முழுப் பரிட்சை முடிவதற்கும் சித்திரைத் திருவிழா ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும். விடுமுறை, திருவிழாவுக்கு என்று உறவினர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். வைகை ஆறு ஓடும்(!) மதுரை, மானாமதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சுவாமிகளை அலங்காரம் செய்வார்கள். இந்த அலங்காரத்துக்கான செலவுகளை ஊரில் இருக்கும் பணக்காரர்கள் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளுக்கும் மண்டகப்படி அமைப்பார்கள்.
ஊரே களை கட்டும். பத்து நாள்களும் மாலை பொழுதுகளை மக்கள் ஆற்றில்தான் கழிப்பார்கள். குடை ராட்டினம், பலூன் கடை, வளையல் கடை, தின்பண்டக் கடை, ஆழ்ந்த சிவப்பு, ஆரஞ்சு, மெஜந்தா வண்ணங்களில் குளிர் பானங்கள் விற்கும் கடைகள், ஆற்றிலேயே ஊற்றுத் தோண்டி தண்ணீர் விற்கும் கடைகள் என்று களைகட்டியிருக்கும்.
‘பீம புஷ்டி அல்வா’ என்று எழுதியிருக்கும் கடையில் ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருப்பார்! அல்வாவுக்கும் புஷ்டிக்கும் என்ன சம்பந்தம்? அல்வா சாப்பிட்டு, புஷ்டியாகலாம் என்றால் அந்தக் கடைக்காரர் ஏன் இப்படி இருக்கிறார்? இன்றுவரை புரியாத புதிர்.
இக்கரையிலும் அக்கரையிலும் இருக்கும் இரண்டு தியேட்டர்களைத் தவிர, பொழுதுபோக்குவதற்கான எந்த அம்சமும் இல்லாத ஊர். அதனால் தீபாவளி, பொங்கலுக்கு எடுக்கும் துணிகளைக்கூட போட்டுச் செல்ல வழியிருக்காது. ஒவ்வொரு நாளும் நல்ல துணிகளை உடுத்தக்கூடிய வாய்ப்பாக எண்ணி, அலங்காரத்தில் இறங்கிவிடுவார்கள்.
சுவாமி அலங்காரத்தைப் பார்த்துவிட்டு, தின்பண்டம் சாப்பிட்டு, ராட்டினம் சுற்றி முடித்த பிறகு வீடு திரும்புவார்கள். நிறையப் பேர் வீட்டில், சாப்பிட்ட பிறகு மீண்டும் ஆற்றுக்குக் கிளம்புவார்கள். விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம், சொற்பொழிவு, குலேபகாவலி, பாண்டுரங்கன் என்று லேட்டஸ்ட் (!) படங்கள் திரையிடப்படும். ஆற்றுக்குள்ளேயே தூங்கிவிட்டு, காலையில் திரும்புபவர்களும் இருப்பார்கள்.
மதுரையில் மீனாட்சி-சொக்கர் திருமணம் நடக்கும். மீனாட்சியின் அண்ணன் அழகர். மானாமதுரையில் ஆனந்த வள்ளி- சோமநாதர் என்ற பெயரில் திருமணம் நடைபெறும். அதே அழகர்தான் ஆனந்தவள்ளிக்கும் அண்ணன். திருவிழாவின் எட்டாவது நாள் அண்ணன் அழகருக்குத் தெரியாமல் திருமணம் நடைபெறும்.
பத்தாவது நாள் அழகர் திருமணத்தைக் கேள்விப்பட்டு, தங்கைக்கு சீர் கொடுக்க வருவார். அன்று காலையிலேயே விழா ஆரம்பமாகிவிடும். அழகர் வேகமாக சீர்வரிசைகளைக் கொடுத்துவிட்டு, கோபித்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி, சென்றுவிடுவார். இதைத்தான் ஆற்றில் அழகர் இறங்குகிறார் என்பார்கள். அழகர் இறங்கும் அன்று சம்பிரதாயத்துக்காக வைகை ஆற்றில் தண்ணீர் விட்டிருப்பார்கள். வெயிலுக்கு பானகம், நீர்மோர் எல்லாம் இலவசமாக வழங்குவார்கள்.
பதினோராவது நாள் அன்று அழகர் தசாவதாரம் எடுப்பார். பத்துவிதமாக அலங்காரம் செய்வார்கள். அன்று இரவுதான் திருவிழாவின் ஹைலைட்! சைவம், அசைவம், இனிப்பு, காரம் என்று அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற உணவுகளை ஏராளமாகச் செய்வார்கள். இரவு எட்டு மணிக்கு அத்தனை பதார்த்தங்களுடன் ஆற்றுக்குச் சென்றுவிடுவார்கள். உறவினர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள் யார் வந்தாலும் இலை போட்டு, பரிமாறுவார்கள்.
ஆற்றுக்கு நிறைய பெண்கள் வந்திருப்பார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக இளைஞர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். நிறைய சாப்பிட்டு, பேசிச் சிரித்து, நள்ளிரவில் வீடு திரும்புவார்கள். அடுத்த திருவிழா வரை அந்த சந்தோஷம் போதுமானது!
4 comments:
குச்சி மிட்டாய், பஞ்சு மிட்டாய் போல ரசித்து ருசித்த கட்டுரை. வாழ்த்துகள்
அடடே நீங்க மானாமதுரையா
சித்திரைதிருவிழாவே சிறப்புதான் போங்க
அருமை.
படங்களுடன் பதிவிட்டால் இன்னும் அருமையாய் இருந்திருக்கும்.
வாழ்த்துகள் சுஜாதா..
சுவையான இடுகை.மதுரையில் 6 வருடம் இருந்திருக்கிறேன்.ஒருமுறைகூட அழகர் ஆற்றில் இறங்கியதை அருகில் சென்று பார்க்க முடிந்ததில்லை.உங்கள் வர்ணனை சித்திரைத்திருவிழாவில் அழகரைவிட முக்கியமான விஷயங்கள் இருப்பதிக்காட்டுகிறது.செலவில்லாமல் மீண்டும் மதுரைப்பக்கம் அழைத்துச்சென்றதற்கு நன்றி.
Post a Comment