Friday, July 2, 2010

சந்தோஷ்

ஆ... ஐயோ...

என்ன ஆச்சு?

மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தார் பிருந்தா.

“இந்தப் பொண்ணு கண் முழிச்சிருச்சு’ என்று அருகில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்த பெண், மீண்டும் பிருந்தாவைப் பார்த்தார்.

“எமன் மாதிரி வந்த அந்த லாரி இடிச்சுப்புட்டு நிக்காம போயிட்டான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது’ என்று என்றார்.

சற்றுத் தூரத்தில் ராஜாவின் முனகல் கேட்டது. மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தார் பிருந்தா. கண்களை மூடிக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தார். கையை ஊன்றி வேகமாக உட்கார முயற்சி செய்யும்போதுதான் தெரிந்தது, அவருடைய இடது கை முட்டி உடைந்திருந்தது.ராஜாவுக்குக் கால் முட்டி உடைந்திருந்தது.

’கடவுளே, இந்தச் சந்தர்ப்பத்திலாவது என்னைக் காப்பாற்று’ என்று தனக்குள் நினைத்தபடி பிருந்தாவின் கண்கள் அங்கும் இங்கும் தேடின.

’என்னம்மா உன் குழந்தையையா தேடற? கடவுள் புண்ணியத்துல அவனுக்கு ஒண்ணும் ஆகல. சின்னச் சிராய்ப்புத்தான்... நீ கவ... ’

’ஐயோ... கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கற? நான் வேண்டாத நேரம் இல்லையே...’

வெடித்து அழுதார் பிருந்தா.

சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

**

’சந்தோஷ், அப்பா ஆபிஸ் போயிட்டு வரேன். பை!’
...

’சந்தோஷ் குட்டி, உனக்கு கார்ட்டூன் சானல் வைக்கட்டுமா?’
...

’தம்பி சமர்த்தா டிவி பார்ப்பானாம். அம்மா சமைச்சிட்டு வந்துடுவேனாம்...’
...

’சந்தோஷ் அம்மாவைக் கூப்பிடு... ரெண்டு பேருக்கும் கதை சொல்றேன்!’
...

இப்படி பிருந்தா, ராஜாவின் குரல்கள் மட்டுமே அந்த வீட்டில் கேட்கும். யார் சந்தோஷ்? அவன் எப்படி இருப்பான்? கேட்கவும் தயக்கமாக இருந்தது.

ஒரு வாரத்துக்குப் பிறகு பிருந்தா தயங்கித் தயங்கி வந்தார்.

“வீட்ல யாரும் இல்லையே?’

“இல்ல... என்ன சொல்லுங்க?’

“எனக்கு ஒரு உதவி... கொஞ்சம் வர்றீங்களா?’

போனேன்.

ஹாலில் வெள்ளைவெளேரென்று ஒல்லியான, உயரமான உருவம் ஒன்று படுத்திருந்தது.

“சந்தோஷ் ஆன்ட்டிக்கு வணக்கம் சொல்லு...’
...

’இவன் எங்க பையன். பதிமூணு வயசாச்சு. பிறக்கும்போதே இப்படித்தான் இருந்தான். என்னென்னவோ காரணம் சொன்னாங்க. பார்க்காத வைத்தியம் இல்லை. பேச முடியாது. எதையும் புரிஞ்சுக்க முடியாது. நடக்க முடியாது. அசைய முடியாது. கண்ணை மட்டும் சுத்திச் சுத்திப் பார்ப்பான். தினமும் குளிக்க ஊத்தணும். இல்லைன்னா புண் வந்துரும். இவங்க அப்பா ஊருக்குப் போயிருக்கார். தனியா ஊத்த முடியாது. நீங்க தண்ணி ஊத்தினா போதும். மத்ததை நான் பார்த்துக்குவேன்...’

“என்னங்க இதுக்கு இவ்வளவு தயக்கமா?’

இருவரும் சந்தோஷைக் குளிப்பாட்டினோம்.

உடல் முழுவதும் பவுடர் போட்டு, அழகாக டிரஸ் செய்து, மீண்டும் படுக்கையில் கிடத்தப்பட்டான் சந்தோஷ்.

’ஆன்ட்டிக்கு தேங்க்ஸ் சொல்லு சந்தோஷ்!’

...

’ரொம்பக் கஷ்டமா இருக்கு...’

“குழந்தை ஊனமாவோ, மூளை வளர்ச்சி இல்லாமலோ இருந்தால் கூடப் பரவாயில்லை. உயிர் மட்டும் இருக்கற ஒரு பொம்மையா இருக்கறது ரொம்பக் கொடுமை. கிட்டத்தட்ட நானும் அவரும் இவனை மாதிரிதான் வாழ்ந்துட்டிருக்கோம். பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு நாங்க சந்தோஷமா வெளியில போய். நல்லது, கெட்டது எதுக்கும் போறதில்லை. சம்பாதித்ததை எல்லாம் செலவு பண்ணிப் பார்த்துட்டோம். கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை.’

“சந்தோஷ், ஆன்ட்டிக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்...’

“சந்தோஷ் என்ன சாப்பிடுவான்?’

“எதையும் மிக்ஸியில் அரைச்சு கூழ் மாதிரி ஊட்டணும். நம்மளா பார்த்து தண்ணி கொடுக்கணும். பிறந்த குழந்தைக்கு மாதிரி ஆச்சா, மூச்சா எல்லாம் சுத்தம் பண்ணனும்...’

எனக்குப் பேச்சு வரவில்லை.

“இவ்வளவு பிரச்னை இருக்கறதாலவோ என்னவோ காய்ச்சல், சளி மாதிரியான தொந்தரவு எல்லாம் சந்தோஷுக்கு வர்றதில்லை. மருத்துவத்துலதான் சரியாகலை. எங்க பிரார்த்தனையிலாவது சரியாகுமான்னு யார் என்ன சொன்னாலும் செஞ்சிட்டிருந்தோம். இப்ப ரெண்டு வருஷாமா அதையும் விட்டுட்டோம்...’

“உங்க மாமியார், அம்மா யாரையாவது உதவிக்கு வச்சுக்கலாமே?

“அவங்க வந்தாங்கன்னா இன்னொரு குழந்தை பெத்துக்கச் சொல்லி ஒரே தொந்தரவு. நீங்களே சொல்லுங்க, அந்தக் குழந்தையும் இவனை மாதிரி பொறந்தான்னா நான் என்ன பண்ணறது? இவங்களுக்கு அது புரிய மாட்டேங்குது...’

“உங்க கையில் என்ன தழும்பு?’

“அதை ஏன் கேட்கறீங்க? ரெண்டு வருஷத்துக்கு முன்னால பழனியில் வேண்டுதலை முடிச்சிட்டு, காரில் திரும்பி வந்தோம். அப்ப ஒரு ஆக்சிடெண்ட். எனக்குக் கை முட்டி உடைஞ்சிருச்சு. அவருக்குக் கால் முட்டி. அந்த விபத்துல குழந்தைக்கு ஏதாவது ஆயிருக்கணும்னு வேண்டிக்கிட்டே திரும்பிப் பார்த்தேன். சின்னச் சிராய்ப்போட குழந்தை அப்படியே இருந்தான்...!’

10 comments:

அண்ணாச்சி சொன்னா... said...

நிஜமாகவே கடைசி பாரா நெஞ்சை உலுக்கியது.

பிரதிபலிப்பான் said...

ரொம்ப அருமையாக நடை இருந்தது.

எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது யார் இநத குழந்தை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்.

இது போல நானும் ஒரு சில் வீடுகளில் எனது சின்ன வயதில் பார்த்த அனுபவம் உண்டு.

இது போல குழந்தைகளை முடிந்த வரை கருவிலே கொலை செய்துவிட வேண்டும்.

இல்லாவிட்டால் கருணை கொலை செய்யலாம்.

இது எனது கருத்து.

வேண்டாம் இது போல ஒரு கஷ்டம் எதிரிக்கு கூட வரக்கூடாது.

soundr said...

nice. yes, nice.
http://vaarththai.wordpress.com

Anonymous said...

இந்த வலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். உங்களின் பிறர்நல மனப்பாங்கை மிகவும் பாராட்டுகிறேன். நாமும் பிறர்நலம் நினைத்து மனநலம காப்போம்.

Anonymous said...

கதையல்ல நிஜம் என்பதுதான் சோகம்.

rama kannan said...

கதையல்ல நிஜம் என்பதுதான் சோகம்.

ரகுராமன் said...

Hi,Realy nice story sorry real incident i think and painful too.
I dont have any words to describe your writings.Marvelous.Keep it up .

Sundaraprakash said...

its painful

அருணன் பாரதி said...

சுஜி ..இப்பத்தான், இந்த விஷயம் பார்த்தேன். அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். வாழ்க்கையின் சோதனைதான் பிருந்தாவுக்கு. இப்படியும் சிலர் உள்ளனர். நானும் பார்த்திருக்கிறேன்.என்ன செய்ய. அவர்களால் அந்த ஜீவனை எதுவும் செய்ய முடியாது

அருணன் பாரதி said...

சுஜி ..இப்பத்தான், இந்த விஷயம் பார்த்தேன். அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். வாழ்க்கையின் சோதனைதான் பிருந்தாவுக்கு. இப்படியும் சிலர் உள்ளனர். நானும் பார்த்திருக்கிறேன்.என்ன செய்ய. அவர்களால் அந்த ஜீவனை எதுவும் செய்ய முடியாது