Tuesday, November 30, 2010

குதிரைக்கால் அரண்மனையும் பாஞ்சாலங்குறிச்சியும்

மிகவும் நேசத்துக்குரிய மாநிலம் கேரளா. சில ஆண்டுகளுக்கு முன்பு குமரகம் சென்றபோதும் சரி, இப்போது திருவனந்தபுரம் சென்றபோதும் சரி பெரிய அளவில் மாற்றம் இல்லை. கேரளாவில் பேருந்தில்  பயணம் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. காத்திருக்க அவசியமின்றி, பேருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. மூன்று நாள்களில் நாங்கள் பயணம் செய்த பேருந்துகளில் பெரும்பாலும் பெண்களே கண்டக்டர்களாக இருந்தனர். பேருந்து கட்டணம் தமிழ்நாட்டைப் போல்தான் இருக்கிறது. ஆனால் ஆட்டோ கட்டணங்களில் ஆச்சரியம்! ஸ்டேஷனிலிருந்து கிழக்கு கோட்டை செல்வதற்கு ஆட்டோவில் பன்னிரண்டு ரூபாய் ஐம்பது காசு என்று மீட்டர் காட்டியது. டிரைவர் பன்னிரண்டு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டார்!

திருவனந்தபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் கோவளம் கடற்கரை. கடற்கரையை ஒட்டி மலைப் பிரதேசம்.  அடர்த்தியாகவும் மிக மிக உயரமாகவும் இருந்தன தென்னை மரங்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு வீடுகள். கடற்கரையை ஒட்டி சிமெண்ட்  நடைபாதை. நடைபாதையை ஒட்டி உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், துணிக்கடைகள், அலங்காரப் பொருள்கள்  கடைகள்... வெளிநாட்டினர் மாதக்கணக்கில் தங்கி, சன்பாத் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆவேசமாக வரும் அலைகளுக்கு நடுவில் தைரியமாக குளிக்கிறார்கள்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கரையில் அமர்ந்து மீண்டும் மீண்டும் அதே அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஏனோ அலுப்பே வருவதில்லை!


கோவளத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது விழிஞ்ஜம். இது ஒரு மீன் பிடித் துறைமுகம். துறைமுகத்தைச் சுற்றிலும் எளிய மக்களின் கூட்டம். நீலம், பச்சை, சிவப்பு என்று பல வண்ணங்களில் துறைமுகம் முழுவதும் ஏராளமான படகுகள் அணிவகுத்திருந்தன. ஒன்றிரண்டு மீன் பிடிக் கப்பல்களும் நின்றிருந்தன. துறைமுகத்துக்கு மறுபுறம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது கடல். துறைமுகத்தைச் சுற்றி இரண்டு தேவாலயங்கள், மசூதிகள் காணப்பட்டன.


அங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது பூவார். இது அலையாத்திக்காடுகள், பூவாறு, கடல் மூன்றும் சங்கமிக்கும் இடம். இரண்டு மணிநேரம் இந்தப் பகுதியில் பயணம் செய்வது அலாதியானது. பருந்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி, மரங்கொத்தி, நீர்க்காகம், பல வண்ண வாத்துகள் என்று பறவைகளை அருகில் பார்க்கலாம். ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சுத்தமான கடற்கரை. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு கடலின் ஆக்ரோஷம் அதிகம். இருபுறமும் தென்னை மரங்களுக்கு நடுவில் மீண்டும் படகில் பயணம். வழியில் ஒரு படகில் இளநீர் கடை. அபார ருசி!


குதிரைக்கால் அரண்மனை பத்மநாபபுரம் கோயில் அருகில் உள்ளது. மிக பிரம்மாண்டமான அரண்மனை. தேக்கு மரங்களில் அற்புதமான வேலைப்பாடுகள். இருநூறு வயது பழைமையான அரண்மனை என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆயுதங்கள், ஆளுயரக் கண்ணாடிகள், கண்ணாடிப் பொருள்கள், யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சிம்மாசனங்கள், ஸ்லைடிங் டோர்கள் அமைந்த ஜன்னல்கள், இசைக்கருவிகள், ஓவியங்கள், புத்தகங்கள் என்று ஆச்சரியமாக இருந்தன. நூறு அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்தது இருபது அறைகளைத்தான். அதுவே இத்தனை பிரம்மாண்டம். இசை... நடனம்... என்று வாழ்க்கையை அனுபவித்து, வாழ்ந்து தீர்த்திருக்கிறார்கள் இந்த ராஜாக்கள்.

எல்லாம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு கேள்வி எழுந்தது. அது இந்திய சுதந்தரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலகட்டம். திருவனந்தபுரத்துக்கு அருகில் தமிழ்நாட்டில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராகக் கொண்டு, 90 கிராமங்களை ஆண்டுகொண்டிருந்தவர்  வீரபாண்டிய கட்ட பொம்மன். சென்ற மாதம் அங்கு சென்றிருந்தபோது ஒரு பெரிய வீடு அளவுடைய அவருடைய அரண்மனை தரைமட்டமாகி, வேலி போடப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. மக்களைக் காப்பாற்றுவதுதான் மன்னரின் வேலை. மீண்டும் மீண்டும் கட்டப்பட்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, ஆயிரக்கணக்கான உயிர்களையும் எடுத்துவிட்டு, நன்றாக விளைந்துகொண்டிருந்த மண்ணில் கருவேலம், காட்டாமணக்கு விதைகளை வீசிச் சென்றிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

சமகாலத்தில் இப்படி வீரப் போர் புரிந்து உயிரை விட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பகுதியில் இசையையும் நடனத்தையும் ரசித்துக்கொண்டு, ஆங்கிலேயர்களுக்குச் சலாம் போட்டுக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்கள் மன்னர்கள்! உண்மையில் பிரம்மாண்டமாக மனத்தில் உயர்ந்திருந்தது தரைமட்டமாகியிருந்த பாஞ்சாலங்குறிச்சியே!

பாலில் மிதக்கும் ரஸமலாய் போல கேரளாவில் தண்ணீருக்கு நடுநடுவே நிலப்பகுதிகள் அமைந்திருக்கின்றன. ரயில் பயணமாக இருந்தாலும் சரி, பேருந்து பயணமாக இருந்தாலும் சரி, இயற்கைக் காட்சிகள் இமைக்க மறந்துவிடச் செய்கின்றன. ஆறுகள், கழிமுகங்களில் சுற்றுலாப்பயணிகள் வீசிய ஒன்றிரண்டு தண்ணீர் பாட்டில்களைத் தவிர, வேறு பிளாஸ்டிக் பைகளை எங்கேயும் பார்க்க முடியவில்லை!

குமரகத்தில் பிரத்யேக கேரள உணவுகளைச் சாப்பிட்டோம். அதேபோல திருவனந்தபுரத்தில் எதிர்பார்த்ததில் ஏமாற்றமே. தமிழ்நாட்டு உணவுகள் கேரளாவை ஆக்கிரமித்து விட்டன.  கண்ணை உறுத்தும் சுவர் விளம்பரங்களோ, பெரிய பெரிய ஃப்ளெக்ஸ்களோ, பிரம்மாண்ட போஸ்டர்களோ  இல்லாதது ஆறுதலாக இருந்தது. விஜய், அஜித், சூர்யாவுக்கு நிறைய ரசிகர் மன்றங்கள் அங்கு இருந்தன.