Friday, September 25, 2009

மாயமாக மறைந்த ஸ்ட்ராபெர்ரி!

சென்ற ஞாயிற்றுக்கிழமை பால்கனியில் நின்றிருந்தேன். எதிர் பிளாக்காரர்கள் வெளியில் இருந்து திரும்பியிருந்தார்கள். அவர்களின் குழந்தை கையில் ஒரு சிப்ஸ் பாக்கெட் இருந்தது. குழந்தையின் அம்மாவும் அப்பாவும் வேகமாக மாடியேற, குழந்தை மெதுவாகப் படியேறியது. முதல் தளத்துக்கு வந்தவுடன் எதிர் பிளாக் குழந்தையிடம் ’நான் உங்க வீட்டுக்கு விளையாட வரட்டா?’ என்று கேட்டது. அந்தக் குழந்தையும் வா என்று அழைத்தது. ’ அம்மா, நான் ப்ரியா வீட்டுக்குப் போகட்டுமா?’ என்று குரல் கொடுத்தது அந்தக் குழந்தை. ‘சரி, பத்திரமா போ’ என்றார் அவள் அம்மா.

திடீரென்று என்ன நினைத்ததோ அந்தக் குழந்தை, ‘அம்மா விடமாட்டாங்க. நான் அப்புறம் வரேன்’ என்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் இரண்டாவது தளத்துக்கு வந்தும் அதையே திருப்பிச் சொன்னது, குழந்தையின் அம்மா என்னைப் பார்த்தார். ‘நீங்க போகச் சொன்னீங்க. அவ அம்மா விடமாட்டாங்கன்னு சொல்றாளே!’ என்றேன்.

‘கையில சிப்ஸ் பாக்கெட் இருக்குல்ல. அதான் போக மாட்டேங்கிறா. இப்பப் பாருங்க கொடுத்துட்டுப் போவா’ என்றார். சொன்னது போலவே ‘அம்மா, இதை வச்சிருங்க. ப்ரியா வீட்டுக்குப் போயிட்டு வரேன்’ என்று சிப்ஸ் பாக்கெட்டைக் கொடுத்துவிட்டு இறங்கினாள்.

‘ஷேர் பண்ணற பழக்கமே வர மாட்டேங்குது பாருங்க’ என்றபடி வீட்டுக்குள் சென்றார் குழந்தையின் அம்மா.

..

சில வருடங்களுக்கு முன்பு என்னுடன் பணிபுரிந்த ஒருவர் சொன்னது எனக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. அவருக்கும் ஒரே மகன். அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.

‘இங்க பாருங்க. ஆகாஷ் நேத்து ஸ்ட்ராபெர்ரி பழம் வாங்கிட்டு வரச் சொன்னான். அறுபது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போய்க் கொடுத்தேன். டிரெஸ் மாத்திட்டு ஹாலுக்கு வரேன். பாக்கெட்ல ஸ்ட்ராபெர்ரி இலைகள் மட்டும்தான் இருந்தது. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாயிருச்சு. என்னடா, இப்படிப் பண்ணிட்டே? எனக்கோ, உங்க அப்பாவுக்கோ ஒரு பழம் கூட வைக்க மாட்டியா? இதெல்லாம் அடிக்கடி வாங்கிச் சாப்பிடற பழம் இல்லையேன்னு கேட்டேன். போம்மா, எனக்குத் தோணலைன்னு சொல்லிட்டு, அவன் பாட்டுக்கு டிவி பார்த்துட்டு இருக்கான். பகிர்ந்துக்கற மனப்பான்மையே இல்லை. அதை நான் சொன்ன பிறகும் அவனுக்கு அது தப்பாகவே படலை’ என்று மிகவும் வருத்தப்பட்டார்.

..

நண்பனுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. வீட்டுக்கு வந்திருந்தபோது, ‘அசோகா அல்வா. மீனாவும் நீயும் வீட்ல சாப்பிடுங்க’ என்று பாத்திரத்தில் போட்டுக் கொடுத்தேன். ’வீட்டுக்குப் போனால் மீனாதான் சாப்பிடுவா. எனக்குத் தரமாட்டா’ என்றான் சிரித்தபடி.

‘அடப்பாவி, ஏன் இப்படிச் சொல்றே?’ என்றேன்.

‘போன வாரம் அம்மா மீன் குழம்பு, மீன் வறுவல் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனாங்க. நான் சாப்பிட உட்கார்ந்தால் வெறும் குழம்பு மட்டும் ஊத்தினா. சரி அம்மா கொஞ்சமாகக் கொடுத்திருப்பாங்கன்னு விட்டுட்டேன். நேத்து நைட் சப்பாத்தி பண்ணிருக்கேன். சிக்கன் கிரேவி வாங்கிட்டு வாங்கன்னு சொன்னா. வாங்கிட்டுப் போய், அவகிட்ட கொடுத்தேன். குளிச்சிட்டு வர்றதுக்குள்ள அவ சாப்பிட்டு முடிச்சிட்டா. நான் சாப்பிடும்போது சப்பாத்தியும் ஒரு ஸ்பூன் கிரேவி மட்டும்தான் இருந்தது. இதுன்னு மட்டும் இல்லை, கேக், பப்ஸ் எது வாங்கிக் கொடுத்தாலும் அவளுக்கு நான் இருக்கறதே மறந்துடுது.’

‘ஒரே பொண்ணோ?’

‘ஆமாம். ஷேரிங் என்ற பழக்கமே இல்லை’ என்றான்.

..

எங்கள் வீட்டில் நான்கு பேர் சகோதரிகள். ஒரு கேக், ஒரு பிஸ்கெட்டாக இருந்தாலும் எங்கள் அம்மா நான்காகப் பகிர்ந்துதான் தருவார். நாங்கள் அந்தப் பங்கிலும் எங்கள் அம்மாவுக்குக் கொஞ்சம் கொடுத்து, சாப்பிடச் சொல்வோம். அதே போல எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட ஏதாவது எங்களிடம் கொடுத்து, கொடுக்கச் சொல்வார் அம்மா. இனிப்பு, காரம் எது செய்தாலும் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்துவிட்டுத்தான், நாங்கள் சாப்பிடுவோம். யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொடுப்போம். கொடுப்பதில் உள்ள சந்தோஷமே தனிதான்.

ஒரே குழந்தையாக இருக்கும் வீடுகளில் பெரிய சாக்லெட் பாக்கெட்டாக இருந்தாலும் சரி, பெரிய சிப்ஸ் பாக்கெட்டாக இருந்தாலும் சரி, அப்படியே பாக்கெட்டோடு குழந்தையிடம் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை முடிந்தவரை தான் மட்டுமே சாப்பிட்டுவிட்டு, முடியாதபோது மட்டும் தூக்கிப் போடுகிறது. இப்படிக் குழந்தையை வளர்த்துவிட்டு, பிறகு பகிர்ந்து சாப்பிடும் பழக்கமே இல்லை என்று வருத்தப்படுவதிலும் கவலைப்படுவதிலும் என்ன நியாயம்?

நாங்கள் சாப்பிடாமல் எல்லாமே குழந்தைக்குத்தான் தருவோம் என்பதில் பெருமையோ, அக்கறையோ இல்லை. அம்மா, அப்பா உள்பட எல்லோருக்கும் பகிர்ந்துகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை, குழந்தையிலேயே கொடுப்பதில்தான் உண்மையான அக்கறை இருக்கிறது!

5 comments:

ILA (a) இளா said...

Nice Post.. Great Concept in Simple words.. Hatsoff

Sathish K said...

பகிர்தலில் மட்டுமில்லை. இன்னும் நிறைய விஷயங்கள் மறைந்து போய்க் கொண்டு இருக்கின்றன.

Anonymous said...

நானும் இதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன் - மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுகள் & நன்றி!

- என். சொக்கன்,
பெங்களூர்.

மாதவன் said...

நான் இப்போழுதே என் குழந்தைக்கு பகிர்தல் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டேன். உங்களின் இந்த கட்டுரை அருமை.

http://veeluthukal.blogspot.com

Puthiyaparavai said...

அருமையான, ஆழமாக யோசிக்கவேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்