Friday, September 19, 2008

ஃபெரோஸ் காந்திக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா?

சமீபத்தில் ஃபெரோஸ் காந்தி பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்தேன். இதற்குமுன் ஃபெரோஸ் காந்தி பற்றி எனக்குத் தெரிந்த தகவல்கள் வெகுசொற்பம். அதிலும் உண்மை இல்லை என்பது என் எண்ணம். இந்தக் காரணமே புத்தகத்தைப் படிக்கத் தூண்டியது. மறக்கப்பட்ட சாமானியர் ஃபெரோஸ் என்று புத்தக அட்டை வாசகம் சொன்தால் கூடுதல் எதிர்பார்ப்போடு படித்தேன்.

பணக்காரர், அழகானவர், புத்திசாலி, தைரியமானவர், அரசியல் பின்னணி கொண்டவர் என்று இந்திராவுக்கு எத்தனையோ ப்ளஸ்கள். சினிமா கதாநாயகன் போல் இந்திராவைத் துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்துகொண்டவர் ஃபெரோஸ். இந்திராவின் குணம், குடும்பம் எல்லாம் அறிந்த ஃபெரோஸ் அவரைத் திருமணம் செய்வதன் மூலம் தான் காணாமல் போவோம் என்பதையும் அறிந்தே எல்லாம் செய்கிறார். அதே போல் இந்திராவும் மொழி, இனம், பணம், குடும்பப் பின்னணி, வருமானம், அப்பாவின் விருப்பம் என்று எதையும் எதிர்பார்க்காமல் ஃபெரோஸ் என்ற மனிதரை மட்டும் விரும்பி இருக்கிறார். திருமணம் முடிந்ததும் கணவருடன் தனிக்குடித்தனம். ஃபெரோஸ் எழுதி சம்பாதித்த குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்துகின்றனர்.

உடல் நலக்குறைவு, கையில் பணம் இல்லாத சூழல் பிறந்த வீட்டை அடிக்கடி நாட வைக்கிறது. இந்திராவின் உடல்நிலை குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கையையும் மீறி மூன்று முறை கருத்தரிக்கிறார். குழந்தை மீது இருக்கும் பாசமா, அல்லது கணவரின் ஆசையை நிறைவேற்றவா என்று தெரியவில்லை, உயிரைத் துச்சமாக நினைத்து இந்திரா செயல்பட்டிருக்கிறார். மகளின் சங்கடத்தைப் போக்கும் விதத்தில் நேரு ஃபெரோஸ்க்கு ஒரு பத்திரிகையில் நிர்வாக இயக்குனர் பொறுப்பு அளித்து சம்பளமும் தருகிறார். இந்திரா கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்.

படித்தவர், விஷயமறிந்தவராக இருந்தாலும் ஃபெரோஸும் சராசரி ஆண் என்பதை நிரூபிக்கிறார். சின்ன சின்ன விஷயத்திலும் தன்னை ஒதுக்குகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறார். இருவருக்கும் பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்திராவோ திருமணம், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல் என பல விஷயங்களிலும் பாரபட்சமின்றி நடந்துகொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியாக வசிக்கும்போது ஃபெரோஸ் ஏற்கனவே இருந்த புகைப்பிடித்தல், குடிபழக்கங்களுடன் பல பெண்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்கிறார். விஷயம் தெரிந்து நேரு எல்லாவற்றையும் விட்டுவிடுமாறு கேட்கிறார். கோபம் கொண்ட ஃபெரோஸ் பழக்கத்தை விடமுடியாது. இந்திராவை டைவர்ஸ் செய்கிறேன் என்கிறார். அவருடன் தொடர்பு வைத்திருந்த பெண்கள் பிரிந்து சென்ற பின்னர் இந்திரா மீண்டும் ஃபெரோஸுடன் இணைந்து குடும்பம் நடத்துகிறார்.கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை எந்தப் பெண்ணுமே பொறுத்துக்கொள்ளமாட்டாள். இதுபோல் இருமுறை நடந்ததாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாமனார், மனைவி மேல் இருந்த கோபத்தால் ஃபெரோஸ் வெளிப்படையாகப் பல விஷயங்களை எதிர்க்க ஆரம்பிக்கிறார். தனித்தனியாக வசிக்கின்றனர்.நடுநடுவே சேர்ந்து விடுமுறையைக் கழிக்கின்றனர். இந்திரா கட்சியில் பிஸியாகிவிடுகிறார். காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கிறது. மூத்த தலைவர்களுக்கு அப்பதவியைக் கொடுக்கலாம் என்று ஃபெரோஸ் எதிர்ப்புக்காட்டவில்லை. தன்னைவிட்டு, தன் மனைவிக்கு அப்பதவி கிடைத்ததில் ஆத்திரம். தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் போகிறார். இரண்டு, மூன்று விஷயங்கள் செய்கிறார். அதுவும் தன் குடும்பத்தை எதிர்த்து. இதற்கான காரணம் கூட தனிப்பட்ட கருத்துவேறுபாடுகளுக்காகத்தான் என்று புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அப்படியும் இரு முறை ஃபெரோஸ்க்கு மாரடைப்பு வந்தபோது இந்திரா அருகில் இருந்து கவனித்துக்கொள்கிறார். இந்திராவுக்கும் உடல்நிலை சரியில்லாதபோது அவரும் கவனித்துக்கொள்கிறார்.

ஃபெரோஸ் பொதுவுடைமை கருத்துகளில் ஆழமான அபிமானம் கொண்டவர் என்றால் அவர் ஏன் இடது சாரி இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை?

சுதந்தரத்துக்குப் பிறகு இடதுசாரிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு, விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டபோது அவர் ஏன் எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை?

எவ்வளவு திறமை, துணிவு, புத்தி இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவியானால் தன் சுயத்தைத் தொலைத்துதான் வாழவேண்டும். அப்போதுதான் நல்ல மனைவி. பெண்களுக்குத் திறமை என்பது கல்யாணத்துக்கு முன்பாக இருக்கலாம். எவ்வளவு திறமை இருந்தாலும் அதை கணவனுக்கு முன்பாகக் காட்டக்கூடாது. அவளுக்கு நாடாளும் தகுதி இருந்தாலும் சமையல்கட்டில் சமாதி ஆகிவிடவேண்டும். ஃபெரோஸ்க்கு ஒரு நல்ல மனைவிதான் வேண்டும் என்றால் இந்தியாவில் பெண்களா இல்லை?

4 comments:

Anonymous said...

பெரோஸ்காந்தி கட்டுரை நன்றாக இருக்கிறது. இதைப் படிக்கும்போது ஏனோ தவிர்க்கவே முடியாமல் சதாசிவம் நினைவுக்கு வந்து போகிறார். பெரோஸ்காந்திக்கு நேரெதிராக திறமைசாலியான மனைவிக்கு ஊக்கம் தந்து எம்.எஸ். எஸ்ஸின் பின்னால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நின்று கொண்டவர். மனைவியைப் பெருமைப்படுத்தி மனம் மகிழும் ஆண்களாக இப்படியும் சில பாசம் மிக்க ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உமா சம்பத்

Anonymous said...

பெரோஸ்காந்தியினுடையது ஒரு சராசரி கணவனின் எதிர்பார்ப்புக்கள்.
ஆனால் இந்திரா சாதரண பெண் இல்லை.

சிறந்த தொடக்கம்
வாழ்த்துக்கள்

Tech Shankar said...

ஒரு சாதாரண ஆணின் எண்ணம் எப்போதுமே தனது மனைவியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதே.

உங்கள் கருத்துரை நன்றாக உள்ளது.

Unknown said...

பெரொஸ் பற்றி இதுவரை அதிகம் தகவல் அறிந்ததில்லை, புதிய தகவல் மிகவும் அருமை. இத்தனைக்கும் பிறகு இந்திரா சாதித்தார் என்பதுதான் ஆச்சர்யம்