Saturday, January 31, 2009

வித்தை காட்டிய விருந்தாளிகள்!



ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வேடந்தாங்கலுக்கு வந்த பறவைகள் பற்றிய தகவல்கள் பத்திரிகையில் இடம்பெறும். கட்டாயம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் செயல்படுத்தியதில்லை. சென்ற வாரம் எந்தவித திட்டமிடலும் இன்றி திடீரென்று கிளம்பினோம். தாம்பரத்தில் காலை பதினோரு மணிக்கு பஸ் ஏறினோம். 12 மணிக்கு செங்கல்பட்டு போய்ச் சேர்ந்தோம். மதிய உணவு வாங்கிக்கொண்டு, வேடந்தாங்கல் பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏற வேண்டியிருந்தது.

வழியில் பல கிராமங்கள். பொட்டல் வெளிகள். காடுகள். ஏரிகள். கோயில்கள். கடைகள். ஒரு மணி நேரப் பயணத்தின் முடிவில் வேடந்தாங்கல் வந்து இறங்கினோம். நுழைவுச் சீட்டு வாங்கும் இடத்தில் பறவைகளைப் பற்றிய பொதுவான விஷயங்கள் விளக்கிச் சொல்லப்பட்டிருந்தன. வாடகைக்கு பைனாகுலர்கள் கிடைக்கின்றன. டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம்.

ஏரிக் கரையிலிருந்து ஐம்பது அடி தூரத்தில் நாரைகள் (Stork) கம்பீரமாக அமர்ந்திருந்தன. இயற்கை சூழலில் மிக அருகில் அவ்வளவு பெரிய பறவைகளைப் பார்த்தது இதுதான் முதல் முறை. 70 சதவிகிதம் வெள்ளையும் வாலில் இளஞ்சிவப்பும் கழுத்து, கால்களுக்கு அருகில் கறுப்பும் கலந்த அற்புதமான இயற்கை கலவை. நீளமான, மெல்லிய உறுதியான கால்கள். இரையைச் சுலபமாகப் பிடிக்கும் விதமாக நீண்ட, கூர்மையான அலகு.

திடீரென்று ஒரு நாரை இறக்கைகளை விரித்தபடி நின்றது. எல்லோரும் வேகமாக கேமராவில் பிடித்தனர். சட்டென்று அப்படியே மேலே எழுந்து வேகமாக ஒரு ரவுண்ட் அடித்தது. பறக்கும் போது இறக்கையைச் சுருக்கிக்கொண்டு, கால்களைப் பின்னோக்கி நீட்டியபடி சென்றது. ஓர் அம்பு பறந்து சென்றது போன்ற பிரமை உண்டானது.

நாங்கள் புறச் சூழல் மறந்து பார்த்துக் கொண்டிருந்தோம். இன்னொரு பறவை சர்ரென்று பறந்து, தண்ணீரில் ஏதோ ஓர் இரையை நொடியில் எடுத்துக் கொண்டு, மீண்டும் கூட்டுக்குச் சென்றது.

பறவைகள் யாரையும் கண்டுகொள்ளாமல், தங்கள் கடமைகளைச் செய்துகொண்டிருந்தன. ஆனால் நம் பார்வைக்கு, பறவைகள் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டுவதாகவும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதாகவும் தோன்றியது. கேமராவுக்கு நாரையைப் போல் மனிதர்கள் கூட ஒத்துழைப்பு தந்திருக்க மாட்டார்கள்.

நுழைந்த இடத்திலேயே வெகு நேரம் நின்று விட்டோம் என்பதை உணர்ந்ததும், நகர ஆரம்பித்தோம். தண்ணீருக்கு நடுவில் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் படர்ந்த பச்சை மரங்கள்.( மாங்குரோவ் காடுகள்). ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன. பெண் பறவைகள் அடை காத்துக்கொண்டிருக்கின்றன. ஆண் பறவைகள் உணவு தேடி வந்து கொடுக்கின்றன.

ஏரியின் கரையோரம் நிறைய இருக்கைகள். நடுநடுவே ஐம்பது பேர் உட்காரும் அளவுக்கு சிமெண்டால் கட்டப்பட்ட இடங்கள். ஏராளமான குப்பைத் தொட்டிகள். போதுமான கழிவறைகள், சுத்தமாகவும் இருந்தன! சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. பறவைகளை ஏரியல் வியூவில் பார்க்க வசதியாக இரண்டு பெரிய டவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

நாரை இனத்தைச் சேர்ந்த கார்மரண்ட், இக்ரெட் போன்ற பறவைகள் மரங்களில் தென்பட்டன. வித்தியாசமான வாத்துகள் தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தன. பறவைகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்டோம்.

வேடந்தாங்கலுக்கு வந்திருக்கும் பறவைகள் எல்லாம் வெளிநாட்டு விருந்தாளிகள். பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் இந்த விருந்தாளிகள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. எல்லாப் பறவைகளும் ஒரே நாட்டைச் சேர்ந்தவை அல்ல. சைபீரியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என்று பல நாட்டிலிருந்தும் பறவைகள் வந்து ஒற்றுமையாகத் தங்கி, குடும்பம் நடத்தி, இனப்பெருக்கம் செய்து, புதிய உறுப்பினர்களுடன் தங்கள் சொந்த மண்ணை அடைகின்றன.

பறவைகள் ஏன் இவ்வளவு தூரம் இடம் பெயர்கின்றன?

பருவ நிலை மாற்றம், இனப் பெருக்கம், உணவு போன்றவை தான் பறவைகளின் இடப் பெயர்ச்சிக்கு முக்கியமான காரணங்கள். சைபீரியா போன்ற இடங்களில் இது கடும் குளிர் காலம். உணவும் சரியாகக் கிடைக்காது. இனப் பெருக்கம் செய்ய முடியாது. அதனால்தான் பறவைகள் தங்களுக்கு ஏற்றச் சூழல் தேடி பல்லாயிரம் மைல் தூரம் கடந்து வருகின்றன.

பறவைகள் பயணிக்கும் பாதையை எப்படி நினைவு வைத்துக்கொள்கின்றன என்பது இன்னும் அறிவியலுக்கு சவாலான கேள்வியாக இருக்கிறது.

நிறைய மக்கள் வருகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் நீண்ட நேரம் தங்குகிறார்கள். பலர் சட்டென்று பார்த்துவிட்டு, சென்று விடுகிறார்கள். மாலை 5.45 - 6.30 வரை உள்ள காட்சிதான் வேடந்தாங்கலின் ஹைலைட்.

நாங்கள் டவர் மீது ஏறி நின்றோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பஞ்சு வெடித்த பருத்திக் காடு போல பறவைகள் மரங்களில் பூத்திருந்தன. இப்போது பறவைகளின் காச் மூச் சத்தம் அதிகமாகக் கேட்டது. சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்தது. ஐம்பது, நூறு என்ற கணக்கில் பல விதமான பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கூடுகளை நோக்கித் திரும்பிய காட்சியைப் பார்த்தால் மட்டுமே உணர முடியும்.

இருள் சூழ, பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. பனி பெய்ய ஆரம்பித்தது. பறவை தோழர்களைப் பிரிய மனமின்றி, கிளம்பினோம். பறவைகளின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. வாசலுக்கு வந்து புறச் சூழலில் ஐக்கியமாக நேரம் பிடித்தது.

படங்கள் : முகில்

Tuesday, January 27, 2009

எமர்ஜென்சி சர்வீஸ்!

நேற்று புது சிலிண்டர் மாற்றினேன். உடனே 'சர்ர்ர்ர்ர்ர்' என பெருஞ்சத்தத்துடன் கேஸ் வெளியேறியது. அதன் வேகம் கொஞ்சம் அச்சத்தைத் தந்தது. உடனே எமர்ஜென்சி சர்வீஸுக்கு போன் செய்தேன். புகாரை வாங்கிக்கொண்டு, 'இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒருவர் வந்து பார்ப்பார்' என்றனர்.

வரவில்லை. காலை உணவை வெளியில் வாங்கி சாப்பிட்டோம்.

நேரம் கடந்துபோனது. மூன்றரை மணிநேரம் தாண்டியும் ஒருவரும் வரவில்லை. மீண்டும் எமர்ஜென்சி சர்வீஸ்க்கு தொடர்பு கொண்டேன். பழுது பார்ப்பவரின் பெயரையும், மொபைல் எண்ணையும் கொடுத்தனர். அவரைத் தொடர்புகொண்டேன்.

‘ஆமாங்க. ஒன்பது மணிக்கு சொன்னாங்க. ரொம்ப தூரம். வர்றது கஷ்டம்ங்க. நீங்களே ரோட்டில நின்னு பாருங்க... யாராவது வருவாங்க. இண்டேன் ஆளுங்க வரலைன்னா, பாரத் கேஸா இருந்தாக்கூட சரி பண்ணிடுவாங்க’ என்று பொறுப்போடு பதிலளித்தார் அவர்.

‘என்ன இப்படிச் சொல்லறீங்க?’

‘சரி, ஈவ்னிங் 4 மணி வாக்கில வரேன்’ என்றபடி போனை வைத்துவிட்டார்.

மதிய உணவையும் வெளியில் வாங்கி சாப்பிட்டோம்.

மாலை ஐந்தரை மணி ஆகியும் அவர் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டேன்.

‘என்னோட வண்டி ரிப்பேர். இப்பதான் சரி பண்ணினேன். நீங்களே சிலிண்டர் கொண்டு வர்றவங்ககிட்ட காட்டி சரி பண்ணிக்குங்க...’ என்று மிகப்பொறுப்புடன் பதில் வந்தது.

‘அதெல்லாம் முடியாது. நீங்க எப்ப வர்றீங்க?’

‘சரி, ஆறு மணிக்கு வரேன்...’

ஏழு மணி ஆகியும் வரவில்லை.

மீண்டும் போன் செய்தேன்.

‘நான் இப்ப அசோக் பில்லர்ல இருக்கேன். நீங்க சிலிண்டரை இங்க கொண்டு வந்தா நிமிஷத்துல சரி பண்ணித் தரேன்...’ என்ற அற்புதமான தீர்வை அவர் வழங்கினார். வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அசோக் பில்லருக்கு சிலிண்டரை முதுகிலோ பைக்கிலோ கட்டி எடுத்து வர வேண்டுமாம். எவ்வளவு ஈஸி!

‘அதெல்லாம் முடியாது. கம்ப்ளைண்ட் செஞ்சு எவ்வளவு நேரம் ஆச்சு? இதான் எமர்ஜென்சி சர்வீஸா?’

‘அவ்வளவு தூரத்துக்கு எவ்வளவு பெட்ரோல் செலவாகும்? யோசிக்காதீங்க நீங்க. சரி அரை மணி நேரத்துல வரேன்.’

எட்டு மணி ஆகியும் வரவில்லை. மீண்டும் சர்வீஸ் செண்டருக்குத் தொடர்பு கொண்டேன்.

‘காலையில பத்து மணிக்கே அங்க வந்திருக்கணுமே! சரி, நான் மறுபடியும் சொல்றேன். கண்டிப்பா வருவார்.’

’சார், காலையிலிருந்து ஒரு காபி கூட போட முடியாமல் இருக்கோம். எமர்ஜென்சியைக் கூட இப்படித்தான் ட்ரீட் பண்ணுவீங்களா?’

‘இல்ல... இல்ல... வருவார்.’

சில நிமிடங்களில் அவரிடமிருந்தே போன்.

‘ஹலோ... நீங்களே டெஸ்ட் பண்ணி வாங்கியிருந்தா இந்த பிரச்னையே இல்லை. ரொம்ப இம்சையா இருக்கு. சரி, எப்படி வரணும்?’

சொன்னேன்.

இரவு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தார். அவசரப் புகார் கொடுத்து 12 மணி நேரம் நிறைவடைந்திருந்தது.

‘என்னங்க இப்படியா இருக்கறது? உங்களுக்கு அவசரம்தானே? 'உடனே வாங்க சார், கவனிச்சுக்கறேன்'னு நீங்க சொல்லியிருந்தால் உடனே ஓடி வந்திருக்க மாட்டேனா? புரியாதவங்களா இருக்கீங்க!’

’என்ன கவனிக்கணும்?'

‘பெட்ரோல் காசு, டிப்ஸ்... இப்படி’ என்றபடி சிலிண்டருக்குள் வாசர் போட்டார். அடுத்த நொடி சரியானது. ஒரு நிமிட வேலைதான். டியூப் மாற்ற வேண்டும் என்றார். மாற்றினோம். பணத்தை வாங்கிக்கொண்டு, புலம்பியபடியே சென்றார்.

சிலிண்டர் பிரச்னை ஒரு புறம்... பழுது பார்ப்பவரின் பொறுப்பான நடவடிக்கை இன்னொரு புறம்... ஒரு நாள் விடுமுறை பிரமாதம்!

படிப்பினைகள்:

* நம் ஊரில் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டால் அது ‘பிசி'யாகவே இருக்கும். தொடர்ந்து - தொடர்ந்து என்றால் இருபது முப்பது முறை - முயற்சி செய்தால் மட்டுமே எடுப்பார்கள்.
* அழைப்பு மையத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக அல்லது அப்படியிருப்பது போல காட்டிக்கொண்டாலும், உங்களுக்கு சர்வீஸ் செய்ய வேண்டியவர் அவர் அல்ல - அவர் ஓர் தனிப்பிறவியாகவோ அதிசயப்பிறவியாகவோ இருப்பார்.
* ஒருவேளை அவரது எண்ணையும் அறிந்து நீங்கள் தொடர்புகொண்டால் - தான் வராமலேயே அந்த விஷயத்தை எப்படி முடிப்பது என்று அருமையாக ஆலோசனை சொல்வார். அப்போது நீங்கள் தயங்காமல். ‘உடனே வந்தால் கவனிக்கிறோம்' என்று உத்தரவாதம் வழங்கிவிட வேண்டும். இல்லையென்றால் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகும். சில வேளைகளில் சிலிண்டர் கசிவு அதிகமாகி வெடித்துத் தொலைத்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. நீங்கள் கவனக்குறைவாகக் கையாண்டதாகக் கூறப்படும்!
* பழைய டியூப் ஒழுங்காகவே இருந்தாலும், 'புது டியூப் மாற்றாவிட்டால் விபத்துதான்' என்ற ரீதியில் பயமுறுத்தி விற்று, கமிஷன் பார்ப்பார்கள்.
* தீப்பெட்டி உள்பட பரிசோதனைக்குரிய எந்தப் பொருளையும் அவர்கள் எடுத்து வரமாட்டார்கள். எல்லாவற்றையும் நம்மையே கேட்பார்கள்.
* 12 மணி நேரம் தாமதமாக வந்தாலும் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல், டிப்ஸ் குறைவாக இருக்கிறது என்று முனகுவார்கள். சண்டையும் போடக்கூடும்!
* சிலிண்டர் போன்ற அபாயமும் அவசரமும் நிறைந்த விஷயங்களில் கூட கேஸ் லீக் ஆகாமல் இருப்பதற்கான ரப்பர் வாசர் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யாமலேயே இண்டேன் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பொறுப்பில்லாமல் சப்ளை செய்வார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
* இதை ஓரளவு தவிர்க்க ஒரே வழி... மாற்று சிலிண்டர் வாங்கும்போதே அதை டெஸ்ட் செய்து, லீக்கேஜ் இல்லை என்று உறுதி செய்தபின் வாங்குவது. இதை டெலிவரி ஆசாமியையே செய்யச் சொல்லுங்கள். எப்படியும் அவருக்கு டிப்ஸ் தருவது கட்டாயம். சிலிண்டர் மூடியைத் திறந்த பின், சில துளிகள் நீர் விட்டு, நீர்க்குமிழிகள் வருகிறதா என்றும் பார்த்தும் அறியலாம். ஒரு சிலிண்டர் மாற்ற இவ்ளோ பிரச்னையா... ஐயோ!

Friday, January 23, 2009

காமெடி டிராஜெடிகள்!

சென்ற வாரம் டிவியில் காமெடி தொடர்பான நிகழ்ச்சிகளில் இரண்டு விஷயங்கள் கண்ணில் பட்டன. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்த வசனங்களும், காது புண்ணாகும் கடி நகைச்சுவைகளும் இடம் பெறுவதால் நான் அவற்றைப் பார்ப்பதில்லை. வீட்டுக்கு வந்த விருந்தினர் குடும்பத்துடன் அதைப் பார்க்க ஆரம்பித்ததால் எனக்கும் வேறு வழியில்லை.

திடீரென்று 15 வயது சிறுவன் ஒருவன் மேடை ஏறினான். ‘என்ன, குழந்தைகளும் கலந்துக்கறாங்களா?’ என்றேன். ‘இது என்ன, பல் முளைக்காத குழந்தைகள் கூட கலந்துக்கறாங்க’ என்று ஜோக் அடித்தார் விருந்தினர்.

‘இப்படித்தாங்க ராத்திரி ஆனதும்...’ என்று ஆரம்பித்த அந்தச் சிறுவன் சொன்ன அத்தனை விஷயங்களும் ஏ சர்டிபிகேட் வாங்கக்கூடியவை. எல்லோரும் எதற்காக விழுந்து விழுந்து சிரித்தார்கள் என்பது புரியவில்லை. அவன் பள்ளியில் (!) ஆதரவும் ஊக்கமும் தருவதாகச் சொன்னான்.

அதற்கு அடுத்து வந்த வாண்டு என்ன செய்யுமோ என்று திகிலுடன் இருந்தேன். நல்லவேளை ஏதோ நடிகர்கள் மாதிரி பேசிவிட்டு, சென்றுவிட்டது. அப்பாடா!

பெரியவர்கள், சிறுவர்களுக்கு என்று தனித்தனியாக நிகழ்ச்சி நடத்தாமல், எல்லோரையும் அனுமதிக்கும்போது சிறுவர்களும் பெரியவர்களுடன் போட்டிப் போடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். அந்தச் சிறுவர்களைத் தயார் செய்வது பெரியவர்கள்தான். கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல் குழந்தைகளை இப்படியெல்லாம் ஆட்டுவிக்க எப்படித்தான் பெற்றோரால் முடிகிறதோ!

இதைக் கருத்தில் கொண்டுதான் இரவு பத்து மணிக்கு மேல் நிகழ்ச்சியை வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது! ஆனாலும் எத்தனையோ குழந்தைகள் கண் கொட்டாமல் நிகழ்ச்சியைப் பார்க்கத்தான் செய்கிறார்கள்.

குழந்தைகளின் பெற்றோருக்கு தங்கள் குழந்தை டிவியில் வரவேண்டும், பிரபலமாக வேண்டும், பரிசு வாங்க வேண்டும் என்ற பேராசைதான் இதுபோன்ற விஷயங்களைக் குழந்தை என்றும் பாராமல் அனுமதிக்கவும், சொல்லிக் கொடுக்கவும் வைக்கிறது. எந்தக் குழந்தையாவது அர்த்தம் கேட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்?

இதே போன்ற நிகழ்ச்சி இன்னொரு சேனலில் மறுநாள். அதில் சிறப்பு விருந்தினராக வந்தவரின் பெயர் தெரியவில்லை. எதிர்கால பெண் எப்படி இருப்பாள் என்ற நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அவர், ‘பெண் பெண்ணாகத்தான் இருக்கணும். அடக்கமா இருந்தாத்தான் அவள் பெண். பெண் தான் வீணை. அந்த வீணையை ஆண் தான் மீட்கணும். அதை விட்டு, வீணையே...’

ஐயையோ... ஐயையோ...

Monday, January 12, 2009

பிள்ளையோ பிள்ளை!

Prodigy, ஆப்பிள் போன்ற புத்தகக் கடைகளில் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் கூட்டம் அதிகம் இருக்கும். பெரும்பாலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் புத்தகம் வாங்குவதில் பெரிய வார்த்தை யுத்தமே நடக்கும். குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை ஏதாவது காரணம் சொல்லி பெற்றோர் நிராகரிப்பர். குழந்தைக்குத் திருப்தி இல்லாவிட்டாலும் பெற்றோருக்காக அவர்கள் வாங்கித் தரும் புத்தகங்களை ஏற்றுக்கொள்கின்றனர். சில குழந்தைகள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை அடம்பிடித்து வாங்கிவிடுவதும் உண்டு. இன்னும் சில பெற்றோர், ‘நான் சொல்றதை வாங்கலைன்னா பாப்கார்ன், ஃப்ரெஞ்ச் ஃபிரை கிடையாது’ என்று அஸ்திரத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருகின்றனர்.

புத்தகக் கண்காட்சியைச் சுற்றி வந்தபோது ஓர் அரிய காட்சியைக் கண்டேன். அப்பாவும், ஆறு வயது மகனும் ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு வந்தனர். சிறுவன் கையில் ஒரு வெள்ளைத் தாளும், பென்சிலும் இருந்தன. கடை வாசலில் அப்பா நின்று விடுகிறார். சிறுவன் கடைக்குள் சென்று புத்தகங்களை நோட்டம் விடுகிறான். பிறகு, புத்தகத்தையும், கடையின் எண்ணையும் தாளில் குறித்துக்கொள்கிறான். மீண்டும் அடுத்த கடைக்குச் செல்கின்றனர்...

மகன் மீது தன் கருத்தைத் திணிக்காமல், சுதந்தரமாக விட்ட அந்த அப்பா ஓவியர் பிள்ளை. கொஞ்சம் கூட அலுக்காமல், சளைக்காமல் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்த பிள்ளையின் பிள்ளை அஸ்வின்.

அஸ்வினிடம் இருந்து தாளை வாங்கிப் பார்த்தேன். அந்தப் பக்கம் முழுவதும் கடை எண்களைக் குறித்து வைத்திருந்தான். விவரம் கேட்டேன். ‘இன்னிக்கு என்னென்ன வாங்கணும்னு நோட் பண்ணிக்கிட்டேன். நாளைக்கு வந்து எல்லாத்தையும் வாங்கிடுவேன்’ என்றான்!

Friday, January 9, 2009

ஆசை முத்தம்... தோசை முத்தம்!

சென்னை புத்தகக் கண்காட்சியின் இரண்டாம் நாள். கூட்டம் அதிகமில்லை. மாலை ஆறு மணிக்குஅரங்கில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ’குழந்தைகளின் புத்தகக் குதூகலம்’ என்ற தலைப்பில் பேச இருந்தார். ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. வரவேற்புரை, வாழ்த்துரை, இன்னும் சில உரைகள் என்று ஆர்வமாக வந்திருந்தவர்களைச் சோதித்து விட்டனர்.

விழாவுக்குக் கூடியிருந்த கூட்டம் சம்பிரதாயப் பேச்சுகளில் பொறுமையிழந்து அரங்கத்துக்குள்ளும், கேண்டீனுக்குள்ளும் அடைக்கலம் புகுந்துகொள்ள ஆரம்பித்தது. தமிழ்ச்செல்வனின் பேச்சைக் கேட்பதற்காக நான் சகித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

இதுபோன்ற விழாக்களில் மிகச் சுருக்கமாக மற்ற விஷயங்களை முடித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு வந்துவிடுவது அனைவருக்கும் நல்லது.

வியாசர்பாடியைச் சேர்ந்த துளிர் இல்லக் குழந்தைகள் 15 பேர் புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறையாக வந்திருந்தனர். அவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அவர்கள் வாங்கிய புத்தகங்கள் அல்லது பார்த்த புத்தகங்கள் பற்றிச் சொன்னார்கள். இன்றும் அப்துல் கலாம் முதல் இடத்தில் இருப்பது தெரியவந்தது!

தமிழ்ச்செல்வன் பேச வந்தார். குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று நாம் நினைத்துக்கொண்டு ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகள் உலகம் வேறு மாதிரி இருக்கிறது. குழந்தைகள் என்ன நினைப்பார்கள் என்று நாமே கற்பனை செய்து கொண்டு அவர்கள் மீது நம் கருத்தைத் திணிக்கிறோம். ஏன் என்றால் நாம் நம் குழந்தைப் பருவத்தை மறந்துவிடுகிறோம்.

எந்தக் குழந்தையும் தன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி செருப்புகளைப் போடத்தான் விரும்புகின்றன. அது எவ்வளவு சிரமத்தைக் கொடுத்தாலும் கூட. குழந்தைகள் பெரியவர்களின் உலகத்தைத்தான் விரும்புகிறார்கள். புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளைச் சுதந்தரமாக விட்டு, புத்தகங்களை வாங்கச் சொன்னால் அவர்கள் பெரியவர்களின் புத்தகங்களை வாங்குவார்கள். இங்கே கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட குழந்தைகளும் அதைத்தான் மெய்ப்பிக்கிறார்கள்.

எங்கள் கிராமத்தில் பொன்னுத்தாய் என்ற லைப்ரரி டீச்சர் வந்தார். எனக்குப் படிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். நான் எந்த நேரத்தில் சென்றாலும் சந்தோஷமாகப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பார். சிறிய வயதில் நாம் எதைப் படிக்கிறோமோ அதுதான் நம் பாதையைத் தீர்மானிக்கிறது. ரஷ்யப் புரட்சி பற்றியெல்லாம் நான் அந்த வயதிலேயே படிக்க ஆரம்பித்துவிட்டேன். சின்ன வயது, யார் எழுதியது எல்லாம் தெரியாது. விஷயம் மட்டும் அப்படியே பதிந்து விட்டது.

என் கதையில் உருவான பூ திரைப்படத்தை எங்கள் தெருவில் உள்ள குழந்தைகள் பார்த்ததாகச் சொன்னார்கள். அவர்களுக்கு என்ன காட்சி பிடித்திருந்தது என்று கேட்டேன். நான் நினைத்தது குழந்தைகள் வரும் காட்சியைச் சொல்வார்கள் என்று.

‘ஆசை முத்தம் கொடுக்க முடியலை, தோசை முத்தமாவது தரேன்’ என்ற டயலாக்கைச் சொன்னார்கள். ஒரு குழந்தைகூட குழந்தைகள் காட்சியைக் குறிப்பிடவில்லை.

குழந்தைகளின் உலகத்தில் நாம் பழகாமல் அவர்களுக்கு எழுத முடியாது. ’இருட்டு எனக்குப் பிடிக்கும்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை, குழந்தைகளிடம் கொடுத்து, விவாதம் செய்து, கேள்வி கேட்டு பிரசுரித்தோம். 8 கட்டுரைகளில் 4 கட்டுரைகள்தான் குழந்தைகளுக்குப் பிடித்திருந்தன.

Tuesday, January 6, 2009

வாசிக்க... சுவாசிக்க... 1

சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 68 Prodigy புத்தகங்களுடன் வாசகர்களைச் சந்தித்தோம். இந்த ஆண்டு புதிதாக 112 புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். மொத்தம் 180 புத்தகங்களுடன் களத்தில் இறங்குகிறோம். சின்னக் குழந்தை முதல் கல்லூரி மாணவர் வரை அனைவரின் விருப்பத்தையும் Prodigy ஸ்டால் பூர்த்தி செய்யும்.

இந்த ஆண்டு Prodigy புத்தகங்களில் ஒரு சில உங்களுக்காக...

அம்பேத்கர்

தனக்குக் கிடைக்காத அத்தனை உரிமைகளும் தன்னுடைய இனத்துக்கு கிடைக்க வேண்டும் என்று போராடிய ஒப்பற்ற தலைவரின் வாழ்க்கை.

கணித மேதை ராமானுஜன்

வியக்கவைக்கும் கணிதத் திறமையால் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் ராமானுஜன். கணித உலகில் இந்தியா, தலை நிமிர்ந்து நிற்கக் காரணமானவரின் நெகிழ்ச்சியூட்டும் வரலாறு.

மொஸார்ட்

இசையே வாழ்க்கையாக வாழ்க்கையே இசையாக உருகிக் கரைந்தவர் மொஸார்ட். இசையால் உலகை வசப்படுத்திய உன்னதக் கலைஞனின் நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை.

லியானார்டோ டா வின்ச்சி

இவர்தான் லியனார்டோ என்று திட்டவடமாக வரையறுத்துச் சொல்வது பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்குவதற்குச் சமமானது. லியனார்டோவின் ஆற்றலில் ஒரு துளி நம்மிடம் இருந்தாலும் போதும், உலகை வசப்படுத்திவிடலாம்.

மெகல்லன்


கடல் வழியாக உலகைச் சுற்றிவர முதன்முதலில் பயணம் மேற்கொண்ட பயணி மெகல்லனின் அசாத்தியமான வாழ்க்கை.

செஸ்வநாதன் ஆனந்த்

64 கட்டங்களின் அகில உலக ராஜாவாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை, இன்றைய இளைஞர்களுக்கு ஓர் உற்சாக டானிக்.

செவ்வாய் கிரகம்

மனிதனை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஒரே கிரகம் செவ்வாய். அங்கே காற்று உண்டா? தண்ணீர் உண்டா? வேற்றுகிரகவாசிகள் உண்டா? நம்மால் செவ்வாய்க்குச் செல்லமுடியுமா? குடியேற முடியுமா? செவ்வாய் கிரகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.

மெசபடோமியா நாகரிகம்

சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனித குலத்தின் முன்னோர்களின் சரித்திரம் இது. நாகரிகத்தின் தொட்டில் என்று கொண்டாடப்படும் மெசபடோமியாவை அறிமுகம் செய்துவைக்கிறது இந்தப் புத்தகம்.

பெஞ்சமின் ஃபிராங்ளின்

அமெரிக்க விடுதலைப் போரில் வெற்றிக்கு வித்திட்டவர்களுள் ஒருவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் கூட. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அமெரிக்காவின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவராக மிளிர்ந்தவரின் வாழ்க்கை.

வீரபாண்டிய கட்டபொம்மன்

தம் வாழ்வின் எந்தக் கணத்திலும் வெள்ளையனுக்கு அடிபணியக்கூடாது என்று வாழ்ந்து காட்டிய மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள்முனை வாழ்க்கை.