Thursday, March 4, 2010

சாமி! பிடிபட்டால் ஆசாமி!


ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு விஷயம் விவாதத்துக்குரியதாக அமைந்து விடுகிறது. இந்த வாரம் நித்யானந்தர். இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. நூற்றுக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் சாமியார்களில் இருந்து ஆயிரம், லட்சம், கோடிகளில் புரளும் சாமியார்கள் வரை நாம் பார்த்திருக்கிறோம். பிடிபடுகிறவரை சாமி. பிடிபட்டால் ஆசாமி.

உண்மையில் இந்தச் சாமியார்கள் வானத்திலிருந்து குதித்தார்களா? சாதாரண ராஜசேகராக இருந்தவனை முப்பத்து மூன்று வயதுக்குள், அதுவும் பொதுவாழ்க்கைக்கு வந்து ஏழாண்டுகளுக்குள் மிகப் பெரிய கோடீஸ்வரனாகவும், நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தன் (பக்தி) வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பவனாகவும் மாற்றியது யார்?

நான்கு ஸ்லோகம் சொல்லி, தெளிவாகத் தமிழ் பேசிவிட்டால் குட்டிச் சாமியார். ஒரு மரம் சற்றுக் கோணலாகக் காட்சியளித்தால் ஏதோ ஒர் உருவம் கொண்ட கடவுள். தெருவோரங்களில் கிடக்கும் மைல்கல் கூட கடவுள். இவர் பால் குடிக்கிறார், அவர் பேப்பர் படிக்கிறார்... இப்படியெல்லாம் கொண்டாடுவது யார்?

சாமானியர்கள் வாழவே முடியாத அளவு தினம் தினம் உயரும் விலைவாசி பொருளாதாரப் பிரச்னை ஒருபக்கம். தேர்வில் வெற்றி பெறுவோமா, வேலை கிடைக்குமா, கிடைத்த வேலையைத் தக்க வைக்க முடியுமா என்ற பயம் ஒரு பக்கம். கார், பங்களா, ஷேர் மார்க்கெட் என்று பேராசை ஒரு பக்கம். தொழிலில் போட்டி, கறுப்புப் பணம், கடன் என்று உழலும் கூட்டம் ஒரு பக்கம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள். இவற்றுக்குத் தீர்வு சொல்ல பூஜையறயில் இருக்கும் தெய்வங்களால் முடிவதில்லை. தெருவில் இருக்கும் தெய்வங்களால் முடிவதில்லை. ஊர் விட்டு ஊர் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினாலும் பிரச்னை தீர்வதில்லை. யாராவது ஒரு வழி காட்டமாட்டார்களா என்று தவிக்கும்போது இதுபோன்ற சாமியார்களின் தேவை ஏற்படுகிறது.

அந்தத் தேவையைப் (கொஞ்சம்) புத்திசாலித்தனம் கொண்டவர்கள் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். படிப்பு, பல மொழிகள் போன்ற தகுதிகளை வளர்த்துக்கொண்டு, வசீகரிக்கும் பேச்சால் எதிராளியை வீழ்த்தி விடுகிறார்கள். ஹைடெக் உலகம் என்பதால் யோகா, தியானம், மனப்பயிற்சி, வாழும் கலை என்று பல்வேறு பயிற்சிகள், பல்லாயிரக் கணக்கில் கட்டணங்கள் என்று தங்களையும் நவீனமாக்கிக் கொள்கிறார்கள். சிலர் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்துகொள்கிறார்கள்.

படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு எல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது. எல்லோருக்குமே குருட்டு நம்பிக்கைதான்!

வாயிலிருந்து லிங்கம் எடுத்த சாமியார், பழம் தரும் சாமியார், பௌர்ணமி சாமியார், நள்ளிரவு பூஜை செய்யும் சாமியார் என்று பலவித சாமியார்களின் மோசடிகளைத் தெரிந்துகொண்டதும் இவர்கள் கடவுள் மறுப்புக்கொள்கைக்குள்ளோ, பகுத்தறிவுக்குள்ளோ செல்வதில்லை. வேறொரு சாமியாரை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். சுமையை இறக்கி வைக்கவோ, மனம் பாரம் குறையவோ ஓர் ஆளோ, அமைப்போ தேவைப்படுகிறது.

நித்யானந்தர் விஷயத்தில் பிரம்மச்சரியம் பேசுகிற ஒரு சாமியார் இப்படிச் செய்துவிட்டாரே என்ற வருத்தமோ, அதிர்ச்சியோ அல்லது நாம் ஏமாற்றப்பட்டோம் என்ற கோபத்தையோவிட அவர் செய்த காரியம், அது கொடுத்த கிளுகிளுப்புத்தான் இங்கு பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அந்தப் பெண் எந்த நடிகை, வேறு யார் யார்  இப்படி! பார் எப்படி மயக்கறா?’ புவனேஸ்வரி சொன்னது உண்மைதான்...’ - இதுபோன்ற பேச்சுகள்தான் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

சினிமா உலகத்தின் சாதகபாதகங்கள் பலருக்கும் தெரிந்ததுதான். ஒரு நடிகை உடலால், உழைப்பால், ஊதியத்தால் சுரண்டப்படுகிறார். இத்தனை அவமானங்களையும் சந்தித்து வரும் நடிகைகளுக்கு, அவர்கள் வாழும் சூழல் தவறாகத் தெரியாது. புவனேஸ்வரியைத் தேடிவரும் ஆண்களைப் பற்றியோ, ரஞ்சிதாவிடம் குடும்பம் நடத்திய நித்யானந்தரைப் பற்றியோ இங்கு யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பரிதாபத்துக்குரிய பெண்களையும் கிளுகிளுப்பாகப் பார்ப்பதே  இலக்கு.

ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களில் கூடப் பெண்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடிகிறதா? சினிமாவில் மட்டுமின்றி, மேடைகளிலும் நடிகைகளை ஆடவிட்டுப் பல மணிநேரம் வாய்பிளந்தபடி ரசித்துவிட்டு, அந்தப் பெண்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் நினைக்கும் ஒழுக்க விதிக்குள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?   

பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் எவ்வளவு பொறுப்பும் சமுதாயக் கடமையும் இருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்ட இந்த நிகழ்ச்சி ஒன்றே போதும். போலியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன் என்று எவ்வளவு கீழ்த்தரமான விஷயங்களை நம் வீட்டுக்குள் நுழைய வைத்துவிட்டார்கள்? நித்யானந்தர் செய்ததை விட இது பெரிய கேடு இல்லையா?   

ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் எழுதிய டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட் நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் போலத்தான்  ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் ஒரு ஹைட்இருக்கிறான். டாக்டர் ஜெகில்போல வெளியில், ‘இது ரொம்ப மோசம், இப்படிக் காட்டியிருக்கக்கூடாதுஎன்று சொன்னாலும், ஒவ்வொருவரும் ஹைடாக இதை ரசிக்கவே செய்திருக்கிறார்கள். இங்கு கேவலப்பட்டு நிற்பது நித்யானந்தாவா, இல்லை நம் வக்கிர எண்ணங்களா?.               



  

9 comments:

Anonymous said...

நீங்கள் நித்தியானந்தா செய்தது சரி என்று வாதிடுகிறீர்களே.

எப்படி உங்களால் மட்டும் முடிகிறது.

முத்தன் said...

உண்மை. அருமையான பதிவு. வக்கிர எண்ணம் கொண்டு மெனக்கெட்டவர்களுக்கு சரியான சாட்டையடி.

goinchami said...

நல்ல பதிவு நன்றி பத்ரி

TAMILSUJATHA said...

Anonymous said...

நீங்கள் நித்தியானந்தா செய்தது சரி என்று வாதிடுகிறீர்களே.

எப்படி உங்களால் மட்டும் முடிகிறது.

தங்கவேலு, உங்கள் பெயரிட்டே பின்னூட்டம் போடலாம். ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் வேறு யாரோ பிலாகுக்குப் பதில் போட நினைத்து, தவறுதலாகப் போட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கான பின்னூட்டமாக இருந்தால், நீங்கள் ஒருமுறை படித்துவிட்டு, கேளுங்கள்.

பிரதிபலிப்பான் said...

// சினிமா உலகத்தின் சாதகபாதகங்கள் பலருக்கும் தெரிந்ததுதான். ஒரு நடிகை உடலால், உழைப்பால், ஊதியத்தால் சுரண்டப்படுகிறார். இத்தனை அவமானங்களையும் சந்தித்து வரும் நடிகைகளுக்கு, அவர்கள் வாழும் சூழல் தவறாகத் தெரியாது. புவனேஸ்வரியைத் தேடிவரும் ஆண்களைப் பற்றியோ, ரஞ்சிதாவிடம் குடும்பம் நடத்திய நித்யானந்தரைப் பற்றியோ இங்கு யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பரிதாபத்துக்குரிய பெண்களையும் கிளுகிளுப்பாகப் பார்ப்பதே இலக்கு.

//

எங்களுடைய கவலை எல்லாம் அந்த மாதிரி மற்றப் பெண்களும் பாதிக்க கூடாது என்று தான்.

//கிளுகிளுப்பாகப் பார்ப்பதே இலக்கு//

எந்த blogger-வது ரஞ்சிதாவைப் பற்றியும் அவள் குடும்பம் நடத்திய விதத்தைப் பற்றியும் அவள் அழகை பற்றியும் வர்ணித்து எழுதினார்களா?

அப்படி எழுதி இருந்தால் நீங்கள் சொல்வது சரி.

உங்களுக்கு எல்லா ஆண்களின் மீதும் தவறான அபிப்பிராயம் உள்ளது தயவு செய்து மற்றிக் கொள்ளுங்கள்.

// ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களில் கூடப் பெண்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடிகிறதா? சினிமாவில் மட்டுமின்றி, மேடைகளிலும் நடிகைகளை ஆடவிட்டுப் பல மணிநேரம் வாய்பிளந்தபடி ரசித்துவிட்டு, அந்தப் பெண்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் நினைக்கும் ஒழுக்க விதிக்குள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? //

நீங்கள் இதில் சொல்லவருவது என்ன?


//ஆடவிட்டுப் பல மணிநேரம் வாய்பிளந்தபடி ரசித்துவிட்டு,//

நித்தியானந்தா குடும்பம் நடத்தியதை பார்த்து ரசித்துவிட்டு ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்கிறீர்களா?

அப்ப அவன்,அவள் நடந்து கொண்டது சரியா?


நாங்கள் அந்த ஒளிப்பதிவை பார்த்தனால் தான் ஆன்மிகவாதிகளையும் சாமியார்களையும் கேள்விக்கேட்கிறோம் அதைப் பார்க்காவிட்டால் எப்படி கேள்வி கேட்பது?

பார்த்தவர்களுக்குத்தான் வக்கர புத்தி என்கிறீர்களா? நித்தியானந்தா செய்தது சரி என்று சொல்கிறீர்களா?

//அந்தப் பெண்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் நினைக்கும் ஒழுக்க விதிக்குள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?//

நாங்கள் நடிகை அப்படித்தான் இருப்பால் அதனால் நாங்கள் அவளைப் பற்றியோ அவள் நடத்தைப் பற்றியோ எழுதவில்லை. அப்படி எழுதிருந்தால் நீங்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது.
நாங்கள் கேட்பதெல்லாம் போலி சாமியாரைப் பற்றி தான். அப்படி இருக்கும் போது நாங்கள் அவள் ஒழுக்க விதிக்குள் வரவேண்டும் நினைக்க வாய்ப்பே இல்லை.

ஏன் நீங்கள் அப்படி எழுதினீர்கள் என்று எங்களுக்குத் தெறியவில்லை? ஒரு வேளை ஆண்கள் என்றாலே அப்படித் தான் என்று உங்களுடைய தவறான கண்ணோட்டமா.

//பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் எவ்வளவு பொறுப்பும் சமுதாயக் கடமையும் இருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்ட இந்த நிகழ்ச்சி ஒன்றே போதும். போலியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன் என்று எவ்வளவு கீழ்த்தரமான விஷயங்களை நம் வீட்டுக்குள் நுழைய வைத்துவிட்டார்கள்? நித்யானந்தர் செய்ததை விட இது பெரிய கேடு இல்லையா? //

எனக்குத் தெரிந்து அவர்கள் சினிமாவில் வருவதை விட மிக குறைவாகத்தான் கண்பித்தார்கள்.
ஒரு சினிமாவில் முதலிரவு காட்சியென்று சொல்லி விளக்கை அணைக்கும் வரைக்கும் எவ்வளவு காண்பிப்பார்களோ அவ்வளவுதான் கண்பித்தார்கள். அதனால் புதிதாக அங்கே சாமியார் இருந்ததனால் தான் எங்களுடைய கோபமே.

அதிலெல்லாம் கெடாத பிள்ளைகள் இதில் கெடுவார்களா?

இந்த வீடியோவைப் பார்த்தால் சாமியார்கள் எல்லாம் எவ்வளவு போலி என்று திருந்த வாய்ப்புள்ளது.அதை விடுத்து அவர்கள் ஆராய்ச்சி செய்யமாட்டார்கள்.


இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் நீங்கள் சொல்வதைப் போல் ரசித்தார்கள் என்றால் பொதுமக்கள் யாரும் கோபப்பட்டு ஆசிரமத்தை உடைக்கவேண்டிய அவசியம் என்ன?

நீங்கள் கேட்பது யார் கெட்டவர்கள் நித்தியானந்தாவா இல்லை அந்த வீடியோவை கண்பித்தவர்களா இல்லை அந்த வீடியோவைப் பார்த்தவர்களா என்று?

உங்களுடைய பதிவு வீடியோவைப் பார்த்தவர்கள் மீது குற்றம் சுமத்துவதைப் போன்று உள்ளது. அதனால் தான் ஏன் நீங்கள் நித்தியானந்தாவை ஆதரிக்கிறீர்கள் என்று?

Sathish K said...

வணிகம். எல்லாவற்றிலும் வணிகம். எல்லாமும் வணிகம்.

மீடியா செய்தது, செய்தவிதம் மிகத் தவறு தான்.

உங்கள் பதிவில் ஒன்று மட்டும் உடன்பாடு இல்லை. பெண்களிலும் தவறானவர்கள் இருக்கிறார்கள் எல்லாவிதமான காரணங்களுக்காகவும்.

ஆண்களில் அந்த விகிதம் அதிகமாக இருக்கிறது உண்மைதான்.

’ஹைட்’ பெண்கள் - ஆண்கள் எல்லாரிடமும் இருக்கிறது.

Sathish K said...

>>>இவர்கள் கடவுள் மறுப்புக்கொள்கைக்குள்ளோ, பகுத்தறிவுக்குள்ளோ செல்வதில்லை. வேறொரு சாமியாரை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள்.

போலி சாமியார்களைத் தவிர்க்க கடவுள் மறுப்புக் கொள்கைக்குத் தாவச் சொல்லுகிறீர்களா?

அறிவியல் மீது நம்பிக்கை வைத்து மருத்துவரிடம் போனாலும் இதே பிரச்சனை தானே... எத்தனை போலி மருத்துவர்கள்... டாக்டர் பிரகாஷ் விஷயம் மறந்துவிட்டீர்களா? சமீபத்தில் கூட பெண் மருத்துவர் பலரை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளவில்லையா..

எல்லாவற்றையும் வணிகமாக்குவது, மனிதர்களுக்குப் பணம், போகம் மீதான ஆசைகள் தான் இவற்றுக்குக் காரணங்களாக இருக்க முடியும். எல்லாவிதமான துறைகளிலும் மதம், அறிவியல், மருத்துவம், கல்வி எந்தத் துறையானாலும் சரி மோசடிகள் இருக்கத் தான் செய்கிறது. எனவே மனிதர்களுடைய குணம்தான் பிரச்சனையே தவிர, துறைகள் மீதோ கடவுள் மீதோ பிரச்சனையைப் போடக் கூடாது...

ரகுராமன் said...

என் கருத்து என்னவென்றால் சன் குழமம் மற்றும் நக்கீரன் மீது நடிகை ரஞ்சிதா மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும். நித்தியானந்தா போன்ற சாமியார்கள் வளர நம்மை போன்ற மனிதர்களின் அறியாமை தான் காரணம்.

ராஷா said...

Pirathipalippan avar hale..

entha pathivin annudaiya sinthanaiyum ethe onedrai thavira

\\எனக்குத் தெரிந்து அவர்கள் சினிமாவில் வருவதை விட மிக குறைவாகத்தான் கண்பித்தார்கள்.
ஒரு சினிமாவில் முதலிரவு காட்சியென்று சொல்லி விளக்கை அணைக்கும் வரைக்கும் எவ்வளவு காண்பிப்பார்களோ அவ்வளவுதான் கண்பித்தார்கள். அதனால் புதிதாக அங்கே சாமியார் இருந்ததனால் தான் எங்களுடைய கோபமே.

அதிலெல்லாம் கெடாத பிள்ளைகள் இதில் கெடுவார்களா?\\
cinema vai vida oodahangalukku athiha poruppu erukku
cinemala message solla vendiya avasiyam ella athu oru kelikkai. aana oodaham kandippa samudaya akkarai kondirukka vendum..

ethu ennudaiya karuthu mattume