கோடை விடுமுறை என்றாலே கொண்டாட்டமாக இருக்கும். ஒரு மாதத்துக்குப் படிக்க வேண்டிய தொல்லை இருக்காது. யூனிஃபார்ம் போட வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் எங்கள் பெரியப்பா, அத்தைகளின் வீடுகளில் இருந்து விடுமுறைக்காக எங்கள் வீட்டுக்கு ஒவ்வொரு குடும்பமாக வர வர எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. (அம்மாவுக்குத்தான் சமையல் வேலை அதிகம் இருக்கும்.) 8 பேருக்குக் குறையாமல் குழந்தைகள் எப்பொழுதும் எங்கள் வீடுகளில் இருப்பார்கள்.
காலையில் ஆறு மணிக்கு பதநீர் விற்று வரும் சத்தம் கேட்டு, எல்லோரும் விழிப்போம். வேக வேகமாகப் பல் தேய்த்து விட்டு வருவோம். ஆளுக்கு ஒரு மட்டையில் பதநீர் வாங்கிக் குடிப்போம். சில நாள்களில் பதநீர் குடித்ததும், அம்மா வடகம் மாவு கிளறி வைத்திருப்பார். ஆளுக்கு ஒரு கிண்ணமும் ஸ்பூனும் கொடுத்து விடுவார். சிலர் தடி தடியாக மாவை அள்ளி ஊற்றுவார்கள். (அந்த வெயிலிலும் காய்வதற்கு மூன்று நாள்கள் ஆகும்!) சிலர் மிகவும் மெல்லியதாக ஊற்றிக் கொண்டிருப்பார்கள். துணியில் இருந்து எடுப்பதற்குள் பெரும்பாடாகி விடும். எல்லோரும் வேலை செய்து களைத்துப் போய் வீட்டுக்குள் செல்வோம்.
கடைக்கார அப்பத்தா விடம் பனியாரம் அல்லது பருத்திப்பால் வாங்கி வைத்திருப்பார் அம்மா. அதைச் சாப்பிட்டு விட்டு, ஒவ்வொருவராகக் குளிக்கச் செல்வோம். அதிலும் நீயா, நானா போட்டி! இடியாப்பம், ஆப்பம், அப்பம், புட்டு, பூரி, வெந்தயக் களி, பால் பனியாரம், குழிப்பணி்யாரம், கேழ்வரகு ரொட்டி, கொழுக்கட்டை என்று தினம் ஒரு பலகாரமாக அம்மா செய்து வைத்திருப்பார்.
சாப்பிட்டதும் ஆளுக்கு ஓர் அறையாகப் பிரித்துக் கொண்டு வீட்டைப் பெருக்குவோம். கடைகளுக்குப் போகச் சொன்னால் போய் வருவோம். மற்றப்படி எங்களுக்கு வேலை ஒன்றும் கொடுக்க மாட்டார் அம்மா.
பன்னீர் மரத்தடியில் அமர்ந்து கொஞ்ச நேரம் கதை பேசுவோம். திடீர் என்று பாட்டுக்குப் பாட்டு நடத்துவோம். சினிமா பேர் சொல்லி விளையாடுவோம். அம்மா அழைப்பார். நுங்கு விற்பவர் வந்திருப்பார். ஆளுக்கு ஒரு நுங்கை வெட்டிக் கொடுக்க, சாப்பிடுவோம். இந்த மெனுவும் கம்பெனி கொய்யா, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம் என்று மாறிக்கொண்டே இருக்கும். மீண்டும் பாண்டி, திருடன் - போலீஸ் என்று விளையாட்டுத் தொடரும்.
மீண்டும் அம்மா அழைப்பார். யாராவது ஒருவர் கடைக்குப் போய் ஐஸ்கட்டி வாங்கி வருவோம். நன்னாரி சர்பத் போட்டுக் கொடுப்பார் அம்மா, அத்தை, சித்தி யாராவது. வெயிலுக்கு ஜில்லென்று குடித்து விட்டு, அரட்டையடிப்போம்.
மதியம் சாப்பிட்டு முடித்ததும் வெயிலில் அலைய விடமாட்டார்கள். பல்லாங்குழி, ஐந்து கல், குச்சி விளையாட்டு என்று உள் அரங்க விளையாட்டுகளில் பிஸியாக இருப்போம். மாலை ஐந்து மணிக்கு ’கடலை... கடலை...’ என்று கோபாலுவின் குரல் கேட்கும். எல்லோரும் வெளியில் வருவோம்.
கறுத்த உடலுக்கு அடிக்கிற சிவப்பு, ரோஸ், பச்சை என்று சேலைகளும், அதே வண்ணங்களில் வளையல், பொட்டு, ரிப்பன் வைத்துக் கொண்டு, ரோஸ் நிற பவுடர் பூசிக்கொண்டு வரும் கோபாலுவை அழைப்போம்.
‘என்ன பேரு சொல்றீங்க? இப்ப நான் சுந்தரியாக்கும்’ என்றபடி வரும் கோபாலுவிடம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, உப்புக் கடலை, பட்டாணி என்று அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வாங்கிக்கொள்வோம்.
காலையில் கோபாலுவாக இருக்கும் ஒருவர் மாலையில் சுந்தரியாகும் அதிசயம் அப்போது எனக்குப் புரியவில்லை. அம்மாவிடம் கேட்டாலும் பதில் இல்லை.
வாசல் தெளித்து, கோலம் போடுவோம். அம்மா காபி தருவார். ஆறு மணிக்கு சூடாகக் கிடைக்கும் அச்சு முறுக்கு, தண்ணீருடன் ஆற்றுக்குக் கிளம்பி விடுவோம். எங்களுடன் அத்தை, பெரியம்மா யாராவது வருவார்கள்.
ஆற்றுக்குச் சென்றதும் முதல் விளையாட்டு ஊற்று தோண்டுவதுதான். யார் விரைவாகவும், பெரிதாகவும் தோண்டுகிறார்கள் என்பது போட்டி! பெரியம்மாவிடம் கதை கேட்போம். நாங்களும் கதை சொல்வோம்.
‘வணக்கம் வணக்கம் மகராஜா. எனக்கிட்ட கட்டளை என்ன ராஜா?’
‘என் பெயர் சொல்லாத எந்தன் மகனை மலைதனில் உருட்டிக் கொன்றுவிடுங்கள்!’
‘வேண்டாம்... வேண்டாம்... மகராஜா... என் மகனை விட்டுவிடுங்கள்...‘
என்று பல்வேறு பாத்திரத்தையும் நடித்துக் காட்டுவாள் சௌந்தரம்.
ரமா, செந்தில் டான்ஸ் ஆடுவார்கள்.
இருட்டத் தொடங்கியதும் அந்த விளையாட்டை ஆரம்பிப்போம். ஒரு பெரிய குச்சியை இந்தப் பக்கம் ஒருவர், அந்தப் பக்கம் ஒருவர் பிடித்துக்கொண்டு வர, பின்னாடி வரிசையாக மற்றவர்கள். முன்னே செல்லும் நான் ‘ போராடுவோம்... போராடுவோம்... இறுதி வரை போராடுவோம். தமிழக அரசே... தமிழக அரசே... அரிசி விலையைக் குறைத்துவிடு...’ இப்படி கோஷம் போட, மற்றவர்களும் திருப்பிச் சொல்வார்கள். அநேகமாக இந்த விளையாட்டு தினமும் நடைபெறும். ஊர்வலம் முடிந்ததும் ஏதோ சாதித்த திருப்தி கிடைக்கும்!
அப்போது எங்கள் பாண்டி சித்தப்பா உள்ளிட்ட பலர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பள்ளி விட்டு வரும்போது, சித்தப்பா கோஷம் போட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். என்ன கட்சி, என்ன போராட்டம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் சித்தப்பா நல்ல விஷயத்துக்காக எல்லோருக்காகவும் போராடுகிறார் என்பது மட்டும் புரிந்தது. படித்து, பெரியவள் ஆனதும் சித்தப்பா போல போராட வேண்டும் என்று நினைப்பேன். சித்தி உள்பட எங்கள் உறவினர்கள் பலருக்கும் சித்தப்பா பிஸினஸைக் கவனிக்காமல், கட்சி வேலை பார்ப்பது பிடிக்காது. அதனால் இந்த விளையாட்டை இருட்டில், ஆற்றுக்குள் மட்டுமே விளையாடுவோம்.
சாமி உண்டு என்று பல நாள்கள் நாங்கள் சித்தப்பாவிடம் வாதாடுவோம். எங்களை அலட்சியம் செய்யாமல், எங்களுக்குப் புரியும் விதத்தில் விஷயங்களைச் சொல்வார் சித்தப்பா. அதில் எங்களுக்கு உடன்பாடு வராவிட்டாலும் சித்தப்பாவை மிகவும் பிடிக்கும். அதே போல அவர் சார்ந்திருந்த கட்சியையும்!
எட்டு மணிக்கு வீடு திரும்புவோம். உள்ளூரில் நிறைய உறவினர்கள் இருப்பதால் யாராவது வீட்டுக்கு வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களிடம் ஒரு மணி நேரம் அரட்டை! ஒண்பது மணிக்கு அம்மா சாப்பிட அழைப்பார்.
மதியம் வடித்த சோற்றில் தண்ணீர் ஊற்றிய பழைய சாதம் தான் எல்லோர் வீட்டிலும் இரவு உணவு. குழம்பு, காய் எல்லாம் சேர்த்து சுண்ட வைத்த குழம்பு, வடகம், மோர் மிளகாய், கொத்தவரைவற்றல், துவையல், ஊறுகாய் என்று விதவிதமான சைட் டிஷ்கள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஜில்லென்ற பழைய சாதம் சாப்பிட்டு சிறிது நேரத்தில் நாள் முழுவதும் உழைத்த(!) களைப்பில் எல்லோரும் பேசிக் கொண்டே தூங்கி விடுவோம்.
இன்று என் மகனிடம் இந்த விஷயங்களை மிகவும் ரசித்துச் சொன்னேன்.
‘ம்ம்... அந்தக் காலத்துல டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் இல்லாததால ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணிருக்கீங்கம்மா!’
0
2 comments:
பதநீர், வடகம், கொய்யா, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம், நுங்கு, அச்சு முறுக்கு, நன்னாரி சர்பத், பழைய சாதம், சுண்ட வைத்த குழம்பு, பாண்டி, திருடன் - போலீஸ், பல்லாங்குழி, ஐந்து கல், குச்சி விளையாட்டு என அனைத்தையும் கூறி என்னை 1ம், 2ம் வகுப்புக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள். நன்றி
என் அம்மாவை போல
Post a Comment