Wednesday, May 26, 2010

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் : இந்திய மருத்துவக் கொள்கை

போலி மருந்துகளையும், காலாவதியான மருந்துகளையும் தேடிப்பிடித்து அழிக்கும் பணி ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் மருத்துவக் கொள்கை குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் திரு. சுகுமாரனைத் தொடர்பு கொண்டோம்.

சுகுமாரன், FMRAI (Federation of Medical and Sales Representatives Association of India) அமைப்பின் அனைத்து இந்திய முன்னாள் துணைத் துலைவர். TNMSRA (Tamil Nadu Medical and Sales Representatives Association) அமைப்பில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர். இந்திய மருத்துவக் கொள்கைகள் குறித்து கூர்மையான விமரிசனங்களை பல்வேறு பொதுக்கூட்டங்களில் முன்வைத்து வருபவர். கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவும் விவாதிக்கவும் ஆர்வமாக இருக்கிறார்.

* வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பல இந்தியாவில் சுதந்தரமாக விற்பனை செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது உண்மையா? இந்திய அரசு எப்படி இதனை அனுமதிக்கிறது?
* ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட கிராமப்புறங்களில் ஏழை மக்கள் மீது மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் அவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவ்வப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன. எனில், இந்தியா ஒரு பரிசோதனைக் கூடமாக மாறிவருகிறதா?
* பெருகும் நோய்கள், பெருகும் போலி மருந்துகள்.
* பெருகும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்.

ஆழமாகவும் அகலமாகவும் இன்னும் நிறைய விவாதிக்கலாம். அனைவரும் வருக.

* தேதி : ஜூன் 4, வெள்ளிக்கிழமை
* நேரம் : மாலை 6.30 மணி
* இடம் : கிழக்கு மொட்டை மாடி.
* முகவரி : 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18

Tuesday, May 11, 2010

பள்ளிகள் இப்படிச் செய்யலாமா?

ஒரு பக்கம் பள்ளிகளில் இருந்து இடை நிறுத்தம் செய்யும் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி பல்வேறு அமைப்புகளால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பணி சாதாரணமானது அல்ல.

கல்வியே வியாபாரமாகி விட்ட இந்த நாளில் தனியார் பள்ளிகள், தங்கள் அருமை பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்வதற்காக மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்குகின்றன. சுமாராகப் (!) படிக்கும் பத்தாம் வகுப்புக்குள் நுழையும் மாணவர்களை, டிசி கொடுத்து வெளியே அனுப்பி விடுகின்றன. இதன் மூலம் நூற்றுக்கு நூறு தேர்ச்சி என்று விளம்பரம் செய்து, அதன் மூலம் ஏராளமான மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும், பெற்றோரிடமிருந்து பணத்தைக் கறந்துகொள்ளவும் செய்கின்றன.

தஞ்சாவூரில் ஒரு தனியார் பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்புக்குத் தேறிய முப்பது மாணவர்கள், அந்தப் பள்ளியால் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். முதல் வகுப்பில் இருந்து காசு கொட்டிப் படித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களை, மற்ற பள்ளிகளும் பத்தாம் வகுப்பில் சேர்த்துக்கொள்வதில்லை. பிரைவேட்டாகப் படித்து பரீட்சை எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதன் மூலம் மாணவர்களும் பெற்றோரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குத்தான் பள்ளிகளில் இடம் என்றால் மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வது? சுமாராகப் படிக்கும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, அவர்களையும் படிக்க வைத்து, உயர்த்துவதுதானே ஒரு பள்ளியின் கடமை! நன்றாகப் படிப்பவர்களை மட்டும்தான் சேர்த்துக்கொள்ளும் பள்ளிக்கும் ஜெயிக்கிற குதிரை மீது பணம் கட்டும் ரேஸுக்கும் என்ன வித்தியாசம்?

சென்ற மாதம் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கச் சொல்லி ஊர்வலம் நடத்தினார்கள். ஆங்கிலப் பள்ளிகளின் மேல் மோகம், பணம் கொடுத்துப் படித்தால்தான் நல்ல கல்வி என்று நினைக்கும் மக்களின் மனத்தை இதுபோன்ற ஊர்வலங்களாலும், பிரசாரங்களாலும் மாற்றி விட முடியாது. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

சென்ற ஆண்டு யூனிசெஃப் நடத்திய ஆய்வுகளில் இந்திய அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் கற்கும் திறன் வித்தியாசப்படுகிறது என்கிறது. அதாவது அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தை, மற்ற பள்ளிகளில் இரண்டாம், மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையின் அளவுக்குத்தான் கற்கும் திறனைப் பெற்றிருக்கிறது. இப்படி ஒரு நிலை இருந்தால் எந்தப் பெற்றோர்தான் விரும்பி அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்?

காசு கொடுத்துப் படிக்க வைக்கும் எல்லா பள்ளிகளும் தரம் வாய்ந்தவை அல்ல. சிறிய இடங்களில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், தகுதியான ஆசிரியர்களை வைத்துப் பாடம் நடத்தாமல், குழந்தைகளின் மேல் போதிய அக்கறை இல்லாமல் இருக்கும் பள்ளிகளும் ஏராளமாக இருக்கின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்து இதுபோன்ற பள்ளிகளில் சேர்த்துப் பணத்தைக் கொடுத்துவிட்டு, நம் குழந்தைகள் படித்து, உயர்ந்த இடத்தை அடைந்துவிடுவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள். இந்த மாயையிலிருந்து எப்படி விடுவிப்பது?

மதிப்பெண் என்பது என்ன? மனப்பாடம் செய்து ஒப்பித்து மதிப்பெண் வாங்கினால் மட்டும் ஒருவர் புத்திசாலியாகி விட முடியுமா?

காலம் காலமாக இருந்து வரும் மெகாலே கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். பள்ளி என்றால் பயந்து அலறாமல், விருப்பத்துடன் கல்வி கற்க குழந்தைகள் வர வேண்டிய நிலை வேண்டும். மாறி வரும் உலகத்தைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து, அவர்களை அப்டேட் செய்துகொள்ள வைக்க வேண்டும். இப்படி அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயரும்போது தனியார் பள்ளிகளின் மேல் இருக்கும் மோகம் விலகும்.

ஐஐஎம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு முன்பே பரிசோதித்து, தகுதியான மாணவர்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஓர் அடிப்படைக் கல்விக்கு, ஏற்கெனவே அந்தப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களை வெளியேற்றுவது என்பது எவ்விதத்தில் நியாயம்?