அலுவலக நண்பர் தன் அண்ணன் குழந்தைக்குப் பெயர் வைப்பதற்காக ஒரு வாரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார். தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும். இந்த எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். மாடர்னாகவும் இருக்க வேண்டும், இப்படி...
பெயர் என்பது ஓர் அடையாளம். அதைத் தவிர வேறு ஒன்றும் காரணம் இல்லை. ஆனால் பிறந்ததிலிருந்து, இறுதி வரை நம்மை அந்தப் பெயரில்தான் அழைக்கப் போகிறார்கள் என்பதால் எல்லோருக்கும் கூடுதல் அக்கறை பெயர் வைப்பதில் வந்து விடுகிறது.
என் அப்பா சுத்தானந்தம், பெரியப்பா நச்சினார்க்கினியன், சித்தப்பா தெய்வசிகாமணி, அத்தைகள் சொரூப ராணி, கஸ்தூரி, கங்கா, ஜெயலஷ்மி என்று தாத்தா ரசனையோடு பெயர் வைத்திருக்கிறார். ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.
சின்ன வயதில் அப்பாவுக்கு சுத்தானந்தம் என்ற பெயர் பிடிக்கவில்லை. தான் வளர்ந்த பிறகு கண்டிப்பாகத் தன் பெயரை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். வளர்ந்ததும் எதுக்காகப் பெயர் மாற்ற வேண்டும்? இந்தப் பெயரே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.
அப்பா-அம்மா (விஜயா) பெயரிலிருந்து எழுத்துகளை எடுத்து சுஜாதா, பாட்டி பெயரிலிருந்து பூமா ப்ரியா, அப்பாவின் தோழி பெயரிலிருந்து ஹேமா பானு, இசைக்காக சங்கீதா என்று பெயர் வைத்தார் அப்பா. இதில் எங்கள் தாத்தாவுக்கு வருத்தம் இருந்தது. ராஜ ராஜேஸ்வரி என்று பெயர் வைத்து ராஜி என்றும் பரமேஸ்வரியை பரமேஸ் என்றும் மாடர்னாகவும் செல்லமாகவும் அழைக்கலாமே என்று சொல்வார்!
தோழர் மைதிலி சிவராமன் பெயரை பாண்டி சித்தப்பா தன் பெண்ணுக்கு வைத்தார். அவளை மைதிலி என்று அழைக்காமல் பாப்பா என்றுதான் கூப்பிடுவார். பாப்பா (உமாநாத்) என்றும் தோழர் இருந்ததால் ’பாப்பாங்க, வாங்க, போங்க’ என்றுதான் கூப்பிடுவார்!
என்னுடன் கல்லூரியில் படித்த தோழிக்கு சின்னப் பொண்ணு என்று பெயர். உருவம் என்னவோ மிகப் பெரிதாக இருப்பாள். அவள் பெயரை உச்சரிக்கும்போதே பேராசிரியர்கள் சிரித்து விடுவார்கள்! ‘நானாவது பரவாயில்லை. எங்க ஊர்ல போதும் பொண்ணுன்னு எல்லாம் பேர் இருக்கு’ என்பாள் சின்னப் பொண்ணு.
ஒருமுறை பெரியாரிடம் யாரோ பெயர் வைக்கச் சொன்னபோது, மாஸ்கோ என்று வைத்துவிட்டாராம்! எல்லோரும் ஏன் இப்படி வைத்தீர்கள் என்று கேட்டபோது, ‘ஸ்டாலின், லெனின் என்று தலைவர்கள் பெயர் வைத்து, பிற்காலத்தில் பிள்ளைகள் சரியில்லாவிட்டால் திட்டுவீர்கள். அதுக்கு பழனி, திருப்பதி மாதிரி ஊர்ப் பெயர்களை வைத்துவிடுவது நல்லது. மாஸ்கோ யாரும் வைக்காத பெயர் வேறு’ என்றாராம்!
அதே போல தஞ்சாவூரில் ஒரு தோழர். அவருடைய குழந்தைக்கு ரஷ்யா, அவர் உறவினர் குழந்தைகளுக்கு திரிபுரா, வியட்நாம் என்று பெயர் வைத்திருக்கிறார். இன்று ரஷ்யா இந்திய நாடாளுமன்றத்தில் வேலை செய்கிறார்!
சிலருக்கு அவர்களின் தாத்தா, பாட்டி பெயர்களை வைத்து விடுவார்கள். குழந்தையின் அம்மாவுக்குத் தன் மாமனார், மாமியார் பெயரை அவர்களுக்கு முன் உச்சரிக்கவோ, கோபத்தில் திட்டவோ முடியாமல் தவிப்பார்கள்.
சிலர் அவர்கள் படித்த நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் பிடித்துப் போவதால் குழந்தைகளுக்கு அந்தப் பெயர்களை வைத்துவிடுவார்கள். இப்படித்தான் பூங்குழலி, அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, அரவிந்த், பூரணி என்றெல்லாம் பெயர்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன. அதேபோல சிலர் பிரசவம் பார்த்த டாக்டர் பெயரை குழந்தைக்கு சூட்டியிருக்கிறார்கள்.
சில பெயர்களை வைத்து அவர்கள் எந்த ஊர் என்பதைக் கூடச் சொல்லிவிடலாம். பாண்டி, ராஜதுரை, மருது, வைகை போன்ற பெயர்கள் மதுரை, ராஜராஜன், சோழன், இளந்திரையன், ராஜேந்திரன் போன்றவை தஞ்சாவூர், கோமதி நாயகம், காந்திமதி போன்றவை திருநெல்வேலி என்று கண்டுபிடித்து விடலாம். சில சமூகங்களில் சில பெயர்களைத்தான் வைப்பார்கள். யாராவது பெயரை மாற்றி வைத்துவிட்டால், அவர்களுக்குக் கல்யாணம் எல்லாம் கஷ்டம்தான்!
சுடலை, கருப்ப சாமி, மாடசாமி, முனியாண்டி, ஐயனார் என்று கிராமத்துத் தெய்வங்களைப் பெயர்களாகச் சூட்டியிருப்பார்கள். இப்போது சாமி, முன்னோர்கள் பெயர்களைச் சம்பிரதாயத்துக்கு சூட்டிவிட்டு, நவீனப் பெயர்களை வைத்து விடுகிறார்கள்.
சிலருக்கு அழகான பெயர்கள் இருக்க பட்டப்பெயர்களில் அவர்களை அழைத்து, உண்மையான பெயரை மறக்கச் செய்துவிடுவார்கள். மண்டை வாய்க்கால் என்று ஒருவரை அழைப்பார்கள். இப்படி ஒரு பெயரா என்று எனக்கு ஆச்சரியம். அம்மாவிடம் கேட்டபோது, ‘ சின்ன வயதுல சுப்பிரமணிக்கு கீழே விழுந்து மண்டை உடைந்து போனது. மண்டையிலிருந்து வாய்க்கால் மாதிரி ரத்தம் கொட்டியதால மண்டை வாய்க்கால்ன்னு அவரை கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க’ என்றார்.
எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் இருந்தது. அதில் ஒரு வால் பையனை அவன் அம்மா, ‘ அக்கபோரு... அக்கபோரு...’ என்றுதான் அழைப்பார். ‘எப்பப் பார்த்தாலும் திட்டறீங்களே, அவனுடைய பேர் என்ன?’ என்று கேட்டார் அம்மா. ‘ஐயையோ நான் அவனைத் திட்டலைங்க... அவன் பேரு அக்பரு (அக்பர்)’ என்றார்!
சச்சின், சிம்ரன், குஷ்பூ போன்ற பெயர்கள் எல்லாம் நம் வழக்கத்தில் வந்துவிட்டன.
அது சரி. மாமனார், மாமியார், கணவர், ஜோதிடர் போன்றவர்களால் ஒரு குழந்தைக்குப் பெயர் சூட்டப்படுகிறது. பெயர் வைக்கும் விஷயத்தில் பெற்றெடுக்கும் தாய்க்குப் பங்கிருக்கிறதா?
7 comments:
Good Numeralogy!!
நல்ல அலசல், குறிப்பாக அந்தத் தலைப்பு, டாப் க்ளாஸ் :)
அப்புறம், பிடித்த நடிகர், நடிகை, மற்ற கலைஞர்களின் பெயர்களை வைப்பார்களே, அதை விட்டுவிட்டீர்கள் - சச்சின் டெண்டுல்கர் பெயர்கூட, அவருடைய தாத்தா சூட்டியதுதான் - அவர் இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனுடைய விசிறி :)
//பெயர் வைக்கும் விஷயத்தில் பெற்றெடுக்கும் தாய்க்குப் பங்கிருக்கிறதா?//
என் இரண்டு மகள்களுக்கும் பெயர் சூட்டியது என் மனைவிதான். தமிழ்ப் பெயராக இருக்கவேண்டும் என்பதுமட்டும்தான் நான் வைத்த ஒரே கோரிக்கை :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
இந்தத் தலைமுறையில் கொஞ்சம் மாற்றம் வந்திருப்பது உண்மைதான். உமா பெயர் வைத்ததில் மகிழ்ச்சி.
அருமை. நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள். இதே போன்ற என்னுடைய பதிவு இங்கே
http://stalinfelix.blogspot.com/2009/08/ii.html
காலப்பறவை, உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் ‘வட்ட பெயர்கள்’ படித்தேன். சுவாரசியமாக இருந்தது.
என் அக்கா தான் அவர் மகனுக்கு பெயர் வைத்தது. ஆனால் தாயின் பங்கு பெயர் வைப்பதில் குறைவுதான். தாய் தனியாகவோ தந்தை தனியாகவோ செய்வதை விட இருவரும் சேர்ந்து செய்யவதே சரியாக இருக்கும்.
பெயர்வைப்பதில் எத்தனை காரண காரியங்கள்...அருமை.நல்ல எழுத்து நடை.வாழ்த்துக்கள்
Post a Comment