கூட்டம் நிரம்பி வழியும் ஆழ்வார்பேட்டை பேருந்து நிறுத்தம். மாலை 6 மணி. சாலை ஓரத்தில் இரண்டு பெரிய ஆணிகள் அடிக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு கயிறு மேலே சென்றது. இரண்டு பக்கமும் தலா இரண்டு இரும்புக் கம்பிகள். சுமார் இருபதடி தூரத்தில் இருந்த கம்பிகளை கயிறு இணைத்திருந்தது. முப்பது வயது நிரம்பிய ஓர் பெண் கையில் மேளத்துடன் நின்றிருந்தார். அருகில் 13 வயது சிறுவனும் 7 வயது சிறுமியும் நின்றிருந்தார்கள்.
திடீரென்று சிறுமி கம்பி மூலம் கயிற்றுக்கு வந்தாள். கயிற்றின் மீது ஒரு தட்டு வைக்கப்பட்டது. அதில் இரண்டு முழங்கால்களையும் வைத்து அமர்ந்தாள். கையில் ஒரு நீண்ட குச்சி. ஹிந்தியில் குழந்தையிடம் ஏதோ சொன்னார் அவள் அம்மா. உடனே குழந்தை நகர ஆரம்பித்தது. அதற்கேற்றவாறு அவள் அம்மா மேளத்தைத் தட்டினார். மூன்று நிமிடங்களில் கயிற்றின் மறுபுறத்துக்கு வந்துவிட்டாள் அந்தச் சிறுமி. ஒரே இடத்தில் இருந்தபடி கயிற்றை இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள். ஆறு அடி உயரத்தில் இருந்து அவள் ஆடுவது பயமாக இருந்தது. ஆனால் அவளின் அற்புதமான திறமை எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்திவிட்டது. அம்மா போதும் என்றதும், தட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, கம்பியைப் பிடித்துக் கீழே வந்துவிட்டாள்.
அவள் அண்ணன் கயிற்றை அவிழ்க்க ஆரம்பித்தான். தட்டை எடுத்து சிறுமியின் கையில் கொடுத்தார் அவள் அம்மா. குழந்தை ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டு வந்தது. நிறையப் பேர் அவள் திறமையைப் பாராட்டி, கூப்பிட்டு நிதியுதவி அளித்தனர். அடுத்த ஐந்தாவது நிமிடம் மூவரும் அந்த இடத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்கள். அடுத்த இடத்தை நோக்கி...
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற காட்சிகளை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அவர்களின் சாகசங்கள் எல்லாம் குழந்தைகளை வைத்துத்தான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் இந்தக் காட்சியைக் கண்டதில் ஆச்சரியத்தைவிட, அதிர்ச்சியே மிஞ்சி நின்றது. படிக்க வேண்டிய வயதில் தன் குடும்ப பாரத்தை, தான் சுமக்கிறோம் என்பது தெரியாமலே அந்தப் பெண் குழந்தை நடந்து சென்ற காட்சி என்னவோ செய்தது. கயிற்றில் நடக்கும் வித்தை, நிதானம், கவனம், திறமை என்று அந்தக் குழந்தையிடம் அத்தனை விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதுபோன்ற திறமை வாய்ந்த குழந்தைகளை அரசாங்கம் அடையாளம் கண்டு, படிக்கவும் வித்தையில் சிறக்கவும் செய்தால் விளையாட்டுத் துறையில் இந்தியா நல்ல நிலைக்குச் செல்லாதோ!
No comments:
Post a Comment