மீண்டும் மீண்டும் அந்த முகங்கள் நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கின்றன. இன்று அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்ன நினைப்பார்கள்? எதிர்காலம் அவர்களை பட்டுக்கம்பளத்துடன் வரவேற்குமா, இல்லை கரடுமுரடான பாதைகளில் இட்டுச் செல்லுமா? என்ன? எப்படி? ஏன்? சதா இந்தக் கேள்விகள் ஆட்டம் போடுகின்றன.
என் தோழிக்காகச் சென்னை உயர்நீதிமன்றம் சென்றேன். கேஸ் கட்டுகளும் கறுப்பு ஜாக்கெட்டுமாக வழக்கறிஞர்கள், பல்வேறு விதமான மக்கள், டீ, காபி விற்பவர்கள் என்று கூட்டம். பல கட்டடங்களைக் கடந்து ஒரு கட்டடத்துக்குள் நுழைந்தோம். பெரிய ஹால். முழுவதும் மனிதர்கள். நடுவில் கொஞ்சம் வழக்கறிஞர்கள். நீதிபதிக்கு அருகில் சிலர். அவருக்கு இடது பக்கத்தில் ஒரு கூண்டு. நான் நினைத்துக்கொண்டிருந்த நீதிமன்றத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. ஒருவேளை குடும்ப நீதிமன்றம் என்பதால் இப்படி இருக்கிறதோ என்னவோ!
நீதிபதி கேஸ் கட்டைப் பிரித்துப் படித்து, வாதி, பிரதிவாதி வந்திருக்கிறார்களா என்று பார்த்து, வழக்கறிஞரிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு வெளியில் இருக்கும் அறைக்குள் நுழைந்துவிட்டார் வழக்கறிஞர். அறையை விட்டு வெளியில் வந்தோம். வராண்டாவில் போடப்பட்டுள்ள இருக்கை முழுவதும் ஆள்கள் அமர்ந்திருந்தார்கள். எல்லோருக்கும் 30 - 35 வயதுக்குள்தான் இருக்கும். சில காலங்களுக்கு முன்பு ஜோடியாக இருந்தவர்கள், இன்று தனித்தனி தீவுகளாக அமர்ந்திருந்தார்கள். என்னதான் விவாகரத்து என்று வந்துவிட்டாலும் சிலரின் முகங்களில் ஒருவித தர்மசங்கடம் தெரிந்தது. அம்மா, அப்பா, உறவினர்களுடன் வந்தவர்கள் மத்தியில் சிலர் தனியாளாகவும் தைரியமாகவும் இருந்தார்கள்.
ஒரு மணிக்கு மேல் விவாகரத்துக்கான டாகுமெண்ட்கள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஜோடியாக அழைக்கப்பட்டார்கள். பெயர் அறிவித்தவுடன் வெவ்வேறு பக்கங்களில் இருந்து ஆணும் பெண்ணும் நீதிபதி அறைக்கு முன் வந்து நின்றார்கள். வழக்கைப் பொறுத்து இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள் விவாகரத்து செய்து, அனுப்பிக்கொண்டிருந்தார் நீதிபதி.
ஏற்கெனவே மனத்தளவில் பிரிந்திருந்த தம்பதி இன்றுடன் சட்டப்பூர்வமாகப் பிரிகிறார்கள். இந்த நேரத்திலும் இந்தப் பெண்ணின் கணவன் யார், அந்த ஆணின் மனைவி யார் என்று பார்ப்பதில் ஆர்வம் ஏன் வந்தது என்று தெரியவில்லை. ஜீன்ஸ், குர்தா, தடித்த தாலி செயின், பட்டையான மெட்டியுடன் இருந்த ஒரு பெண் மிகவும் சாதாரணமாகச் சிரித்துக்கொண்டே இருந்தார். அவரின் கணவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இருவரும் விவாகரத்துப் பெற்றுத் திரும்பினார்கள். அப்போதும் அதே சிரிப்பு! பின்னால் வந்த முன்னாள் கணவர், ‘எக்ஸ் யூஸ் மீ’ என்று அழைத்தார். அந்தப் பெண் திரும்பிய உடன், ‘பெஸ்ட் ஆப் லக்’ என்று கையை நீட்டினார். அவரும் கை குலுக்கிவிட்டு வேகமாக நடந்தார்.
சில பெண்கள் கண்கலங்கியபடி வந்தார்கள். இரண்டு ஆண்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வலியில் இருந்து விடுதலை அடைந்த நிம்மதி பல ஜோடிகளிடம் தெரிந்தது.
எல்லா முகங்களும் நல்ல முகங்களாகவே இருந்தன. ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்து திருமணம் செய்தவர்கள், பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள்தான் இன்று இங்கு நின்றுகொண்டிருக்கிறார்கள். பேராசை, சந்தேகம், புரியாமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, துன்புறுத்தல், ஆதிக்கம் செலுத்துதல்... என்ன பிரச்னையாக இருக்கும்? நல்லவனா (ளா), கெட்டவனா (ளா) என்று பார்க்கும் மாயக் கண்ணாடி நம்மிடம் இல்லை. வாழ்ந்து பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
விவாகரத்து என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். யாருடைய வலியையும் அடுத்தவர்களால் முழுதாக உணர்ந்துகொள்ள முடியாது. விவாகரத்து ஆன ஆண்களுக்கு இந்தச் சமூகம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு? பெற்றோர், உறவினர் துணை வேண்டியிருக்கிறது. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இருக்கிறது. பொருளாதாரப் பிரச்னையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஓர் ஆணைப் போலப் பெண்ணால் திருமணம் முறிவு ஏற்பட்டவுடன் மறுமணம் பற்றி யோசிக்க முடியாது. வயதான ஆண்களும் இரண்டாம் தாரம் செய்யும் ஆண்களும் “குழந்தைகள்’ இல்லாத விவாகரத்துப் பெற்ற பெண்ணை எதிர்பார்க்கும் அளவுக்குத்தான் அவர்களின் முற்போக்கு வளர்ந்திருக்கிறது!
முதல் திருமணம் கொடுத்த பயத்திலும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலும் பெரும்பாலான பெண்கள் மறுமணம் பற்றி யோசிப்பது கூட இல்லை. அவர்கள் வாழ்க்கை அவ்வளவுதான். “தான் சந்தோஷமாக வாழ முடியாத இடத்தில் தன் குழந்தைகள் எப்படி சந்தோஷமாக இருக்கும்?’ என்ற எண்ணமும் தாய்ப்பாசமும் பெண்களுக்கு இங்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன. பெண்களின் இந்த எண்ணம் ஆண்களுக்குச் சாதகமாகிவிடுகிறது. மீண்டும் ஒரு திருமணத்துக்குப் புது மாப்பிள்ளையாக மணமேடை ஏற வைத்துவிடுகிறது.
படித்து, நல்ல வேலையில் இருக்கும் பெண்கள் பொருளாதாரப் பிரச்னையில் இருந்து தப்பி விடுகிறார்கள். என்னதான் டிகிரி படித்திருந்தாலும் வேலை செய்யாத, வெளியுலகம் தெரியாத பெண்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினமாக அமைந்துவிடுகிறது. கணவனால் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும், ‘ எப்படியாவது திருந்த மாட்டானா? குழந்தைகளுக்காகவாவது விவாகரத்து வேண்டாம் என்று சொல்ல மாட்டானா? கஷ்டமோ, நஷ்டமோ அவனுடன் மீதிக்காலத்தை ஓட்ட மாட்டோமா’ என்று பெண்கள் நினைக்க இதுதான் காரணம்.
பெண்களை ஏதோ படிக்க வைத்து, கல்யாணம் செய்து கொடுத்துவிடக்கூடாது. வேலைக்குக் கண்டிப்பாக அனுப்ப வேண்டும். வெளியுலக அனுபவம் தைரியத்தைக் கொடுக்கும். சிறிய வயதிலேயே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டும். ஒரு மனிதன் நல்லவனா என்பதை ஜாதகமோ, ஓரிரு சந்திப்புகளோ காட்டிவிட முடியாது. எனவே எப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்தாலும், அதைச் சந்திக்கப் பெண்களைத் தயார் செய்ய வேண்டும். பிரச்னை வரும்போது பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். மண முறிவுக்குப் பிறகு இருக்கும் வாழ்க்கை கடினமானதுதான், ஆனால் இல்லறத்தில் ஏற்பட்ட இன்னல்களை விடக் கடினமானது அல்ல என்று புரிய வைக்க வேண்டும். கல்யாணம் முடிந்ததும் கடமை முடிந்தது என்ற போக்கு இன்று பெற்றோர்களுக்கு நிச்சயம் இல்லை.
இதுவரை ஐந்து ஜோடிகள் தனிப் புறாக்களாகக் கிளம்பினார்கள். அருகில் இருந்த ஓர் அம்மா, “இந்த வயசிலேயும் எங்க வீட்டுக்காரர் கோவிச்சுட்டுப் போறார் பாருங்க. இவர் படுத்தலுக்கு நான்தான் விவாகரத்துக்கு வந்திருக்கணும். பிரச்னையே இல்லாம என் பையனும் மருமகளும் விவாகரத்துக்கு வந்திருக்காங்க. எல்லாம் விளையாட்டா போச்சு’ என்றார் கவலையுடன்.
பிடிக்காமல், சரிவராமல், சண்டை சச்சரவுகளுடன் சேர்ந்து வாழ்வது இயலாத காரியம்தான். அதேசமயம் ஈகோ, மற்றவர்கள் தலையீடு, சகிப்புத்தன்மை குறைதல் போன்ற அற்ப காரணங்களுக்காக விவாகரத்துக்கு வருவதும் வேதனையான விஷயம்தானே.
எதையோ எழுதிக் கொண்டிருந்த ஒரு வழக்கறிஞர் திரும்பி, பர்தா அணிந்த பெண்ணை அழைத்தார். “அடிச்சாராம்மா?’. “ஆமாம் சார். கல்யாணம் நடந்த ரெண்டு வாரத்துல அவரும் வீட்ல உள்ளவங்களும் சேர்ந்து...’ என்று அந்த இருபது வயதுப் பெண் சொல்லிக்கொண்டிருந்தார்...
8 comments:
திரைப்படத்தின் முதல் காட்சிப் போல் ஆரம்பித்து. நடுவில் ஆண்களைச் சாடி, இறுதியில் வயதான தம்பதியினரின் அனுபவத்தைக் கூறி முடித்தது. விசு. வி. சேகர் படம் பார்த்தது போலிருந்தது.
நல்ல சிந்தனையுள்ள கருத்து.
எல்லா பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளை தைரியமான மற்றும் சமூக பிரச்னைகளை எதிர் கொள்ளகூடிய வகையில் வளர்க்க வேண்டும் அப்பொழுதுதான் மன்முடைந்து போகாமல் வாழ வழிகோலும்.
மிக அருமையான பதிவு.
I just wanted to say something on this posting. But something blocking me to do the same. May be am inexperienced for this.
But am aware that one of my friends (elder) got divorced recently. Both got married second. Ironically theirs were inter religion love marriage only.
ஒரு ஆண் விவாகரத்தானவன் என்றால் எந்தக் கேள்வியுமில்லாமல் ஏற்றுக்கொள்பவர்கள் - பெண் விவாகரத்தானவள் என்றால் ஆராயும் காரணங்களும், பார்க்கும் கோணங்களும்...ஆனால், முன்பைவிட இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும்.
விவாகரத்து - வேதனை என்று மட்டுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - சமயங்களில் அது விடுதலையாகக் கூட இருக்கலாம்!
விவாகரத்தான ஆண்களில் சிலரும் கஷ்டப்படுகிறார்கள். மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் திருமணம் மன்னிக்கவும் மறுமணம் செய்யாமல் இருக்கின்றனர். அதையும் தாங்கள் நினைவில் கொள்ளுங்கள். இன்றையப் பெண்களில் சிலபேர் கணவனையும் குழந்தையையும் விட்டு ஓடிவிடும் நிலையும் நம் நாட்டில் தான் நடக்கிறது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
அடித்தால் திருப்பி அடித்து விட்டு பிறகு சமாதானம் ஆகிக் கொண்டு போகலாம் கணவன் சாடிஸ்ட் இல்லை எனும் நிலையில். ஆனால் அவன் சாடிஸ்ட் தானா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதில் தான் இருக்கிறது விஷயம்?! மேலும் ஒரு பொதுவான குற்றச் சாட்டு கணவனோ மனைவியோ இரண்டு தரப்பிலும் அனுசரித்துப் போகும் குணம் பரவலாகக் குறைந்து விட்டதே விவாகரத்து வழக்குகள் பெருகக் காரணம்.இந்தியா பாகிஸ்தான் சண்டை போல இவையெல்லாம் பேச்சு வார்த்தையில் தீரக் கூடியவை என்று தான் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.நம்பாதவர்கள் வெட்டிக் கொண்டு போகிறார்கள்.ஒத்து வாழ முடியாது எனும் பட்சத்தில் இழுபறியாய் இழுத்துக் கொண்டிருப்பதை விட வெட்டிக் கொண்டு போவது மேலென தோன்றியிருக்கலாம் துணிந்து விவாகரத்துப் பெற கோர்ட் படி ஏறியவர்களுக்கு.
நல்ல பதிவு நன்றி பத்ரி
வேதனை.....மனது விளையாட்டாய் போய் விட்டது..
Post a Comment