Monday, October 11, 2010

தமிழ் பேப்பர் : பெண் மனம் - 1

ஐயோ, தாத்தா! இது என்ன கால் விரல்ல காயம்?’

‘ ……….’

‘தாத்தா, உங்களைத்தான் கேட்கறேன். கீழே விழுந்துட்டீங்களா?’

‘இல்லம்மா.  கோமளாவைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன். என்னைவிட ரொம்பச் சின்னவளா இருந்தும் ஒரு மரியாதை இல்லாம, ரெண்டு நிமிஷம் கழிச்சு நிதானமா வந்து என்னன்னு கேட்டா. வந்துச்சே பாரு ஒரு கோவம்! அப்படியே காலைத் தூக்கி ஒரு எத்து எத்தினேன்…’

‘என்ன சொல்றீங்க தாத்தா! பாட்டி இறந்து 30 வருஷம் ஆச்சு!’
‘ம்… கால் வலிச்சப்பறம்தான் தெரிஞ்சது நான் கண்டது சொப்பனம்னு.  கட்டில் கம்பில நல்லா கால் இடிச்சிடுச்சு…’

85 வயது தாத்தா. அவர் மனைவி இறந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர் கனவில் கூடத் தன் மனைவியை இப்படி நடத்தியிருக்கிறார் என்றால், அவர் உயிருடன் இருந்த காலங்களில் எப்படி இருந்திருப்பார்!

*

பூமியில் உள்ள உயிரினங்களை எல்லாம் அடக்கி ஆண்டுகொண்டிருப்பது மனித இனம். அறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட இனமாக இருப்பதும் இந்த இனம்தான். இரண்டே வகை உள்ள இனம். அதில் ஒரு வகை  இன்னொரு வகையை இரண்டாம் தரத்தில் வைத்திருக்கும் வேலையைத்  தொடர்ந்து கொண்டே இருக்கிறது பல்லாயிரம் ஆண்டுகளாக. பலர் சொல்லி போரடித்துப் போச்சென்று ஓரினம் தொடர்ந்து சொல்லும். எள்ளலும் துள்ளலும் நக்கலுமாக எகத்தாளமிடும். பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இனம் தோன்றிய நாளாக.

இங்கு பெண்களுக்கு என்று தனியான சிந்தனைகள் இல்லை. செயல்கள் இல்லை. விருப்பங்கள் இல்லை. லட்சியங்கள் இல்லை. ஆசைகள் இல்லை. எல்லாமே காலம் காலமாக ஆண்களால் உருவாக்கப்பட்டவைதான். அடக்கமாக இருக்க வேண்டும். நிமிர்ந்து நடக்கக்கூடாது. உரக்கப் பேசக்கூடாது. சிரிக்கக்கூடாது.

வசதியாக இல்லா விட்டாலும் பெண் என்றால் இப்படித்தான் உடை அணிய வேண்டும். இப்படித்தான் சிந்திக்க வேண்டும். இப்படித்தான் செயல்பட வேண்டும். குறிப்பாக, தங்களுக்குக் கீழாகத்தான் நடக்க வேண்டும் என்று ஆண்களின் ஜீனுக்குள் பொதிந்துகிடக்கும் அபிப்பிராயமே பொதுவான சமூகக் கருத்தாகவும் நிலவுகிறது.

பெண்களைப் பற்றிய ஆண்களின் இத்தகைய மதிப்பீடுகள் அவர்களே உருவாக்கிய மதங்கள், சட்டங்கள், காப்பியங்கள், போதனைகள் மூலமாக வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு, பரப்பப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
பெண்கள் பிரச்னை என்பது உண்மையிலேயே உள்ளதுதானா? அத்தனை பெரிய பிரச்னையா? பெண்கள் எல்லோரும் அடிமையாகவா இருக்கிறார்கள்? எதில் இல்லை சுதந்தரம்? பெண்களே பெண்களுக்கு எதிரி?… இப்படிப்பட்ட கேள்விகளைத் தினமும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிரச்னை என்றபிறகு பெரிய பிரச்னை என்ன, சிறிய பிரச்னை என்ன? எல்லோரும் அடிமையாக இல்லாவிட்டாலும் பெரும்பாலும் அடிமைகளாக இருக்கத்தான் செய்கிறார்கள். அடிமைப்பட்டுக் கிடப்பவர்களுக்குத்தான் சுதந்தரத்தின் பொருள் புரியும்.

‘ஒரு காலத்தில் பெண்களை அடக்கி வைத்திருந்தார்கள், சரி… இப்போதுதான் பெண்கள் படிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இதற்கு மேல் என்ன?’ என்று கேட்கிறார்கள்.

படிப்பு, வேலை என்பதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு பகுதி என்பதை மறுக்க முடியாது.  படிப்பு, வேலை இருப்பதாலேயே பிரச்னை தீர்ந்து விடும் என்றும் சொல்லிவிட முடியாது.  பெண்களைச் சுற்றியுள்ள கூண்டுகளின் கம்பிகள் சற்றுத் தள்ளி நகர்ந்து போயிருக்கின்றன. அவ்வளவுதான்! உண்மையில் சுதந்தரத்தை நோக்கி பெண்கள் செல்லக்கூடிய தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.

பெண்கள் பிறக்கும்போதே சந்திக்கும் போராட்டம் அவள் வாழ்வின் இறுதி வரை தொடர்கிறது. ஏழைகள், பணக்காரர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், கிராமத்தில் இருப்பவர்கள், நகரத்தில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், வீட்டிலிருப்பவர்கள் என்ற பேதங்கள் எல்லாம் பெண்கள் பிரச்னைகளுக்குக் கிடையாது.

சுமார் 1650  ஆண்டுகளுக்கு முன்…

பண்டைய எகிப்தில்  அலெக்ஸாண்டிரியாவில்  கி.பி. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஹைபேஷியா. கிரேக்கம், இத்தாலி, மத்திய தரைக்கடல் நாடுகளுக்குச் சென்று கற்றவர். இலக்கியம், கணிதம், தத்துவம், அறிவியல் போன்ற பல துறைகளில் தலைசிறந்தவராகத் திகழ்ந்தவர். அவரிடம் கல்வி கற்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள்  வந்தனர். பண்டைய கணித நூல்களை எளிமைப்படுத்தி விளக்க உரைகள் எழுதினார்.  இவர் எழுதிய நூல்கள் பிற்காலத்தில் வந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தன.

அறிவும் துணிவும் நிரம்பிய ஹைபேஷியா, ஆண்களைப் போலவே உடை அணிவார். தாமாகவே தேர் ஓட்டிச் செல்வார். எனவே, ஹைபேஷியாவை அன்றைய மதவெறியர்களுக்குப் பிடிக்கவில்லை. தேரில் வந்துகொண்டிருந்தவரை இழுத்து அடித்து உதைத்தனர். ஆடைகளைப் பிய்த்து எறிந்தனர். உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினர்.

ஹைபேஷியா [16ம்நூற்றாண்டு ஓவியம்

போனது ஹைபேஷா என்ற உன்னதமான ஒரு பெண்ணின் உயிர் மட்டுமல்ல; உலகத்துக்குச் சொல்ல வேண்டிய எவ்வளவோ விஞ்ஞான ரகசியங்களும் கண்டுபிடிப்புகளும்தான்!

சுமார் 1650 ஆண்டுகளுக்குப் பின் …

1987. இந்தியாவில் உள்ள ராஜஸ்தான். 18 வயது இளம் பெண் ரூப் கன்வருக்கு மால் சிங் என்ற 24 வயது நபரைத் திருமணம் செய்த  8 மாதங்களில், கணவர் இறந்து போனார். ரூப் கன்வரின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் ஏற்கெனவே ஒழிக்கப்பட்ட ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறுதலை அரங்கேற்றி, தங்கள் கோர முகத்தை இன்னொரு முறை உலகத்துக்குக் காட்டிக்கொண்டனர். வேடிக்கை பார்க்க வந்த ஆயிரக்கணக்கானவர்களின் கண்களுக்கு எதிரே, காப்பாற்ற யாருமின்றி, கதறியபடியே  ரூப் கன்வர் நெருப்பில் எரிந்து, கருகிப் போனார்.

ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாகச் சாகடித்த பிறகு, ‘சதி மாதா’ என்று கொண்டாடும் உலகம் இது.

இன்றைக்குச் சதி இல்லை. ஆணைப் போல் உடை அணிவதில் பிரச்னை இல்லை. இன்னும் பல இல்லைகள், மேலும் பல உண்டுகள். ஆணுக்கு நிகர் என்று ஆண்களில் சிலரேகூட எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடத் தயார்.

அவ்வளவுதானா? எல்லாமே இருக்கிறதா? பெண்ணடிமைக் காலம் இப்போது / இனி இல்லையா? உண்மைதானா?

இன்று பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் அனைத்தும் ஆண்களுக்கும் உண்டு. சந்தேகமில்லை. ஆனால் ஆண்களுக்கு இல்லாத ஒரு பிரச்னை பெண்ணுக்கு உண்டு. அதுதான் இன்னும் தன் ஆக்டோபஸ் கைகளால்  இறுக்கமாக அழுத்திப் பிடித்து வைத்திருக்கிறது.

அது…

0

தமிழ் பேப்பர் இணைய இதழில் நான் எழுதி வெளியாகும் பெண் மனம் தொடரின் முதல் அத்தியாயம் இது: இணைய இதழுக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.