Tuesday, May 11, 2010

பள்ளிகள் இப்படிச் செய்யலாமா?

ஒரு பக்கம் பள்ளிகளில் இருந்து இடை நிறுத்தம் செய்யும் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி பல்வேறு அமைப்புகளால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பணி சாதாரணமானது அல்ல.

கல்வியே வியாபாரமாகி விட்ட இந்த நாளில் தனியார் பள்ளிகள், தங்கள் அருமை பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்வதற்காக மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்குகின்றன. சுமாராகப் (!) படிக்கும் பத்தாம் வகுப்புக்குள் நுழையும் மாணவர்களை, டிசி கொடுத்து வெளியே அனுப்பி விடுகின்றன. இதன் மூலம் நூற்றுக்கு நூறு தேர்ச்சி என்று விளம்பரம் செய்து, அதன் மூலம் ஏராளமான மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும், பெற்றோரிடமிருந்து பணத்தைக் கறந்துகொள்ளவும் செய்கின்றன.

தஞ்சாவூரில் ஒரு தனியார் பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்புக்குத் தேறிய முப்பது மாணவர்கள், அந்தப் பள்ளியால் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். முதல் வகுப்பில் இருந்து காசு கொட்டிப் படித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களை, மற்ற பள்ளிகளும் பத்தாம் வகுப்பில் சேர்த்துக்கொள்வதில்லை. பிரைவேட்டாகப் படித்து பரீட்சை எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதன் மூலம் மாணவர்களும் பெற்றோரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குத்தான் பள்ளிகளில் இடம் என்றால் மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வது? சுமாராகப் படிக்கும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, அவர்களையும் படிக்க வைத்து, உயர்த்துவதுதானே ஒரு பள்ளியின் கடமை! நன்றாகப் படிப்பவர்களை மட்டும்தான் சேர்த்துக்கொள்ளும் பள்ளிக்கும் ஜெயிக்கிற குதிரை மீது பணம் கட்டும் ரேஸுக்கும் என்ன வித்தியாசம்?

சென்ற மாதம் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கச் சொல்லி ஊர்வலம் நடத்தினார்கள். ஆங்கிலப் பள்ளிகளின் மேல் மோகம், பணம் கொடுத்துப் படித்தால்தான் நல்ல கல்வி என்று நினைக்கும் மக்களின் மனத்தை இதுபோன்ற ஊர்வலங்களாலும், பிரசாரங்களாலும் மாற்றி விட முடியாது. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

சென்ற ஆண்டு யூனிசெஃப் நடத்திய ஆய்வுகளில் இந்திய அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் கற்கும் திறன் வித்தியாசப்படுகிறது என்கிறது. அதாவது அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தை, மற்ற பள்ளிகளில் இரண்டாம், மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையின் அளவுக்குத்தான் கற்கும் திறனைப் பெற்றிருக்கிறது. இப்படி ஒரு நிலை இருந்தால் எந்தப் பெற்றோர்தான் விரும்பி அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்?

காசு கொடுத்துப் படிக்க வைக்கும் எல்லா பள்ளிகளும் தரம் வாய்ந்தவை அல்ல. சிறிய இடங்களில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், தகுதியான ஆசிரியர்களை வைத்துப் பாடம் நடத்தாமல், குழந்தைகளின் மேல் போதிய அக்கறை இல்லாமல் இருக்கும் பள்ளிகளும் ஏராளமாக இருக்கின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்து இதுபோன்ற பள்ளிகளில் சேர்த்துப் பணத்தைக் கொடுத்துவிட்டு, நம் குழந்தைகள் படித்து, உயர்ந்த இடத்தை அடைந்துவிடுவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள். இந்த மாயையிலிருந்து எப்படி விடுவிப்பது?

மதிப்பெண் என்பது என்ன? மனப்பாடம் செய்து ஒப்பித்து மதிப்பெண் வாங்கினால் மட்டும் ஒருவர் புத்திசாலியாகி விட முடியுமா?

காலம் காலமாக இருந்து வரும் மெகாலே கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். பள்ளி என்றால் பயந்து அலறாமல், விருப்பத்துடன் கல்வி கற்க குழந்தைகள் வர வேண்டிய நிலை வேண்டும். மாறி வரும் உலகத்தைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து, அவர்களை அப்டேட் செய்துகொள்ள வைக்க வேண்டும். இப்படி அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயரும்போது தனியார் பள்ளிகளின் மேல் இருக்கும் மோகம் விலகும்.

ஐஐஎம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு முன்பே பரிசோதித்து, தகுதியான மாணவர்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஓர் அடிப்படைக் கல்விக்கு, ஏற்கெனவே அந்தப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களை வெளியேற்றுவது என்பது எவ்விதத்தில் நியாயம்?

4 comments:

பிரதிபலிப்பான் said...

மிகவும் சரியான பதிவு இதற்கு எப்பொழுது தீர்வு கிடைக்குமோ?

அரசு பள்ளிகளில் தரம் என்பது எப்பொழுதும் கேள்விக்குறியே?

இதைப் பற்றி பேசவேண்டுமானால் நிறைய பேசவேண்டும்.

யாருக்கும் அக்கறையில்லை ஏழைகளின் கல்வித்தரத்தைப் பற்றி.

நீங்கள் போற்றும் கம்யூனிஸ கட்சிகளுக்கும் அக்கறையில்லை அதனால் தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

hariharan said...

நல்ல கட்டுரை!!!

தனியார் பள்ளிகள் கட்டண விகிதம் காரமாக அரசை மிரட்டுகிற அளவிற்கு ஆட்சியாளர்கள் தனியார் கல்வியை ஊக்கப்படுத்திவிட்டனர்.

முன்பு மிஷனரிகள் தான் சேவை நோக்கத்தில் பள்ளிகளை துவங்கினார்கள், இன்று லாபம் மட்டுமே நோக்கமாக கொண்டு இயங்கும் கல்வி நிறுவனங்களிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்.

அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு அரசு தான் முழுப் பொறுப்பேற்கவேண்டும். அரசுத்துறை ஆசிரியர்கள் சரியாக பாடம் சொல்லித் தருவதில்லை என்ற குற்ற்ச் சாட்டை தான் பெருவாரியான மக்கள் முன்வைக்கிறார்கள். ஆசிரியர்கள் தங்கள் ஊதியத்திற்காக மட்டும் போராடாமல் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த போராடவேண்டும்.

மேலும் அரசுத்துறையை ஊனமாக்கி தனியார் துறையை வளர்ப்பதில் கொள்கைமுடிவாகவே அரசு செயல்படுகிறது என்பதில் ஐயமில்லை.

Sathish K said...

மனப்பாடம் செய்தோ எப்படியோ மதிப்பெண் பெற்றாலும் சரி. அதிக மதிப்பெண்களுக்கு மதிப்பு இருக்கத் தான் செய்கிறது.

வேலை வாய்ப்புகளில் மதிப்பெண் தான் தகுதியாகக் கொள்ளப்படுகிறது. ஐடி துறையிலும் மதிப்பெண் முக்கியம்.

இன்ஃபோசிஸில் பள்ளிக் கல்வி முதல் எல்லா நிலைகளிலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து இருந்தால் தான் அங்கே சேர்த்துக் கொள்கிறார்கள்.

போட்டி உலகத்துக்காகத் தயார்படுத்துவதற்காகவே தனியார் பள்ளிகள் பலவும் இருக்கின்றன.

கல்வி என்பது அந்தஸ்து சின்னமாகவும் ஆகிவிட்டது. மாநகராட்சி பள்ளிகளில் படிப்பதாகவோ தமிழ் மீடியமில் படிப்பதாகவோ சொன்னால் கொஞ்சம் கீழாகவே பார்க்கிறார்கள்.

பணம் சம்பாதிக்க மிகச் சிறந்த வழிகளுள் முக்கியானதாக கல்வித்துறை இருக்கிற வரை இந்த நிலை மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் பிடிக்கவும், ஆசிரியர் பணிக்குப் பணம் செலவு செய்யும் போது எப்படி சிறந்த ஆசிரியர்களைப் பார்க்க முடியும்?

வருங்காலச் சந்ததியினர் நல்லக் கல்வியைப் பெற யாரைத் தான் வேண்டுவதோ?

Anonymous said...

hi,

subject: do u want to display only post titles instead of showing both post titles and its content in your blogger?

எஸ்.ராமகிருஷ்ணனின் இணையதளத்தை பாருங்கள். அவருடைய அத்தனை post titlesகளும் post titlesகளாக மட்டுமே displayஆகியுள்ளன.Post titlesகளுக்குரிய கட்டுரைகளும்(content) post titlesக‌ளோடு சேர்ந்து அவரின் இணையதளத்தில் display ஆகியிருக்கவில்லை. ஒரு பக்கத்திற்கு 50 post titlesகள் அவருடைய இணையதளத்தில் display ஆகின்றன. இதனால் வாசககள் மிக விரைவாக அவருடைய இணையதளத்தில் அத்தனை post titlesகளையும் பார்த்து விடுகிறார்கள். தங்களுக்கு விருப்பமான post titleளின் தலைப்பை click செய்து அத்தலைப்பிற்குரிய கட்டுரையை படிக்கிறார்கள்.


உங்கள் blogல் post titleகளோடு சேர்த்து அப்post titlesகளுக்குரிய‌ contentஉம் சேர்ந்து display
ஆகின்றன. இதை மாற்ற விரும்புகிறீர்களா? Post titlesகள் மட்டும் உங்கள் bloggerல் displayஆக வேண்டும் என விரும்புகிறீர்களா?



அப்படி என்றால் இந்த இணையதளத்தில் http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html சொல்லப்பட்டுள்ளவற்றை அப்படியே follow செய்யுங்கள். அதன் பின் உங்கள் பிளாகில் அத்தனை post titlesகளும் post titlesகளாக மட்டுமே display ஆகும். Post titleஐ click செய்தால் மட்டுமே அதனுடைய content display ஆகும்.



(பின்குறிப்பு: நான் என் model பிளாகில் post titlesகள் மட்டுமே display ஆகும்படி மாற்றியுள்ளேன். இதன் மூலம் ஒரு பக்கத்தில் 50 post titlesகள் வரை display ஆகும்படி set செய்திருக்கிறேன். இது மிகவும் user friendlyயானது. பார்க்கவும் என் மாடல் blogஐ http://justchuma.blogspot.com/ FORWARD THIS MESSAGE TO YOUR FRIENDS WHO USE BLOGGER)......