said...

பல்லோட போச்சேன்னு சந்தோசப்படுங்க.
பச்மரி-யின் போட்டோக்களை போட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

பாபு said...

same blood ,நான் ஹொகேனக்கல் அருவியில் விழுந்து பாதி பல் உடைத்துகொண்டவன்

Anonymous said...

பயங்கரமான அனுபவம்