Tuesday, September 23, 2008

இப்படியும் ஒரு சாமியார்!

சமீபத்தில் பெண் சாமியார் ஒருவர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டேன், அது குழந்தைகள் தொடர்பானது என்பதால். சாமியார் என்றதும் நான் நினைத்துக்கொண்டிருந்த பிம்பங்கள் எல்லாம் அவரைப் பார்த்ததும் உடைந்து விழுந்தன. பார்லரில் ஒரே அளவாக வெட்டப்பட்ட முடி, வெள்ளை நிறத்தை மேலும் வெள்ளையாக்கும் விதத்தில் பரவலாகப் போடப்பட்ட பவுடர், விலையுயர்ந்த புடைவையாக இல்லாவிட்டாலும் பளபளப்பான பச்சை வண்ண சேலை, காதுகளில் ஒளிவீசும் வைர தோடுகள், அருகில் லேட்டஸ்ட் ஃபேஷனாக இன்னும் ஒரு மூன்றுகல் வைரத் தோடு, தங்க செயின், வலது கையில் தங்க வ்ளையல்கள் இரண்டு, இடது கையில் வெள்ளைக்கற்கள் பதித்த நவீன கைக்கடிகாரம், இரண்டு கைகளிலும் செக்கச்சிவந்த மருதாணி, கால்களின் மேல்புறம் மாங்காயும் கொடிகளுமாக வரையப்பட்ட மெஹந்தி, கால் நகங்களுக்கு பளபளக்கும் வெள்ளி நிற நெயில் பாலிஷ்...எல்லோரும் அவர் காலில் விழுந்து வணங்கும்போதுதான் சாமியார் என்பதே நினைவுக்கு வந்தது.

காபிபொடியில் வரைந்த ஓவியம் ஒன்றை லேமினேட் செய்து வைத்திருந்தார்கள். காபி பொடி என்றதும் அதை எடுத்து முகர்ந்து பார்த்தார். என்னிடம் ’வாசம் வருகிறதா?’ என்றார். நான் ’இல்லை’ என்றேன். இன்னொரு பெண், ’ உங்களால் வாசனையை உணர முடிகிறதா? அந்த சக்தி உங்களுக்கு இருக்கும் அக்கா. எனக்கு இல்லை’ என்றார். அவரிடமிருந்து பதிலில்லை. கடைசியாக ஓர் ஓவியம் லேமினேட் செய்யப்படாமல் இருந்தது. அதை எடுத்து நுகர்ந்தவர், ’இதுலயே லேசாதான் வாசம் வருது. லேமினேட் பண்ணினா எப்படி வரும்? என்றார். எனக்கு அவர் சாதாரணமாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது. சுற்றியிருப்பவர்கள் கற்பூரம் காட்டாத குறையாக நடந்துகொள்கிறார்கள்.

சாமியார்கள் உருவாவதில்லை!

Monday, September 22, 2008

ராவணன்தான் வீரன்!

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

1988. பரபரப்பான தேர்தல் நேரம். தஞ்சாவூருக்குத் தேர்தல் கூட்டத்துக்காக வந்திருந்தார் அவர். காலையில் ஒரு மீட்டிங் முடித்துவிட்டு அடுத்த கூட்டத்துக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

‘அடுத்த கூட்டம் எத்தனை மணிக்கு காம்ரேட்?'

‘12 மணிக்கு காம்ரேட். காபி, டீ ஏதாவது சாப்பிடுகிறீர்களா?'

‘கூட்டத்துக்குப் போக இங்கிருந்து எவ்வளவு நேரம் ஆகும்?'

‘அரைமணி நேரத்தில் போயிடலாம்.'

‘ஓகே. குழந்தைகள் இருக்கும் தோழர்கள் வீடு அருகில் இருந்தால், அங்கு காபி சாப்பிட்டுப் போகலாமா?'


*
ஞாயிற்றுக்கிழமை. தோழர் ஒருவர் குடும்பத்துடன் வந்திருந்தார். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டபடி டிவியில் ஓடிக்கொண்டிருந்த ராமாயணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பாவும் தோழரும் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று எங்கள் வீட்டு வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த அப்பாவும் தோழரும் வேகமாக வராண்டாவுக்குச் சென்றார்கள். நானும் பின்தொடர்ந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை.வேகமாக உள்ளே வந்து தகவல் கொடுத்தேன். அடுத்த நொடி தட்டு, பாத்திரங்கள் சமையலறைக்குள் புகுந்தன. உள்ளே நுழைந்தார் அவர்.

மெலிந்த தேகம், சோடா புட்டி கண்ணாடி, வெள்ளை வேஷ்டி, சட்டை. எல்லோருக்கும் வணக்கம் சொன்னார். வேகமாக டீவியை அணைக்க ஒரு தோழர் வந்தார்.

'குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். டீவியை அணைக்க வேண்டாம்' என்றார் சிரித்துக்கொண்டே அவர்.

டிவியின் ஒலி மட்டும் குறைக்கப்பட்டது

நாற்காலியில் அமர்ந்தவரிடம் அப்பாவை அறிமுகப்படுத்தினார்கள் கூட வந்த தோழர்கள். என் தங்கைகளையும் விஜயையும் அருகில் அழைத்து, கைகளைப் பிடித்துக்கொண்டார்.

‘நான் உங்களுக்குத் தாத்தா. உங்க பேர் என்ன?'

வரிசையாக எல்லோரும் பெயர்களைச் சொன்னோம்.

‘ராமாயணத்துல உனக்கு யாரைப் பிடிக்கும்?' என்று விஜய்யிடம் கேட்டார்.

‘ராவணன்தான் பிடிக்கும்.'

எல்லோரும் சிரித்தனர்.

‘ஏண்டா விஜய் இப்படி மானத்தை வாங்கறே? ராமன்னு சொல்லக்கூடாதா?' என்றார் அவன் அம்மா.

'எனக்குப் பிடிச்சவரைத்தானே அவர் கேட்டார்' என்று கேட்டான் விஜய்.

வீட்டில் பலத்த சிரிப்பு. அவருக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

இளநீர் கொண்டுவந்து கொடுத்தார் அம்மா.

‘குழந்தைகள் முதலில் சாப்பிடட்டும்' என்றார் அவர்.

எல்லோருக்கும் இளநீர் கொடுத்தபிறகு, அவர் குடித்தார்.

‘குழந்தைகளைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி. வருகிறேன்' என்று கூறி, பத்தாவது நிமிடம் கிளம்பிவிட்டார்.

எல்லோரும் வாசலுக்கு வந்து வழியனுப்பி வைத்தோம். கார் கிளம்பியது.

‘என்ன விசேஷம்? யார் வந்தாங்க?' என்று கேட்டார் பக்கத்துவீட்டு மாமி.

பெயரைச் சொன்னேன்.

‘அப்படியா! அப்படி ஒருத்தர் இருக்காரா? எனக்கு ஒண்ணும் புரியலை போ' என்றபடி உள்ளே சென்றுவிட்டார் மாமி.

அவர், 1978 முதல் 1988 வரை திரிபுராவின் முதலமைச்சராக இருந்த நிருபன் சக்ரவர்த்தி. முதல்வர் பதவியில் இருந்து வெளியேறும்போது இரண்டு ட்ரங்க் பெட்டிகளுடன் கட்சி அலுவலகத்தில் குடியேறினார். பெட்டியில் நான்கு செட் ஆடைகளும் புத்தகங்களும் மட்டுமே இருந்தன.

Friday, September 19, 2008

ஃபெரோஸ் காந்திக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா?

சமீபத்தில் ஃபெரோஸ் காந்தி பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்தேன். இதற்குமுன் ஃபெரோஸ் காந்தி பற்றி எனக்குத் தெரிந்த தகவல்கள் வெகுசொற்பம். அதிலும் உண்மை இல்லை என்பது என் எண்ணம். இந்தக் காரணமே புத்தகத்தைப் படிக்கத் தூண்டியது. மறக்கப்பட்ட சாமானியர் ஃபெரோஸ் என்று புத்தக அட்டை வாசகம் சொன்தால் கூடுதல் எதிர்பார்ப்போடு படித்தேன்.

பணக்காரர், அழகானவர், புத்திசாலி, தைரியமானவர், அரசியல் பின்னணி கொண்டவர் என்று இந்திராவுக்கு எத்தனையோ ப்ளஸ்கள். சினிமா கதாநாயகன் போல் இந்திராவைத் துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்துகொண்டவர் ஃபெரோஸ். இந்திராவின் குணம், குடும்பம் எல்லாம் அறிந்த ஃபெரோஸ் அவரைத் திருமணம் செய்வதன் மூலம் தான் காணாமல் போவோம் என்பதையும் அறிந்தே எல்லாம் செய்கிறார். அதே போல் இந்திராவும் மொழி, இனம், பணம், குடும்பப் பின்னணி, வருமானம், அப்பாவின் விருப்பம் என்று எதையும் எதிர்பார்க்காமல் ஃபெரோஸ் என்ற மனிதரை மட்டும் விரும்பி இருக்கிறார். திருமணம் முடிந்ததும் கணவருடன் தனிக்குடித்தனம். ஃபெரோஸ் எழுதி சம்பாதித்த குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்துகின்றனர்.

உடல் நலக்குறைவு, கையில் பணம் இல்லாத சூழல் பிறந்த வீட்டை அடிக்கடி நாட வைக்கிறது. இந்திராவின் உடல்நிலை குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கையையும் மீறி மூன்று முறை கருத்தரிக்கிறார். குழந்தை மீது இருக்கும் பாசமா, அல்லது கணவரின் ஆசையை நிறைவேற்றவா என்று தெரியவில்லை, உயிரைத் துச்சமாக நினைத்து இந்திரா செயல்பட்டிருக்கிறார். மகளின் சங்கடத்தைப் போக்கும் விதத்தில் நேரு ஃபெரோஸ்க்கு ஒரு பத்திரிகையில் நிர்வாக இயக்குனர் பொறுப்பு அளித்து சம்பளமும் தருகிறார். இந்திரா கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்.

படித்தவர், விஷயமறிந்தவராக இருந்தாலும் ஃபெரோஸும் சராசரி ஆண் என்பதை நிரூபிக்கிறார். சின்ன சின்ன விஷயத்திலும் தன்னை ஒதுக்குகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறார். இருவருக்கும் பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்திராவோ திருமணம், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல் என பல விஷயங்களிலும் பாரபட்சமின்றி நடந்துகொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியாக வசிக்கும்போது ஃபெரோஸ் ஏற்கனவே இருந்த புகைப்பிடித்தல், குடிபழக்கங்களுடன் பல பெண்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்கிறார். விஷயம் தெரிந்து நேரு எல்லாவற்றையும் விட்டுவிடுமாறு கேட்கிறார். கோபம் கொண்ட ஃபெரோஸ் பழக்கத்தை விடமுடியாது. இந்திராவை டைவர்ஸ் செய்கிறேன் என்கிறார். அவருடன் தொடர்பு வைத்திருந்த பெண்கள் பிரிந்து சென்ற பின்னர் இந்திரா மீண்டும் ஃபெரோஸுடன் இணைந்து குடும்பம் நடத்துகிறார்.கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை எந்தப் பெண்ணுமே பொறுத்துக்கொள்ளமாட்டாள். இதுபோல் இருமுறை நடந்ததாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாமனார், மனைவி மேல் இருந்த கோபத்தால் ஃபெரோஸ் வெளிப்படையாகப் பல விஷயங்களை எதிர்க்க ஆரம்பிக்கிறார். தனித்தனியாக வசிக்கின்றனர்.நடுநடுவே சேர்ந்து விடுமுறையைக் கழிக்கின்றனர். இந்திரா கட்சியில் பிஸியாகிவிடுகிறார். காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கிறது. மூத்த தலைவர்களுக்கு அப்பதவியைக் கொடுக்கலாம் என்று ஃபெரோஸ் எதிர்ப்புக்காட்டவில்லை. தன்னைவிட்டு, தன் மனைவிக்கு அப்பதவி கிடைத்ததில் ஆத்திரம். தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் போகிறார். இரண்டு, மூன்று விஷயங்கள் செய்கிறார். அதுவும் தன் குடும்பத்தை எதிர்த்து. இதற்கான காரணம் கூட தனிப்பட்ட கருத்துவேறுபாடுகளுக்காகத்தான் என்று புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அப்படியும் இரு முறை ஃபெரோஸ்க்கு மாரடைப்பு வந்தபோது இந்திரா அருகில் இருந்து கவனித்துக்கொள்கிறார். இந்திராவுக்கும் உடல்நிலை சரியில்லாதபோது அவரும் கவனித்துக்கொள்கிறார்.

ஃபெரோஸ் பொதுவுடைமை கருத்துகளில் ஆழமான அபிமானம் கொண்டவர் என்றால் அவர் ஏன் இடது சாரி இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை?

சுதந்தரத்துக்குப் பிறகு இடதுசாரிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு, விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டபோது அவர் ஏன் எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை?

எவ்வளவு திறமை, துணிவு, புத்தி இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவியானால் தன் சுயத்தைத் தொலைத்துதான் வாழவேண்டும். அப்போதுதான் நல்ல மனைவி. பெண்களுக்குத் திறமை என்பது கல்யாணத்துக்கு முன்பாக இருக்கலாம். எவ்வளவு திறமை இருந்தாலும் அதை கணவனுக்கு முன்பாகக் காட்டக்கூடாது. அவளுக்கு நாடாளும் தகுதி இருந்தாலும் சமையல்கட்டில் சமாதி ஆகிவிடவேண்டும். ஃபெரோஸ்க்கு ஒரு நல்ல மனைவிதான் வேண்டும் என்றால் இந்தியாவில் பெண்களா இல்லை?

வணக்கம்

வணக்கம்

விரைவில் சந்திப்போம்

தமிழ் சுஜாதா