Tuesday, February 2, 2010

மண் வாசனை!

எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் பிரபலமான இடங்களை மட்டும் பார்த்துவிட்டு வருவதை விட, அந்த மண், மக்கள், வாழ்க்கை போன்றவற்றையும் தெரிந்துகொண்டால்தான் அந்தப் பயணத்தின் நோக்கம் முழுமையடையும். அப்படித்தான் இந்தப் பயணமும் அமைந்தது. கர்நாடகாவின் வட பகுதியில் இருக்கும் பாதாமி, பட்டடக்கல் போன்ற வரலாற்றுச் சின்னங்களைப் பார்ப்பது என்று இலக்கு. ஆனால் பாதாமிக்குப் போகும் முன்பே பல அனுபவங்கள் கிடைத்தன.

பெங்களூருவைத் தாண்டிய ஒரு மணிநேரத்திலேயே நகரத்தின் பிடியிலிருந்து விடுபட்டுவிடுகிறது கர்நாடகா. போகும் வழியெங்கும் வெடித்துச் சிரிக்கும் பருத்திக் காடுகள், தலைநிமிர்ந்து நிற்கும் கம்பு, ஒய்யாரமாகக் காட்சியளிக்கும் கமுகு, நடுநடுவே தென்படும் இளம் கரும்பு என்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வயல்வரப்புகள். ஏழு மணி நேரப் பயணத்தை அலுப்புத் தெரியாமல் கொண்டு சென்றவை இந்த வயல்களும் ரயிலில் வந்த சக பயணிகளும்தான்!

ஹூப்ளி - தார்வாத் இரண்டும் இரட்டை நகரங்கள். ஹூப்ளியைத் தாண்டி நாற்பது நிமிட பேருந்து பயணத்தில் தார்வாதை அடைந்தோம். ஏராளமான கல்வி நிறுவனங்களும் காட்டன் சிட்டி என்ற புகழும் கொண்ட தார்வாதின் இன்னொரு பெருமை “தார்வாத் பேடா’. பாலில் தயாராகும் இந்தப் பேடா அருமை. மைதாவும் ரவையும் கலந்து பனியாரம் செய்வது போல அங்கு பூரி உருவத்துக்கு இனிப்பான பன் கிடைக்கிறது. இட்லி, தோசை, சாதம், உருளைக் கிழங்கு மசாலா, கத்தரிக்காய் பச்சடி, ரசம், ஊறுகாய், அப்பளம் என்று தாராளமாகக் கிடைக்கின்றன. இட்லி, தோசை, சாதம் எதுவாக இருந்தாலும் சாம்பார் என்று ஒரு குழம்பு கொடுக்கிறார்கள். அதில் விசேஷம் என்னவென்றால் பருப்பும் புளியும் இல்லை! பெங்களூர் கத்தரிக்காய், பீர்க்கங்காய் என்று போட்டுச் செய்யும் குழம்பு மட்டும் நம்மைப் பொருத்தவரை சுவை குறைவாக இருக்கிறது. (இந்தக் குழம்பின் ரகசியம் மட்டும் தெரிந்தால் உச்சத்தில் இருக்கும் துவரம்பருப்புக்கு ஒரு தடா போட்டுவிடலாம்!)

மறுநாள் பாதாமியை நோக்கி அதிகாலையிலேயே புறப்பட்டோம். போக அடம்பிடித்துக்கொண்டு இருந்தது இருள். சில்லென்ற பனி. முக்காடு போட்டபடி வயல் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்கள் பெண்கள். சில இடங்களில் அறுவடைக்குத் தயாராக நின்றுகொண்டிந்தன சோளப் பயிர்கள். இன்னும் சில இடங்களில் அறுவடை முடித்து, சோளத்தைக் குவித்து வைத்திருந்தார்கள். பாதுகாக்கும் வசதி இல்லாத பெரும்பாலான விவசாயிகள் வயலிலேயே சோளத்தைக் குவித்து, தார்ப்பாலின் போட்டு மூடி வைத்திருந்தார்கள். சில வயல்களில் தோல் உரிக்கப்பட்ட மஞ்சளும் ஆரஞ்சு வண்ணமும் கலந்த சோளத்தட்டைகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன.

மெல்லிய வெளிச்சம் வர, நடுநடுவே தென்பட்டன கிராமங்கள். நம் ஊர் மண்பானை வடிவத்தில் பல வண்ணங்களில் பிளாஸ்டிக் பானைகள் எங்கும் வியாபித்திருந்தன. கழிவறை வசதி இல்லாததால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அத்தனை பேரும் கையில் பிளாஸ்டிக் செம்புடன் நடந்துகொண்டிருந்தார்கள். தொப்பை இல்லாத வயிறு, விறைப்பான உடல் அவர்களின் உழைப்பை வெளிக்காட்டின. மராத்தி, கன்னடம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். புழுதி கிளம்பும் மண்ணில்தான் வாழ்க்கை என்றாலும் ஆண்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, சட்டையே அணிகிறார்கள். ஆரஞ்சு, கிளிப்பச்சை, மெஜந்தா நிறத் துண்டுகளை தலைப்பாகையாகக் கட்டுகிறார்கள். நிறையப் பேர் காந்தி குல்லா அணிவது ஆச்சரியமாக இருந்தது.


பாதி தூரம் கடந்ததும் மாட்டு வண்டிகளில் மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று கொண்டிருந்தார்கள். பிளாஸ்டிக் பானைகள், சமையல் பாத்திரங்கள், பெட்டி என்று ஒரு நகரும் வீடாக அந்த வண்டி தெரிந்தது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் டெம்போவை வாடகைக்கு எடுத்து, அதில் கட்டைகளை வைத்து ஓர் அடுக்கை உருவாக்கியிருந்தார்கள். அப்பர் பர்த்தில் ஆண்கள், லோயரில் பெண்கள் என்று பாட்டுக் கேட்டபடி சென்றார்கள். இன்னும் சிலர் ஷேர் ஆட்டோக்களில் இப்படிப் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். வழியில் ஓர் ஓடை. அங்கு வண்டிகளை நிறுத்தி, குளியல், சமையல் என்று மக்கள் மிகவும் பரபரப்பாக இருந்தார்கள்.

அறுவடை முடிந்ததும் வனசங்கரி என்ற பெண் தெய்வத்துக்கு முதல் காணிக்கை செலுத்துவதற்காகவே, இப்படிச் சில நாள்கள் பயணம் மேற்கொள்கிறார்கள் என்று தகவல் தெரிந்தது.

அடடா! பச்சை வண்ணப் பின்னணியில் ஆங்காங்கே மஞ்சள் புள்ளிகள்... சூரியகாந்தி பூக்களைப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் சந்தோஷம் வந்து உட்கார்ந்துகொண்டது. அந்தத் தோட்டத்தைப் புகைப்படம் எடுக்க மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார் நிலத்தின் சொந்தக்காரர். மாட்டு வண்டி மீது ஏறி எடுத்தால் நல்ல வியூ கிடைக்கும் என்று டிப்ஸும் கொடுத்தார்.

வயல்களையும் கிராமங்களையும் பார்த்து முடித்தபோது, வறண்ட பூமியும் வெக்கையும் கொண்ட ராமநாதபுரத்தில் உள்ள எங்கள் கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றியது.

5 comments:

Vidya Poshak said...

அடடா நான் தார்வார்ல தானே இருக்கேன்... அடுத்த முறை கண்டிப்பா சொல்லுங்க...

சந்தனமுல்லை said...

சுவாரசியமா இருககு..பெங்களூர் டைப் சாம்பார்னாலே எனக்கு அலர்ஜிதான்...ஒரு மாதி்ரி அசட்டு தித்திப்பா வேற இருக்கும்! அந்த மாட்டு வண்டி வித்தியாசமா இருக்கு!

கிச்சான் said...

எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் பிரபலமான இடங்களை மட்டும் பார்த்துவிட்டு வருவதை விட, அந்த மண், மக்கள், வாழ்க்கை போன்றவற்றையும் தெரிந்துகொண்டால்தான் அந்தப் பயணத்தின் நோக்கம் முழுமையடையும்..

உணமைதான்....

வழியெங்கும் வெடித்துச் சிரிக்கும் பருத்திக் காடுகள்,
தலைநிமிர்ந்து நிற்கும் கம்பு,
ஒய்யாரமாகக் காட்சியளிக்கும் கமுகு,
நடுநடுவே தென்படும் இளம் கரும்பு என்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வயல்வரப்புகள்.


அடம்பிடித்துக்கொண்டு இருந்தது இருள்.
சில்லென்ற பனி.
முக்காடு போட்டபடி வயல் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்கள் பெண்கள்.
சில இடங்களில் அறுவடைக்குத் தயாராக நின்றுகொண்டிந்தன சோளப் பயிர்கள்.


இந்த வரிகள் படிக்கும் போது மனதிற்கு உற்சாகம் தருகிறது
அருமையான வர்ணனைகள் !!!
வாழ்த்துக்கள் தோழரே !

Sathish K said...

ஹூப்ளி வரை போய் இருக்கிறேன். பயணங்களை ரசிப்பது உங்களுக்குக் கை வந்த கலை தான். :) என்னுடைய நண்பரின் ஊரும் கூட அது தான். ஆனால் அவர் இப்போது பெங்களூரில் தான் இருக்கிறார். வட கர்நாடகாவும் பெங்களூரும் ரொம்பவே வித்தியாசம்.

goinchami said...

பெங்களூர் சாம்பாரின் சூட்சுமத்தை ஒருமுறை அங்கே சென்றபோது தாசப்பிரகாஷில் கேட்டேன்.பெரும்பாலும் புதுப்புளி மட்டுமே உபயோகிப்பார்களாம். அதுபோதாதோ என்று இரண்டு சிட்டிகை வெல்லத்தை வேறு சேர்ப்பார்களாம். அசட்டுத்தனம் வராமல் என்ன செய்யும்?

மற்றபடி நல்ல பதிவு. நன்றி பத்ரி.